Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கலைஞன்

“கண்களுக்குள் கசிகின்ற கண்ணீரை இமைகளுக்குள் வாழ்க்கையாக ஒளித்துக் கொண்ட இருக்கிறான் – கலைஞன்”

“என் வயிற்றுக்குள் எலிக்குட்டி அளவான பயம் ஒன்று கத்திக் கொண்ட இருக்கிறது. இன்னும் இரு நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். நீ ஓடவில்லை என்றால், மூன்றாவது நிமிடத்தில் நான் பூனை ஒன்றை வளர்க்கப் போகிறேன்.” பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் எழுதி ஒளித்த நகைச்சுவை ஒன்று இன்று ஞாபகம் வருகிறது. ஏனென்றால், நான் வாழ்க்கையில் முதற் தடவையாக பறக்கப் போகிறேன்.

அம்மா என்னை தூங்க வைக்க ஓயாமல் கதைகள் கூறிக் கொண்ட இருப்பாள். இன்று நான் உலகிலுள்ள மக்களின் இதயத்திற்குள் ஒரு புன்னகை கலைஞனாக ஒளிந்து கொண்டிருக்கின்ற போது என் அம்மாவை இறைவன் ஓயாமல் தூங்கும் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருக்கிறான்.

கருப்பைக்குள் முளைத்தது தொடங்கி கல்லறைக்குப் போகின்ற வரை நான் அம்மாவின் விரல்களை பிடித்துக் கொண்ட இருந்தேன்; இன்னும் பிடித்துக் கொண்ட இருப்பேன். இப்போது என் காதுகளுக்குள் ஓயாமல் ஒரு குழந்தை அழுகின்ற ஓசை கேட்கிறது. நான் கோமாளி போல முகத்தை மாற்றி விளையாட்டுக் காட்டி குழந்தையை சிரிக்க வைக்கிறேன். அடடா, என் அம்மா சிரிக்கிறாள்.

“என் வீட்டிற்கு வாருங்கள். விளம்பரமில்லா பூக்களையும் விலைமதிப்பில்லா உணர்வுகளையும் ஒருமித்து ஒரு கோப்பை தேநீர் தருகிறேன். இப்போது வந்தவர்கள் எல்லாம் தேநீர் பருகுகிறார்கள். முப்பது நிமிடங்கள் தேநீர் பருகியும் இன்னும் ஒரு தேநீர் தருவாயா? என்று என் புன்னகைகளை ஓயாமல் கேட்டுக் கொண்ட இருக்கிறது நகைச்சுவை வாழ்க்கை.”

என் வெள்ளை வேட்டி, சட்டை போலவே இப்போது ஒரு பறவை என்னை தூக்கிக் கொண்டு பறக்கிறது. நான் முன், பின் அறியா மனிதர்கள் கூட எனக்காக வணக்கம் வைக்கிறார்கள். இப்போது பஞ்சு மிட்டாய் மேகங்கள் என் கன்னத்தின் அருகே உரசிக் கொண்ட இருக்கின்றன.

“ஒரு நாள் எனக்கு ஒரு புல்லாங்குழல் தேவைப் பட்டது. வீதியில் யாராவது விற்று வருவார்களா? என்று காத்திருந்த போது யாரோ ஒரு புண்ணியவான் குப்பை தொட்டிற்குள் வீசி விட்டு நகர்ந்தான். நூறு ரூபா மீதம் தான் என்று குழலை பத்திரப்படுத்தி நான் தேசிய மட்டத்தில் ஒரு போட்டிக்காக இயற்றிய சங்கீதத்தை கேட்டு மனிதர்கள் ரசித்ததை விட எங்கள் ஊர் நாய்கள் இன்று வரை என்னை துரத்திக் கொண்ட இருக்கின்றன.”

புன்னகை என்பது இன்பத்தின் ஓர் அலைவரிசை; அங்கே ராகங்கள் இல்லாமல் இதயப் பெட்டி பழுதடைந்து போகிறது.

எல்லையில்லா கதைகளின் பூமியில் ஒவ்வொரு மனிதனும் மூளைக்குள் உலகத்தை தூக்கி வைத்து யோசிப்பதால் இயல்பான வாழ்க்கை தொலைந்து போகிறது; அங்கே. நகைச்சுவை என்பது சிறைப்பட்டு விடுகிறது.

“அம்மா, இரு ஆப்பிள் பழங்கள் வாங்கி வா என்று ரூபாக்கள் தந்தனுப்பினாள். கடைக்குச் சென்ற நான் பழங்கள் முகம் வாடி இருப்பதால் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன். நாளை, நாளை மறுநாள், இன்னும் இன்னும் என்று நாட்கள் ஓடிக் கொண்ட இருந்தன. அம்மா தந்தனுப்பிய ரூபாக்கள் கூட பல இடங்களில் ஒட்டுக்கள் வாங்கி பத்திரமாக இருக்கின்றன. ஆனால், இன்று வரை என்னால் ஓர் ஆப்பிள் கூட முகம் மலர்ந்த படி வாங்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் தண்டிற்கு பதிலாக ஆப்பிளின் கன்னத்தை கிள்ளுகின்றீர்.” பலத்த மழை பொழிந்தது போல இன்னும் கைதட்டல்கள் என் காதுகளுக்குள் ஓயாமல் கேட்டுக் கொண்ட இருக்கின்றன.

குழந்தைக்கு சோறூட்ட கதைகள் மொழிகின்ற அம்மாவின் அன்பினைப் போல புன்னகை என்பது இதயத்திற்கு குளிரூட்டும் ஆறுதல்கள். ரணங்களின் மீது ரணங்களை புத்தகச் சுமைகள் போல மனதிற்குள் சேகரிப்பதை நிறுத்தி விட்டு கையருகே இருக்கின்ற நிம்மதியான வாழ்க்கையை பற்றிப் பிடித்து புன்னகை செய்யுங்கள்; புண்படாமல் எண்ணங்கள் பூக்களாக பூத்து விடும். பறவைகள் போல பறக்க சிறகுகள் இல்லை என்று கவலைகள் கொள்ளாதீர்கள்; தொடுவான் வரை உணர்வுகளை தூக்கிக் கொண்டு பறந்து போக காற்றாடிகள் உள்ளதென்று திருப்தி கொள்ளுங்கள். என்னருகே அமர்ந்து காயங்கள் மனம் விட்டுப் பேசிய போது நான் காதுகளை பொத்திக் கொள்ளாமல் காரணங்களை கனவுகளாக தேடிக் கொண்டிருந்தேன். என் கனவுகள் நீங்கள் தானென்று மேடையில் நின்று உயிருள்ள உள்ளங்களை பரிசாக வாங்கிய போது புன்னகைக்குள் கண்ணீர் என்று அதாவது, ரோஜாவின் மீது பனித்துளிகள் போல ரணங்கள் மீதும் புன்னகைகள் ஒட்டிக் கொண்டயிருக்கின்றன என்பதினை ஐம்பது வருட வாழ்க்கையில் இறைவனின் விதியென்ற புத்தகத்தை வாசித்து, நகைச்சுவை பக்கங்களை சுவாசித்து கற்றுக் கொண்டேன்.

“கணவனின் தொண்டைக்குள் மீன் முள் சிக்கிக் கொண்டது. ஆனால், மனைவியை அழைக்க முடியாமல் புழு போல நெளிந்து கொண்டிருந்தான். சற்று மணி நேரத்திற்கு முன், கணவன் மீன் அறுத்து வறுப்பதைக் கண்டு கண்ணீர் சிந்திய சைவமான மனைவி இப்போது படுக்கையறையில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அடடா, என்னவொரு காதல் கதை.”

காதுக்குள் காற்றலை வழியே ஓயாமல் சிரிப்போசைகள் கேட்கின்றன. இதனையும், விருதுகளாக மனதினுள் சேமித்துக் கொள்கிறேன். இனிக்கின்ற கற்கண்டுகள் போல பறக்கின்ற போதும் என்னிடம் நீங்கள் ஓயாமல் நகைச்சுவைகளை கேட்டு வாங்கி வயிறு முட்ட நகைப்பது இன்பமாக இருக்கிறது.

“ஒரு நாள் நான் மழையில் நனைந்து கொண்டிருந்தேன்; இயக்குனர் என்னருகே வந்து கண்கள் எதற்காக கலங்கி இருக்கிறது என்று கேட்டார். நான் புன்னகை ஒன்றை சிந்திய படி மழைத்துளிகளும் கண்ணீர்த்துளிகளும் ஒன்று தான் என்றேன். நெடுநாட்களுக்குப் பிறகு மழை வருகின்ற போது ஊரே உள்ளமளவில் கொண்டாடும். ஆனால், மாதக்கணக்கில் தொடர்ந்தால் கொண்டாட்டம் எல்லாம் காணாமல் போய் விடுகிறது. இப்படித்தான் வாழ்க்கையில் ஒரு துளி கண்ணீர் வருகின்ற போது, இதுவரை மகிழ்ந்திருந்த நிமிடங்களின் பெறுமதிகள் காலத்தால் உணர வைக்கப்படுகிறது. இன்றைய மழை என் அம்மாவின் அன்றைய நாட்களை எனக்குள் நினைவுபடுத்திய படி கண்களில் புன்னகை தருகிறது என்றேன். இயக்குனர் எனக்காக ஒரு புன்னகையை பரிசளித்து விட்டுப் போனார்.”

வாய்ப்புக்கள் இன்றி வீட்டில் நாற்பது வருடங்கள் முடங்கிக் கிடந்தால் கூட எதற்காகவும் நகைச்சுவை என்ற ஒன்றை என் மனம் வெறுத்தது இல்லை. ஏனென்றால், இன்று போன்ற ஒரு நாள் எனக்காக நீங்கள் கைகள் தட்ட கிடைப்பீர்கள் என்று அன்று நான் உள்ளமளவில் நினைத்துக் கொண்டேன். ஆமாம், இன்று கண்ணூடாக காண்கிறேன்.

நினைப்பது போல வாழ்க்கை இருப்பதில்லை என்பதற்காக நினையாதவற்றுக்குள் எதற்காக சரணடைகின்றீர். தன்னை விட இறக்கைகளின் பாரத்தை தூக்கிப் பறக்கின்ற பறவைகளின் கதைகளைக் கூட புன்னகைகள் தான் தூக்கிச் சுமக்கின்றன.

கூலியாட்கள், விவசாயிகள் மற்றும் இன்னும் இன்னும் நாளாந்தம் வியர்வை சிந்தி ஒரு வாய் சோறுண்ணுகின்ற மக்களின் இதயத்திற்குள் கூட நகைச்சுவை என்ற ஒன்று இயற்கையாக இறைவனால் குடியமர்த்தப்பட்டிருப்பதால் ரணங்களை மறந்து புன்னகைக்கிறார்கள். நான் கூட வாய்ப்புக்கள் இல்லாமல் ஒதுங்கி இருந்த போது இப்படிப்பட்ட வாழ்க்கையை சுவாசித்திருக்கிறேன். நான் ஒய்வு நேரங்களில் கூறுகின்ற நகைச்சுவைகளைக் கேட்டு என் கூலிக்கார சகபாடிகள் வயிறு முட்ட சிரித்து மகிழ்கின்ற போது உடம்பிலுள்ள ரணங்களை மனம் ஏற்பதில்லை என்பதினை அனுபவப்பள்ளியில் உட்கார்ந்து ஐந்தாறு வருடங்கள் இலவசமாக படித்திருக்கிறேன்.

நீங்கள் இதயத்தால் நினைப்பது தான் நிழல்கள் போல கால்களைச் சுற்றி வருகின்றன. “குரங்கு பொம்மை என்ன விலை என்று மனிதர்கள் கேட்கிறார்கள். மறைமுகமாக, மனிதர்கள் என்ன விலை என்று குரங்கு பொம்மை கேட்கிறது.” இப்படி சின்னச் சின்ன நகைச்சுவைகளுக்குள் சிறுகதை போல நிதர்சனமாகப் பின்னிப் பிணைந்தது ‘வாழ்க்கை’.

கலகலப்பான நகைச்சுவைகள் விளம்பரங்கள் தேடுவது கிடையாது. ஆனால், நீங்கள் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.

‘மக்களின் வயிற்றுக்குள் கலகலப்பான ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கின்ற போது கலைஞனின் வயிற்றுக்குள் தேள்கள் கொட்டிக் கொண்ட இருக்கின்றன’ என்பதினைக் கூட நான் கோமாளி போல நடித்துக் கொண்ட கூற வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன் மேடை இன்றி காத்திருந்து அஸ்தமனமான ஒரு சூரியன் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். அய்யோ, என்னை மன்னித்து விடுங்கள்; நீங்கள் நகைச்சுவைகள் கேட்டு வாங்கி விட்டு என்னைப் பற்றி கூறக் கேட்டீர்கள் என்பதினை மறந்து விட்டு ஏதேதோ கூறுகிறேன். இப்படி நான் கூற எதற்கு மன்னிப்பு என்று நீங்கள் என்னை அணைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பூக்களின் புன்னகை ஆஹா, நறுமணம்; இதயத்தின் புன்னகை ஆஹா, நகைச்சுவை என்று ஒரு கவிதை நான் கூறிய போது ‘என்றோ யாரோ விட்டு விட்டுப் போன வாழ்க்கையை எதற்காக தேடுகின்கிறீர்’ என்று என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். ‘நான் வெறுமென வாழ்க்கையை தேடவில்லை; நகைச்சுவை என்ற புதையலை ஒரு கலைஞனாக தேடுகிறேன்’ என்றேன். மீண்டும், ‘எப்போது புதையலை கண்டுபிடிப்பாய்’ என்று கேட்டார். அதற்கு, நான் கலகலவென்று நகைத்தேன்.

இரு விமானிகள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொள்வது என் காதுகளுக்குள் கேட்கிறது.

“இன்று காற்றாடிகள் போல மனிதர்கள் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். நுரை முட்டைகள் போல கவலைகளை புன்னகை என்ற விரல்களால் உடைக்கிறார்கள். இப்படி ஒரு கைக்குழந்தை மனம் கொண்டு வாழ்க்கையை ரசிப்பது மழை பெய்யாமல் குளிர் காற்றில் நனைவது போல எவ்வளவு சுகமாக இருக்கிறது. பொம்மைகள் போல ஜடமாக இருக்கின்ற வாழ்க்கையை விட புதிதாக சமைக்கப் பழகிய மனைவியின் காரசாரமான சாப்பாட்டை குறையின்றி ஏற்றுக்கொள்வது போல நிறைவாக வாழ்க்கையை கைப்பற்றிக் கொள்ளுங்கள். என்னடா, நாமே விமானியா? இல்லே கவிமானியா? ” என்று சிரித்துக் கொள்கிறார்கள்.

பல்வேறு பட்ட மனிதர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். என் மொழி பலருக்குப் புரிகிறது; சிலருக்குப் புரியவில்லை. ஆனால், என் சைகைகள் யாவருக்குப் புரிகிறது.

நண்பனின் காலம் கடந்த சண்டையை இன்று நினைக்கின்ற போது இன்னும் சண்டைகள் போட்டிருக்கலாமென்று உள்ளூணர்வு ப்ரியப்படுகிறது. கையிருப்பைக் கொண்ட இன்பம் என்று தப்பாக கணித்துக் கொள்ளாதீர்கள். என் இல்லாமையில் கூட இன்பமாக வாழ்ந்திருக்கிறேன். மாளிகை மற்றும் வாகனங்கள் இன்றி சிறு அறைக்குள்ளும் மாட்டு வண்டிப் பயணங்களிலும் என் கலையை நான் சின்னச் சின்ன சிற்பங்களாக செதுக்கி இருக்கிறேன்.

‘விமானத்தில் பறந்து வா’ என்று என் நாட்டுக்குள் இயக்குனர்கள் அழைப்பார்கள்; ஆனால், நான் பேருந்து, படகு, மாட்டு வண்டி மற்றும் புகைவண்டிப் பயணங்களை பறக்கலாம் என்பதற்காக மனதளவில் விட்டுக் கொடுத்ததில்லை. என் கவலைகளைக் கூட கானல் நீர் போல நினைத்துக் கொள்வேன்; இயல்பாக என்னிடம் நகைச்சுவை ஒட்டிக் கொள்கிறது. ஏனென்றால், நான் ஒரு கோமாளி.

நெடுநேரமாக என் பார்வைகளுக்குள் ஓர் அழகான சிறுமி தெரிந்து கொண்ட இருக்கிறாள்; இவளை நான் ஏற்கனவே எங்கயோ சந்தித்து இருக்கிறேன். ஆனால், என் புத்திற்குள் ஞாபகங்கள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பதால் கண்டுபிடிக்க சற்று கடினமாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டுக் காட்டி நான் சிறுமியை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன். நான் சிறுமியின் பக்கத்தில் முட்டிக்கால் இட்டு அமர்ந்து கொள்கிறேன். என் கன்னங்களை அன்பாக தொட்டுப் பார்க்கிறாள். நான் கார்ட்டூன் பொம்மை போல முக பாவனை செய்து சிரிக்க வைக்கிறேன். பிஞ்சுக் கைகளை தெம்பில்லாமல் தூக்கி என் கன்னங்களை முத்தங்கள் வாங்க அழைக்கிறாள். என் வாழ்க்கையில் என் நகைச்சுவைகளுக்கு இறைவன் கொடுக்கின்ற அங்கீகாரம் போல சிறுமியின் முத்தங்களை வாங்கிக் கொள்கிறேன். என் கண்கள் மக்களுக்கு மத்தியில் முதற்தடவையாக கலங்குகின்றன. சிறுமியின் கண்களுக்குள் கண்ணீர்த்துளிகள் நிரம்பியும், தேகத்தை அசைக்க முடியாமல் நிகழ்கின்ற இனம்புரியா சோர்வும் என்னை வினவ வைக்கிறது. இறைவியிடம் பாப்பாக்கு என்னவென்று கேட்கிறேன். இறைவி (அம்மா) கலங்குகிறாள்; புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக ஒரு பறவை பறந்து கொண்டிருக்கிறது.

இவள் என்னிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள். முத்தத்தின் ஈரங்கள் காய்வதற்குள் என் கன்னங்களை தொட்டுப் பார்க்கிறாள். என் படங்கள் அச்சிடப்பட்ட நோட்டுப் புத்தகம் வைத்திருக்கிறாள்; பாப்பாவின் புன்னகையில் என் அம்மா முகம் தெரிகிறது; அவற்றில் என் ஆட்டோகிராப் கேட்கிறாள். நகைச்சுவைகள் அழுகை அழுகையாக வழிகிறது.

என் பைகளுக்குள் எப்போதும் ஒரு சில பொம்மைகள் வைத்திருப்பேன். அவற்றில் ஒன்றை பாப்பாக்கு பரிசாகக் கொடுக்கிறேன். பொம்மையின் முகம் பார்த்த பின் என் முகம் பார்க்கிறாள். கலகலவென்ற இதழ்களின் பாவனை சத்தமின்றி நடிக்கிறது. இதயத்தின் பக்கம் கை வைத்து பர்தா அணிந்தவன் நன்றி நவில்கிறாள். இன்று என் கலையால் இவளை நகைக்க வைக்க முடியும். ஆனால், நாளை இவள் இருப்பாளா? என்ற கேள்விக்கு இறைவனும் ‘ஆமாம்’, என்று ஒரு புன்னகை பதில் எழுதினால் என் ஆயுளின் ஒரு பாதியை விதிகளுக்கு தானம் செய்கிறேன் என்பது போல எனக்குள் எண்ணங்கள் தோன்றாமல் இல்லை.

காலம் கடந்த ஞானம் போல பாப்பாவைச் சந்தித்த இடத்தை என் நினைவுகளை புழுதி தட்டி, காஷ்மீர் பனிப்புகார் முகாம்களில் நான் நகைச்சுவை ஊழியனாக பணியாற்ற அரசினால் அனுப்பப்பட்ட தருணங்களில் அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து விட்டேன்.

ஒரு பக்கம் யுத்தம்; மறு பக்கம் வாழ்க்கை; நடுவே பெயரில்லா தேடல் போல என் நகைச்சுவை. “பூக்களுக்கு விளம்பரம் தேவையில்லை; ஏனென்றால், பூக்கள் அழகானவை. மனம் ஓர் ஊமை; ஆதலால், ஊது குழல் கொண்டு புதுப்பிக்க சின்னச் சின்ன கூழாங்கற்கள் போல புன்னகை.”
யுத்தத்தின் ஓசைகளும், ஓலங்களும் முகாம்களைச் சுற்றி ஓயாமல் கேட்டுக் கொண்ட இருந்தது.

சோகமான முகங்கள்; சோகமெங்கும் ஏக்கத்தின் முகவரிகள் போல என்னை நோக்கிய படி ஒரு மக்கள் கூட்டம். இது போன்ற பின்னணியில் ஒரு மேடைக் கலைஞனாக நடித்து இதயங்களுக்குள் நுழைந்து எப்படி இவர்களை மகிழ வைக்க என்னால் முடியும் என்று நான் என்னளவில் எண்ணி தோற்றுப் போன தருணம், என் எளிமையான நகைச்சுவைகளைக் கேட்டு மனமார காஷ்மீர் மக்கள் மகிழ்ந்தது என் உயிருள்ள வரை மறவா நிமிடங்கள் தான்.

ஒரு வாழ்க்கையை கதையாக மொழிந்து அதற்குள் கூத்தை மையமாகக் கொண்டு நான் இயற்றிய நகைச்சுவை நாடகம் இன்று வரை நான் வேறெங்கும் இயற்றா என் கலையின் பக்கங்கள்.

பின்னணியில் செல்வங்கள் இல்லை; ஊரிலுள்ள வீடு நாளை சொந்தமில்லை; பசிக்கிறது ஆனால், சுயநலமில்லை. கையில் பரிசுகள் இல்லை; ஆனால், கொடுக்க மனம் இருக்கிறது. இப்படி காஷ்மீர் மக்களை அன்று நான் கற்றுக் கொண்டேன். இப்படிப்பட்ட, ஒரு பின்னணியில் நான் பாப்பாவை சந்தித்ததை உணர்ந்து கொள்கிறேன்.

இன்று இவள் பறவைகளின் வானத்தில் எப்படிப் பறக்கிறாள் என்ற கேள்வி எனக்குள் இல்லை; ஏனென்றால், என் நேற்றைய நாட்கள் போல இன்றைய நாள் இல்லை என்பதினை உணர்கிறேன். இப்படித்தான் வாழ்க்கையின் கட்டமைப்பு மாற்றத்தின் விளிம்பில் தொங்குகின்ற பூச்சரம். ஆனால், “உயிருக்காக பறக்கிறாளே!” என்ற காயங்கள் தான் என் இதயத்தை ஒரு புழு போல குடைகிறது.

எனக்காக பலர் விமான நிலையத்தில் காத்திருப்பதாக வந்து கொண்டிருக்கின்ற செய்திகளை இணையம் வாயிலாக அறிகிறேன். நான் கலகலவென்று நகைக்கிறேன்; ஆனால், இதயத்திற்குள் இதெல்லாம் எதற்கென்று தன்னடக்கம் கொள்கிறேன்.
என் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகள் பல வெள்ளை நிற மக்களின் கைகளில் இருப்பதைக் கண்டு இன்பம் கொள்கிறேன். யார் இவர்கள் நான் இவர்களை இதுவரை வாழ்க்கையில் சந்தித்து இல்லை.

‘நான் அடையாளமற்ற ஆன்மா; என் மொழியே என் நிழல்.’

என் கலையை நான் வளர்க்கவில்லை; மாறாக, இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நகைச்சுவை என்ற ஒன்றை ஆழமாக புதைத்து வைத்திருப்பதால், என்னால் இவர்களை இலகுவாக சிரிக்க வைக்க முடிகிறது.

பல மில்லியன் டொலர்கள் பரிசுகள் எனக்கு கிடைக்குப் போவதாக ஊடகங்கள் மிஞ்சிக் கொள்கின்றன; ஆனால், மக்களின் இதயத்தைப் போல ஒரு செல்வம் வேறில்லை என்று நான் உணர்ந்திருப்பதை யாரும் அறிய மாட்டார்கள். ஊடகங்கள் மற்றும் மக்களின் கண்களில் தென்படாமல் இந்நிதியை நான் ரகசியமாக தானம் செய்ய நினைக்கிறேன்.

உலக நகைச்சுவை கலைஞர்களின் வரிசையில் சார்ளி சாப்ளின் புகைப்படத்தின் பக்கத்தில் எனது புகைப்படமும் இன்று வரப்போவதாக எல்லோரும் கூறுகிறார்கள். இன்று ஏனோ ஒரு நகைச்சுவை இமைகளுக்குள் கண்ணீரை மறைக்கிறது. “சுவாசித்து கனவை யாசித்து வாழ்கின்ற வாழ்க்கையில் தயவு செய்து புன்னகையை மறக்காதீர்கள்; கள்ளமில்லா எண்ணங்களை வெறுக்காதீர்கள்.”

நகைச்சுவை என்றால் என்னவென்று, இன்று வரை ஓர் உறுதியான வரையறை இல்லை. ஏனென்றால், மக்களின் வாழ்க்கை மாறுபட்டது.

பூனையின் தொனியில் ரைமிங் பாடி இங்குள்ள குழந்தைகளை மகிழ வைக்கிறேன். ஒரு பறவை போல பறக்கிறேன்; என்னைப் பிடிக்க குழந்தைகள் சத்தமிடுகிறார்கள். யானை போல நடக்கிறேன்; உப்புச் சவாரி கேட்டு ஏறிக் கொள்கிறார்கள். கட்டபொம்மன் போல நடித்துக் காட்டுகிறேன்; பலமாக கைகள் தட்டுகிறார்கள். பாப்பாவும் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்ட இருக்கிறாள். இன்னும் ஐந்து நிமிடங்களில் பறவைகளின் வானத்தை விட்டு பூமியில் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வருகிறது.

என் அம்மா வயதிலுள்ளவர்கள் நான் நீடுழி வாழ வேண்டுமென்று பிராத்திக்கிறார்கள்; கட்டியணைத்துக் கொள்கிறார்கள். பரிசுகள் போல நினைவாக வைத்துக் கொள்ள ஏதேதோ தருகிறார்கள்.

குழந்தைகள் என்னைக் கட்டிப் பிடித்து அழுகிறார்கள். நான் சமாதானம் செய்கிறேன். பாப்பாவும் என்னை நோக்கிய படி துளித்துளியாய் கண்ணீர் சிந்துகிறாள். நான் பாப்பாவை தூக்கிக் கொண்டேன். முத்தங்கள் கொடுக்கிறாள்; இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள். ‘என்னை பார்க்க வருவியா?’ என்று உருது மொழியில் கேட்கிறாள். ‘பாப்பா மீது சத்தியமா வருவேன்’ என்று சத்தியம் செய்கிறேன்.
விமானத்தின் கால்கள் பூமியை தொட்டுக் கொண்ட இருக்கின்றன.
***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad