\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அயலகத்தில் வியத்தகு தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36ஆம் ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று இனிதுற நடந்தேறியது.

திருமிகு. லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியானது தொடர்ந்து இத்தனை ஆண்டுகாலமும் இடையறாது செயல்பட்டு வருகிறது. அவரே முதல்வராக முன்னின்று நடத்தும் இப்பள்ளி இன்று 19 தன்னார்வல ஆசிரியர்களோடும், 250க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தமிழ்ப் பிள்ளைகளோடும் இயங்கி வருகிறது. மேலும், இவ்வாண்டு இன்னும் சிறப்பாக இப்பள்ளி அட்லாண்டா தவிர்த்து அமெரிக்காவின் இன்னபிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளான கனடா, இங்கிலாந்து, டென்மார்க், லக்சம்பர்க், ஜப்பான், ஆஸ்திரேலியா எனத் தனது கரங்களை நீட்டித் தனது தமிழ்த் தொண்டை விரிவுபடுத்தியுள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் வலிந்து தள்ளப்பட்ட இணையதள வகுப்பு முறைக்கு இனிதே பழக்கப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், இடம் பெயர்ந்தாலும் தொடர்ந்து இப்பள்ளியிலேயே தொடர விருப்பம் தெரிவித்த மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பெற்ற சேர்க்கைக் கோரிக்கைகளால் இந்த உலகளாவிய விரிவுபடுத்தல் சாத்தியமாயிற்று என்றால் அது மிகையாகாது.

பள்ளியின் 36ஆம் ஆண்டு விழாவானது திட்டமிடப்பட்டிருந்த நாளில் அமெரிக்கக் கிழக்கு நேரம் மதியம் 1 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியைப் பள்ளி ஆசிரியர்கள் திருமிகு. லட்சுமி நிஜவீரப்பா மற்றும் திருமிகு. சித்ரா சந்திரசேகர் தொகுத்து வழங்க, பள்ளிக் குழந்தைகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. ஆசிரியர் திருமிகு. கிருத்திகா நடராஜன் வரவேற்புரை வழங்க, திருமிகு. லஷ்மி ஷங்கர் தமது முதல்வர் உரை மூலம் பள்ளியைப் பற்றியும், அதன் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார். அடுத்ததாக நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகச் சிறப்பு விருந்தினரின் உரை நிகழ்ந்தது.

இந்தாண்டு சிறப்பு விருந்தினராக அமெரிக்கத் தமிழ்க்கவிஞர் மற்றும் பன்முகத் திறமையாளர் திருமிகு. நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளுக்கு மேலும் சிறப்பு செய்தார். மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் இவர், அங்கே இயங்கிவரும் தமிழ்ப் பள்ளியொன்றில் ஆசிரியராகவும், தமிழ்ப் பத்திரிக்கைகள், தமிழ்ச் சங்கங்கள் போன்றவற்றில் தன்னார்வலராகவும் செயலாற்றிவரும் தமிழாளுமை ஆவார். இவர் லட்சுமி தமிழ்ப் பள்ளியின் மீது கொண்டுள்ள நன்மதிப்பும், திருமிகு. இராஜி ராமச்சந்திரன் போன்ற மூத்த ஆசிரியர்களோடு கொண்டுள்ள தொடர் நட்புறவின் காரணமாகவும், பள்ளியின் கோரிக்கையை இன்முகத்தோடு ஏற்று நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதோடு அல்லாமல், ‘வாசிப்பின் அவசியம்’ என்ற தலைப்பில் அருமையானதொரு உரையையும் நிகழ்த்தித் தந்தார். நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிள்ளைகளை இன்முகத்தோடு குறிப்பிட்டுப் பாராட்டியதோடு நில்லாது, பங்களித்த குழந்தைகள் அனைவருக்கும் ஆத்திசூடிப் புத்தகத்தைப் பரிசளிப்பதாகக் கூறி வியப்பூட்டினார்.

வண்ணமயமாகத் தொடங்கிய கலைநிகழ்ச்சியானது, இந்தாண்டு வழக்கத்தைவிடக் கூடுதலாக, விதவிதமாக, வியத்தகு முறையில் அமைந்திருந்தது. ஆடல், பாடல், நாடகம், இலக்கிய உரையாடல், கருத்தாழமிக்க கதையாடல், விடுகதை, விநாடிவினா, இசைக்கருவி இசைத்தல் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தம் திறமைகளைப் பன்னாட்டு மாணவமணிகள் மேடையேற்றினர். திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் பாடல் என ஒப்புவித்த மழலையர்கள், தாங்கள் அவர்களாகவே வேடம் அணிந்து வந்து பங்களித்தது, அவர்களின் தேர்ந்த பயிற்சியையும், ஆர்வத்தையும் பளிச்செனப் பறைசாற்றுவதாக அமைந்தது. மேல்வகுப்புப் பிள்ளைகள் தாங்களே ஒருங்கிணைத்த நாடகங்கள், தலைவர்கள் பற்றிய உரைகள் போன்றவற்றின் மூலம் தங்களின் முதிர்ச்சியையும், அறிவையும் வெளிப்படுத்தும் தளமாக நிகழ்ச்சியைக் கொண்டுசென்றது சிறப்பு. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரம் என்றபோதும், உலகின் வெல்வேறு மூலையில் இருந்து பங்களித்த மாணவர்கள் தங்களின் நிலப்பரப்பு பற்றிய தகவல்களையும் சேர்த்து அளித்தது மேலும் நிகழ்ச்சியின் மாறுபாட்டை மிகைப்படுத்தல் ஆயிற்று. அப்படிக் கண்ணுக்கு மட்டுமல்லாது, கருத்துக்கும், எண்ணத்திற்கும் வண்ண வண்ண விருந்தளித்த பிள்ளைகளையும், பயிற்சியளித்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பார்வையாளர்கள் கண்டு களித்த கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற, ஆசிரியர்கள் தத்தம் வகுப்பில் தேர்ச்சியுறும் மாணவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து, சான்றிதழ்களை வழங்கினர். ஆசிரியர் திருமிகு. மீனா சுந்தர் நன்றியுரை வாசிக்க, பிள்ளைகளின் பங்களிப்பில், மொழி வாழ்த்து, இந்திய, அமெரிக்க தேசியகீதம் முதலியவை முழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது!

ஆறு மணிநேரம் கடந்தும் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்வு, சற்றும் தொய்வுறாது, ஆரவாரங்களோடு நிகழ்ந்து முடிந்தது. நிகழ்ச்சி முழுவதும் பின்னின்று ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்ற ஆசிரியர் திருமிகு. அகிலா சுரேஷ், அவருக்குத் தொழில்நுட்ப உதவி புரிந்த திருமிகு. சுரேஷ் கணேசபாண்டியன் மற்றும் திருமிகு. இரகுபதி ராகவன் ஆகியோரின் உழைப்பு அலாதியானது. எந்தாண்டும் இல்லாது இந்தாண்டு கூடுதல் நிகழ்ச்சிகள், அதிகமான பங்கேற்பாளர்கள், மாறுபட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் வகைவகையான விருந்து படைக்கக் காரணமாய் அமைந்தன. உலகப்பந்தின் வெல்வேறு மூலையிலிருந்து பல கண்டங்களில் வசிக்கும் மாணவர்களும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் பலரும் நேரம் கருதாது இறுதிவரை இருந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தது, அவர்களுக்கு நிகழ்ச்சியின் மீதிருந்த ஈடுபாடும் பள்ளியின் மீதிருந்த நம்பிக்கையுமே என்று பெருமை கொள்வதில் தவறேதும் இல்லை. ஏனெனில், நிகழ்ச்சி நிறைவுற்ற அமெரிக்கப் பின் மாலைப் பொழுதென்பது, இந்தியாவில் விடியற்காலை, ஜப்பானில் முற்பகல், ஐரோப்பாவில் நள்ளிரவு என்றிங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் இடையிடையே பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்திய உற்சாகத்தில் இறுதிவரை நிலைத்திருந்தது, இந்த நிகழ்ச்சிக்கான வெற்றியும், அடுத்தத் தலைமுறை தமிழ் தாங்கிச் செல்லும் பெருமிதமும் எனலாம். அட்லாண்டா எனும் அந்நிய மண்ணில் 36 ஆண்டுகளுக்கு முன் உயிர்க்கத் தொடங்கிய தமிழானது, இனி மெல்ல மெல்லப் பூக்கும். பூத்ததனைத்தும் சிரிக்கும், சிறக்கும்!

 

வலையொளியில் காண:

https://tinyurl.com/YouTubeAnnualDay2023

– சக்திவேல் கொளஞ்சிநாதன், ஆசிரியர், லட்சுமி தமிழ் பயிலும் மையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad