\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் மதக் கொள்கையைப் பின்பற்றி இவர்கள் வாழ்ந்து வந்தனர். திபேத்திய-பர்மிய மொழிகளின் அடிப்படையில் ‘மேட்டிலன்’ என்ற மொழியை அவர்கள் பின்பற்றியிருந்தனர். இன்று இம்மொழி ‘மணிப்பூரி’  அல்லது ‘மேட்டயி’ என்று அழைக்கப்படுகிறது. நாகர் இனத்தவர்கள் மணிப்பூரின் மலைப் பிரேதசங்களிலும், மேத்தி இனத்தவர் சமவெளி பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர். அக்காலந்தொட்டே மேத்தி இனத்தவர்கள், நாகர்கள் பிரதானமாகயிருந்த காடு / மலைப் பிரதேசங்களில் குடியேற முயன்றபோது கிளர்ச்சிகள் நடந்திருக்கின்றன. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மணிப்பூரில், மேத்தி இனத்தவரான ஜெய்சிங் மஹாராஜா எனப்படும் சிங் தாங் கொம்பா அரசராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் காலத்தில் ‘வைஷ்ணவம்’ புகழ்பெற்றதில் மேத்தி இனத்தவர்கள் வைஷ்ணவ கொள்கைகளைப் பின்பற்ற துவங்கியிருந்தனர். இதனால், ஏற்கனவே மேத்தி இனத்தவர்களுடன் முரண்பட்டிருந்த  நாகர்கள், தங்களது ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த, ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார் ஜெய்சிங் மஹாராஜா.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் பர்மாவில் (இன்றைய மியான்மர்) ஏற்பட்ட இனக்கலவரங்களில் குறிப்பிட்ட சில பழங்குடியினர் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்றைய மிசோராம், மணிப்பூர் போன்ற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களை ‘குக்கி’ இனத்தவர் என்று அடையாளப்படுத்தி காடுகள் / மலைகள் நிறைந்த மணிப்பூரின் எல்லைப் பகுதிகளில், குடியேறச் செய்தது ஆங்கிலேய அரசு. பர்மியத் தாக்குதல்களிலிருந்து மணிப்பூர் சமவெளிகளையும், மேத்தி அரச குடும்பங்களையும் காக்க, குக்கி மக்கள் பாதுகாப்பு வளையமாகச் செயல்படுவார்கள் என்பது அவர்களது எண்ணமாகயிருந்தது. அதே நேரத்தில், குக்கி இனத்தவர்களை கிறித்துவ மார்க்கத்துக்கு அறிமுகப்படுத்தி அவர்களது வாழ்வியலையும் மாற்றியமைத்தனர் ஆங்கிலேயர்கள். பின்னர் ஏற்பட்ட கருத்து மோதலால், மேத்தி இனத்தவர்க்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே போர் நிகழ்ந்தது. அச்சமயங்களில் மேத்தி மன்னராக முடிசூடிய சூரசந்த் எனும் சிறுவனின் தலைமையில், அவர்களை பாதுகாத்தவர்களும் குக்கி இனத்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அக்காலங்களில் மன்னரின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக குக்கி இனத்தவர் நியமிக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அது முதலே, மேத்தி இனத்தவர் மணிப்பூரின் மத்தியில் அமைந்திருக்கும் சமவெளிப் பகுதியில் வாழ்வதும், அவர்களுக்குப் பாதுகாப்பாக குக்கி இனத்தவர் சுற்றியிருக்கும் காடு/மலைப் பிரதேசங்களில் வாழ்வதும் எழுதப்படாத விதியாக அமைந்துபோனது. மேத்தி இனத்தவர்களின் கடைசி மன்னனான போதா சந்திரா காலம் வரையிலும் இவ்வழக்கம் தொடர்ந்தது.

1947 இல், இந்திய விடுதலைக்குப் பிறகு மணிப்பூர் தனி குடியரசாகச் செயல்பட்டது. 1949ஆம் ஆண்டு போதா சந்திரா சிங், இந்தியாவுடன் மணிப்பூரை இணைக்க நிர்பந்திக்கப்பட்டார். ஒன்றியப் பிரதேசமாக (Union Territory) இணைக்கப்பட்ட மணிப்பூர், 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தனி மாநிலமாக உருவானது. இப்படி பல நூற்றாண்டுகளாகவே மூன்று இனக்குழுக்கள், தத்தமது கொள்கை, உரிமைகளை கோரி கிளர்ச்சிகள் செய்வதும், அவை அவ்வப்போது போராட்டமாக வெடிப்பதும் மணிப்பூரில் நடப்பதுண்டு. இவை போதாதென்று மியான்மர், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள் மணிப்பூரை என்றுமே அமைதியாகயிருக்கவிட்டதில்லை.

1949ஆம் ஆண்டு, இந்தியாவுடன் இணையும் முன்னர், மேத்தி இனத்தவரும் ‘மணிப்பூரின் பழங்குடியினரிடையே பழங்குடியினர்’ (tribe among tribes of Manipur) என்றே அடையாளப்பட்டிருந்தனர். இணைப்புச் சமயத்தில், மேத்தி இனத்தவர்கள் சமவெளிப் பகுதியிலும், அதனைச் சுற்றியிருக்கும் காடு/ மலைப் பகுதிகளில் நாகா, குக்கி இனத்தவர் இருப்பது என்றும் ஒப்பந்தமானது. அதாவது மணிப்பூரின் 90% காடு/மலை பிரதேசங்கள் நாகா/குக்கிகளுக்கும், எஞ்சிய 10% சமவெளிப் பகுதி மைத்தயி மற்றும் பாங்கல் (இஸ்லாமிய மதத்தவர்) இனத்தவர்களுக்குமானது என்ற புரிதல் உண்டானது. மலைப் பிரதேசங்களைவிட சமவெளிப் பகுதியில் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டதால் மேத்தினரிடையே இதற்கு எதிர்ப்புகள் வலுவாகயில்லை. அதே போல பட்டியலின மக்களுக்கான கல்வி, பணி வாய்ப்புகள் அந்தக் காலத்தில் கவர்ச்சிகரமாக இல்லாததால் பட்டியலினத்தில் சேரவும் பெரும்பாலான மேத்திகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் பட்டியலினப் பழங்குடிகள் என்று அழைக்கப்படுவதை மேத்தி இனத்தவர்கள் பெருமை குறைவாகக் கருதினார்கள்.

1960ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘மணிப்பூர் நில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தச் சட்டம்’ (The Manipur Land Revenue and Land Reforms Act) , பழங்குடியினரின் நிலத்தை பழங்குடியினர் அல்லாத நில உரிமையாளர்களுக்கு மாற்றுவதைத் தடைசெய்கிறது. இச்சட்டம் மேத்தி மற்றும் பிற மக்கள், மணிப்பூரின் மலை மாவட்டங்களுக்கு விரிவடைவதைத் தடுக்கிறது. மாறாக, பழங்குடியினர் அல்லாத இனத்தவர்க்கு அரசியல் அதிகாரத்தை அதிகரித்ததன் மூலம் இரு குழுக்களுக்கும் சமன்பாடு ஏற்பாடானது. அதன்படி, மணிப்பூரின் 60 சட்டமன்றத் தொகுதிகளில், 40 இடங்கள் சமவெளி பகுதிகளிலும், 20 தொகுதிகள் மலைபிரதேச மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்டது. இதன்படி சட்டமன்றத்தில் 40:20 என்ற அடிப்படையில் மேத்தி மற்றும் குக்கி இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதே சமயம் பட்டியலின பழங்குடியினர் மேம்பாடு என்ற அடிப்படையில் முன்னேறிய / பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மேத்தி இனத்தவர்கள் காடு/ மலை பிரதேசங்களில் நிலச் சொத்துகள் வாங்கவோ, வாழவோ அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் குக்கி இனத்தவர்களுக்கு சமவெளிப் பகுதிகளில் வாழவும், சொத்துகள் வாங்கவும் தடைகிடையாது.

1979ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பட்டியல் அடிப்படையில் குக்கி மற்றும் நாகா இனக்குழுவினர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கத்துவங்கின. கல்வி, வேலை வாய்ப்புகளில் சிற்சில முன்னுரிமைகள் தரப்பட்டனர். பட்டியலின ஜாதிப் பிரிவைச் சார்ந்த ஒரு சில மேத்தி பழங்குடிகளுக்கும் இந்தச் சலுகைகள் கிடைத்தன. இதர பிற்படுத்தபட்டோர் பிரிவிலிருந்த பெரும்பாலான மேத்தியினருக்கும் சில சலுகைகள் தரப்பட்டன.

2012ஆம் ஆண்டு, ‘மணிப்பூரின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் கோரிக்கைக் குழுவின்’ ( Scheduled Tribes Demand Committee of Manipur – STDCM) தலைமையில், தங்களின் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளத்தைப் காக்க அரசியலமைப்பு பாதுகாப்பு தேவையென பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்தைத் தங்களுக்கும் தருமாறு, மேத்தியினர் கோரிக்கை வைத்தனர். தங்கள் கோரிக்கையை வலுப்படுத்த அவர்கள் முன்வைத்த காரணங்கள் :

  • 1949க்கு முன்னர் மேத்தியினர் பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்ததாகவும், இந்தியாவுடன் இணைந்த பிறகு, தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டதாகவும் கருதுகின்றனர்.
  • ST பட்டியலில் இருந்து வெளியேறியதன் விளைவாக, மேத்தி சமூகம் எந்த அரசியலமைப்பு பாதுகாப்பும் இல்லாமல் ஒதுக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டதாகவும் உணர்கிறது.
  • தங்கள் மூதாதையர் நிலத்தில் தங்களுக்கு எந்த உரிமையுமில்லாமல் போய்விட்டதாக நினைக்கின்றனர்.
  • 1951 இல் மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 65% ஆக இருந்த மேத்தய் மக்கள்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 53% ஆகக் குறைந்துள்ளது.
  • ST அந்தஸ்து வழங்குவது தங்களின் மூதாதையர் நிலம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைப் பாதுகாக்கவும், வெளியாட்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

1951ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கின்படி, 16.45% இருந்த குக்கி மற்றும் நாகா பழங்குடியினர் 2011ஆம் ஆண்டு 44% ஆக வளர்ந்திருக்கிறது. இவ்வளர்ச்சி, மேத்தி இனத்தவர், தொழில் முன்னேற்றம் கருதி  மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வதால் நடந்துள்ளது என குக்கிப் பழங்குடியினர் கருதுகிறார்கள். மாறாக, மேத்தி சமூகத்தினர் மற்றும் மாநில அரசு, மியான்மர் போன்ற பகுதிகளிலிருந்து மலை பிரதேசங்களில் நாகா, குக்கி இனத்தவர்கள் ஊடுருவுவதால் அவர்களது எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகக் கருதுகிறார்கள். எதுவாயினும், குக்கி மற்றும் நாகா பழங்குடியினர், மேத்தியினருக்கு ST அந்தஸ்து வழங்குவதை, கீழ்க்காணும் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர்.

  • மேத்தி சமூகம் ஏற்கனவே மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகிறது. (பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகள் மேத்தியினர் வாழும் பள்ளத்தாக்கில் உள்ளன).
  • SC, OBC பிரிவுகளில் மேத்தி சமூகம் பலன்களைப் பெற்று வரும் நிலையில், அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், ST அடிப்படையில், தங்களுக்குக் கிடைத்துவரும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட சலுகைகள் பாதிப்படையும் என்று அஞ்சுகின்றனர்.
  • மலைப்பகுதிகளில் மேத்தியினரின் ஆதிக்கம் அதிகரித்து, தங்களது மொழி, கலாச்சாரம் நிலைகுலையும்; பழங்குடியினரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்; மேத்தி சமூகத்தினரின், வர்த்தகம், வாழ்விட வசதிகள் என்ற பெயரில், பாரம்பரிய மலை வளங்கள் அழிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.
  • ஏற்கனவே அதிகாரத்திலிருக்கும் மேத்தியினர் தங்களை மேலும் ஒடுக்குவார்கள்; தங்கள் சந்ததியினருக்குக் கல்வி மறுக்கப்பட்டு, தொடர்ந்து காடு/மலைகளில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது.

அரசுத் தரப்பில், மூன்றாவது கோணமாக, மலைப் பகுதிகள், குக்கிகள் வசமிருப்பதால், எல்லையோர ஊடுருவலைத் தடுக்கமுடியவில்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. மேலும், வனப் பகுதிகளில், போதை வஸ்துகள் விளைவிக்கப்பட்டு, உள்நாட்டுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், சீன நாடுகளுக்கிடையே ஆயுதக் கடத்தலுக்கும், பழங்குடியினர் உதவுகின்றனர் என்றும், இது இந்திய நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்ற அச்சத்தையும் தெரிவிக்கின்றனர்.

இன அடிப்படையில் குக்கி/நாகாக்களின் எண்ணிக்கை சற்று குறைவாகயிருந்தாலும், மத அடிப்படையில், இந்துக்கள் மற்றும் கிறித்துவர்கள் தலா 41% சமமாக இருக்கின்றனர். மேத்தி வகுப்பினரில் 83% வைஷ்ணவர் உள்ளிட்ட இந்துக்கள்; 8.5% மேத்தி பாங்கல் எனப்படும் இஸ்லாமியர்; 1% கிறித்தவர்; எஞ்சியுள்ளவர் சனாமஹி கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். குக்கிகள் பெரும்பாலோனோர் கிறித்துவத்தைப் பின்பற்றுபவர்கள்.மிக மிகச் சிறு எண்ணிக்கையில் இஸ்லாம், ஜூடாயிசம் மற்றும் இயற்கை வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள். ஒரு காலத்தில் பெரும்பாண்மையாகயிருந்த இந்துக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ கிறித்துவர்களின் எண்ணிக்கையளவுக்கு வீழ்ந்ததும், மதவெறியாக உருவாகி, பழங்குடியினரைக் கட்டுப்படுத்த முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறை, கட்டுப்பாடுகளை எதிர்த்து குக்கி தரப்பில் பல கிளர்ச்சி அமைப்புகள் உருவாயின. ஏறத்தாழ 25 அமைப்புகள், குக்கி தேசிய படை (Kuki National Organisation / Army – KNO), ஐக்கிய மக்கள் முன்னணி  (United People’s Front – UPF) ஆகிய அமைப்புகளின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படத் துவங்கின. பழங்குடியினருக்கு தனி அதிகாரம், தனி மாநிலம் என்கிற ரீதியில் போராடத் தொடங்கிய போது அன்றைய அரசாங்கம் அவர்களது முன்னெடுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு ஒப்பந்தம் போட்டது. ‘செயல்பாடுகளின் நிறுத்த ஒப்பங்தம்’ (Suspension of Operations – SoO Agreement) என்ற ஒப்பந்தத்தின்படி இரண்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மற்றும் அரசு ஆகியோர் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாது. இதன்படி, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசமிருந்த ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தனர்.  ஒவ்வொரு ஆண்டும், முத்தரப்பும் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அரசு எடுத்த முடிவு, இந்த ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்தது.

அரசாங்கம் 2022 ஆகஸ்ட் மாதம், குக்கி / நாகா சமூகம் வாழும் சுராசந்த்பூர்-கௌபம் பகுதியில் 38 கிராமங்களை, “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்” என்று அறிவித்து, மக்களை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற அடிப்படையில் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது. மறுபக்கம், பழங்குடியினர் அமைப்புகள் “மலைப் பகுதிகளுக்கு சில நிர்வாக சுயாட்சியை” தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக அரசு செயல்படுவதாக, கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்பினர்க்கும் மோதல்கள் ஏற்பட்டன.

கூடவே, மேத்தி அமைப்பினர் தொடர்ந்து வழக்குகள் தொடுத்த நிலையில், மணிப்பூர் உயர்நீதி மன்றம் ஏப்ரல் 17 ஆம் நாள், மேத்தி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் மேத்திகளுக்கு ST அந்தஸ்து வழங்கக் கோரி ஒன்றிய அரசின் 2013 கடிதத்திற்கு மாநில அரசின் பதிலை விரைவுபடுத்துமாறு கோரியது.

உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்  ‘அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் – மணிப்பூர்’ (All Tribal Student Union Manipur-ATSUM) அமைப்பினர் பல இடங்களில் போராடினர். மே 3ஆம் தேதி அன்று, சுராசந்த்பூர் மாவட்டத்தில், இவர்கள் ஒருங்கிணைத்த ‘ஒற்றுமை ஊர்வலத்தில்’, வனப் பகுதிகளிலிருந்து ஏராளமான பழங்குடியினர் பங்கேற்றனர்.  ஊர்வலமாகச் சென்றவர்கள் உதவி ஆணையரைச் சந்தித்து, பழங்குடியினர் பட்டியலில் மேத்திகளைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வனப்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் குக்கீகளை வெளியேற்றுவதை நிறுத்துமாறும் கோரிக்கை வைத்தனர்.

மறுபக்கம், மேத்திகள்  ST அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோஷங்களுடன், எதிர் முற்றுகைகள் போட்டனர். பெருந்திரளாகக் கூடிய இவர்களும் காடுகளைப் பாதுகாக்க கோரியும், குக்கிகள் மட்டுமல்லாமல் தாங்களும் மலைப் பகுதிகளில் வசிக்க அனுமதி வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர். இருதரப்பினர்க்கும் ஏற்பட்ட மோதல்கள் வலுவடைந்து, வன்முறையாக வெடித்தது. இரண்டு பக்கங்களிலும் எராளமானோர் காயமுற்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பேரணி முடிந்ததும், ஆங்கிலோ-குகி போர் நினைவுச் சின்ன வாயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்து சேதப்படுத்திவிட்டனர். தங்களின் மூதாதையரின் வெற்றிச் சின்னம் சிதைக்கப்பட்டது, குக்கீகளை ஆத்திரப்படுத்தியது. குக்கிகள் ஒரு மேத்தியினப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்று விட்டதாக  சமூக ஊடகங்களில் வெளியான ஒரு பொய்த் தகவல் மேத்தியினரைக் கொதித்தெழச் செய்தது. மிகக் கொடுரமான முறைகளில் குக்கிகளைத் தாக்கத் தொடங்கினார்கள் அவர்கள்.

தொடர்ந்து நடைபெற்ற கிளர்ச்சிகளும், போராட்டங்களும் பலவாறாக உருவெடுத்து, அடுத்தடுத்த நாட்களில், அச்சிறிய மாநிலம் வன்முறை போர்க்களமாக உருவானது. பல்லாயிரம் வீடுகள் எரிக்கப்பட்டு தீக்கிரையாகின. தேவாலயங்கள், பொதுநல மருத்துவமனைகள், பள்ளிகள் இடித்துத் தள்ளப்பட்டன. இருதரப்பு போராட்டக்காரர்களும், காவல் நிலையம் மற்றும் ராணுவ ஆயுதக்கிடங்குகளிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும்,  இலட்சக்கணக்கான தோட்டாக்களையும் களவாடிச் சென்றுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெண்கள் வண்புணர்வு செய்யப்பட்டார்கள். குடும்பங்கள் நிலைகுலைந்து திசைக்கொருவராகப் பிரிந்தனர். அகதிகளாகப் பலர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்தார்கள். எஞ்சியவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். எல்லைகள் அடைக்கப்பட்டு, மாநிலம் முற்றிலுமாக முடங்கிப் போனது. இணையம் துண்டிக்கப்பட்டு, மக்கள் பிற பகுதிகளிலிருக்கும் உறவுகளோடு தொடர்பில்லாமல் தவித்தனர்.

இரு தரப்பினருக்கும் சமரசமேற்படுத்த அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் வாளாவிருந்ததாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. வன்முறையைத் தடுக்கத் துணை ராணுவப்படை அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளூர் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் செய்திகள் வந்தன. இராணுவத்தின் கரங்கள் கட்டப்பட்டிருந்ததால், போராட்டக்காரர்களின் கொட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. மாநில, ஒன்றிய உளவுத் துறைகள் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும்,   மலை/வனப் பகுதிகளுக்குத் தனி நிர்வாகம் தேவை என்றும் குக்கி சமூகத்துச் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினர். இவர்களின் ஆதரவோடு தான் மாநில அரசு உருவானது என்பதும், இவர்களில் சிலர் மாநில அமைச்சர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மே 3, 2023 அன்று தொடங்கிய இடைவிடாத வன்முறை, மணிப்பூர் அரசாங்கத்தால் மறைமுகமாக தூண்டிவிடப்பட்டது என்றும், அரசு மேத்தியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்பதும் இவர்களது குற்றச்சாட்டு.

பள்ளத்தாக்கிலிருந்த குக்கி/நாகா இன அரசுப் பணியாளர்களை மாநில அரசு கட்டாயப்படுத்தி அகற்றி, மலைப் பகுதிகளுக்கு திருப்பியனுப்பிவிட்டதையும் அரசின் சூழ்ச்சிக்கு ஆதாரமாக வைக்கப்படுகிறது.  எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், போதகர்கள், காவல்துறை, சிவில் அதிகாரிகள், சாமானியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பாரபட்சமின்றி அனைவரையும் அழித்துவிடத் துடிக்குமளவுக்கு, குக்கி பழங்குடியின சமூகத்தின் மீதான வெறுப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. மணிப்பூரின் கீழ் எங்கள் மக்கள் இனி இருக்க முடியாது என குக்கிகள் முழங்கத் தொடங்கிவிட்டனர். வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்பதாகவும், தனி அதிகாரம் மட்டுமே தங்களுக்கு நிரந்தரத் தீர்வளிக்கும் என்றும் குக்கிப் பழங்குடியினர் கருதுகிறார்கள்.

மறுபக்கம், பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் மணிப்பூரின் பாதுகாப்பைக் குலைக்கிறது என்கிறார்கள் மேத்திகள். வனப் பகுதிகளில், போதைச் செடிகள் வளர்ப்பது (poppy culture) கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது. (அண்மையில் மணிப்பூரிலிருந்து மியான்மர் வழியாகப் போதைமருந்து கடத்தலில் பிடிபட்ட பெரும்புள்ளி மேத்தி இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது); மியான்மர், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து ஊடுருவும் விஷமிகள், பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுகிறார்கள்; வளர்ந்து வரும் குக்கி/நாகா மக்கட்தொகை, பாரம்பரிய மணிப்பூர் மொழி, கலாச்சாரத்தை அழித்து வருகிறது; அவர்களுக்கு வழங்கப்படும் இனஉரிமைகள், தங்களது இனத்தை ஆக்கிரமித்து, வாழ்வாதாரத்தைச் சூறையாடுகிறது என்று எதிர்தரப்பு வாதங்களை வைக்கிறார்கள் மேத்தி சமூகத்தினர்.

இரதரப்பிலும், பல ஆண்டுகளாக நாங்கள் இனப் பாகுபாடு, சமூகப் பேதமின்றி அண்டை வீட்டுக்காரராக, நண்பர்களாகவே வாழ்ந்திருந்தோம். சிலகாலமாக ஏற்பட்டு வரும் போராட்டங்கள் எங்களிடையே, குறிப்பாக எதிர்காலத் தலைமுறையினரிடையே பிளவை உருவாக்க முயல்கிறது; அதனை எப்படி, எங்கே, எப்போது முறியடிப்பது என்று தெரியாமல் கதியற்று நிற்கிறோம் என்பது தான் சாமான்ய மணிப்பூர்வாசியின் மனக்குமுறல்.

  • ரவிக்குமார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad