\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வெள்ளை நிறத்தொரு பூனை

Filed in கதை, வார வெளியீடு by on November 9, 2021 0 Comments

எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று  மார்கழி மாதக்  குளிரில் சற்றே நடுங்கி  கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர். 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது.  பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!!  பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!!

மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது மிதிவண்டியைக் குளிரில் நடுங்கிக்கொண்டே மிதித்தான். மாரிமுத்துவுக்கு ஒரு நாற்பத்தி ஐந்து வயது இருக்கும். ஒரு அழுக்கு ஸ்வெட்டர், இரண்டு காதுகளையும் மூடியபடி தலையைச்  சுற்றி மப்ளர், வாயில் ஒரு பீடி.  இதையும் தாண்டி மார்கழி மாதக் குளிர் அவனைத் துவட்டியது !!!

மெதுவாக மிதித்துக் கொண்டே வாணி திருமண மண்டபத்தை வந்தடைந்தான்இன்னும் மெயின் கேட் பூட்டியே இருந்தது. நைட் வாட்ச்மென் கோவிந்து சேரில் உட்கார்ந்தப்படியே தூங்கிக் கொண்டிருந்தான் .

டேய் சோமாறி, ஏழு மணியாகப் போகுது! இன்னும் தூங்கிக்கீனு கீற, எழுந்து கேட்டைத் தொறடா“.

டபால்என்று எழுந்த கோவிந்துஅண்ணாத்தே, இத்தனை நேரம் முழிச்சிக்கிட்டுதான் இருந்தேன். இப்பதான் தூங்கினேன் என்றான்.

டெய்லி இதேதான் சொல்றே! என்னிக்காவது எவனாவது வந்து, எல்லாத்தியும் லவட்டிகினு போகப்போறான்! அன்னிக்கு இருக்கு உனக்கு தீவாளி!!!” என்றான் மாரிமுத்து. பயந்தப்படியே கோவிந்து கேட்டைத்  திறந்தான்.

கோவிந்து  மோட்டார் ஓடுதா, இல்ல அதையும் மறந்துகினியா?”

அண்ணாத்தே! இப்ப போட்டுடறேன்என்று சொல்லிக்கொண்டே மாரிமுத்து முகத்தைப் பார்த்து பேச பயந்துக்கொண்டே மோட்டார் ஷெட் பக்கம் ஓடினான் கோவிந்து.

நீ திருந்தவே மாட்ட!!! எத்தனை தபா சொல்றது!” என்று சொல்லிக்கொண்டே  உள்ளே வந்தான்.

வாணி திருமண மண்டபம், பல்லாவரம் பச்சை அம்மன் கோவில் பக்கத்தில் உள்ளது. சிறிய மண்டபம்தான். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சிறிய வைபவகங்களை நடத்தலாம்.மாரிமுத்து பகல் வாட்ச்மென். கோவிந்து நைட் வாட்ச்மென். கோவிந்துக்கு  ஒரு இருபத்தி அஞ்சு வயசு இருக்கலாம்இன்னும் தனிக்கட்டைதான். மாரிமுத்துவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். மனைவியின் பெயர் சின்னப்பொண்ணு. அட! அவ பேரே அதாங்க!!!. அவன் அவளை ஆசையாசின்னுனுதான் கூப்பிடுவான்!!!  பிறந்து வளர்ந்தது எல்லாம் நார்த் மெட்ராஸ்தான். வேலைக்காக பல்லாவரத்துலே செட்டிலாயிட்டான். மெட்ராஸ் பாஷையும் நெறைய மறந்துப் போச்சு. இப்ப பேச்சுக்கு நடுவிலே கொஞ்சம் கொஞ்சம் மெட்ராஸ் பாஷை பேசறான்.

“இவனை ரொம்ப ஓவராத்  திட்டி, வேலையை விட்டு அபீட்டு ஆயிட்டான்னா, அப்புறம் நான்தான்  டே அண்ட் நைட் டூட்டி சேத்துப்  பாக்கணும்.” என மனதிற்குள் நினைத்து பயந்தான் மாரிமுத்து.

“கண்ணா  கோவிந்து! இங்கே வாடா, குந்திக்கோ. பத்து மணிக்கெல்லாம் சில நாளிக்கி கரண்ட் கட்  பண்றங்கடா! தொட்டிலே தண்ணீர் இல்லேனா, முதலாளி காண்டு ஆயிடுவாரு! புரியுதா? நாயர் கடைல டீ சொல்லிகினேன். குடிச்சுகின்னு கிளம்பு” எனச் சொல்லி முடித்தான்.

கோவிந்து கிளம்பிய பிறகு கீழே கிடந்தக்  குப்பைகளை அள்ள ஆரம்பித்தான். மாரிமுத்து. வேலைக்காரி வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் . வாணி திருமண மண்டபத்தைச் சில வருடங்களுக்கு முன்னர்தான் முருகானந்தம் கட்டினார். தனது பெண்ணின் பெயரையே மண்டபத்திற்கு வைத்தார். மார்கழி பங்குனி, புரட்டாசி  மற்றும் ஆடி மாதங்களில் நற்காரியங்களை முடிந்தவரை யாரும் நடத்துவதில்லை. முக்கால்வாசி நேரங்களில் மண்டபம் சும்மாதான் இருந்தது. மாரிமுத்து தான் முருகானந்ததிற்கு ஒரு ஐடியா கொடுத்தான். சும்மா இருக்கிற சமயங்களில் நாம் ஏன் யோகா, சமையல்  போன்ற கிளாசுங்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என ஒரு நல்ல யோசனையை அவர் முன் வைத்தான். முருகானந்ததிற்கு அது நல்ல யோசனையாகப்  படவே அதைச் செயல்படுத்தினார். இந்த மாசத்துல மட்டும் எட்டு புக்கிங்!!! மாரிமுத்துவுக்கு அப்பப்ப கொஞ்சம் கமிஷனும் கொடுப்பார்.

இன்று பூத்தையல் கிளாஸ்! பங்கஜம் மாமி மெதுவாகத் தனது டிவிஎஸ் 50ஐ  ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவாரே “மாரிமுத்து, இங்கே வா,  இந்த  பையிலே இன்னைக்கு கிளாசுக்குத் தேவையான  பொருளெல்லாம்  இருக்கு . கொஞ்சம் ஹால்ல கொண்டுப்போய் வையேன்பா” என்றாள். 

“மாமி! முருகானந்தம் சார் எனக்கு சம்பளம் கொடுக்கறது, மண்டபத்தைப் பாத்துக்கத்தான்! உங்களுக்கு எடுபிடி வேலை செய்ய இல்லை” என்றான் மாரிமுத்து.

“சரிப்பா! எனக்கு 60 வயசு ஆச்சு! ஒரு வயசானவளுக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சுக்கோ”

இப்பால  சொன்னியே இதுக்கினே இந்த மாரிமுத்து ஹெல்ப் பண்ணுவான்என்று சொல்லிவிட்டு, பைகளைத் தூக்கிக்கொண்டு மாமியின் பின்னால் நடந்தான்.

மாமி, இன்னைக்கு இஸ்கூலுலெ இன்னா சொல்லித் தரப்போற?”

மாரிமுத்து, என்னடா தமிழ் பேசற! பூத்தையல் கிளாஸ்னு  சொல்லு. இன்னைக்கு தோடர் மலைவாழ் மக்களின் பூ வேலைப்பாடுப் பற்றி சொல்லித்தரப் போறேன் . இதை நான் ரொம்பக் கஷ்டப்பட்டு என்னோட நீலகிரி சித்திகிட்டேந்து கத்துக்கிட்டேன்!”.

தோடர்கள் தமிழ் நாடு மேற்குத்  தொடர்ச்சி மலையின்  ஒரு பகுதியான நீலகிரி மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர். தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் “கை” தேர்ந்தவர்கள். குறிப்பாக அவர்கள் சால்வைகளில் ஊசியைக் கொண்டு சிவப்பு மற்றும் கருப்பு பருத்தி நூலில்  செய்யும் வேலைப்பாடுகளை  பார்க்க நெய்த துணி போலவே தோன்றும். இந்த அரிய கலைத் திறன்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துக் கொண்டு வருகிறது. இதை மக்களிடையே எடுத்துச் செல்லும் பங்கஜம் மாமியை கட்டாயம் பாராட்ட  வேண்டும்.

மாரிமுத்து இன்னைக்கு குளிச்சியா? உன்னை பார்த்தாலே ஒரு வாரம் குளிக்காத மாதிரி இருக்கு.”

மாமி உங்க வீடு மாதிரி எங்கே வீட்டுலே பாத்ரூமா கீது? நான் இங்கதான் குளிக்கணும்! ” என்று சொல்லிவிட்டு பைகளை ஹாலில் வைத்தான்

மண்டபத்தின் பின்பக்கத்தில் இன்னும் சில வேலைகள் உள்ளது. அதை முடித்தப்பின் குளிக்கலாம் என்று நினைத்தப்படி   பின்பக்கத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் எல்லா வேலைகளையும் முடித்து குளித்து விட்டு வெளியே வரும்போது  மணி 10. மண்டபத்தின் உள்ளே  நிறைய வண்டிகள். மாமி இன்னும் கிளாஸ் தொடங்கவில்லை.

மண்டபத்தின் அருகிலே ஒரு தள்ளு வண்டியில் ஒரு இளைஞன் துணிகளை அயர்ன் பண்ணிக்கொண்டிருந்தான் . அவனிடம் “டேய் கோவாலு! நாயர் கடைல நாஸ்தவ உன்னாண்ட கொடுக்க சொன்னேன், கொடுத்தாங்களா?”

“இட்லியும் கெட்டிச் சட்னியும்  கொடுத்தாங்கண்ணே”

பொட்டலத்தை வாங்கிக்  கொண்டு அங்கே இருந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். கோவாலுவின் பொண்டாட்டி தரையில் உட்கார்ந்து இருந்தாள்.

“என்ன ராணி கிலே குந்திகினுகிரே! இன்ன  மேட்டரு?”

“ஒன்னும் இல்ல அண்ணாத்தே! சும்மாதான் குந்திகினுகிரேன்! சின்னப்பொண்ணு எப்படிகிது. பாத்து ரொம்ப நாள் ஆச்சு “

மாரிமுத்து  இட்லியை கெட்டிச் சட்டினியோடு அணைத்தப்படி வாயில் முழுங்கினான்.  “அவ  ஷோக்காகிறா! பக்கத்துலகீற ஒரு இஸ்கூல சத்துணவு ஆயாவா வேலை பாக்குது . நேத்திக்கு சரக்கு கொஞ்சம் ஓவரா போட்டேன் போல.  அவ ஒன்னு சொல்ல நான் ஒன்னு சொல்ல, ஊட்டுல ஒரே கொழாயடி சண்டைதான். மன்சே கஸ்டமாகிது!:”

“வீட்டுக்கு வீடு வாசப்படி அண்ணாத்தே. இங்க மட்டும் என்ன வாழுதாம். ரொம்ப கண்டுக்காதே!”  என்று ராணி அவனைக் கொஞ்சம் சமாதானப்படுத்தினாள்.

“சரி. எனக்கு நெறியா வேலைக்கீது” என்று சொல்லிவிட்டு  கையை அலம்பிக்கொண்டு  மண்டபத்திற்கு உள்ளே சென்றான். மாமி நின்றவாறே எவ்வாறு ஊசியைக் கொண்டு சிவப்பு மற்றும் கருப்பு நூற்களைப் பருத்தி துணியில் தைப்பது எனச் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.

 மாரிமுத்து பின்னால் விட்ட வேலைகளை முடிக்க சென்றான். கிட்டத்தட்ட முணு மணி நேரத்திற்கு  பிறகு அவன் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு பையன் அவனைக் கூப்பிட்டான் .  

“மாரிமுத்து அண்ணே! இந்த பக்கமா வேலையா வந்தேன். அக்கா உங்களுக்கு சாப்பாடு கொடுத்திருக்காங்க”

மாரிமுத்து கையில் ஒரு இரண்டடுக்கு கேரியரை கொடுத்து விட்டு கிளம்பி விட்டான்.  மாரிமுத்து கையை அலம்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தான். நெத்திலி மீன் குழம்பும் வெறும் சோறும்!

“இந்தக் கயிதைக்கு என் மேல எம்புட்டு ஆசை. எனக்கு புடிச்ச நெத்திலி மீன் குழம்பு பண்ணிருக்கு. நான்தான் சின்னுவை ரொம்ப கலீஜ்ஜா பேசிகினேன்.  ஜனதா தெயட்டருல தல அஜித் படம் ஓடுது. சின்னுவுக்கு தல அஜித் படம்னா ரொம்பப்  பிடிக்கும். இன்னைக்கு அவளுக்குப் புடிச்ச பால்கோவா, சமோசா, அப்புறம் மல்லிகைபூ வாங்கிகினுப் போயி அவளை குஷிப்படுத்திடனும். பசங்களுக்கும் சமோசான்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா கைல நூறு ரூபாதான் கீது! இன்னாப் பண்றதுனு தெரியலேயே!  முருகானந்தம் சார் வந்தா, அவரிட்ட  சொல்லிக்கினு நாலு மணிக்கெல்லாம் அபீடு ஆயிடனும்”  என்று நினைத்தப்படி சாப்பிட்டு முடித்தான்.

கொஞ்ச நேரத்தில் பூத்தையல் கிளாஸ் முடிந்து மாமியைத் தவிர எல்லோரும் கிளம்பி விட்டனர். மாமி சற்று கோபமாகவே வெளியே வந்தாள். 

“மாரிமுத்து  என்னடா மண்டபம் வச்சிருக்கீங்க. ஹால்ல லைட் ஒழுங்கா எரிய மாட்டேங்குது. டேபிள் எல்லாம் டான்ஸ் ஆடுது!! டாய்லெட்டுல இருக்கறது வாளியா இல்ல பூவாளியாடா? ஒரே ஓட்டை! எல்லா தண்ணியும் புடிச்ச வேகத்திலே கீழப் போயிடறது!!! “

இதைக்கேட்டதும் “குபுக்” என்று மாரிமுத்து சிரித்துவிட்டான். மாமிக்கு கோபம் தலைக்குமேலே ஏறியது.

“என்னடா சிரிப்பு. நான்பட்ட  அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா. கிளாஸ்சுக்கு வந்த நாலு பொண்ணுகள்கிட்ட இங்க கிளாஸ் இல்லைன்னு சொல்லிருக்க, ஏன்டா அப்படி சொன்னே?”

“மாமி, ஓ அவுங்களா! எதோ “எம்ப்ரோபிடாரி “ன்னு சொன்னாங்க. அதெல்லாம் இங்கே இல்லன்னு சொன்னேன். ஒரே இங்கிலீஷுபீஸ்ல பேசுதுங்க. அதான் காண்டாயிட்டேன்”.

எம்பிராய்டரின்னா பூத்தையல்னு அர்த்தம். உன்னமாதிரி படிப்பறிவு இல்லாதவளே ஏன்தான் முருகானந்தம் வேலைக்கு வச்சுருக்காரோ! ஒரு டீசெண்டான ஆளு அவருக்குக் கிடைக்கலையா என்ன?என்று மாமி கோபமாய் கத்தினாள். தன்னைப் பற்றி சற்றுக் கேவலமாய் பேசியதினால் மாரிமுத்து கோபப்பட்டு ஏதோ சொல்ல, மாமி அதற்கு பதில் சொல்ல, அந்த இடம் போர்களமாய் மாறியது. கோவாலுவும் ராணியும் வந்து அவர்கள் சண்டையை விலக்கி விட்டார்கள். மாமியும் கோவாலுவின்  உதவியுடன் எல்லா  பைகளையும் எடுத்திக்கொண்டு கிளம்பினாள்.

இந்த சண்டை ஓய்ந்து ஒரு மணி நேரம் கழித்து முருகானந்தம் வந்தார். மாரிமுத்து ஒன்று விடாமல் அத்தனையும் அவரிடம் ஒப்பித்தான்.

சரி விடுடா! நான் மாமிகிட்ட நாளைக்குப்  பேசுறேன்

சார், நேத்தாலே எனக்கும் என் சின்னுவுக்கும் பெரிய சண்டை. இன்னிக்கு நாலு மணியாண்ட கிளம்பட்டா?” என ஏக்கமாக  கேட்டான் .

மாரிமுத்து இதுவரை எதுவும் கேட்டதில்லை. உடனே முருகானந்தம்இரண்டு விஷயத்தை முடிச்சிட்டு நீ கிளம்பு . நான் கோவிந்துகிட்ட கேட் சாவியைக் கொடுத்துக்கிறேன்.  என்றார்

நாளைக்கு யோகா கிளாஸ். முதல்ல ஹால் எல்லாம் கிளீனா இருக்கான்னு பாருடாய்லெட் பிரச்சனை, லைட், டேபிள் விஷயம் எல்லாத்தையும் சரிப்பண்ண நம்ம காண்ட்ராக்டர் டேவிட் சாரை நான் கூப்பிட்டேன்னு அவர் வீட்டுல  போய் சொல்லு. அவர் செல் நம்பர் மாத்திட்டாருன்னு நினைக்கிறேன். அவர் வீட்டு அட்ரஸை  எழுதித்தரேன்எனச் சொல்லி முடித்தார்.

மாரிமுத்துவும் சரியென்று சொல்லிவிட்டு, நூல் மற்றும் குப்பைகளை விளக்கமாறால் கூட்ட ஆரம்பித்தான். மேடையின் உள்பக்கமாக சில நூற்கண்டுகள். அவன் குனிந்து விளக்கமாறால் வெளியே  தள்ளினான். அந்த நூற்கண்டுகளுடன் ரப்பர் பேண்டில் சில 500 ரூபாய் தாள்கள் அழகாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. 6 தாள்கள்! மாரிமுத்து நூற்கண்டு மற்றும் பணத்தையும் தனது பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டான்.

மாரிமுத்து முருகானந்ததிடம் சொல்லிவிட்டு, மிதிவண்டியை எடுத்துக்கொண்டு  டேவிட் சார் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தான். போகும் வழியில்கணபதி ஸ்வீட் ஸ்டால்“. வாசலில் மிதிவண்டியை நிறுத்தினான். “பால்கோவா கால்கிலோ , சமோசா ஒரு 10 போடுங்கஎன்று கேட்டபடி 500 ரூபாய் தாளை கடைக்காரரிடம் நீட்டினான். போகும் வழியில்  மல்லிகைப்பூவும் வாங்கிக் கொண்டான்.

போகும் வழியில் ஒரு பெரியவரிடம் “விவேகானந்தா தெருவுக்கு எப்படி போகணும்” எனக் கேட்டான்.

 “அதோ தெரியுதே லைட் கம்பம், அதுக்கு அப்பாலே” என்றார்.  

மாரிமுத்துவும் அவன் தேடிய வீட்டை வந்துடைந்தான்.  அது பங்கஜம் மாமியின்  வீடு!!!  வீட்டு வாசலில்  மாமி கவலையாக  உட்கார்ந்திருந்தாள். மாமியின் கையெல்லாம் சிராய்ப்புகள்.  அங்காங்கே இரத்தக் கறைகள். 

“இன்னாச்சு மாமி!  ஒழுங்காத்தானே மண்டபத்துலேந்து ஊட்டுக்குப் போனே?”

“ஒரு கட்டேலே போறவன் என் வண்டிய வந்து இடிச்சுட்டான். நானும் கீழ விழுந்துட்டேன். என் பையில் இருந்த பொருளெல்லாம் நாலாப்பக்கமும் சிதறிப் போச்சு!  அந்தப் பையில் 3000 ரூபாய் வச்சிருந்தேன். எவனோ ஒரு படு பாவி அதை எடுத்துண்டு போயிட்டான். நான்தான் மண்டப வாடகையெல்லாம் கொடுத்துடனே, நீ எதுக்கு இப்ப இங்க வந்துருக்கே?”  என்று அழுது கொண்டே கேட்டாள்.

மாமி நீங்க மண்டபத்திலே இந்த நூல்கண்டை விட்டுகினிங்க. அத கொடுக்கலாம்னு வந்தேன்

“ஏன்டா நானே 3000 ரூபாய் போய்டுத்துன்னு, கவலையா இருக்கேன். நீ 50 ரூபாய் கூட போகாத நூல்கண்டை பெரிசா எடுத்துண்டு வந்துட்ட!” என்று மாமி அலுத்து கொண்டாள்.

மாரிமுத்து நூல்கண்டுகளை மாமியின் கையில் கொடுத்தான். மாமியும் வேண்டா வெறுப்பாய் வாங்கிக் கொண்டாள் . அந்த நூல்கண்டுகளுக்கு நடுவேரப்பர் பேண்டில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த 500 ரூபாய் தாள்கள்!!!”.  

மாமி, இதை நீங்க மண்டபத்திலே விட்டுகினிங்க.”. 

மாமியின் கண்ணெல்லாம் கண்ணீர். “மாரிமுத்து, உனக்கு ரொம்ப பெரிய மனசு! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்டா! இந்தா 100 ரூபாய வைச்சுக்கோ” என்று சொல்லியபடியே தன் கைப்பையிலிருந்து 100 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தாள் .

“மாமி, இன்னாத்துக்கு பணம் தர? ஒன்னும் வேணாம்.  இந்த மாசம் 8 புக்கிங்! முருகானந்தம் சார் இன்னிக்கு எனக்கு 500 ரூபாய் கமிசன் கொடுத்தாரு. என் பொண்டாட்டிய வேற சினிமாவுக்கு கூட்டிகினு போணும். டேவிட் சாரை வேற பாக்கணும். டைம் இல்ல” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

அவன் ஒரு நான்கு அடி கூட மிதிவண்டியில் போயிருக்க மாட்டான். பின்னால் இருந்து ஒரு குரல்.

“மாரிமுத்து என்னை மன்னிச்சுடுடா! உன் டிரஸ், பாஷை, தோற்றம் இதல்லாம் என் மனசுல வச்சுகிட்டு உன்னை கொஞ்சம் இளக்காரமாய் மத்தியானம்  பேசிட்டேன். ஆனா நீ அதெல்லாம் மனசுல வச்சுக்காம  என் பணத்தை ஏங்கிட்டயே கொடுத்துட்ட. என் மனசுல நீ உலகளந்த பெருமாளை விட உயரமாய் தெரியறே!!! ” என நா தழு தழுக்கச் சொன்னாள் .

“மாமி ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க. நம்ப கஷ்டப்பட்டுகினு சம்பாதிச்ச பணமே ஓட்ட மாட்டேங்கிது.  அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு மாமி? நான் வரேன்” என்று சொல்லிவிட்டு மிதிவண்டியை மிதிக்க தொடங்கினான்.

அங்கே மாமியின் பக்கத்து வீட்டுக்  குழந்தை தனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து புரட்சிக்கவி பாரதியின் பாடலை உரக்கப் படித்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை

அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 

  • மருங்கர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad