\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

‘மெய்’யழகன்

வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. மற்றவர்களுக்கு மிகவும் நீளமான, நத்தை வேக வசனங்கள், காட்சிகள்!!

 

என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
என்னத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்….

 

நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, இளையராஜாவின் பாடலை ஸ்ருதி சேராமல் பாடுவதென்பது பெரும்பாலான ‘குடி’காரர்களுக்கு அறிமுகமான தேனான அனுபவம். 

 

வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ

………..

…………

…………

கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே

 

பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் இருவர், வெண்ணாற்றின் மேலுள்ள பாலத்தில், நீரில் கால் நனைத்துக் கொண்டு உட்கார்ந்து பானையில் பீர் அருந்திவிட்டு, போதையில் பழைய காலத்தை நினைத்து, ஸ்ருதி பற்றிக் கவலைப்படாமல் பாடும் காட்சிகள் நம்மையும் கதாபாத்திரமாக மாற்றுகிறது. நம் இளமைக் காலமும், அந்த நண்பர்களும், சூழலும் நம் மனக்கண் முன் வந்து ஏக்கத்தைத் தருவது தவிர்க்க முடியாததாகிறது.

 

பரம்பரை வீடு வழக்கில் கைவிட்டுப் போக, ஏமாற்றிய சொந்தங்கள் வேண்டாமென கிராமத்தைக் காலி செய்துவிட்டு, குடும்பத்துடன் ‘மெட்ராஸ்’ குடிபெயர்கிறார் ஜெயப்ரகாஷ். அவரின் மகனான அர்விந்த்சாமி ஊரை உடலால் பிரிந்தாலும், உணர்வால் பிரிய இயலாமல் வாழ்கிறார். இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, சிறு வயதில் மிகவும் நெருக்கமான தங்கையின் (சித்தப்பா மகள்) திருமணத்திற்காக மீண்டும் வரவேண்டிய சூழ்நிலை. தங்கையை மட்டும் பார்த்து, வாழ்த்திவிட்டு விரைவில் ஊர்திரும்ப நினைக்கும் அர்விந்த் சாமியை அவர்மீது சிறு வயது முதல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் வெள்ளந்தியான உறவு கார்த்தி சந்திக்கிறார். அவரை அன்று இரவு அவர் வீட்டிலேயே தங்கும்படிச் செய்கிறார். பழைய விபரங்கள் பலகுறித்துப் பேசுகிறார். தனது அப்பாவி குணம், அனைவருக்கும் நல்லது செய்ய நினைக்கும் மனப்பாங்கு, எதையும் பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றால் அர்விந்த் சாமியைக் கட்டிப்போடுகிறார். எப்படி அர்விந்த்சாமி இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பழைய சைக்கிள் அவரது வாழ்க்கையை மாற்றியிருந்தது என இயல்பு குறையாமல் விளக்குகிறார். இந்தப் பேச்சுவார்த்தைகள், அர்விந்த்சாமியின் அடிமனதில் இருக்கும் ஊர்ப்பாசத்தையும், உறவுகளின் ஆழத்தையும் சிறிது சிறுதாய் வெளிக் கொணர்கிறது. ஆனால் இந்தப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கையில் அர்விந்த்சாமிக்கு கார்த்தி யார் என்பதோ, அவரது பெயர், உறவு என்னவென்பதோ நினைவுக்கு வரவில்லை. அதனை வெளிப்படையாகக் கேட்டு அந்த அப்பாவி மனிதரின் மனத்தைப் புண்படுத்தவும் இயலவில்லை. இருதலைக் கொள்ளி எரும்பாகத் தவித்து, அவரிடம் சொல்லாமலேயே ஊருக்குச் சென்று விடுகிறார். கடைசியில், அவரை யாரென்று தெரிந்து கொள்வது, இளமைப் பருவத்தை அசைபோடுவது எனப் பலப்பல நாஸ்டல்ஜிஸ் …..

 

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இளமைக் காலத்தில் ஏதோவொரு காரணத்திற்காக ஊரைவிட்டு நகரத்திற்குக் குடிபெயர்ந்து, பல காலங்களாக ஊருடன், ஊர் மனிதர்களுடன் தொடர்பின்றி வாழும் அனைவருக்கும் இந்தத் திரைப்படம் அவர்களின் கடந்த காலத்தை மிகவும் ஆழமான உணர்வுகளுடன் திரும்பக் கொண்டுவரும். படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், நிஜத்தில் பார்த்தவர்களே. “உன்னைய கல்யாணம் கட்டியிருந்தா வாழ்க்கை இப்டி சீரழிஞ்சிருக்காது” – சில விநாடிகளே வரும் சிறிய டயலாக். எந்தக் காயமோ, காமமோ காட்டாத சாதாரண ஒரு வாக்கியம். எந்தவித ரியாக்‌ஷனும் இல்லாமல் “சீ சீ, அப்டி இல்ல” எனும் நாயகன். இது நிஜ வாழ்க்கை, நிஜ உணர்வுகள், நிஜ வெளிப்பாடுகள் – அடுத்த விநாடி இயல்பு வாழ்க்கை தொடரும் ஆபத்தில்லாத உணர்வுகள்.

 

அந்த சைக்கிள் .. அது வீட்டிற்குக் கொண்டுவரப்படும் தினம் இருந்த மகிழ்ச்சி, ஓட்டத் தெரியாத காலத்தில் வீதிகளில் உருட்டிச் செல்வதில் இருந்த பெருமை, குரங்குப் பெடல் செய்து மெதுமெதுவாய்க் கற்றுக் கொண்டது, முகம் தெரியாத ஒருவர் பிடிப்பதாய் நம்பிக் கொண்டு தானே ஓட்டிச் சென்று, பிடிக்கவில்லையெனத் தெரிந்தது கீழே விழுந்து அடிபட்டு கன்கஷன் களையக் குடித்த நீர்மோர் – நிச்சயமாக இந்த அனுபவமில்லாத ஏழை, மத்திய தர கிராமத்து வளர்ப்பு இருக்கவே இயலாது. அதே சைக்கிளில், இந்த வயதில் கார்த்தியைப் பின்னே அமர வைத்து ஓட்டிக் கொண்டு செல்லும் அர்விந்த் சாமி ….. கண்ணில் நீர் கசிவதைப் பக்கத்து சீட்டில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியின் பார்வையிலிருந்து மறைப்பது மிகக் கடினம். இதுவே படத்தின் வெற்றி.

 

அர்விந்த் சாமியின் நடிப்பில்தான் எவ்வளவு முதிர்ச்சி, பரிணாம வளர்ச்சி, நேர்த்தி. மனிதர் அசத்தியிருக்கிறார். செண்டிமெண்ட்டைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாத சிட்டி பாயாக வந்து ஃப்ளாஷ் பேக் ஒவ்வொன்றையும் கேட்கும்பொழுது மனதில் உதிக்கும் செண்டிமெண்ட்டை அளவாகக் காட்டும் நேர்த்தி. “கூட்டியாந்தான்” மனைவியிடம் தொலைபேசியில் பேசுகையில் தன்னையுமறியாமல் பலவருடங்களுக்குப் பிறகு வந்து விழுந்த ஊர் பாஷை; மனைவி அதனைக் கண்டறிந்து கேட்கையில், “கூட்டிட்டு வந்தான்” இயல்பாய் மாற்றி, ஒன்றுமே நடந்திராதது போன்ற பாவனை காட்டுவது; 1991ல் வெறும் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமாகி, தனது தோற்றத்தால் பெண்களின் கனவுகளைத் தொல்லைப் படுத்திய அர்விந்த்சாமி இந்தத் திரைப்படத்தில் மிகத் திறமையான நடிகராகப் பரிமளித்திருக்கிறார். தெளிவான தோற்றம், கண்களில் காட்டும் வசீகர உணர்வுகள், அளவான டயலாக்ஸ், மிகையில்லா நடிப்பு – அவரது நடிப்புத் தொழிலில் அவருக்கு இந்தத் திரைப்படம் மகுடம் சூட்டிய படமெனலாம்.

 

கார்த்தி படம் முழுவதும் பேசித் தீர்க்கிறார் மனிதர். இதுபோல துள்ளலான காரெக்டருக்கு ஏற்ற பர்சனாலிட்டி. மனிதர் பக்கம் பக்கமாக அசராமல் வசனம் பேசுகிறார். அப்பாவின் நினைவாற்றல் கொஞ்சம் வந்திருக்கிறதெனத் தோன்றுகிறது. அனைத்து விஷயங்களிலும் அக்கறையுள்ள, மற்றவர்கள்மீது பரிவு காட்டி உதவி செய்யும், பாஸிட்டிவ் கேரக்டர். “ஒண்ணுக்கா, ரெண்டுக்கா?” பாத் ரூமிற்கு வழி கேட்கும் அர்விந்த் சாமியிடம் அப்பாவியாய்க் கேள்வி கேட்பது, “சூத்தாம்பட்டையைத் தூக்குங்க” எடுத்த பர்ஸைப் பத்திரமாகத் திரும்ப வைப்பதற்காக அவரை எழுந்திருக்கச் சொல்வது, “அப்ப நீங்க மட்டும் பெரியவரா, ஒண்ணுக்குலயே ஏ.பி.ஸியெல்லாம் எழுதுவீங்க” அப்பாவியாய்ச் சொல்லுவது, ஜல்லிக்கட்டுக் காட்சிகள், மனைவியிடமும் பிறக்க இருக்கும் குழந்தையிடமும் அன்பு செலுத்துவது, குடும்பத்துப் பெரியவர்களிடம் குரும்பு கலந்த மரியாதை – இது போன்ற ஒரு இளைஞன் இல்லாத கிராமமே இல்லையெனலாம். கார்த்தி அருமையாகச் செய்துள்ளார். மற்றபடி, ஷ்ரிதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்புறச் செய்துள்ளனர். 

 

கோவிந்த் வசந்தாவின் இசை. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்து வளர்ந்து வரும் கலைஞர். 96 படத்தின் இசைக்காக தேசிய விருது வாங்கியவர். மிகச்சிறப்பு எனும்படியோ, கொடுமை எனும்படியோ இல்லை. இசைஞானம் அதிகமில்லா நம் செவிகளுக்கு இது சாதாரண ரகம்.

 

“யாரோ இவன் யாரோ” பாடல் முணுமுணுக்க வைக்கிறது. கமலஹாசனின் குரலில் பாடலின் அழுத்தமும், சோகமும் அதிகமாகிறது. இந்தப் பாடலை எழுதியவர் கபாலி திரைப்படம் மூலம் பிரபலமான உமாதேவி. இந்தப் பாடல் தவிர அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கார்த்திக் நேத்தா. ந. முத்துக்குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், 96 படத்தின் பாடல்களுக்காக ஆனந்தவிகடன் விருதைப் பெற்றவர். சில வரிகள் அதி அற்புதம் எனலாம். தமிழ்த் திரைப்படங்களில், தமிழ்க் கவிதைகள் / பாடல்கள் முழுவதும் அழிந்துவிடாது என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் பாடலாசிரியர்கள் இவர்கள். இசையைத் தாண்டி, ரசிக்க முடிந்த சில கவிதை வரிகள் இதோ:

 

“பொய்யாகித் தோற்றுப் போகின்றேன்
மெய்யான உன் முன்னே!
ஈடின்றி வாழும் பேரன்பே ….
என்று காண்பேன்!!”

 

“போறேன் நான் போறேன்,
வெறும் கூடாப் போறேன்!
போறாத கொடுங்காலம்…
வழி நான் போறேன்!

ஓடி ஆடி விளையாண்ட
ஊரைப் பிரிஞ்சேன்
பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த
வீட்டைப் பிரிஞ்சேன்!”

 

“விதி சிரித்திட விடி விடிந்திட
மிடி மறந்திடா இனம் புரிந்திட
கோடி பறந்திட படை இணைந்திட
சதி முறிந்திட மொழி வளர்ந்திட
நிலம் வியந்திட பலம் புரிந்திட
குரல் விளங்கிட நலம் விளைந்திட
புகை அடங்கிட பகை விலகிட
தகை நிலைத்திட நரை ஓடுங்கிட

 

தை பிறந்திட சேய் செழித்திட
தாய் மகிழ்ந்திட செய் தொடர்ந்திட
ஊர் இணைத்திட பேர் அதிர்ந்திட
பார் மலைத்திட யார் தடுத்திட
வா வனைந்திட நாள் சமைத்திட
கோள் வணங்கிட ஊழ் இணங்கிட
நான் விரட்டிட நீ விரட்டிட
தாய் தமிழ் இனம் தீ பிடித்திட”

படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ – இவரும் 96 படத்திலிருந்து குழுவாகத் தொடர்ந்து பணியாற்றுகிறார். தென் தமிழகத்தின் இயற்கையை அழகாகப் படம் பிடித்துள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தின் செழிப்பையும், பல வருடங்களாகக் கேட்பாரற்றுக் கிடக்கும் கோவில், கோட்டை போன்றவைகளையும் அவரது காமிரா நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளது. முன்னிரவு வெளிச்சத்தில், பெருமளவு விளக்கில்லாச் சூழலில், கிராமங்களின் கொள்ளை அழகைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

பல விதங்களிலும் ரசிக்க வைக்கும் படம். நாற்பதுகளுக்கு மேலிருப்பருக்கு, அவர்களது பழங்காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்து நெகிழ வைக்கும் படம். அவர்களையுமறியாமல் கண்ணின் ஓரத்தில் சற்று நீர் வருவதைத் தவிர்க்க இயலாது.

ஒருசில குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில், படத்தின் நீளத்தைக் குறிப்படலாம். மூன்று மணிநேரமென்பது சற்று அதிகம். எல்லாவற்றையும் வசனங்களின் மூலம் விளக்கிட வேண்டுமென்பது சற்று அயர்வூட்டும் செய்கை. சிலவற்றை டைரக்டோரியல் டச்சிலும், திரைக்கதையிலும் காட்டியிருக்க முடியும். சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம் – தவறு என்பதற்காக அல்ல, கருப் பொருளின்மீதுள்ள கவனம் சிதைந்திடலாகாது என்பதற்காக.

கிராமத்துத் திரைப்படமென்றால் கழுத்துக்குப் பின் ஒளித்து வைத்திருக்கும் நீளமான அரிவாள், ஊரை அடித்து உலையில் போடும் மிராசுதார், அவரை அடிவருடும் ஒரு கூட்டம், தட்டிக் கேட்கும் ஏழை நாயகன், அவனைக் காதலிக்கும் மிராசுதாரரின் மகள், சாதிக் கலவரம், கோயில் திருவிழா, கண்மாய்க் கரைகளில் ஓடித் திரிந்து பாடிக் காதலித்து வில்லனால் கொல்லப்பட்டு இறக்கும் இளம் தம்பதிகள் – இத்யாதி, இத்யாதி என்று கிட்டத்தட்ட அறுபது வருடங்களான தமிழ்த் திரையுலக ஃபார்முலா எதுவுமில்லாமல் கிராமத்துப் படமெடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்குப் பாராட்டுக்கள். நீளமான வசனங்கள்; பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், நீளத்தைக் குறைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக அமையும். பல இடங்களில் இவரின் இயக்கத்தின் திறமையும் வெளிப்படுகிறது. பல உயரங்களைத் தொடமுடிந்தவராகத் தெரிகிறார். உழைப்பின் மூலம் அவற்றைத் தொட நம் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், மெய்யழகன் மெய்யாகவே மெய் அழகாக அமைந்த நேர்த்தியான திரைப்படம்.

    வெ. மதுசூதனன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad