Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மே 2022)

கடந்த பகுதியில் (நவம்பர் இதழ்) சென்ற வருடம் முழுமைக்கும் வந்திருந்த படங்களில் இருந்த நல்ல பாடல்களைப் பார்த்தோம். வருடத்தின் கடைசி இரு மாதங்களில் வந்திருந்த படங்கள் மட்டும், அதில் இடம் பெறவில்லை. இவ்வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதால், கடந்த நான்கு மாதங்களில் வெளியாகிய படங்களில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை, இந்தப் பகுதியில் பார்ப்போம்.

 

முதல் நீ முடிவும் நீ

நடிகர், இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குனர் அவதாரம் எடுத்த படம். 96 படம் போல் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், பின்னாளில் அவரவர் குடும்பங்களுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒன்று கூடுகிறார்கள். பள்ளிக்காலக் கதையுடன், நிகழ்காலக் கதையுமாகக் காதல் கதையைச் சுவாரஸ்யமாகக் காட்டிய படம். படத்தில் பாடல்கள் கேட்க நன்றாகவே இருந்தாலும், அவை ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ பாடல்களை நினைவுபடுத்தியது மட்டுமே குறை.

 

வலிமை – அம்மா பாடல் 

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளே பிரதானமாக இருந்தன. பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும், படத்திற்குப் பின்னணி இசை அமைத்தவர், கிப்ரான். படம் வருவதற்கு முன்பு “நாங்க வேற மாரி” பாடலை விட, அம்மா பாடல் கேட்க மற்றும் பார்க்க நன்றாக இருந்தது. படத்தில் அம்மாவும் கடுப்பை ஏற்றும் வகையில் பாசம் காட்டியிருந்ததால், பிறகு பாடலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

எதற்கும் துணிந்தவன் – சும்மா சுர்ருன்னு

நீண்ட காலத்திற்குப் பிறகு, சூர்யாவின் படம் “எதற்கும் துணிந்தவன்” திரையரங்கில் வெளியானது. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படங்களுக்குரிய டெம்ப்ளேட் பாடல்கள். இந்தச் சிலுக்கு ஜிப்பா பாடலை எழுதியவர், நடிகர் சிவகார்த்திகேயன். நாயகி பிரியங்கா மோகன் பார்ப்பதற்கு அம்சமாக இருந்தாலும், இந்தப் பாடல் என்றில்லை, எல்லாப் பாடல்களிலும் ஆட சோம்பல்பட்டு ஒதுங்கிவிடுகிறார்.

 

பீஸ்ட் – அரபிக் குத்து

இவ்வருடத்தின் பெரிய தமிழ் பாடல் ஹிட் என்று இப்பாடலை சொல்லிவிடலாம். அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன், விஜய், ஜொனிதா காந்தி, ஜானி மாஸ்டர், பூஜா ஹெக்டே என எல்லோரும் சேர்ந்து சொல்லி அடித்திருக்கிறார்கள். கொஞ்சம் அரபி இசை, அரபி வார்த்தைகள், தமிழ்க் குத்து என்று சிறப்பான கலவை. ஒரு பக்கம் யூ-ட்யூபில் பார்வைகள் எண்ணிக்கை உச்சிக்கு செல்ல, ஷார்ட்ஸ், ரீல்ஸ் என எங்கும் பொதுமக்கள் மட்டும் இல்லாமல், செலப்ரிட்டிகளும் ஆட்டம் போட்ட பாடல். படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறச் செய்த பாடல்.

 

காத்துவாக்குல ரெண்டு காதல் – டூ டுட்டு டூ

விஜய் சேதுபதியுடம் நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தைக் காப்பாற்றியிருப்பதும் அனிருத் தான். இயக்கமும், பாடல் வரிகளும், தமிழின் முக்கியப் பாடலாசிரியராகியிருக்கும் விக்னேஷ் சிவன். இரண்டு அழகான ஹீரோயின்கள் இரண்டு பக்கமும் அழகாக ஆட்டம் போட, விஜய் சேதுபதி போடும் ஆட்டம் அநியாயம்.

இந்தக் காலாண்டில் தமிழ் படங்களை மீறிய வசூலை RRR என்ற தெலுங்கு படமும், KGF-2 என்ற கன்னடப்படமும் தமிழ்நாட்டில் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பாடல்கள் என்று வந்துவிட்டால், அதில் தமிழ்ப் படங்களின் பாடல்களே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. வருங்காலங்களில் அது தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

  • சரவணகுமரன்

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad