\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் விடையறியப்படாமலே இருக்கும் விஷயம் மதம் எனும் கோட்பாடு. 

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரிணாமக் கோட்பாடுகள் உருவான போது மதம் பற்றிய பல்வேறு கருத்துகள் வெளிவந்தன. எட்வர்டு டைலர் எனும் ஆங்கில மானிடவியலாளர் பிணம், தரிசனம், பிரமை, கனவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கலாம் என்கிறார். அதாவது, இறந்துபோன குடும்பத்தார் கனவில் வந்ததாலோ அல்லது அவர்களது நினைவுகள் அகலாமல் இருந்ததாலோ அவர்களது ஆன்மா (soul)காற்றில் கலந்து இயற்கையோடு ஐக்கியமாகிவிட்டதாக நம்பத் தொடங்கினர். இந்தக் கோட்பாட்டை ஆன்மவாதம் (animism) என்கிறார் டைலர். 

 இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் ஆர். ஆர். மார்ட், ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்வீகக் குடிகள், விலங்குகள், மனிதர்கள், இயற்கை சக்திகள் தோன்றியதற்கு கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று இருப்பதாக நம்பினார்கள் என்கிறார். இது அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடான ஒழுக்கத்தை உருவாக்கியதாகச் சொல்லும் அவர், மக்கள் ஒரு பயபக்தியுடன் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் கருதினார். மதம் அறிவுப் பூர்வமானது என்பதைவிட உணர்வுப் பூர்வமானது என்பது இவரது கூற்று.

 ஆஸ்திரிய உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் பிராய்ட், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அக்குடும்பத்தின் மூத்த ஆண் நபரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு அடிபணிந்து, வாழ்ந்து பின்னர் அவர் இறந்தபின் அவரின் கருத்துகளையே ஏற்று, வழி நடந்து அவரை வணங்கி வந்த நம்பிக்கை வழக்கமாக மாறி, மதம் எனும் கோட்பாடு உருவாகியதாகச் சொல்கிறார். 

 சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பாடல்கள் மூலம் ‘நடுகல்’ வழிப்பாடு என்றொரு வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. போரில் இறக்கும் மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் அவர்கள் நினைவாக நடப்படும் கற்களே நடுகல் எனப்பட்டன. இக்கற்களுக்கு மயிலிறகு, பூக்கள் கொண்டு மக்கள் வணங்கியதையும் இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. நடுகற்கள் ஆண்களுக்கு மட்டுமே நடப்பட்டன என்பதால் சிக்மண்ட் பிராய்டின் கருத்து நீட்சியாகவே இக்கோட்பாடு பார்க்கப்படுகிறது. கீழடி உட்பட பல அகழ்வாய்வுகளில் குறிப்பிட்ட கடவுள், மதச் சம்பிரதாயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படவில்லை.

 இப்படி பல ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள் பிரயத்தனப்பட்டபோதும் மதம் எனும் கருத்தியல் உருவானதன் மூலகாரணத்தை ஒருவராலும் துல்லியமாக, ஆதாரங்களுடன்  நிருபிக்க முடியவில்லை. ‘லிகரே’ அல்லது ‘லைகேர்’ (ligare) எனும் லத்தீனியச் சொல்லிலிருந்து உருவானது தான் ‘மதம்’ (religion) எனும் சொல். இச்சொல்லுக்கு ‘பிணைப்பது’ அல்லது ‘கட்டுவது’ என்று பொருள். ஒரு பொதுவான கருத்தியல் அடிப்படையில் சமூகக் குழுக்களை ஒருங்கிணைத்து, துன்பங்களிலிருந்து விலக ஒரு விசுவாசத்தை உருவாக்கி, தனிமனித ஒழுக்கத்தின் மூலம்  நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொணரும் குறிக்கோளில் உருவானது தான் ‘மதம்’ என்ற கட்டமைப்பு எனக் கொள்ளலாம். 

 இக்குறிக்கோளை உணர்த்த  ஏராளமான தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சில –

  •       மனித சக்தியை, இயற்கையை மீறிய தெய்வீக, புனித சக்தி ஒன்றுள்ளதை உணர்வது.
  •       பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து, ஒழுக்கச் செயல்பாடுகள் மூலம் தெய்வீகத்தைச் சென்றடைவது.
  •       இறப்பு எனும் இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது.

 பேசும் மொழி (நோக்கம் – கருத்துப் பரிமாற்றம்), உண்ணும் உணவு (நோக்கம் – உயிர் வாழ்வது), உடுத்தும் உடை (நோக்கம் – மானம் காப்பது), இருக்கும் இடம் (நோக்கம் – பாதுகாப்பு) ஆகியவற்றைப் போல ‘மதம்’ எனும் உணரமுடியாத கோட்பாட்டின் குறிக்கோள் ‘ஒழுக்கத்துடன் கூடிய நம்பிக்கை’. இந்தப் பொதுவான இலக்கைச் சென்றடையும் வழிமுறைகள், வழித் தடங்கள் அந்தந்த இனக் குழுவினரால் வெவ்வேறாக உருவாக்கப்பட்டதன் காரணத்தினால், வெவ்வேறு மதக் கோட்பாடுகள் உருவாயின. இக்கோட்பாடுகள் விதிகளாக உருவாக்கப்பட்டு, போதனைகளாகவும், புராணங்களாகவும் மக்களைச் சென்றடைந்தன. அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளையும் இவ்விதிகள் வலியுறுத்தியுள்ள காரணத்தினால் காலப்போக்கில் இவற்றில் வேறுபாடுகளும் தோன்றத் துவங்கின. இத்தகைய வேறுபாடுகள், வளர்ந்து கிளைக் கோட்பாடுகள் உருவாகி இன்று உலகில் ஏறத்தாழ 4000க்கும் அதிகமான அதிகாரப்பூர்வ மதங்கள் உள்ளன. உலகளவில் கிறித்துவம் (240 கோடி மக்கள்), இஸ்லாம் (190 கோடி மக்கள்), இந்து (120 கோடி மக்கள்), பெளத்தம் (50 கோடி மக்கள்), பிராந்திய அளவில் கடைபிடிக்கப்படும் மதங்கள் (40 கோடி மக்கள்) ஆகியவை ஐந்து பிரதான மதங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. 

 

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் மதங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

 

வரிசை  மதம் சதவிகிதம் எண்ணிக்கை
1 இந்து 79.80% 110 Crores
2 இஸ்லாம் 14.23% 20 Crores
3 கிறித்துவம் 2.30% 3.12 Crores
4 சீக்கியம் 1.72% 2.37 Crores
5 பெளத்தம் 0.70% 1 Crores

 

சிரத்தையுடன் மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சதவிகித அடிப்படையில்  சோமாலியா முதலிடத்தை வகிக்கிறது.

 

வரிசை  நாடு மத நம்பிக்கை உடையோர் சதவிகிதம்
1 சோமாலியா 99.8
2 நைஜீரியா 99.7
3 பங்களாதேஷ் 99.5
4 எத்தியொப்பியா 99.3
5 ஏமன் 99.1

 

இவ்வரிசையில் 98.6 புள்ளிகளுடன் இலங்கை 8ஆவது இடம், 90 புள்ளிகளுடன் இந்தியா 54 ஆவது இடம், 69 புள்ளிகளுடன் அமெரிக்கா 108 ஆவது இடம் பெற்றுள்ளன.

 

நாகரீக, அறிவியல் வளர்ச்சியுடன், மனிதர்களின்  மதங்கள் மீதான கண்ணோட்டம் மாறி வருவதைக் காண முடிகிறது. சுவாரசியமாக நாத்திகர் எனும் கடவுள் மறுப்பாளர் (atheist) மற்றும் அஞ்ஞானவாதி எனும் கடவுள் நம்பிக்கையற்றவர் (agnostic) – உள்ளடங்கிய மதச் சார்பற்றோர்  எண்ணிக்கையும் (122 கோடி மக்கள்)  கூடியுள்ளது.  மறுபுறம் கலப்பினக் கலாச்சாரம், தனிமனித நம்பிக்கை, வாழ்வியல் மேம்பாடு காரணமாக மத நம்பிக்கைகள் மாறுபடுவதும் கூடியுள்ளது தெரிகிறது.

 மாற்றம் என்பது இயற்கையின் நியதி என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அடிப்படையில் பிறந்தது முதல் உணவு, உடை, மொழி, இருப்பிடம் என்பவை மாறுவது அவரது தனி மனித விருப்பங்கள் என்பதை உணர்ந்து அங்கீகரிக்கும் பலரும், ஒருவர் பிறந்தவுடன் போதிக்கப்பட்ட மத நம்பிக்கையை இறப்பு வரை மாற்றவே கூடாது என வலியுறுத்தும் வழக்கம் குறையவில்லை.  மாறாக எந்த மதம் வலிமை நிறைந்தது என்ற போட்டி அதிகரித்து, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் எனும் பிளவுகள் தோன்றி, இடைவெளி பெருகி வருகிறது. ஒரு சமூகக் குழுவில் இருந்தவர்கள் ஒரு மதத்தைப் (நெறிமுறையை) பின்பற்றிய காலம் மாறி ஒரு மதத்தைப் பின்பற்றாதவர் அந்தச் சமூகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் வலுத்து வருகிறது. அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வசிக்க, ஒருவர் அங்கு நிலவும் மதத்துக்கு மாறவேண்டிய நிர்பந்தம் உள்ளது. 

 ஒரே கோட்பாடுடைய இஸ்லாமிய மதத்தில் ஷியா, சன்னி, வஹாபி போன்ற பல பிரிவுகள் தனியுரிமை கோரத் தொடங்கியதில் இரான், இராக், சிரியா, போஸ்னியா, சூடான், ஆஃப்கானிஸ்தான், லெபனான், துருக்கி, சவுதி அரேபியா உட்பட ஏராளமான மத்திய கிழக்கு நாடுகள் அமைதியிழந்தன. இந்தப் பிரிவினைகளின் சார்பெடுத்துத் தோன்றிய தீவிரவாத வன்முறையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 1960 இல் வட அயர்லாந்து பகுதியில் கிறித்துவ மதத்தின் கத்தோலிக்க, புராடஸ்டண்ட் பிரிவினர்களிடையே சிறிதாகத் துவங்கிய பிரிவினை பூதாகாரமாக வளர்ந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 3500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது. இன்றைய இந்து மத உட்பிரிவுகளாகக் கருதப்படும் சைவம், வைணவம், கெளமாரம், கானபத்தியம் போன்ற மதங்களுக்குள்ளும் பலகாலங்களாகப் போர் நடந்ததையும், பலர் மாண்டதையும் வரலாறு சுட்டிக் காண்பிக்கிறது. இதைத் தவிர இருவேறு மதங்களுக்குள் நடந்த போரினால் சிதறுண்ட நாடுகளும் உண்டு. இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளுக்கிடையே யூத, இஸ்லாமியப் போர், மியான்மரில் பெளத்த, ரோஹிங்கியா இஸ்லாமியப் போர், பாகிஸ்தான் – இந்திய எல்லையில் இஸ்லாமிய, இந்துக்கள் போர் என உலகெங்கும் மதத்தின் பெயரால் வன்முறைச் சம்பவங்கள் பெருகி வருகின்றன.  

 இவை ஒருபுறமிருக்க, இந்திய அரசியல் கட்சிகள் மத ஒருங்கிணைப்பு எனும் பெயரில் தங்கள் வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ள முனையும் குயுக்திகள் வேதனை தருகின்றன. அயோத்தி ‘ராம ஜென்ம பூமி’  தொடர்பான வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில் ‘கிருஷ்ண ஜென்ம பூமி’ எனும் இயக்கம் தொடங்கப்பட்டு அங்கிருக்கும் ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட வேண்டுமென  ‘இந்து ஆர்மி’ எனும் குழு ஒன்று போராடத் துவங்கியுள்ளது. ஹத்துவா (காஷ்மீர்), ரஸல்பூர் (பீஹார்), உன்னாவ் (உத்திரப் பிரதேசம்), ஹத்ராஸ் (உத்திரப் பிரதேசம்), திருப்பூர் (தமிழ்நாடு) என ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய / தலித் சிறுமிகள் பாலியல் வண்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். தங்கள் மகள் சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவேண்டுமெனப் போராடிய ஹத்ராஸ் பெண்ணின் பெற்றோரின் அனுமதி கூடப் பெறாமல்  உடலை எரித்துவிட்டது உள்ளூர் காவல்துறையும், அரசும். இவற்றில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்பினர், அவை சார்ந்த அரசியல் கட்சியினர் போராடிய அவலங்களும் நடந்தேறின. கையறு நிலையில் இவர்களை எதிர்க்கும் வழியறியாத அக்குடும்பம், ஊரிலுள்ள 236 நபர்களுடன் பெளத்த மதத்தைத் தழுவினர்.

 ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்து அமைப்புகள் வேற்று மதத்தினரைக் கொன்ற அராஜகச் செயல்களுக்கும் அரசியல் கட்சிகள் பாதுகாப்பு அளித்தன. மேலும் கிறிஸ்தவ / இஸ்லாமிய மதமாற்றத்துக்கு எதிரான போராட்டம், ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்றத் திருமணங்களுக்கு எதிரான போராட்டம் என இந்து மதப் பாதுகாப்புப் பெயரில் நாட்டு மக்களை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை எனச் செங்குத்தாகப் பிளக்கும் போக்கு விஷமாகப் பரவி வருகிறது.  மதவாத அடிப்படையில் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து அரசே இதற்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.  இதனை எதிர்த்துக் கேட்பவர்கள் ‘தேசத் துரோகி’களாக முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். மத அடிப்படைவாதத்தை எதிர்த்துச் செயல்பட்ட தபோல்கர், கெளரி லங்கேஷ் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எந்த அரசியல் மற்றும் மத நோக்கமும் இன்றி ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் 70 குழந்தைகள் பலியானதைப் பார்த்துத் துடித்துப் போய், தன் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கிய மருத்துவர் கஃபீல் கானை ஆறு மாதங்களுக்கும் மேலாக ‘தேசப் பாதுகாப்பு’ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து வைத்தது உத்திரப் பிரதேச அரசு. அதே போல் ஹத்ராஸ் வண்புணர்வு மற்றும் கொலை வழக்குக் குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற கேரளப் பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான், இஸ்லாமிய அமைப்பான ‘பாப்புலர் ஃப்ரண்டை’ சேர்ந்தவர் என்று அவருடன் சென்ற 4 இஸ்லாமிய உதவியாளர்களுடன் கைது செய்து ‘தேசப் பாதுகாப்பு’ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது உத்திரப் பிரதேச அரசு. ‘ராம ஜென்ம பூமி’ என்று அழைக்கப்படும் உத்திரப் பிரதேசத்தில் தாகத்தினால் தண்ணீர் அருந்த கோயிலுக்குள் சென்ற 14 வயது முஸ்லிம் சிறுவனை ‘இந்து மதக் காவலர்களான’ ஆளுங்கட்சி நபர்கள் தாக்கி, வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரதாபித்தனர். வேற்று மதத்தினரை ‘ஜெய் ஶ்ரீராம்’ கோஷமிடச் சொல்லி, அடித்து உதைத்து சித்திரவதை செய்த சம்பவங்களும் பெருகியுள்ளன. சென்ற வாரம், குஜராத் கட்ஜ் மாவட்டத்தில் இந்துக் கோவில் விழாவில் கலந்து கொண்ட காரணத்திற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் நிலத்தில் விளைந்திருந்த பயிர் அழிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் குலைக்கப்பட்டுவிட்டது. இந்த ஊரின் பெயர் காந்திதாம்.

 இவற்றை  இங்கொன்றும் அங்கொன்றும் நடந்த தனித்த நிகழ்வுகள் என ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. இந்தியாவை ‘இந்து தேசம்’ என்று மாற்றி விடும் திட்டத்துடன் நாடெங்கும், வெவ்வேறு கிளை அமைப்புகளை உருவாக்கி வளர்த்து வருகிறது இந்து தேசியவாத அமைப்பு. சிறிய கிராமங்கள் முதல் மெட்ரோ நகரங்கள் வரை ‘இந்து’ என்ற பெயருடன் ஏராளமான அமைப்புகள், அணிகள், சங்கங்கள், கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும், நாட்டில் ஒரே மதம் இருந்தாகவேண்டும் என்று இந்த அமைப்பினர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு,சமூகத்தில் மதப்பிளவு ஏற்படுத்த அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களின் பணபலத்தை எதிர்கொள்ள முடியாமல், வாக்கு அரசியலில் பரிமளிக்க முடியாத சின்னச் சின்ன அரசியல் கட்சிகளும் இதற்கு இரையாகி மத அரசியலைக் கையிலெடுத்துள்ளனர். மொழி, இனம் என்ற கொள்கை பேசி வந்த அரசியல் கட்சி, இஸ்லாமும், கிறித்துவமும் அரேபிய, ஐரோப்பிய மதங்கள்; மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்புவது போல் தாய் மதமான சைவம், மாலியத்துக்குத் (வைணவம்) திரும்புங்கள் என்கிறது. இன்னொரு பிரிவினர் இந்து அல்லாத ஒருவர் தமிழராகவே இருக்கமுடியாது என்று அடித்துச் சொல்கின்றனர். இதெல்லாம் போதாதென ‘ஆண்ட பரம்பரை’, ‘வீரத் தமிழர்’ என்ற பெயர்களில் புதுப்புது அமைப்புகள் உருவாகி  ஜாதிவெறியைக் கூட்டி சமூகத்தைத் துண்டாடி வருகின்றன. தீண்டாமை எனும் நோயும் தீயாகப் பரவுகிறது. 

 அரசியலைக் கடந்து மதவெறி மெல்ல மெல்ல வணிகத்துறை, கலைத்துறைகளுக்குள்ளும் ஊடுருவி வருகிறது. அண்மையில் இஸ்லாமிய மாமியார் தனது இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவதாக வந்த ‘எகத்வம்’ எனும் தனிஷ்க் ஜுவல்லரியின் விளம்பரக் காணொளி  ‘மதக் கலப்புக்கு வித்திடுகிறது’  என்ற கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு விலக்கப்பட்டது. ‘ஃபேப் இந்தியா’ நிறுவனம் தனது பாரம்பரிய தீபாவளி புடவைகளுக்கு உருதுத் தலைப்பு (ஜஷ் இ ரிவாஸ்) வைத்த காரணத்தினாலும், விளம்பரத்தில் வரும் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்காத காரணத்தினாலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதால் இவ்விளம்பரமும் விலக்கப்பட்டது. ‘ஸர்ஃப்’ நிறுவனம் ஹோலி வண்ணப் பொடிகளால் கறையாகிப் போன சிறுவனின் சட்டையை, ஒரு சிறுமி துவைத்துத் தருவதாக வந்த விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பியது. காரணம் அந்த விளம்பரத்தில் வந்த சிறுமி இந்து, சிறுவன் முஸ்லிம். எதிர்ப்புக்கான காரணம் மதப் பற்றாளர்களின் ‘லவ் ஜிகாத்’. ‘ஸர்ஃப்’ பன்னாட்டு நிறுவனம் என்பதால் எதிர்ப்புகளுக்கு உடனடியாக இணங்கவில்லை. ‘கர்வாசெளத்’ எனும் பண்டிகை (தங்களது கணவருக்காக பெண்கள் விரதமிருக்கும் பண்டிகை) சமயத்தில் இரு பெண்கள் ‘டாபர் ஃபென்’ க்ரீமைப் பூசிக் கொண்டு ஒருவருக்காக ஒருவர் வேண்டிக் கொள்வதாக வரும் விளம்பரம் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது எனும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. ‘சப்யாசாச்சி’ விளம்பர நிறுவனத்தின் ‘மங்கள் சூத்ரா’ விளம்பரப் பலகைகளும் தாக்குதலுக்குள்ளாயின. இவ்விளம்பரத்தில் வந்த பெண்கள் ‘மங்கள் சூத்ரா’வை எடுத்துக் காட்டும் வகையில் பெரிய கழுத்துடனான ரவிக்கை அணிந்து மார்பகப் பகுதி ஆபாசமாகத் தெரிவதாலும், பெண்கள் பச்சை (பாகிஸ்தானின் கொடி நிறம்) நிறப் புடவை அணிந்திருப்பதும் தான் காரணம். சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்நிறுவன விளம்பரப் பலகைகளுக்கு இந்து அமைப்பினர் ‘பிந்தி’ (நெற்றிப் பொட்டு) வைக்கும் வைபவங்களையும் நடத்தினர். இவ்வகை விளம்பரங்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் இந்த நிறுவனப் பொருட்களைப் பகிஷ்கரிக்கச் சொல்லித் தூண்டியது பொதுமக்களிடையே விஷம் போலப் பரவி, அந்நிறுவனங்களின் வணிகத்தை பெருமளவில் பாதிக்கிறது. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மேலே சொல்லப்பட்ட விளம்பரங்கள் இந்துக் கலாச்சாரத்திற்கு எதிரானவை என்றும் இனி விளம்பரங்கள் வெளியிடு முன் அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அதிரடி கிளப்பியுள்ளார். இத்தகைய அமைப்புகளையோ அவற்றின் மதவெறிச் செயல்களையோ அரசாங்கம் கண்டிப்பதில்லை. மாறாக இவற்றில் பெரும்பாலான நபர்களின் சமூக ஊடகப் பக்கங்களை இந்தியப் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் பின்பற்றி வருவது அவர்களது செயல்களுக்கு ஆதரவளிப்பது போலுள்ளது. இந்தியப் பிரதமரின் ஆசியுடன் இவர்கள் செயலாற்றுவது போலத் தோன்றுவதால் ஒருவரும் இந்த அமைப்பினரை எதிர்க்கத் துணிவதில்லை. அப்படி எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகளாகவும், தேச விரோதிகளாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.  

 பொதுமக்களும் தங்களை அறியாமலே இவ்வித மதப் பிரிவினைகளுக்குப் பலியாகி வருகின்றனர். மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள் கூட தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவமோ என்ற அச்சத்தில் ‘நானும் இந்து தான்’ என்று சொல்லுமளவுக்கு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. உணவகத்திலிருந்து உணவு கொண்டு வந்தவர் முஸ்லிமாக இருந்ததால் உணவை நிராகரித்திருக்கிறார் ஒருவர். முஸ்லிம்கள் தயாரிக்கும் பிரியாணியில் கருத்தடை மருந்து கலந்து இந்துக்கள் ஜனத்தொகையைக் குறைக்க முயல்கின்றனர் என்று சமூக ஊடகங்களும் முன்னணிப் பேச்சாளர்களும் புரளி கிளப்பிப் பரப்புகின்றனர்; பாகிஸ்தானுக்கெதிரான கிரிக்கெட் தோல்விக்கு, இந்திய அணியில் விளையாடிய இஸ்லாமிய வீரர்தான் காரணமென அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறு கிளப்பும் குரூர ஈனப்பிறவிகளும் பெருகி வருகிறார்கள். இவை போன்ற அவதூறுகளையும், பொய் பித்தலாட்டங்களையும் அலட்சியப்படுத்துபவர்களும், எதிர்ப்பவர்களும் ‘மானமற்ற இந்துகளாக’ பட்டம் சூட்டப்படுகிறார்கள். இவற்றை வேத வாக்காக நம்புகிறவர்களும், மேலும் பத்துப் பேருக்குப் பரப்புவர்களும் மட்டுமே ‘மானமுள்ள இந்துகள்’ என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற நிலை உருவாகிவருகிறது. 

 இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியலுக்காகவும், அதிகாரத்துக்காகவும் மதத் துவேஷங்கள், வன்முறைகள் அதிகரிப்பது மிகவும் அபாயகரமானது. ஒரு மதத்தின் அழுத்தம் பெருகும்பொழுது மற்ற மதத்தினர்கள் எதிர்வினை காட்ட முனைகிறார்கள். கர்நாடகத்தில் ‘லிங்காயத்து’கள் என்ற ஒரு தனி மதம் (அரசியலமைப்புச் சட்டப்படி இந்து மதத்தின் கிளை மதம்) உருவானதும் இந்து மத அதிகாரங்களின் அழுத்தத்தினால் தான். கடந்த மாதம் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் கோவில்களில் தாக்குதல்களும், ஏழுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தது  மிகக் கொடுமையானது. குர்ரான் புத்தகம் இந்துக் கடவுளின் காலடியில் இருந்த காரணத்தினால் இந்த வன்முறை தொடங்கியது. விசாரணையில் புத்தகத்தை அங்கு வைத்தவர் ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்து அவர் கைது செய்யட்டுள்ளார். இந்த வன்முறை தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்ததுடன், அந்நாட்டு பிரதமர், ஷேக் ஹசினா, துர்கா பூஜை செய்யப்பட்ட கோயிலுக்குச் சென்று மத ஒற்றுமையை வலியுறுத்தினார். மேலும் ‘வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்புக்கு இந்தியாவும் பங்களிக்க வேண்டும்; இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளின் தாக்கம் வங்கதேசத்திலும் எதிர்வினையாக ஏற்படலாம் என்பதை இந்தியா உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தொனியில் பேசினார். வங்கதேசத்தின் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைக் கண்டித்து போராட்டம் நடத்தும் இந்து அமைப்பினர்கள் ஷேக் ஹசினாவின் கருத்தை மீளாய்வு செய்து உணர்ந்தால் பிளவுவாதத்தைக் கை விடக்கூடும். 

 மற்ற வலுவான கொள்கைகள் எதுவும் இல்லாமல் அல்லது பலன் கொடுக்காத பட்சத்தில் மதக் கொள்கைகளை அரசியில் கட்சிகள் கையிலெடுப்பது மிகவும் வேதனையானது. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதே இந்து தாத்பரியமாகும். ‘அஹம் பிரமாஸ்மி’ (உபநிஷதம்), ‘ஏகன் அனேகன் இறைவனடி போற்றி’ (திருவாசகம்), ‘ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’ (பைபிள்), ‘எல்லா மனிதர்களும் ஒரே நித்திய கடவுளால் படைக்கப்பட்டவர்கள், அனைத்திற்கும் மேலான இறைவன்’ (குர்ரான்) என அனைத்து மதங்களும் வெவ்வேறு வார்த்தைகளில் ஒரே கருத்தையே தெரிவிக்கின்றன – பிறப்பின் அடிப்படையில் மனிதர் அனைவரும் சமம். மனிதனை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே மதம். சத்தியம், அகிம்சை, வினைப்பயன்களே இந்து மதத்தின் பிரதானக் கொள்கை என்பதை  மதக் குழப்பவாதிகள் அறிந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. ‘இந்து தேசம்’ உருவாக வேண்டுமென ‘இறை-தேசியவாதம்’ இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாட்டைச் சிதைப்பதாகும்.  ‘கிறித்துவ நாடு’, ‘இஸ்லாமிய நாடு’ என்பது போல் ‘இந்து நாடு’ அமைய வேண்டுமெனும் கோரிக்கை ‘பாரத மாதாவை’ துண்டாடுவதற்கு ஈடாகும். 

 மதங்களுக்குள் இருக்கும் நெறிமுறைகளைக் கொண்டு ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, பிரிவினைகள் மற்றும் தீண்டாமை வன்முறைகளை ஏற்படுத்தி மற்ற மதங்களைத் தூஷிப்பது தன் மதக் கோட்பாடுகளுக்கு விரோதமானது என அனைவரும் உணரவேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக  மக்களைப் பிளவுப்படுத்தும் உளவியலைப் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். மனிதம் செழித்தால் மட்டுமே நாடும், உலகும்  சிறப்புறும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad