\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெண்மை

பிறப்பில் தொடங்கி என்னை

இறப்பு வரைக்கும் இங்கே

சிறப்பாய்க் காத்தவள் பெண்,

மறுப்பு இதற்கேது சொல்?

 

கருவில் தாங்கி, கற்பக

தருவாய் ஈன்று, என்னை

வருவாய் மலரேயென்று அற்புதத்

திருவாய் மலர்ந்தவள் அன்னை!

 

சிறுவனாய் நான் அலைகயிலே

சிறியதாய்த் தோன்றும் செயலும்

ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த

திறமையைக் கற்றிடாக் காரணத்தால்

 

அருகிலே வந்து அமர்ந்து

பெருகிய நற் பாசத்தோடு

மருகிய விழிநீர் துடைத்து

உருகியே உதவியவள் அக்காள்!

 

பள்ளி போகும் பருவத்திலே

துள்ளித் திரியும் கவனத்திலே

எள்ளி நகைத்தே படிப்பினையும்

கிள்ளி எரியத் துணிகையிலே

 

பக்குவமாய்ப் புத்திமதி பகர்ந்து

தத்துவமாய் நலம்பல பயர்ந்து

முக்கியமாய் அனைத்து உதவியையும்

அக்கணமே அளித்தவள் தோழி!

 

இளமைப் பருவத்திலே அந்த

இனிமைக் காதலிலே கவனம்

முழுமையாய்க் கழிய, எந்த

முறைமையும் செய்திடா நிலையில்

 

காதலும் வாழ்விலொரு சிறுபகுதி

சாதலும் அறிவற்ற ஒருமிகுதி

ஆதலால் தெளிவு கொள்கவெனத்

தீதிலாது உணர்த்தியவள் காதலி!

 

கழுத்தில் நாணது பூட்டிட

கணத்தில் நானது மறைந்திட

எழுத்தில் இயம்பிட இயலா

மணத்தில் விளைந்திட்ட உறவின்மேல்

 

பனைத்துணை பாசம் பொழிந்திட்டாலும்

தினைத்துணை உதவியும் செய்கிலேன்!

அனைத்தையும் மறந்து என்னை

அணைத்தே உயிர்காத்த மனையாள்!

 

தளிராய் வந்து பிறந்தவள்

களியாய் முறுவல் கொண்டவள்

அழியாப் பெருமையை விதைத்தவள்

அறியாப் பருவத்திலும் அன்னையவள்!

 

நடந்து பழகும் காலந்தொட்டே

மடந்தை போல எண்ணிக்கொண்டே

கடந்து போகும் கணங்களெல்லாம்

தொடர்ந்து உதவிடும் மகளவள்!

 

எல்லா நிலையிலும் என்னை

சொல்லால், செயலால் தீமை

இல்லாமல் காத்திடும் பெண்மை!

வல்லான் படைத்திட்ட வலிமை!!

 

– வெ. மதுசூதனன்

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. When we praise feminism we are.proud of it.
    In this poem we meet all feminine characters in one’s . .
    life The narration is superb.Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad