\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகளாவிய கொதிநிலை (Global Boiling)

Filed in தலையங்கம் by on August 14, 2023 0 Comments

‘புவி வெப்பமயமாதல்’ என்ற சகாப்தம் முடிந்து ‘உலகளாவிய கொதிநிலை’ என்ற சகாப்தம் தொடங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜூலை மாதம், காலநிலை பதிவுகள் தொடங்கப்பட்ட 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகின் வெப்பமான மாதமாகப் பதிவாகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். காலநிலை மாற்றங்கள், எதிர்பார்த்ததை விட அதி பயங்கர வேகத்தில் நடந்து வருகிறது. 

‘தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ (National Oceanic and Atmospheric Administration), புள்ளிவிவரங்களின் படி உலகளவில், காலநிலைப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து,  ஜூலை மாத சராசரி வெப்பநிலை 60.8 டிகிரி ஃபாரன்ஹீட்டாக  (16 டிகிரி செல்சியஸ்) பதிவிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அதே ஜூலை மாத சராசரி 1.13 டிகிரி ஃபாரன்ஹீட் (.63 டிகிரி செல்சியஸ்) அதிகரித்து 61.93 ஃபாரன்ஹீட் (16 .63 டிகிரி செல்சியஸ்) என உச்சபட்ச வெப்ப ஆண்டாகப் பதிவானது. ஆனால் இந்தாண்டு, ஜூலை மாத மூன்றாம் வாரப்படி, வெப்பம் 62.51 டிகிரி ஃபாரன்ஹீட் (16.95 டிகிரி செல்சியஸ்) என்று பதிவாகியிருந்தது. இது அபாயகரமானது என்று தெரிவித்த திரு. குட்டரெஸ், இது கொதிநிலையின் தொடக்கம் தான் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். வெப்பநிலையை 17.5 செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவது சாத்தியந்தான் என்றாலும்,, அதற்கு உடனடியாக, வியத்தகு வாழ்வியல் மாற்றங்கள் தேவை என்பதை வற்புறுத்தியுள்ளார்.

பசிபிக் கடலின் பூமத்திய ரேகை பகுதியில், வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதுவரையில் லா நினியோ (La Niña)வின் தாக்கத்தால், இயல்பைவிட குறைவாகயிருந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறி, எல் நினோ (El Niño)வின் தாக்கம் அதிகரித்து,  இயல்பை விட 5 டிகிரி உயர்ந்துள்ளது.  வெப்பம் தாளாமல், கடற்கரைக்குச் செல்வோரை, கடலில் குளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விட்டுள்ளன கடலோர மாநிலங்கள். 

ஆறு மாதங்களுக்கு முன்னர் -50 டிகிரி செல்சியஸில் உறைந்து போயிருந்த சீனாவின் வடமேற்கு பகுதிகள், இந்த ஜூலையில் வரலாறு காணாத 52 டிகிரி செல்சியஸ்  (126 டிகிரி பாரன்ஹீட்) வெப்பத்தைப் பதிவு செய்துள்ளது. சீனா மட்டுமின்றி, பல ஆசிய நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இவ்வகையான வெப்பநிலை மாற்றங்கள் எதிர்பாராவிதமாக பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு என பேரிடர்களை உருவாக்கி வருகிறது. வழக்கமான மழைக்காலத்துக்கு முன்னரே தொடங்கிய மழை இந்தியாவின் வட மாநிலங்களான ஹிமாச்சல், பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் பேரழிவை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக இந்திய தலைநகர் அமைந்துள்ள  டெல்லியில் ஜூலை 9ஆம் தேதி, ஒரே நாளில் 6 அங்குல மழை பெய்து பல உயிர்களைப் பறித்தது. யமுனை ஆற்றில் 45 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிகமான வெள்ளம் ஏற்பட்டது.  அண்டை நாடான பாகிஸ்தானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர், பொருட்சேதங்கள் உண்டாயின. துருக்கி, சிரியா நாடுகளில் நில நடுக்கத்ததால் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; கோடிக்கணக்கில் பொருட்சேதம் (இரு நாடுகளையும் சேர்த்து $40 பில்லியன்) ஏற்பட்டு பொருளாதார ரீதியிலும் அவை நொடித்து போயின.

வழக்கமாக கனடாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத் தீயினால், சராசரியாக 24,600 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதிகள் எரிந்துபோவதுண்டு. இந்தாண்டு மட்டும், கனடா காட்டுத் தீயினால் 100,000க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் நிலப் பகுதிகள் எரிந்துபோனது. இன்னமும் இந்தத் தீ முற்றிலும் அணைந்த பாடில்லை. காட்டுத் தீயினால் ஏற்பட்ட வெப்பம், புகை அமெரிக்க பகுதிகளுக்கும் பரவி உயர் காற்றழுத்தம், காற்று மாசு, மற்றும் அதிக வெப்பம் என இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெப்பநிலை மாற்றங்களால் காற்றில் ஏற்படும் ஈரத்தன்மையின்மை, நில வறட்சி, அதிவெப்பம் ஆகியவை காட்டுத்தீக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. கூடுதலாக, இவ்வகையான காட்டுத் தீ, வெப்பநிலையை மேலும் அதிகரித்து கெடுசுழற்சியை உண்டாக்குகிறது. சமீப நாட்களாக ஐரோப்பியாவின் கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பரவி வருவது கவலையளிக்கிறது. கிரீஸ் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. 

அமெரிக்காவில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் முந்தையகால வெப்பநிலை தரவுகளை நொறுக்கி புதிய சாதனையை உண்டாக்கி வருகின்றன. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் 26 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து 110 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தைப் பதிவு செய்து வருகிறது. கலிஃபோர்னியா, ஸாரடோகா ஸ்பிரிங்ஸின் டெத் வேலியில் (Saratoga Springs, Death Valley National Park) சென்ற ஞாயிறன்று பதிவான வெப்பம் 129  டிகிரி. டெக்சாஸ் மாநிலத்தின் டெல் ரியோ, செயிண்ட் ஏஞ்செலோ நகரங்கள் 115 டிகிரி வெப்பநிலையைப் பதிந்து வரலாறு படைத்தன. ஃப்ளாரிடா, அரிசோனா, டெக்சாஸ், கலிஃபோர்னியா மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பம் பல உயிர்களைப் பறித்துவருகிறது. குறிப்பாக வசிப்பிடமில்லாமல் பொதுஇடங்களில் வாழும் மனிதர்கள் வெப்பத்துக்கு எளிதில் பலியாகிறார்கள். பீனிக்ஸ் நகரத்தில், அந்நகர அரசாங்கம், கப்பல் ‘கண்டெய்னர்களில்’ குளிர் சாதனப் பெட்டிகளைப் பொருத்தி, வீடற்றோர் தங்க ஏற்பாடு செய்து வருகிறது.

அமெரிக்க மக்கட்தொகையில் 60 சதவிகிதத்தினர் அதிகரிக்கும் வெப்பத் தாக்க விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும் என்கிறது சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் தேசிய நிறுவனம் (National Institute of Environmental Health Sciences). கடுமையான வெப்ப நிலை  நீரிழப்பு (dehydration), உடல் ஆயாசம் (fatigue), சோர்வு (exhaustion) போன்ற சுகாதாரக் கேடுகளை உண்டாக்கும். 115 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் பாதுகாப்பின்றி அதிக நேரம் வெளியிலிருப்பது கடுமையான, நிரந்தர உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். 

நிலப்பகுதியைத் தாண்டி கடல் வெப்பம் அதிகரித்ததால் பனிக்கட்டிகள் வேகமாகக் கரைவதும் அபாயகரமானது.  ஆர்க்டிக்கில் கடல் பனி சராசரியைவிட 19 சதவிகிதம் குறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சூரிய வெப்பத்தை உறிஞ்சக்கூடிய பனிக்கட்டிகள் கரைவதால், சூரிய வெப்பத் தாக்கம் நேரடியாகக் கடல் நீரை வெப்பமடையச் செய்து கடல் மட்ட உயர்வு, நில அரிப்பு போன்ற பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. “ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் ஏற்படும் மாற்றங்களை நாம் புறக்கணித்து வருவது துரதிர்ஷ்டமானது. இத்தாக்கங்கள் நேரடியாக மனித வாழ்வியலை பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கடல்வெப்ப அதிகரிப்பு நேரடியாகப் பவழக்கொடியை (coral) அழிப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. கடலில் ஏற்படும் மாற்றங்கள் மேலும் இயற்கை அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

காலநிலை மாற்றம் மறுக்க முடியாதது என்று விஞ்ஞானம் உணர்த்தும் அதே வேளையில், அதிகரிக்கும் வெப்ப அலைகளை, சரியான, துரித நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என்பதையும் சொல்கிறது. இதற்கு சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படும். விவசாயம் தொடங்கி, நிலம், மின்சாரம், எரிபொருள் பயன்பாடு என அனைத்திலும் மாற்றம் நடைபெறவேண்டியது அவசியம்.

அண்மைக்காலங்களில், பல நாடுகள் முன்னெடுக்கும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன.  இந்தத் தீர்வுகள், நமது கார்பன் தடயத்தின் ஒரு பகுதியைத் தணிக்க உதவும், அதே நேரத்தில் முக்கிய சுற்றுச்சூழல் சேவைகள், உணவு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு, சுத்தமான நீர், மேம்பட்ட வாழ்வாதாரங்கள், ஆரோக்கியமான உணவு முறைகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாய நடைமுறைகள், நில மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் உணவு விநியோகச் சங்கிலிகளை பசுமையாக்குதல் ஆகியவை அடிப்படையான தேவைகள். பல நாடுகள், பல ஆண்டுகளாகப் பசுமைகுடில் வாயு தொடர்பான உறுதிமொழிகளை எடுத்து வந்தாலும், பசுமைக் குடில் வாயுவின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்கள் கரிம உமிழ்வைக் குறைப்பதில் அதிக லட்சியத்துடன் இருக்க வேண்டும். மாற்று எரிபொருட்களான சூரிய ஆற்றல், காற்றாலைகள், நீர்மின் திறன் போன்றவை புதைப்படிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க உதவும். தனிப்பட்ட முறையில் மின் சேமிப்பு, நீர் சேமிப்பு, மறுசுழற்சி, எரிபொருள் சேமிப்பு  என அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் மாற்றங்கள், வருங்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவியாகும். அவை நம் கடமையும் கூட.

-ஆசிரியர்

 

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad