பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3
முன் பகுதி சுருக்கம்
அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள்.
… இனி
இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு.
பாட்டி வீடா இது ?
“பாட்டி , தாத்தா ” என்று பெரிய குரல் கொடுத்தாள் ஐஷு. ஆனால் திரும்ப பதில் வரவில்லை.
ரொம்பவே பயம் வந்தது ஐஷுவிற்கு. தன்னை யாராவது கடத்திக்கொண்டு வந்து விட்டார்களா?
ஒரு நிமிடம் யோசித்தாள்.
“இல்லை பரணில் ஏதோ நடந்தது. ஏதோ புத்தகத்தில் உள்ளே இருக்கிறேன். அது எப்படி புத்தகத்தில் உள்ளே போனேன்? Is this magic? Harry potter, Alice in wonderland மாதிரியா?”
ஐஷு வின் இயல்பான துறுதுறுப்பு மீண்டும் அவளிடம் தைரியத்தைக் கொண்டு வந்தது.
அந்த இடத்தைச் சுற்றி வரத் தொடங்கினாள். அது ஒரு பழைய வீடு போல தான் தோன்றியது. ஆனால் பாட்டி வீடு இல்லை. சுற்றி யாரும் இல்லை. நிறைய தூண்களும் அலமாரிகளும் இருந்த மண்டபம் போல இருந்தது. பெரிய தாழ்வாரம் கொண்ட அந்த வீட்டில் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை.
நிறைய அடுக்குகள் கொண்ட வீட்டினுள்ளே யாராவது இருக்கிறார்களா என்று தேடியவாறு நடந்தாள் ஐஷு. உள்ளே இருந்த அறைகளில் யாரும் இல்லை.
மெதுவாக அந்த வீட்டின் அறைகளைக் கடந்து முன் பகுதிக்கு வந்தாள் ஐஷு.
” Hello யாராவது இருக்கீங்களா?. பாட்டி . தாத்தா”.
இப்பொழுது கொஞ்சம் அழுகை வர தொடங்கியது ஐஷுக்கு .
“யாரு நீ? “. ஒரு முதியவளின் குரல் கேட்டது.
திக்கென்று பயம் மனதைக் கவ்வியது ஐஷுவிற்கு. குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள்.
“நீங்க யாரு? என் பாட்டி எங்க இருக்காங்க?”.
“என் பேரு கமலம். யாரு நீ?”
என் பேரு ஐஷு. நான் என் பாட்டி வீட்டிற்கு வந்தேன். திடீர்னு என்னவோ ஆச்சு இங்க வந்துட்டேன். என் பாட்டி எங்க?
“என் பேரு கமலம். யாரு நீ?”
இவள் பேசியது கேட்கலையோ ?
“என் பேரு ஐஷு” என ஐஷு மறுபடியும் அதையே சொன்னாள்
அவள் முன்னாடி இருந்த அந்த முதியவளுக்கு இவள் பேசியது கேட்கவும் இல்லை, புரியவும் இல்லை என்பது போல தோன்றியது ஐஷுக்கு.
ரொம்ப நேரம் ஏதோ பேசினார் அவர். ஆனால் அவர் பேசுவது ஐஷுவிற்குப் புரியவில்லை.
தலை முழுவதும் நரைத்து இருந்தது. இவள் பாட்டியின் வயதைவிட மூத்தவர் போல இருந்தார்.
வீட்டைச் சுற்றி வந்து முடித்தாள் ஐஷு. பாட்டி தவிர யாரும் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வா இருக்கிறாள் இந்தப் பாட்டி. ?
மெதுவாக நடந்து வந்து அவர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் ஐஷு.
“பாட்டி இங்க யாரும் இல்லையா?” ஒரு வேளை காது கேட்கலையோ என்று என சத்தமாகக் கேட்டாள் .
பாட்டி பதில் சொல்லாமல் ஏதோ தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்தாள்.
இப்போ என்ன செய்வது என யோசித்தபடி ஐஷு பாட்டி பேசுவதைக் கவனித்தாள்.
பினாத்திக் கொண்டு இருந்த பாட்டி கொஞ்சம் நடு நடுவே கோவமாக யாரையோ திட்டுவது போல இருந்தது.
எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை.
ஐஷுவிற்குப் பசிக்கத் தொடங்கியது. “பாட்டி சாப்பிட ஏதாவது இருக்கா ?”
கமலம் பாட்டி திடீரென்று பேசுவதை நிறுத்தினாள். விடு விடு என்று வீட்டின் உள்ளே இருந்த ஒரு அறைக்குச் சென்றாள்.
ஐஷு விற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. (தொடரும்)
-லட்சுமி சுப்பு