\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கலங்காதிரு மனமே!

“என்னிடம் என்ன தவறுள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னைச் சுற்றியுள்ள யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஆதரவான கரங்கள் தேவைப்பட்டது. என் தலையில் நடக்கும் போராட்டத்தின் வேதனையையும் வலியையும் யாராவது புரிந்துகொள்வார்களா, உதவி செய்வார்களா என்று அழுததுண்டு. நான் கெட்டவள் இல்லை. எனது புதிய நிலைக்கு ஏற்ப என்னை சீராக்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். அவநம்பிக்கை கொப்பளிக்க, கூர்மையான பற்கள் கொண்ட கத்தியுடனே எப்போதும் ஓடிக்கொண்டிருந்தேன்”. நம்மில் பெரும்பாலோனோர்க்குத் தெரிந்த மிகப் பிரபலமானவொருவர் தனது ஐந்து தற்கொலை முயற்சிகள் குறித்து சொன்னது இது. இவர் இன்று நம்மோடு இல்லை.

“ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, நான் ஏதோ காற்றில் மிதப்பதாக உணர்ந்தேன். என்னால் பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் என் பெருமையை ஒதுக்கிவைக்க வேண்டும். என் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். என் மனநலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்தேன்.  ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என்று அத்தருணத்தில் முடிவெடுத்தேன்” – இவரையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இன்று இவர் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். 

முதலாம் கருத்தைச் சொன்னவர், வேல்ஸ் இளவரசி டயானா (Diana: Her True Story–in Her Own Words).  இரண்டாமவர், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை, சிமோன் பைல்ஸ். இவர்களது முடிவுகளுக்குப் பல்வேறு வகையான காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவற்றின் தொடக்கம் மனஅழுத்தம்.

மனநல நிலைமைகளைக் குறித்து சிந்திப்பதும், பகிர்வதும் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல முற்படும் இன்றைய காலத்திலும் சமூகக் குற்றமாக , அவகாரகனமானதாக, அருவருக்கத்தக்கதாகக் கருதப்படுகிறது என்பது நிதர்சனம். நம் பிரச்சனைகளை வெளியில் சொன்னால் நாம் புறக்கணிக்கப்படுவோமோ, சமூகம் நம்மைக் கேவலமாகப் பார்க்குமோ என்ற எண்ணம் மென்மேலும் அதிகரித்து, அழுத்தங்களைப் பூதாகாரமாக்கி, மனிதரை மனநோய்க்குள் தள்ளிவிடுகிறது. மனநலம் குறித்த சிந்தனை அல்லது சுயபரிசோதனை கூட சாபக்கேடாகக் கருதப்படுகிறது. 

நம் அனைவருக்கும் அவ்வப்போது மனநலக் கவலைகள் இருக்கும். ஆனால் அக்கவலைகள் தொடர்ந்து அல்லது அதிகரித்து  நமது செயற்பாட்டுத் திறனைப் பாதிப்பதை மனநலக் குறைபாட்டின் அறிகுறியாகச் சொல்லலாம்.  மன ஆரோக்கியம் உணர்வுகள், உளவியல், சமூகம், உடல் நல பராமரிப்பு எனும் நான்கு பெரும் பரிமாணங்களைக் கொண்டது. இந்த நான்கு தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தாக்கங்கள், மன ஆரோக்கிய நிலையைத் தீர்மானிக்கின்றன. மனநலக் குறைபாடு என்பது ஒரு தனிநபரின் அறிவாற்றல், உணர்வுகள், சிந்தனை அல்லது நடத்தை ஆகியவற்றில் காணப்படும் இடையூறுகளால் மருத்துவ ரீதியாகப் பல்வேறு  வகைகளில் பகுக்கப்படுகிறது. 

 மனப்பதட்டம் (Anxiety disorder)

பதட்டம் (anxiety) என்பது மன இறுக்கம் அல்லது மன உளைச்சலின் (stress) விளைவாகும். லேசான பதட்டம் சில சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும். இது ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரித்து, தயார் செய்து கவனம் செலுத்த உதவும். இயல்பாக ஏற்படும் சிறு சிறு பதட்டங்கள், தீர்வுகள் எட்டப்படாத போது,  ஒரு கட்டத்தில் பதட்டக் கோளாறாக மாறுகிறது. உதாரணமாக, சில நேரங்களில், தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதுண்டு. அதை, தூங்கினால் கெட்ட கனவு வருமோ என்ற அச்சத்தில் தூக்கத்தைத் தவிர்க்க முற்படும் கட்டத்தில் மனப்பதட்ட நோயாக (Anxiety Disorders) உருப்பெறுகிறது. உணவுப் பழக்க கோளாறுகள் (eating disorder) மனப்பதட்ட குறைபாட்டின் மற்றொரு வகை. உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து, விகாரமடைந்து விடுவோம் போன்றதொரு அச்சம். வர்த்தக நோக்கில் சமூகத்தில் திணிக்கப்படும் ‘உடல் பருமன்’ குறித்த ஆதாரமற்ற தகவல்கள் காரணமாக ‘ஜென் ஸீ’ (Gen Z) எனப்படும் மக்கள்தொகை பிரிவினர் (குறிப்பாக பெண்கள்) அதிகம் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

மனப்பதட்டக் கோளாறுகளின் இன்னொரு பிரிவான சமூகக் கோட்பாடுகள் குறித்த அச்சம் ( Social anxiety disorder) ‘மிலேனியல்’ மற்றும் ‘ஜென் ஸீ’ வயதுப் பிரிவினரைப் பெரிதும் பாதிக்கிறது. தன்பாலின ஈர்ப்பு, மண முறிவு, கருக்கலைப்பு போன்ற உணர்வுப்பூர்வச் சிந்தனைகளை (sentimental taboo) இதற்குக் காரணமாகச் சொல்லலாம். 

இன்றையச் சூழலில் பொதுப்படையான மனப் பதட்டம் (General Anxiety Disorder (GAD)) என்பது அனைத்து தரப்பினரையும் எதோவொரு அளவில் பாதித்து வருகிறது. சூறாவளியாக சுழற்றியடிக்கும் பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப, சமூகச் சூழலில், எதிர்காலம் குறித்து, செய்வதறியாது ஸ்தம்பித்து நிற்கும் கட்டம் ஏறத்தாழ எல்லோருக்கும் ஏற்படலாம். பொருத்தமில்லாத சமூகத்தில், கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடியாதவர்கள், அங்கீகாரத்துக்காகத்  தவிப்பவர்களையும் இதில் அடக்கலாம். தங்களது செயல் பிறரது கவனத்தை ஈர்க்கவேண்டுமென இயல்பான செயல்களில் கூட துல்லியத்தை, உச்சக்கட்ட பூரணத்தை எதிர்பார்ப்பவர்கள் இவர்கள். 

அமெரிக்க சென்ஸஸ் பீரோவின், மக்கள் உணர்வுகளை ஆய்விடும் துறை (U.S. Census Bureau’s Household Pulse Survey) , 2023 ஜூன் மாதம்  நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஏறத்தாழ 32.3% அமெரிக்கர்கள் மனப்பதட்டக் கோளாறுகளில் சிக்கியுள்ளதாகச் சொல்கிறது. இவர்களில் 50 சதவிகிதத்தினர் 18 முதல் 24 வயதுடையவர்கள்.

மனச்சோர்வு (Depression)

தொடர்ச்சியான சோகம், ஆர்வமின்மை, மன மாற்றங்கள் (mood swings) அல்லது அலைபாய்தல் மனச்சோர்வு என்ற வரையறைக்குள் அடங்கும். இதனால் ஓர்முகச் சிந்தனை (concentration), ஆற்றல் (energy), முயற்சி (efforts), ஊக்கம் (motivation), உற்சாகம் (enthusiasm) போன்ற திறனூக்கிகள் குறைந்து, ஒருவரின் சிந்தனை, செயல்பாடு, உணர்வுகளை எதிர்மறையாக பாதிக்கிறது. இவற்றில் ஒன்றோ, பலவோ தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்குமானால் அது மனச்சோர்வு  எனப்படும் மனநிலைக் கோளாறின் அறிகுறியாக இருக்கக்கூடும். 

மூளையின் ‘நியுரோ டிரான்ஸ்மிட்டர்ஸ்’ எனப்படும் இரசாயன வேறுபாடுகள் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, சுகம் அல்லது துக்கம் (pleasure and pain) என்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்றன.  மனச்சோர்வினால் பாதிக்கப்படும்பொழுது, சுக உணர்வுகளை ஏற்படுத்தும் டோபோமைன், செரோடோனின் போன்ற சுரப்பிகளின் அளவு குறைகிறது.  இயல்பாக இந்தக் குறைபாடுகள் மரபியல் ரீதியாக தொடர் சந்ததியினர்க்கு கடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமின்றி, சிறு வயதில் ஏற்படும் மன அதிர்ச்சி (trauma), இடையூறு (adversity) மூளையின் பதிவுகளில் இடம்பெற்று அதை நினைவிலிருந்து அகற்ற முடியாத நிலையிலும் மனச்சோர்வு உண்டாகலாம். நெருங்கிய உறவுகளின் பிரிவு, முறிவு, இறப்பு மனச்சோர்வை உண்டாக்கலாம். இதனைத் தவிர்க்க இயலாமல் தவிப்பவர்கள் தங்களுக்கு இன்பம் தரக்கூடியவற்றில் நாட்டம் மிகுந்து காணப்படுவர். இவர்களில் பலர் போதை மற்றும்  குடிப்பழக்கம், சூதாட்டத்திற்கு அடிமையாகிவிடுவதுண்டு. போர்க்களங்களிலிருந்து திரும்பி பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத இராணுவ வீரர்கள், மறவர்கள், போர்ச்சூழலின் இன்னல்கள் மூளையில் பதிந்துவிட்டதை மறக்க போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிப் போவது இதற்கு உதாரணம்.  இவர்கள் தங்களது நிலையான சோக உணர்வுகளை கடந்து, மீண்டு வருவது மிகக் கடினம். இதனை ‘அதிர்ச்சியின் பின்விளைகளால் ஏற்படும் மனவுளைச்சல்’ (Post-Traumatic Stress Disorder (PTSD)) என்கிறார்கள். ‘மிலேனியல்’, ‘ஜென் ஸீ’ வயதினர் உறவு முறிவுகளாலும், வேலை வாய்ப்பின்மை, அங்கீகாரமின்மை போன்ற காரணங்களால் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, நினைவுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்து  குற்றவுணர்ச்சி மிகுதியால் மனச்சோர்வுக்குத் தள்ளப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் படி, 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 20 சதவிகிதத்தினர் (ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள்) மனச்சோர்வில் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே ஆண்டில் உலகளவில் 5.4 சதவிகிதத்தினர் மனச்சோர்வில் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லியுள்ளனர். இதற்கு அமெரிக்கர்களைத் தவிர மற்ற நாட்டவர்கள் மனச்சோர்வின்றி மகிழ்ச்சியாகவுள்ளனர் என்ற பொருளில்லை. மற்ற நாட்டவர்களிடம் மனச்சோர்வு என்பதன் புரிதலும், விழிப்புணர்வும் இல்லை என்பதே உண்மை.  பல நாடுகளில் மனநலம் குறித்த தரவுகளோ, அவற்றைச் சேகரிப்பதற்கான முனைப்புகளோ இல்லை என்பதும் காரணம்.

2023 ஆம் ஆண்டு கணக்குப்படி, 29 சதவிகித அமெரிக்கர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். ஏறத்தாழ 9 சதவிகிதம் அதிகரித்ததற்கு ‘கோவிட்’ ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதில் 18 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களில்  26%, 18 – 44 வயது பிரிவில் அடங்குவர் என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவுள்ளது. 

மனச்சிதைவு (Schizophrenia)

பொதுவாகச் சிந்தனை, உணர்வுகளே (thoughts and emotions) மனித நடத்தைக்கு (behavior) வழி வகுக்கும். சிந்தனைக்கும் நடத்தைகும் இடையிலுள்ள தொடர்பு அறுபடும்போது, மனம் ஒன்று சொல்ல, இயல்பில் நடப்பது வேறொன்றாக இருக்கும். எண்ணங்களுக்கும், நிதர்சனங்களுக்கும் தொடர்பில்லாத நிலை எனலாம். மனம் எதோவொரு மாயையான உலகில் சஞ்சாரிக்க உடல் சராசரியான வாழ்வில் சுழலும்.  உணர்வு ரீதியாக இல்லாத, கற்பனையான உள்ளுணர்வுகளை, நிஜத்தில் உணர்வது – அதாவது மற்றவர்க்கு கேட்காத ஏதோவொரு ஒலி அல்லது குரலைக் கேட்பதாக உணர்வது, கற்பனையான நறுமணத்தைச் சுவாசிப்பது, எதிரில் இல்லாத காட்சியைப் பார்ப்பது, கற்பனையான பொருளைத் தொட்டு உணர முடிவது, கற்பனையான உணவைச் சுவைப்பது என ஐம்புலன்கள் வழியே மாய உலகில் வாழ்வது மாயத்தோற்றங்கள் (Hallucination) எனப்படுகிறது.

இல்லாத ஒரு நபரை, பொருளை, நடைபெறாத சம்பவத்தை உண்மையில் இருந்ததாக, நடைபெற்றதாக நம்பும் திரிபுணர்வு (delusion) மனநிலை மனச்சிதைவின் மற்றொரு வகை. பிளவுபட்ட மூளை இயக்கம் (Split brain) எனப்படும் பார்ப்பதற்கும் உணர்வதற்குமுள்ள வேறுபாடுகளைக் குறிக்கும் பிறழ்வும் மனச்சிதைவின் காரணமே. உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியான நரம்புகள் பலவீனமடைவது அல்லது செயலற்று போவது பார்க்கின்சன்ஸ் (parkinsons) எனப்படும் மனச்சிதைவுக்கு காரணமாகிறது. முதியவர்களுக்கு மிதமான அளவில் இயக்க நரம்பணுக்கள் சேதமடைவதினாலும் (motor impairment) மனச்சிதைவு ஏற்படுகிறது. 

உலகளவில், 300 நபர்களில் ஒருவர் எதோவொரு மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆபத்தானவர்களில்லை. திரைப்படங்களில் பார்ப்பது போல இவர்கள் அனைவரும் வன்முறைகளில் இறங்கிவிடுவதில்லை. சராசரி தேர்வுகளில் அவர்களால் திறம்பட செயல்பட முடியாமல் போனாலும், அவர்கள் மூடர்களில்லை. உண்மையில் இவர்கள் சூட்சும நுண்ணறிவு மிகுந்தவர்கள். சமூகம் இவர்களை நிராகரித்து, பாகுபாடு காட்டுவதால் இவர்கள் மென்மேலும் மன அழுத்தம், மனச் சோர்வுக்குத் தள்ளப்படுகின்றனர். 

மனநலப் பிரச்சனைகள் (Psychiatric problems)

மனநலப் பிரச்சனைகள் பலவிதமான காரணங்களைக் கொண்டிருக்கலாம். பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான காரணிகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நபரின் பாதிப்புகளும் தனித்துவம் மிகுந்திருப்பதால் பொதுவானதொரு சிகிச்சை அல்லது போதனைகள் இதற்குத் தீர்வாகாது.  இன்றைய தேதியில் கிடைக்கும் தரவுகளைப் பொறுத்தே சிகிச்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. ஆகையால், மனநலனைப் பொறுத்தவரையில் வெளிப்படைத்தன்மையே மிக மிக அவசியம்.  மனநலப் பிரச்சனைகளை மறைப்பது மேலும் ஆழமானப் பிரச்சனைகளில் தள்ளிவிடக் கூடும். 

‘மிலேனியல்’ மற்றும் ‘ஜென் ஸீ’ வயதினர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே உலகை எதிர்கொள்ள நேரும் போது, எண்ணிலடங்கா பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். முந்தைய தலைமுறைகளை விட இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். தன் பாலினத் திருமணம், கல்விக் கடன் தொடர்பான அழுத்தங்கள், பனிச்சூழல் அழுத்தங்கள், எதிர்காலம் குறித்த அச்சம், இறுகும் சமூகக் கட்டமைப்புகள், மதம் / இறை தொடர்பான தனிப்பட்ட நம்பிக்கைகள் என இவர்கள் எதிர்கொள்பவை அனைத்தும்  புதிய பரிமாணங்களை உடையவை. ஒருவகையில் இவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். உலகம் தானியங்கி (automation) நிலைக்கு நகர்வதை இவர்கள் உணர்ந்துள்ளார்கள். வேலை வாழ்க்கை சமநிலைக்காகச் (work life balance) சிந்திக்கின்றனர். மேலும், இவர்கள் திறந்த மனதுடன் தங்களது பிரச்சனைகளைத் தெரிவிப்பது,  தங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகப் பார்க்கின்றனர். சரியான நேரத்தில், முறையான சிகிச்சைக்கு முன்வருவது, வருங்காலப் பாதிப்புகளை வெகுவாகக் குறைப்பதற்கு வழி வகுக்கும்.  

‘ஜென் ஆல்ஃபா’ தலைமுறையினரின் பிரச்சனைகள் மேலும் சிக்கலானவை. மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் உலகக் கண்ணோட்டத்தில் இவர்கள் மன நலப் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இணையம் இவர்களது சமூகக் கூடல்களைப் பெரிதும் குறைத்துவருகிறது. ‘கோவிட்’ காலகட்டத்தில் பிரபலமடைந்த இணைய வழி கல்வி முறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்தையே ‘ஸ்மார்ட் ஃபோன்’ எனும் திறன்பேசிக்குள் அடக்கிவிடத் துடிப்பவர்கள் இவர்கள்.  குறுஞ்செய்தியைக் கூட எழுத்துவடிவில்   அனுப்பாமல் ‘எமோஜி’ குறியீடுகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தி நேரத்தைச் சேமிப்பவர்கள். தங்களது பிள்ளைக்கு ‘மொபைல் ஃபோனில்’ உள்ள அத்தனை விஷயங்களும் அத்துப்படி என்று பெருமைப்படும் பெற்றோர்கள், அவர்கள் மெதுமெதுவே இயல்பான வாழ்விலிருந்து விடுபட்டு மாய உலகுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. இதில் ஒரேயொரு ஆறுதலான விஷயம்  ‘மிலேனியர்கள்’, ‘ஜென் ஸீ’ வயதினரைப் போல இவர்களும் தங்களதுப் பிரச்சனகளை உணரும் வயதில் தயக்கமின்றி உதவித் தேடுவார்கள் என்று நம்பலாம்.

மனித வாழ்க்கை, எப்போதும்,  கானம் பாடும்  பறவைகள், துள்ளிக் குதிக்கும் அருவிகள், குளிர் காற்று வீசும் பசுஞ்சோலைகளூடே சீரான பாதையில் செல்லும் அமைதியான, இனிமையான பயணமாக இருப்பதில்லை.  சில நேரங்களில் சுடும் பாலைவன நிலப் பயணமாகவும் அமையலாம் அல்லது காட்டாற்றில் நீந்த வேண்டிய போராட்டமாகவும் இருக்கலாம். சந்தோஷமோ, துக்கமோ எதுவும் நிரந்தரமில்லை. ‘வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை’ என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில்கொள்வது மனவுறுதியை வலுப்படுத்தும்.

இன்றையச் சூழலில் ஒரே அறையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் தனித்தனியே நான்கு கைப்பேசிகளில் நேரத்தைச் செலவிடும் காட்சிகள் யதார்த்தமாகிவிட்டது. இவர்களில் ஒருவர்க்கு ஏதோ பிரச்சனையென்றால், தன் பிரச்சனையை அறையிலிருக்கும் மற்ற மூன்று பேரிடம் பகிர்வதை விட்டு கையிலிருக்கும் கருவியில் விடை தேட நினைக்கிறார். மனம் விட்டு பேசுதல், உறவுகளுக்கு நேரம் ஒதுக்குதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல், இயற்கையோடு இணைந்திருத்தல் போன்றவை மனநலத்தை மேம்படுத்தும். 

மே மாதம், மனநல விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. விழிப்புணர்வு பெற்றால் விடுதலை பெறுவது எளிது. உங்களது உடல் நலத்தை சோதித்துப் பார்ப்பது போலவே, மனநலச் சோதனையும் அவ்வப்போது அவசியம். இணையத்தில் மனநலத்துக்கான அளவுகோலாக (Mental Health Quotient – MHQ) இன்று சில செயலிகள் கிடைக்கின்றன. இவற்றினால் உங்களது மன ஆரோக்கியத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாது என்பது உண்மை தான்.  ஆனால் இச்செயலிகளில் கேட்கப்படும் கேள்விகள், மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கு, திறவுக்கோலாக அமையக்கூடும். விருப்பமிருந்தால் ‘சேபியன் லேப்ஸ்’இன் இந்தச் செயலி மூலம், மனநலச் சுயபரிசோதனையை  முயன்று பாருங்கள்.

https://sapienlabs.org/mhq/ 

-ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad