Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1

Filed in கதை, வார வெளியீடு by on June 21, 2021 3 Comments

பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம்  சென்னை நகரத்தில் நடக்கும்  குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம்  தீர்ப்பதில் வல்லவர்கள்.  அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். 

*****

திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின்  குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே வந்த ராஜீவின் மகள் நிகிதா

“அப்பா டிபன் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.  இன்னும் பதினைஞ்சு  நிமிஷத்துல வரேன்னு சொன்னாங்க.  அங்கிள், நீங்க சாப்பிட்டீங்களா” எனக் கேட்டாள் . 

” வீட்ல, நான்  சாப்பிட்டு தான் வந்தேன்”  

“சரி” என்று அவள் சொல்லிவிட்டு  உள்ளே சென்றதும்  மாணிக்கம் அன்றைய தினத்தந்தி நாளிதழைப்   படிக்க ஆரம்பித்தான்.  பக்கத்திற்குப் பக்கம் கொரோனா பற்றிய செய்திகள். வேகமாக ஓடிக் கொண்டிருந்த மனிதர்களைச் சற்று நிறுத்தி, வாழ்க்கையின்  சாராம்சத்தைப் புரிய வைத்தது தான் கொரோனா . அது மக்களை ஆட்டிப் படைத்து கிட்டத்தட்ட பத்து மாதம்   ஓடி விட்டது.  பக்கத்திற்குப் பக்கம்  சாவு செய்தி,  மக்களின் கஷ்டம். அதற்குமேலும் படிக்கப் பிடிக்காமல், நாளிதழைப்   பின்பக்கம் தூக்கி  போட்டான். 

வீட்டிற்குள்ளே மீனா  “இன்னொரு தோசை சாப்பிடுறீங்களா?” 

‘இல்லை, போதும்” என்று சொல்லியவாறே  நிகிதாவைப்  பார்த்து “நான் நேற்று உங்கள் டீச்சரிடம் பேசினேன். இருபது  பசங்கதான் கிளாஸ்சுக்கு வராங்களாம்.  கவனமா இரு. முகக் கவசம் அடிக்கடி மாற்று.  லஞ்ச் சாப்பிடுவதற்கு முன்னாடி  கை நல்லா கழுவிக்கோ” என்று அவர் தொடரும் பொழுது

” ஓகே டாடி,  நீங்க ரெண்டு நாளா இதே தான் சொல்றீங்க!   புரிஞ்சது, புரிஞ்சது, புரிஞ்சது ” என்று சொல்லி விட்டு  அந்த அறையை விட்டு நகர்ந்தாள்.

சிரித்துக்கொண்டு உள்ளே இருந்து வந்த மீனா “உங்க பருப்பு அவள் கிட்ட  வேகாது!”

“இத்தனை  வருஷமா உன்கிட்ட வேகாத  பருப்பு, அங்கே வேகுமோன்னு பார்த்தேன். “

“சும்மா சமாளிக்காதீங்க.  வீட்டு வேலைக்காரிய,  அடுத்த மாசம் திரும்ப வர சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னால  எல்லாத்தையும் பார்த்துக்க முடியலை.”

” திரும்பவும் அவளே  கிடைப்பாளா?”

“அவ  சம்பளத்தை  நான்  கட் பண்ணவே இல்லை. அவளுக்கு ரெண்டு பசங்க. அவ வீட்டுக்காரர் ஆட்டோ டிரைவர். சுத்தமாக ஓடல “

“நீ செஞ்சது கரெக்ட் டியர். அவளை  மாஸ்க் போட்டு வர சொல்லு.  ஒகேவா,   நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பினார்

வீட்டிற்கு வெளியே வந்த  ராஜிவ் மாணிக்கத்தைப் பார்த்து  “கிளம்பலாமா ? மிகவும் தாமதமாகி விட்டது.” எனக் கேட்டார்.

“சார், பதினைஞ்சு  நிமிஷத்துல ஆபீஸ்ல கொண்டு விட்டுடறேன். இந்த கொரோனா  வந்ததில்,  ஒரு நல்ல விஷயம் இதுதான். ரோடு எல்லாம் காலியாக இருக்கு “

“ஆமா, உனக்கு ஈசியா இருக்குன்னு, இப்படியே  இருக்க முடியுமா என்ன. எல்லாம் மாறனும், இயல்புநிலைக்குத்   திரும்பனும். இப்படியே இருந்தா, வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சுடும்.  சரி வா கிளம்பலாம்”

கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் அவரது அலுவலகத்தை வந்தடைந்தனர் .டிஎஸ்பி ராஜீவின் அறை மிக விசாலமாக இருந்தது. அறையின் நடுவில்  தேக்கு மரத்தில் செய்த மேசை.  அவர் உட்கார ஒரு சுழல் நாற்காலி. மேசையின் எதிர்ப் பக்கத்தில், மெத்தை வைத்த சில மர நாற்காலிகள்.  மேசையின் வலது பக்கத்தில் ஒரு லேப்டாப், மானிட்டர்  மற்றும் கீ போர்டு. இடதுப் பக்கத்தில் அவர் குடும்பத்துடன் இருக்கும் நிழற்படம்.அவரது இருக்கைக்குப்  பின்னே இருந்த சுவரில், மகாத்மா காந்தி மற்றும் தற்போதைய தமிழக முதல்வரின்  படங்கள். அறையின் ஓரத்தில் ஸ்பிலிட் ஏசி மெதுவாக சில்லென்று குளிர்ந்த காற்றை  வீசிக் கொண்டிருந்தது. இருக்கையில் அமர்ந்து,  இமெயில்களைப்  பார்க்கத் தொடங்கினார்.  அப்போது மெதுவாக அவரது அறையின் கதவைத்  தட்டும் சத்தம். 

 “உள்ளே வரலாமா, சார்”  என்றொரு பரிச்சயமான குரல்.

” ஹலோ ராஜேந்திரன், குட் மார்னிங், ப்ளீஸ் கம் இன்”

“குட் மார்னிங் சார்.  அந்த ட்ரிப்ளிகேன் கேஸ் சம்பந்தமா ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தேன், பார்த்தீங்களா?”

“அதைத்தான்  படிச்சுகிட்டு இருந்தேன். குட் டைமிங்.   நீங்க சொன்ன மாதிரியே,  நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம். நைஸ் ஒர்க்  ராஜேந்திரன் “

“அப்புறம் இன்னொரு விஷயம். யாரோ ஒரு  ஹெட் கான்ஸ்டபிள் ஒருத்தர், உங்களைப்  பார்த்து பேசுவதற்காக ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். உங்க   உதவியாளர் ஒன்றும் சொல்லவில்லையா?”

“ஒரு இரண்டு மணி நேரத்துக்கு யாரும்   தொந்தரவு பண்ணாதீங்க என்று சொன்னேன். ஒருவேளை,  அதனால அவர் சொல்லாமல் இருக்கலாம்.  என்ன விஷயம், யார் அவர்?” 

“சென்ற வருடம்,  தமிழகக் காவல்துறையில் சிறந்த போலீஸ் விருது வாங்கினவர். எதனால வெயிட் பண்றாருன்னு  எனக்குத்  தெரியல.  உங்ககிட்ட தான் நேரில  பேசணும் என்று சொன்னாரு.  இன்னும் ஒரு வருஷத்துல ஓய்வு பெறப்  போறாரு. அது சம்பந்தமா கூட இருக்கலாம். ஆனா  ரொம்ப கவலையா இருக்கிற  மாதிரி தெரியுது. அவ ரொம்ப நேர்மையானவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“ஓ, அப்படியா,  சாரி.   எனக்கு இந்த விஷயம் தெரியாது.  கூட்டிட்டு வரீங்களா?”

 சிறிது நேரத்தில் ஹெட் கான்ஸ்டபிள் உள்ளே வந்தார்.

“நீங்கள் காத்து இருந்ததுக்கு, சாரி,  இன்னைக்கு ஒரு கேஸ்ல பைனல் ரிப்போர்ட் கொடுக்கணும்.  அதனால  என்னைத் தொந்தரவு செய்யாதீங்கன்னு  சொல்லியிருந்தேன். உங்க பேரு”

“என்ன  சார், நீங்க எவ்வளவு பெரிய ஆளு, என்கிட்ட சாரி கேட்கறீங்க.   என் பெயர் மணி மாறன். காஞ்சிபுரம் காவல் நிலையத்திலத்தான் வேலைப் பார்க்கிறேன். “

“உங்களைப் பத்தி, ரொம்ப பெருமையா ராஜேந்திரன் சொன்னாரு.  நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும், சொல்லுங்க சார்”

“சார், எனக்கு ரெண்டு பசங்க. பெரியவள்  பொண்ணு,  சின்னவன்  பையன்” என்று சொல்லும்போதே அவர் கண்களில் கண்ணீர் மளமளவெனக்  கொட்டியது.  உடனே ராஜீவ் பசங்களைப் பற்றிய பிரச்சனை என்று  புரிந்து கொண்டார்.  உடனே எழுந்து தனது மேஜையில் இருந்த சிறிய கிளாஸ் டம்ளரில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அவர் கையில் கொடுத்தார்.

“சார், முதல்ல கொஞ்சம் தண்ணீர் குடிங்க “

தண்ணீர் குடித்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டப் பின் அவர் தொடர்ந்தார்.

“சாரி சார், என்னால கட்டுப்படுத்த முடியல.  என் பையன் ஒரு மாசத்துக்கு முன்னாடி அவன் தங்கியிருந்த வீட்டில கொலை செய்யப்பட்டான்.   நல்ல பையன் சார், ஒரு கெட்ட பழக்கமும்  கிடையாது”

“ஓ மை காட், வெரி சாரி சார்” என்று சொல்லிகொண்டே  அவர் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“என் பையன் சுந்தர் சென்னையில் இருக்க ஒரு பெரிய கிராஃபிக்ஸ் டிசைன் கம்பெனியில,  சீனியர் ஆர்கீடெக்டா  வேலைப் பார்த்தான் . அவன்  ஆபிஸ் பக்கத்துலேயே   வீடு.  தனிக் குடியிருப்பு.  தனியாகத்தான் இருந்தான். ஒரு நாள் காலையில 11 மணி போல எனக்கு ஃபோன் வந்தது. என் பையன்  கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், என்னை  உடனே வந்து பார்க்கச் சொல்லியும் சொன்னாங்க.  நான் போய்  பார்த்தப்ப,  கழுத்தில  கயிறு வைத்து கொன்ற அடையாளம் இருந்தது.    தரையில பிணமா இருந்தான்.” என்று  சொல்லும்போதே,  அந்த நிகழ்வு அவர் மனதில்  வந்து சென்றது. “ஓவென்று” கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவரே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு

“சார்,  இந்த கேஸ், பொன்னகரம்  காவல் நிலையத்தில் தான் போயிட்டு இருக்கு. அந்த இன்ஸ்பெக்டர் திறமைசாலிதான்,  ஆனால் ஒரு துப்பும்  கிடைக்கல. இன்னும் கொஞ்ச நாள்ல வழக்கை மூடி விடுவாங்க போல இருக்கு.”

 “ஓ, அப்படியா. அது சரியில்ல. உங்களுக்கு என்ன மாதிரி உதவி தேவைப்படுது, சொல்லுங்க”

“தப்பான வழியில, போற பையனாயிருந்தா, இவ்வளவு கஷ்டப்பட  மாட்டேன். ரொம்ப நல்ல பையன் சார்!  நல்லா படிச்சான். எந்த வம்புக்கும் போகமாட்டான்.     நீங்க சமீபத்துல சில மிகப்பெரிய கொலை வழக்குகளைத் தீர்த்ததுப் பற்றி  கேள்விப்பட்டேன்.   எனக்கு உங்களைப்  பாத்து பேசலாமுன்னு தோணியது.  ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க சார்”” என்று சொல்லிக்கொண்டே தனது தலையை ராஜீவின் கையில் வைத்து காலில் விழாத குறையாக கெஞ்சி அழுதார்.

“சார் நீங்க என்னோட வயசுல மற்றும் சர்வீஸ்ல பெரியவங்க. எனக்கு நீங்க ஒரு  ஒரு மாதம்  டைம் கொடுங்க.  அப்புறம்  என்னை வந்து பாருங்க” என்றார்.

ராஜேந்திரனை  அவரை வழியனுப்பிவிட்டு வரச் சொன்னார்.

ஒரு வாரம் கடந்துவிட்டது.

*****

இன்ஸ்பெக்டர்  ராஜேந்திரன்  ‘ சார் நீங்க சொன்ன மாதிரி,  பொன்னகரம் இன்ஸ்பெக்டரைப்  பார்த்தேன் . அவர் வழக்கு தொடர்பான கோப்புகள் எல்லாம்  கொடுத்தாரு. இது நம்ம டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட கேஸ். அதனால அவரு ரொம்ப சின்சியரா தான் இன்வெஸ்டிகேட் பண்ணியிருக்காரு. பெரிய துப்பு எதுவும் கிடைக்க வில்லை “

“சரி ராஜேந்திரன்,  வியாழக்கிழமை  அன்று,  அந்த இன்ஸ்பெக்டரை,  கொலை நடந்த வீட்டுக்கு வரச்  சொல்லுங்க.  அங்கேருந்து  விசாரணையை  ஆரம்பிப்போம்”

இரண்டு நாட்கள் வழக்குத் தொடர்பான கோப்புகளை ஒன்று விடாமல் படித்தார் ராஜிவ். ஒன்றும் பிடிபடவில்லை. அவர் தீர்த்த பல வழக்குகளில், ஒன்றில் கூட முதலில் ஒரு துப்பும் கிடைத்தது இல்லை. ஆனால் அவர் மனம் தளர மாட்டார்.  யாருக்கும் புலப்படாத சில விஷயங்கள் அவருக்குத் தெரியும். மனம் ஒத்து  செய்யும் எந்த வேலையிலும்,  பலன் கட்டாயம் வந்து அடையும் என்பது அவரது நம்பிக்கை.  பணத்திற்காகவும்,  உத்தியோக முன்னேற்றத்திற்காகவும் அவர் இந்த கேசை  எடுக்கவில்லை.  உத்தியோக ஓய்வு பெறப் போகும், நேர்மையான தலைமை கான்ஸ்டபிளின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது, தன் கடமை என நினைத்தார்.

*****

அன்று வியாழக்கிழமை. காலை 11 மணிக்கெல்லாம் ராஜேந்திரன், மாணிக்கம், ராஜீவ் மற்றும் பொன்னகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி கொலை நடந்த  வீட்டில் ஆஜரானார்கள்.

“குருசாமி..  கோப்புகளைப் படித்தாலும்,  உங்க மூலமா என்ன நடந்தது என்று  கேட்க நினைக்கிறேன். சொல்லுங்க”

“கட்டாயமா,  சார்.  சுந்தர் தனியா தான் அந்த வீட்டில் இருந்தான்.    இங்கேருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலதான் அவன்  ஆபீஸ்.  கொரோனா சமயத்துல வீட்டுல இருந்துதான் வேலை செய்தான்.  வீட்டுல  வேலைக்காரங்க,  நண்பர்கள் யாரும் கிடையாது. கொலை நடந்தது ரெண்டு இல்ல  மூன்று  நாள் கழிச்சுதான்  நமக்கு தெரிய வந்தது. நம்ம போலீஸ் ஸ்டேஷனுக்கு சுந்தரோட  அப்பா மாரிமுத்து கால் பண்ணி, இரண்டு நாளா பையனை தொடர்பு கொள்ள முடியல என்று சொன்னாரு .  வீட்டு வாசலிலே பால் பாக்கெட் இரண்டு நாளா எடுக்காம  கிடந்து இருக்கு. பக்கத்து வீட்டுக்காரங்க உள்ளே போக கொஞ்சம் பயந்து இருக்காங்க. நம்ம ஸ்டேஷனிலிருந்து ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி விட்டேன்.  வீட்டுக்குள்ளருந்து கெட்ட வாசம் வருதுன்னு கான்ஸ்டபிள் சொன்னாரு”

“கதவை உடைச்சுட்டு உள்ள போனீங்களா? ”  எனக் கேட்டார் ராஜேந்திரன்

“இல்ல சார், ஹவுஸ் ஓனரை ரீச் பண்ண முடிஞ்சது”

வீட்டின் உள்ளே அனைவரும் நுழைந்தனர். அந்த வீட்டை   ராஜீவ்  நோட்டமிட்டார்.  கிட்டத்தட்ட 16 க்கு 16 நல்ல விசாலமான அறை. ஒரு ஓரத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட சாய்விருக்கை.  அதன் முன்  சிறிய டேபிளும், ஒரு டிவியும் இருந்தது.  அறையின்  மறுபக்கத்தில் ஒரு கம்ப்யூட்டர்  டேபிளும், நாற்காலியும் இருந்தது.  . சுந்தர் பிணமாக கிடந்த இடத்தில்  சாக்பீஸால்  வரையப்பட்ட மார்க்குகள், முக்கால்வாசி அழிந்துபோய் கிடந்தது.  அறையின்  நடுவில் பெட்ரூமிற்கு செல்லும் வழியும் அதன் பக்கத்திலேயே கிச்சனுக்கு போகும் வழியும் இருந்தது.

“சார்,  நாங்க வந்து பார்த்தப்ப அந்தப் பையன் அமர்ந்திருந்த  நாற்காலி பின்பக்கமாக விழுந்துகிடந்தது. வீட்ல இருக்க சாமான் ஆங்காங்கே இறைந்து கிடந்தது.  பெட்ரூம்ல  இருந்த பொருள் எல்லாம்  அலங்கோலமா இருந்தது.  அந்த பையனோட லேப்டாப், செல்போன் மற்றும் சில பொருட்களும் காணவில்லை.  அவங்க அப்பா கிட்ட பேசியதை வைத்து,  அந்தப் பையன் போட்டு இருந்த 4 பவுன் தங்கச் செயினும் இல்ல”

 உடனே ராஜேந்திரன்  ராஜீவ்வைப்  பார்த்து  ‘ சார் எனக்கு என்னமோ திசை திருப்பும்  முயற்சி என்று தெரியுது.’

அதைக்கேட்டதும் ‘ கரெக்டா சொன்னீங்க ராஜேந்திரன்.  நாலு  பவுன் நகைக்காகவும், ஒரு போன், லேப்டாப்வுக்காக  இவ்வளவு பெரிய கொலை செஞ்சு இருப்பாங்கன்னு எனக்குத்  தோணல. ” என்றார் ராஜிவ்.

குருசாமி மேலும் தொடர்ந்தார். ” நீங்க  சொல்றது சரிதான், இருந்தாலும் அந்தக்  கோணத்திலும் விசாரிச்சோம்.  வந்தவங்க ரொம்ப திறமைசாலி.  பலமுறை இந்த மாதிரி கொலைகள் பண்ணி இருப்பாங்க போல தெரியுது.  ஒரு சின்ன கைரேகை கூட இல்லை.  ஒரு கயிறை  வைச்சுத்தான் கழுத்தை  நெறித்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  எந்த ஒரு தடயமும்  இல்லை.”

“போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது”

” இரவு கிட்டத்தட்ட 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ள, கொலை நடந்து இருக்கலாம் என்று சொன்னாங்க. பெரிசா ஒன்னும் சொல்லலை .”

“இந்த வீட்டை நான் கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வரேன்” என்றார் ராஜீவ்.

 அது ஒரு சிறிய வீடு தான். கிட்டத்தட்ட 15 நிமிடத்தில் வீட்டின் உள்ளே மற்றும் வெளிப்புறத்தைப் பார்த்துவிட்டு  குருசாமியைப்  பார்த்து

” ஒரு முக்கியமான விஷயம்  நீங்கள்  சொல்ல மறந்துட்டீங்க.  கொலைகாரன்  எப்படி உள்ளே  வந்தான்?”

” சாரி சார், அந்த விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்.  இந்த வீட்டுக்கு ரொம்ப மாடர்ன் டைப் லாக்.  நீங்க வெளிய இருந்து கதவை மூடறப்ப, தானா பூட்டிக்கும் . சாவி தேவை இல்ல “

” அப்ப  யாரோ தெரிஞ்சவங்க தான் கதவைத் தட்டி உள்ள வந்து இருக்காங்க.” என்றார் ராஜீவ்.

அதை கேட்டவுடன் இன்ஸ்பெக்டர் குருசாமி ” நான் அந்த கோணத்தில தெரிஞ்சவங்க மற்றும் கூட  வேலை பாக்குறவங்க கிட்ட விசாரிச்சேன். நோ லக் “

ராஜேந்திரன் ” குருசாமி  சார்,  அவங்க அப்பா அந்த பையன் ரொம்ப நல்ல கேரக்டர் என்று சொன்னாங்க.  அதைப் பற்றி  விசாரிச்சிங்களா? “

“அவர் சொன்னது ரொம்ப சரி சார்.  தங்கமான பையன்! சிகரெட், தண்ணி, பொண்ணு இந்த மாதிரி ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.  இரண்டு இல்ல மூணு  நண்பர்கள் தான் இருக்காங்க. கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லை. கொரோனா நேரத்தில் யாரும் வீட்டிற்கு வருவதில்லை.    மூணு மாசமா வீட்டுல இருந்துதான்  வேலை செய்தான்.”

” பக்கத்து வீடு,  ஹவுஸ் ஓனர்  கிட்ட விசாரணை செய்தீர்களா? “

” கரெக்டா மாச வாடகை  குடுத்து இருக்கான்.  வேற யார் கூடவும் அவ்வளவா தொடர்பில் இல்லை. பக்கத்து வீட்டுக்காரங்க  கொலை நடந்த அன்னிக்கு யாரையும் பார்க்கலை “

” போன் கால் ட்ரெஸ் பண்ணதுல ஏதாவது தெரிஞ்சுதா?”

“கிட்டத்தட்ட ஏழு மணிக்கு அவன் நண்பன் ரகுவரன் கிட்ட இருந்து ஒரு கால் வந்திருக்கு.  விசாரிச்சப்ப,  சும்மா சாதாரணமா தான் கால் பண்ணேன் என்று சொன்னான். சுந்தர் தினமும் அமெரிக்காவில கூட வேலை பார்க்கிறவங்களோட   பத்து மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரைக்கும் பேசுவான். ரகுவரனும், ராஜீவும் ஒரே டீம்தான். பெரிசா ஒன்னும் கிடைக்கலை “

” போன், லேப்டாப்  இருக்கும் இடம் பற்றி துப்பு கிடைத்ததா?”

“நோ லக் சார், “

“சரி குருசாமி,  நாங்க கிளம்பறோம். தேவைப்பட்டால், நான் உங்களைக்  கூப்பிடுகிறேன். ” என்றார் ராஜீவ்.

போலீஸ் ஜீப் கிளம்பியது.

மாணிக்கம் அவரைப்  பார்த்து “என்ன சார், சுலபமா ஒரு கேஸ் வராது போல இருக்கு”

“சுலபமாக இருந்தா, உனக்கும்  எனக்கும் இங்க வேலை இல்லை. ராஜேந்திரன் எனக்கு என்னமோ அந்த பையன் கேரக்டரும் அவங்க அப்பாவோட நேர்மையும் பார்க்கிறப்ப,  நமக்கு இந்த கேஸ் தானா தீர்வாகும்  பாருங்க.  நாம் எதிர்பார்க்கிற தடயம்  தானா, நம்மை வந்து சேரும் பாருங்க.  

மாணிக்கமும், ராஜேந்திரனும் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடி பயணித்தனர்.

 

(தொடரும்)

 

— மருங்கர்

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Umamaheswari says:

    Very excellent story. Thrill also.good job.we enjoyed a lot.

  2. H. Nandhini says:

    Very nice. Waiting for the next part

  3. H. Nandhini says:

    Nice one. Waiting for next part

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad