\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2023இல் கவனம் ஈர்த்த பாடல்கள்

இவ்வருடம் படங்கள் நிறைய வந்திருந்தாலும் கவனத்தை ஈர்த்த பாடல்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழில் இவ்வருடத்தின் பெரிய வசூல் புரிந்த படங்களான ஜெயிலர் மற்றும் லியோ இரண்டிற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அது போல, இந்திய அளவில் பெரிய வசூல் படைத்த படமான ஜவானுக்கும் அனிருத்தே இசை. அது அவருக்குத் தனி இசையமைப்பாளராக முதல் ஹிந்தி படமும் கூட. தமிழ்த் திரையுலகின் தற்போதைய டாப் இசையமைப்பாளர் யார் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில் இது 31வது வருடம். இவ்வருடம் பத்து தல, பொன்னியின் செல்வன் – 2, மாமன்னன் என மூன்று வெவ்வேறு விதமான படங்களுக்கு இசையமைத்து, அவர் இன்னமும் போட்டியில் இருக்கிறார். அதற்குப் பலபடிகள் மேலே, இசைஞானி இளையராஜாவுக்குத் திரையுலகில் இது 47வது வருடம். எண்பது வயதில் இவ்வருடம் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் தளத்திலும் தடம் பதித்துப் பத்துப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர்களைப் போன்ற சாதனையாளர்களுடன் தமிழ்த் திரையிசையுலகம் பலதரப்பட்ட ரசிகர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

 

மாவீரன் – சீனா சீனா

 

சிவகார்த்திகேயன் சில காலம் முன்பு வரை தொடர்ந்து இமான் இசையமைப்பிலும், அதன் பின்பு அனிருத் இசையமைப்பிலும் பயணித்து வந்தார். தற்சமயம் படத்துக்குப் படம் வெவ்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் நடித்து வருகிறார். மடோன்னா அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருந்தார். இருந்தாலும் படத்தின் முதன்மைப் பாடலைப் பிரபலப்படுத்த, அனிருத்தே பாடியிருந்தார். நாயகத்தின் தலைக்கு மேல் கேட்கும் குரல், மோசமான தரத்தில் கட்டப்படும் அரசுக் குடியிருப்புக் கட்டிடங்கள் என வித்தியாசமான கலவையில் உருவாக்கப்பட்ட படத்திற்கு பரத் சங்கர் நல்ல கவனிக்கத்தக்க இசையை அளித்திருந்தார்.

 


 

லியோ – நான் ரெடி

 

இது ஒரு டிபிக்கல் விஜய் – அனிருத் பாடல். இதற்கு முன் இவர்கள் காம்பினேஷனில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் வந்த ‘வாத்தி கமிங்’ பாடலை முதலில் நினைவுபடுத்திய பாடல். தற்சமயம் விஜய் தனது அனைத்துப் படங்களிலும் ஒரு பாடலை மறக்காமல் பாடிவிடுகிறார். இந்தப் பாடலும் அவரே. அனிருத் இசை என்றால், மீதிப் பாடல்களை அனிருத் பாடி விடுகிறார்! நல்லவேளை, இன்னமும் அவர் பெண்குரலில் பாட முயற்சி செய்யவில்லை. இந்தப் பாடல் வரிகளில் புகை, மது, போதை எனச் சமூகத்தில் இருக்கும் கெட்ட பழக்கங்களை நாயகப் பண்புகளாகப் பாடி விட்டு, சென்சாரில் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, படத்தில் டொயிங் டொயிங் என்று பாடும் நிலை.

 

 

குட் நைட் – நான் காலி

 

ஒரு மனிதனின் குறட்டையைக் கதையாகக் கொண்டு, அதில் மனிதர்களின் உணர்வுகளைப் பின்னிப் பிணைந்து காட்சியமைத்துச் சுவாரஸ்மாகப் படமெடுக்க முடியுமா? இயக்குனர் வினாயக், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நாயகன் மணிகண்டன் என அமைந்த இப்படக்குழு அதை வெற்றிகரமாகச் செய்திருந்தனர். படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஷான் ரோல்டன் கவர்ந்திருந்தார். சொற்பப் படங்களுக்கே அவர் இசையமைத்தாலும், கவனத்தைக் கவரும் இசையை வழங்கி விடுகிறார். அவரே பாடிய ‘நான் காலி’ என்ற இப்பாடல் அதற்கு ஒரு உதாரணம்.

 

 

டக்கர் – நிரா நிரா

 

சில படங்கள் பார்க்கச் சகிக்க முடியாமல் இருக்கும். ஆனால் அப்படங்களில் தொடர்ந்து கேட்டு ரசிக்கக்கூடிய சில பாடல்கள் இருக்கும். இப்படிப்பட்ட படங்கள் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கும். இவ்வருடம் அப்படி வந்த படம் – டக்கர். பாடல் – நிரா நிரா. சித்தார்த் நாயகனாக நடித்த இப்படத்தில் வரும் ‘நிரா நிரா’ பாடலை சித் ஸ்ரீராமும், கௌதம் மேனனும் பாடியிருந்தனர். கௌதம் மேனன் பேசிப் பாடியிருந்தார் என்று சொல்ல வேண்டும். ஆனாலும் நன்றாக இருந்தது. இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா அவ்வப்போது ஆங்காங்கே இப்படிக் கவனத்தை ஈர்த்து விடுகிறார். பாடலை இன்னமும் கேட்கவில்லை என்றால் கேட்டுவிடுங்கள். படத்தைப் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை.

 

 

வாரிசு – ரஞ்சிதமே

 

2023 பொங்கலுக்கு வெளிவந்த இந்த விஜய் படத்தில், ஆச்சரியப்படும் வண்ணம் அனிருத் இசையமைக்கவில்லை. ஏனென்றால் சமீப காலப் பெரிய நடிகர்கள் படத்திற்கெல்லாம் அவர்தான் இசையமைத்து வந்தார். இதில் தமனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. ‘மொச்சக்கொட்டப் பல்லழகி; பாடல் சாயலில் அவர் டிஜிட்டலில் குத்து குத்தி வெளியிட்ட இந்தப் பாடல், விஜயைத் திரையில் மூச்சிறைக்க ஆட வைக்க, அவர் ரசிகர்களை வருடம் முழுவதும் தரையில் ஆடவைத்தது. பாடலைப் பாடியது, உங்கள் விஜய் தான்! உடன் இணைந்து பாடியது, பாடகி மானசி அவர்கள்.

 

 

வாத்தி – வா வாத்தி

 

தனுஷ் நடித்துத் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான ‘வாத்தி’ படத்தில் அனைவரின் மனதைக் கவர்ந்த பாடல் என்று ‘வா வாத்தி’ பாடலைச் சொல்லலாம். ஜி.வி.பிரகாஷ் இசையில் நல்லதொரு மெல்லிசைப் பாடலாக இப்பாடல் அமைந்தது. படத்தில் வந்த பாடலைப் பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருக்க, தனுஷ் குரலிலும் ஒரு வெர்ஷனை இப்படப் பாடல் தொகுப்பில் வெளியிட்டுயிருந்தார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதுபோல் இரண்டும் ரசிகர்களைக் கவர்ந்தது.

 

 

பொன்னியின் செல்வன் 2 – அக நக

 

முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் அதிரி புதிரி வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் குறை வைக்கவில்லை. இளங்கோ கிருஷ்ணன் எழுதி, சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்த ‘அக நக’ பாடல், இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பாடல். பொன்னியில் செல்வனில் வைரமுத்து இல்லையே என்று குறைப்பட வேண்டிய தேவையில்லாமல் இளங்கோ கிருஷ்ணன் அருமையான பங்களிப்பைப் பாடல் வரிகளில் அளித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் மனதை வருடும் பாடல் வரிசையில் இப்பாடலும் இணைந்து பல ஆண்டுகளுக்கு நின்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

 

 

விடுதலை 1 – காட்டு மல்லி

 

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய படம். சூரி முதன்முதலாக நாயகனாக நடிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி நாயகியாக இப்படத்தில் நடித்திருத்தார். இளையராஜா இசையமைத்து, எழுதி, பாடிய ‘காட்டு மல்லி’ ரசிகர்களின் மனதைக் கவராமல் போனால்தான் ஆச்சரியம்.

 

 

ஜெயிலர் – காவா்லா

 

ரஜினி படத்தின் பாடல்களை வெளியிடும்போது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அறிமுகப் பாடல் என்று ஒன்றை வெளியிடுவார். அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உச்சஸ்தாயில் பாட, மனக்கண்ணில் ரஜினி ஸ்டைலாக நடந்து வந்து ஆடுவார். நடுவில் பாபா படத்தில் எஸ்.பி.பி.க்குப் பதில் சங்கர் மகாதேவன் பாட, பாடலும், படமும் பலத்த ஏமாற்றமாக அமைந்தது. அதன்பிறகு, இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் ரஜினி-எஸ்.பி.பி. என்ற முதல் பாடலுக்கான நடைமுறை மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர்த்து, கடைசியாக வந்த அண்ணாத்தே வரை அப்படியே. எஸ்.பி.பி. மறைவிற்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், என்ன செய்யப் போகிறார்கள் என்ற புது எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, கிளப் சாங் போன்ற ஒரு கிறக்கமான பாடலைப் பெண் குரலில் வெளியிட்ட போது, ரஜினியின் அத்தனை பட நடைமுறையும் இதில் உடைந்து போனது. ரஜினியும் கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ஓரத்தில் க்ரூப் டான்ஸராக ஆடி வெளியிட்ட வீடியோவைப் பார்த்த போது, இந்தப் பாடலும், படமும் இவ்வளவு ஹிட் ஆகும் என்ற தோன்றியிருக்கவில்லை. ஆனால், ஆனது. இவ்வருடம் யூ-ட்யூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற தமிழ்ப் பாடலாக ஹிட்டடித்தது.

 

 

மாமன்னன் – நெஞ்சமே நெஞ்சமே

 

மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என ஒரு ரகமான கூட்டணியில் வெளிவந்த படம் இது. இப்படம் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக் களம் எனலாம். வடிவேலு குரலில் ‘தந்தானே தானா’, அறிவு எழுதி பாடிய ‘மன்னா மாமன்னா’, ரஹ்மானே பாடிய ‘ஜிகு ஜிகு ரயில்’ என ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ஸ்பெஷல் இப்படத்தில் இருந்தது. இவை எல்லாவற்றையும் மீறி விஜய் ஜேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய ’நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் மனதை ஆட்கொண்டது. இப்பாடலை இசையமைப்பாளர் தேவாவும் சிறிய தனிப்பாடலாகப் பாடியிருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ‘ஆராரோ’ என்று பாடி தாலாட்டியிருந்தனர்.

முதல் பத்தியில் குறிப்பிட்டது போல், தமிழ்த் திரையிசை ஜாம்பவான்கள் ஒரு பக்கம் தங்கள் படைப்புகள் மூலம் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்து வர, இன்னொரு பக்கம் நல்ல திறமையுடன் வரும் புதுப் புது இளைஞர்களுக்கும் தமிழ்த் திரையுலகம் வாய்ப்பளித்து வருவது பாராட்டுக்குரியது. ரசிகர்களும் பெரிய படங்களின் பாடல்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், சிறு படங்களின் இசைக்கும், அதில் தரமாக இசையை அளிக்கும் புதியவர்களுக்கும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும்.

 

    சரவண குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad