\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மடமையைக் கொளுத்துவோம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் நிதர்சனம்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவான நாள் தான் சர்வதேச பெண்கள் தினம். இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.

1908இல், அமெரிக்காவில் பல நகரங்களில், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தில் ஒன்று திரண்டு குறிப்பிட்ட வேலை நேரம், ஊதிய உயர்வு, வாக்களிக்கும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அணிவகுப்பு நடத்தினர். புரட்சிகரமான இந்தப் போராட்டம் நாடெங்கிலும் பெற்ற ஆதரவைக் கண்ட அரசியல் கட்சிகள், தேசிய மகளிர் தினத்தை அறிவித்தனர். முதன் முதலில் இந்த அணிவகுப்பு நடந்த பிப்ரவ்ரி 28ஆம் நாளே மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஜெர்மணியில் நடைபெற்ற சோஷலிச பெண்கள் மாநாட்டுக் கூட்டத்தில் கிளாரா ஜெட்கின் ‘சர்வதேச மகளிர் தினத்துக்காக’ முயற்சிகளை முன்னெடுத்தார். இவரது தொடர் உழைப்பின் பயனாக, கோபன்ஹேகனில் மார்ச் 8, 1910 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. காலப்போக்கில் இது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ, ஐ.நா. சபையின் கவனத்தைப் பெற்றது. 1975 ஆண்டு, ஐ.நா. முதன்முதலாக சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது. பின்னர் 1977ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதியை, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. இந்த நாளில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உலகெங்கிலும் பெண்கள் அமைதியாக வாழுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் உறுதியேற்கப்பட்டது.

அமெரிக்கா, வரலாற்றில் பெண்கள் ஆற்றிய சாதனைகளைப் போற்றிட 1981 ஆம் ஆண்டு, மார்ச் 7 1982 தொடங்கும் வாரத்தை ‘பெண்கள் வரலாற்று வாரமாக’ அனுஷ்டிக்க முடிவு செய்தது. ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தில் அமெரிக்காவின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் பங்களித்த பெண்களைப் பாராட்டும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கு கிடைத்த வரவேற்பால், 1987 முதல் மார்ச் மாதம் முழுதும் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் போற்றும் மாதமாக அறிவிக்கப்பட்டது.

பெண்களின் உரிமைகள்

பெண்கள் மனித உரிமைகள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். எனினும், இத்தனை யுகங்களாகப் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகள் அவர்களுக்குச் சென்றடைய வேண்டுமெனும் கோரிக்கைகளும், போராட்டங்களும் வலுவடைந்து வந்தாலும், அரசாங்கங்கள் சட்ட வடிவில் மாற்றங்கள் கொணர்ந்தாலும், அதற்கான முழு பலன் இன்னமும் பெண்களுக்குக் கிடைத்தபாடில்லை. இன்றும், உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் பாலினப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. பாலின சமத்துவமின்மை, குடும்பம் மற்றும் பாலியல் வன்முறை, ஊதிய சமமின்மை, கல்வி வசதியின்மை அல்லது கட்டுப்பாடுகள், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் வயது பேதமின்றிப் பெண்களைப் பாதிக்கிறது.

பாலின சமத்துவத்தை அடைவது ஒரு நாட்டின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஈடுபட்டிருந்தால் மட்டுமே ஒரு நாடு அதன் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உண்மையே. ஆனாலும் இது பரவலாக நாட்டிலுள்ள அனைவர்க்கும் சென்று சேர்ந்துள்ளதா என்பது கேள்விக்குறியே.

ஒரு நாட்டுப் பிரஜையின் அடிப்படை உரிமையான வாக்குரிமை இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் பெண்கள் பர்தா அணியவேண்டிய கட்டாயமிருப்பதால் அவர்களின் வாக்குரிமை அடையாளத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கலிருப்பதாலும் இந்நிலை தொடர்கிறது. பெண்கள் கட்டாயமாகப் பர்தா அணியவேண்டுமென்ற வற்புறுத்தல் ஒருபுறமும், அதுவே அவர்களின் வாக்குரிமையைத் தடுப்பது மறுபுறமென்ற முற்றிலும் முரணான கொள்கைகள் நிலவுவது அவலம். இச்சமூகப் பெண்களின் கலாச்சார விழுமியங்கள் அவர்களின் கல்வியைப் பாதிப்பதும் வருந்தத்தக்கது.

இந்தியாவில் சில பகுதிகளில் பள்ளிக்கு வரும் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்கள் தேர்வெழுத மறுக்கப்பட்ட நிலையில், சில பெண்கள் கல்வி தொடர்வதையே நிறுத்தவேண்டிய சூழல் உண்டானது. ‘ஹிஜாப்’ தலைமுடியை மட்டுமே மறைக்கக்கூடியது, முக அடையாளத்தை மறைக்காது என்று அப்பிரிவினர் எடுத்து வைத்த  வாதங்கள் நீதிமன்றத்தில் நிற்கவில்லை. இதற்கு நேர்மாறாக, ஆஃப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாப், பர்தா அணிய எங்களைக் கட்டாயப்படுத்த முடியாதென போராடியதும் நசுக்கப்பட்டது. மொத்தத்தில் இப்பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விருப்பமான உடையணியும் உரிமையைக் கூட அனுமதிப்பதில்லை.

குடும்பச் சூழலிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் அவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகப் பள்ளி மாணவிகள் பலரும், வயது பேதமின்றி, பாலியல் துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.  தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியுலகுக்கு எடுத்துச்செல்ல முடியாத வண்ணம், சமூகச் சிறைக்குள் அடங்கிப்போகும் சிறுமிகளும், பெண்களும் ஏராளம். ஒவ்வொரு 6 அமெரிக்கப் பெண்களில் 1 பெண் தன் வாழ்நாளில் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது வண்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். 10 முதல் 34 வயதுக்குள் இவ்வகை துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் 69% பெண்கள். உலகச் சுகாதார அமைப்பின் புள்ளியல் விவரங்கள்படி, உலகளவில் 3 பெண்களில் 1 பெண் பாலியல் துன்பத்துக்கு உட்படுத்தப்படுகிறார். பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் சந்திக்கும்  உளவியல், உடல்நல, சமூகச் சிக்கல்கள் எண்ணற்றவை.  தனிமைப்படுத்தப்படுதல், பணியாற்ற இயலாமை, ஊதிய இழப்பு, வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபாடின்மை போன்றவை இவற்றுள் அடங்கும்.

2017 ஆம் ஆண்டு உருவான #MeToo இயக்கம் ஓரளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், ‘மீ-டூ’ அமைப்பின் கோரிக்கையை அடுத்து,  2022ஆம் ஆண்டு மேலவையில் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்ற மாற்றத்தைக் கொணர்ந்தது. அது வரையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் ‘ஆர்பிட்ரேஷன்’ எனப்படும் மூன்றாம் தரப்பு நடுவர் மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்துக்கு வெளியிலேயே முடித்து வைக்கப்படும். பல நிறுவனங்கள் பணி நியமன ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ‘ஆர்பிட்ரேஷன்’, அதாவது நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாத நிலையை நிர்பந்தித்து வந்தன.  மார்ச் 3, 2022, அன்று சட்டமாக்கப்பட்ட H.R.4445, பணியிட பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதல் உரிமைகோரல்களுக்கு மூன்றாம் தரப்பு நடுவர் மன்றத்தை கட்டாயப்படுத்தும் ஒப்பந்த விதிகளை தடை செய்யும். வேலைவாய்ப்புச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களில் மிக முக்கியமானதொரு மாற்றம் இது.

ஒரு கட்டத்தில், இந்தியா உட்பட பல நாடுகளிலும், ‘மீ-டூ’ குறித்த விழிப்புணர்வு உண்டாகி வேகமெடுத்தது. மிகப் பெரிய சமுதாய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டிய இந்த இயக்கம், சரி வர வரையறுக்கப்படாத விதிகள், தெளிவில்லாத வழிகாட்டுதல்களால் சுரத்திழந்து போனது.

கடந்த ஜூன் 24, 2022 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ‘ரோ – வேட்’ என்ற கருக்கலைப்புக்கான அனுகல் சட்டத்தை ரத்து செய்தது. ஐம்பதாண்டுகளாக, அமெரிக்க ஃபெடரல் சட்டமாகயிருந்த கருக்கலைப்புக்கான உரிமை ரத்தானதைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்கள் தமக்குச் சாதகமான வழியில் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில், கருக்கலைப்பு மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஏதொவொரு காரணத்துக்காக கருக்கலைப்பு செய்யவேண்டிய நிலையிலிருக்கும் பெண்கள், அதற்கான வசதிகள் இல்லாததினால், விருப்பமில்லாமல், கருவைச் சுமந்து குழந்தை பெறும் நிலை உண்டாகியுள்ளது. இது வருமாண்டுகளில் மிகப் பெரிய சமுதாயச் சிக்கல்களை எழுப்பும். இது போதாதென்று, மாத்திரை வழி கருக்கலைப்புக்கும் (Medication abortion), சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி, வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து ‘My body, my choice’ எனும் கோஷத்துடன் பெண்கள் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, இந்தாண்டை ”பாலின சமத்துவத்திற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்” என்ற பெயரில் நிர்மாணித்துள்ளது. இன்றைய விஞ்ஞான யுகத்தில், இணையவழி கற்றல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து மனித சமூகத்துக்கு முன்னெப்போதுமில்லாத வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், அவை பெண்களுக்கு போதிய விழிப்புணர்வையும், அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளதா என்பது கேள்விக்குறியே. கையில் செல்பேசி இல்லாத மனிதரைக் காண்பது அபூர்வமாகி வரும் இந்நாளில், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அவற்றின் பலன்கள் முழுமையாகச் சென்றடையவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள்.

தொழில்நுட்ப வளார்ச்சி, பெண்கள், சிறுமிகள் மீதான் பாலியல் வன்முறைகளை அதிகப்படுத்தியுள்ளது என்பது ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சரியான அனுபவம், தொழில்நுட்ப கல்வியில்லாத பெண்கள் இவ்வகை வன்முறைக்கு எளிதில் பலியாகிவிடுகிறார்கள். இத்தகைய செயல்கள் பெரும்பாலும் மெய்நிகர் கோளத்தில் நடந்தாலும், அவை உடல், பாலியல், உளவியல், சமூக, அரசியல் மற்றும்/அல்லது பொருளாதார ரீதியாக உறுதியான தீங்கு விளைவிக்கின்றன. பொது ஊடகங்களில், பெண்கள் குறித்த பாலியல் கருத்துகள், வெறுக்கத்தக்க பேச்சு, உடல் கேலி வெகுவாகக் காணப்படுகின்றன. அதுவும், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் இவ்வகை தாக்குதல்களால் பெரிதும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். இவை குறித்த முறையான வரையறை, தணிக்கைகள் இல்லாத காரணங்களால் தொழில்நுட்பமானது வன்முறையின் புதுப்புது வடிவங்களை உருவாக்கித் தருகிறது.

தொழில்நுட்பம் குறித்த அறிவும், அனுபவமும் பெண்கள் மீதான டிஜிட்டல் வன்முறையைக் குறைக்க உதவும் தீர்வாக அமையும். ஆனால்,  பல நாடுகளில், பெரும்பாலான பெண்கள் கணினித் தொடர்பான கல்வியை விரும்புவதில்லை. இதற்குச் சமுதாயச் சூழல், பொருளாதார நெருக்கடி, கல்வி வாய்ப்பிண்மை எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மற்ற துறைகளைப் போல, தொழில்நுட்பத் துறையிலும் தங்களால் சாதிக்க முடியும் என்பதை சிறுமிகளும், பெண்களும் உணரவேண்டும்.

அத்தகைய செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவே “டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம்  “புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் பாலின சமத்துவத்தை அடைய அனைத்து பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில் டிஜிட்டல் கல்வி அனுகலை பெண்களுக்கு உருவாக்கித் தரவேண்டும்” என்பதே.

பெண்களுக்கான சிறந்த நாடுகள் பெண்களின் நல்வாழ்வில் தேவையான முதலீடுகளைச் செய்து, பொருளாதார, அரசியல் பங்கேற்புத் தடைகளை நீக்கியுள்ளன. ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து நிலைகளிலும் பெண்கள் சமமான கல்வியைப் பெறுகிறார்கள். தொழில்ரீதியாக, அவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் பெறுகிறார்கள், சமமான வருமான நிலைகளைக் கொண்டுள்ளனர்.  ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே, நியுசிலாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான அல்லது மிக நெருக்கத்தில் கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சுதந்திரங்கள் உள்ளன என ‘உலகப் பொருளாதார மன்றம்’ (World economic forum) சொல்கிறது.

அமெரிக்காவில் பெண் சுதந்திரம் பரவலாகப் பேசப்பட்டாலும், சம ஊதியம், பாலியல் துன்புறுத்தல்கள், உயர் நிர்வாகப் பதவிகள், குடும்பப் பொறுப்புகள் ஆகிய குறியீடுகள் பெண்களுக்குச் சாதகமாகயில்லை. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் போற்றிக் கொண்டாடுவதுடன் நிறுத்திவிடாமல், சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடுகளைக் களைய திட்டங்களும், சட்டங்களும் அமல்படுத்தப்படவேண்டும். 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியுற்ற போது, கண்ணுக்குப் புலப்படாத ‘கண்ணாடி கூரை’ ஒன்று பொதுவாழ்வில் பெண்ணுரிமை சிறகுகளை முடக்குகிறது என்றார்கள். ஏதோவொரு வகையில் அனைத்துப் பெண்களின் தலைக்கு மேலும் ஒரு கண்ணாடி கூரை இருப்பதாகவே தோன்றுகிறது.

-ரவிக்குமார்-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad