\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

விளாடிமிர் புடின் – புதிய சாதனை

Filed in தலையங்கம் by on May 13, 2024 0 Comments

“நாம் ஒன்றுபட்ட சிறந்த மக்கள்; நாம் ஒருமனதுடன் ஒன்றாக இணைந்து, அனைத்து தடைகளையும் கடந்து, திட்டமிட்டபடி வெற்றி பெறுவோம்” – சமீபத்தில் தனது ஐந்தாவது பதவிக் காலத்தை கிரெம்ளின் மாளிகை பதவியேற்பு விழாவில் தொடங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதன் ஒரு பகுதி இது. ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலினுக்கு பின்னர், நீண்ட காலம் பதவியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் புடின்.

1999 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செயல் தலைவராக (தற்காலிக அதிபர்) பதவியேற்ற விளாடிமிர் புடின், 2000 ஆம் ஆண்டு மே மாதம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு பதிவிகாலங்களுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது என்ற நிலை வந்த போது, மே 2008 முதல் மே 2012 வரை பிரதம மந்திரியாகத் தொடர்ந்தவர், அதற்குப் பின் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2020ஆம் ஆண்டு, அதிபர் பதவிக்கான அரசியலமைப்புச் சட்டத்தை தளர்த்தி, தான் தொடர்ந்து அதிபராக நீடிக்க இருந்த தடையை உடைத்தெறிந்தார்.

உள்நாட்டு அரசியலில் தனக்கு எதிரிகளே இல்லாத வகையில் பல அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதித்து முடக்கி, எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை நாட்டிலிருந்து விரட்டிவிட்டு அசுர பலத்துடன் ஆட்சியமைத்துக் கொள்வது புடினின் அரசியல் பாணியாகவே அமைந்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்பட்ட நிலையில், அவர்களில் மிகப் பிரபலமான அலெக்ஸி நவால்னி தேர்தல்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் மர்ம மரணமடைந்தது நினைவுகூறத்தக்கது. இலியா யாசின், டிமிட்ரி செரிபிரிகோவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் நெடுநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மார்ச் 2024 இல் நடந்த தேர்தலில் 88% வாக்குகளுடன் புடின் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நேரத்தில் ரஷ்ய மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்தால் மட்டுமே ரஷ்யாவைப் பாதுகாக்க முடியும் என்றும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுடன் சேர்ந்து ரஷ்யாவை நிர்மூலமாக்குவதைத் தடுக்க முடியும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகள் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது என்றே சொல்லலாம்.

புதினின் அடுத்த ஆறாண்டு பதவிக்காலம், ரஷ்ய-உக்ரைன் போரின் முடிவைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. உக்ரைன் ‘நேட்டோ’ உறுப்பினர் ஆகக்கூடாது என்பது தான் ரஷ்யாவின் முக்கியக் கோரிக்கை. உக்ரைன் நேட்டோ உறுப்பினராவது ரஷ்யாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பற்றதாக்கிவிடுமென ரஷ்யா உறுதியாக நம்புகிறது. ஒருவேளை அது நடந்துவிட்டால் ‘நேட்டோ’ நாடுகள், உக்ரைனில் தங்களது படைகளைக் குவிக்கத் தொடங்கும். ஏற்கனவே, அமெரிக்கா ஆயிரக்கணக்கான அதி நவீன போர்க் கருவிகளை உக்ரைனுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. (கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸில் உக்ரைனுக்கான 6000 கோடி டாலர் நிதி / இராணுவ உதவி அங்கிகரிக்கப்பட்டது). இது உக்ரைனுக்குச் சென்றடைவதற்கு முன்னர் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிபர் பதவியை விட்டு விலகினாலே உக்ரைன் பிரச்சனைகள் தானாக முடிவுக்கு வரும் என்பது புதினின் வாதம். ஆனால் உக்ரைனைத் தொடர்ந்து, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, மால்டோவா, போலந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கும் அடுத்த இலக்குகளாகத் திட்டமிட்டிருக்கிறார் புடின் என்று எச்சரித்து வருகிறார் ஜெலன்ஸ்கி.

இரண்டாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போரைக் கண்டித்து, ரஷ்யா மீது பல நாடுகள் வர்த்தக, பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள கட்டத்தில் கூட, ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவிற்குப் அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளராகவும், உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ள ரஷ்யா உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளரும் கூட. ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இயற்கை எரிவாயுவிற்கு ரஷ்யாவையே நம்பியுள்ளன. அது மட்டுமல்லாமல், எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதியிலும் ரஷ்யா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, ஜெர்மனி போன்ற நாடுகள் நேரடியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வளங்களை இறக்குமதி செய்கின்றன. இரும்பு, கோதுமை ஏற்றுமதியிலும் ரஷ்யா பெரும்பங்கு வகிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயலற்று, அதிகக் கவனம் பெறாதிருந்த இராணுவ ஆலைகள் தற்போது 24 மணிநேரமும் இயக்கப்படுவதால், சோவியத் காலத்திலிருந்ததைப் போல இராணுவத் தொழில்துறை வளாகங்கள், அதன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களுக்குப் போர்ச் சூழல் நிதியளிக்கும் சுரங்கமாகயிருக்கிறது.  சர்வதேச நாணய நிதியம், 2024 ஆம் ஆண்டில் ரஷ்யா 3.2% பொருளாதார வளர்ச்சியைக் காணும் என்று கணித்துள்ளது. இது அமெரிக்காவின் 2.7% வளர்ச்சிக் கணிப்பைக் காட்டிலும் அதிகம். மக்கள் புடின் ஆட்சியில் பெரிய குறைகள் இருப்பதாகக் கருதவில்லை. மாறாக, அவரது ஆட்சி நாட்டுக்குப் பாதுகாப்பு என்கிறார்கள். அவருக்குப் பதிலாக வேறு யாரென்ற கேள்விக்கும் பதிலில்லை என்கிறார்கள் ரஷ்யர்கள். 

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள் சாதகமாகயிருந்தாலும், நாட்டின் வருமானத்தில் கணிசமான பங்கு இராணுவத்துக்காகச் செலவிடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் இராணுவச் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7.1% ஆக அதிகரிக்கும், இது மொத்த அரசாங்க செலவினங்களில் 35% ஆகும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில்  2025ஆம் ஆண்டில் ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்குமெனவும்,  சர்வதேச நாணய நிதியம் கணிக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் சேர அழைக்கப்படுவதால், இள வயது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதும் கணிப்பாகவுள்ளது. மேலும் இராணுவத்தில் சேர விருப்பமில்லாதவர்கள் இடம்பெயர்வதும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே ரஷ்யாவின் பொருளாதார வெற்றி தற்காலிகமானது; நேட்டோ படைகள் உக்ரைனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில், போர் உக்கிரமடையும் என்றும், ரஷ்யாவின் இராணுவச் செலவு பன்மடங்கு அதிகரிக்குமெனவும் அதனால் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமெனவும் சில நிதியமைப்புகள் அஞ்சுகின்றன. 

அதிபர் புடின், “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை எவருமே விரும்பமாட்டார்கள். ஆனால், இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. இன்று, உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்மபந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நலம்.” என்று, நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதவியேற்ற இரண்டு நாட்களில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, நாஜி ஜெர்மனியை, ரஷ்யா வெற்றிக் கொண்ட நாளாகக் கொண்டாடப்படும் மே 9 ஆம் தேதி விழாவில் உரையாற்றிய புடின், மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் உலகளாவிய மோதலுக்கு இட்டுச்செல்கின்றன என்ற கருத்தை மீண்டும் சுட்டிக்காட்டினார். “நாஜி ஜெர்மனியைத் தோற்கடிப்பதில் சோவியத் யூனியன் ஆற்றிய தீர்க்கமான பங்கை மேற்கு நாடுகள் மறந்துவிட்டன போலும். உலகளாவிய மோதலைத் தடுக்க ரஷ்யா அனைத்தையும் செய்யும். அதே நேரத்தில் நமது போர்த்திறன் மிகுந்த படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். உலகின் மிகப்பெரிய அணுசக்தியை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். யாரும் எங்களை மிரட்ட முடியாது” என்றும் அவர் பேசியிருப்பது, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் போர் முடிவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதைச் சொல்கிறது. 

  • ஆசிரியர்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad