\n"; } ?>
Top Ad
banner ad

கடவுள் இல்லையே

Filed in கதை, வார வெளியீடு by on July 26, 2025 0 Comments

மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது.

ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , குழந்தை ஆடறா ” . என குதூகலத்துடன் காமித்து மகிழ்ந்தார். 

எண்பது வயது சதாசிவம், கண்களை குறுக்கியபடி “எல்லாரும் ஒரே மாதிரி இருக்காளே!. இதுல எது அனன்யா?” என கேட்க, 

“ஐயோ நடுவுல நின்னு ஆடறாளே ” என காமித்து கண்ணைக் குறுக்கி கூர்ந்து பார்த்தார் மீனாட்சி அம்மாள். 

கூர்ந்து பார்த்த பொழுது தான் அனன்யா கண்கள் அழுது சிவந்து இருந்தது தெரிந்தது. 

“குழந்தை அழுதாளா என்ன ?” 

“தெரியலையே “

பாடல் முடிந்து அனைவரும் கை கூப்பி வெளியில் சென்ற பின்னர், சிறிது நேரம் கழித்து மேடையின் பின் புறம் புகைப்படம் எடுக்க சென்றார்கள். மீனாட்சி அம்மாளின் மகள் ரேவதி அனன்யாவின் காதில் குசுகுசுவென்று ஏதோ சொல்லி சிரிக்க வைத்து கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்து வண்டியில் ஏறினார்கள். 

மீனாட்சி அம்மாள் பொறுமையாக மகளிடம் ,”அனன்யா என் அழுத மாதிரி இருக்கா? ” என கேட்க,

“அவளோட குரு ஏதோ சின்ன தப்பு பண்ணிட்டா ன்னு கோச்சுண்டா அதனால அழுகை” ரேவதி பதில் உரைத்தாள்.

” ஏன் மேடைக்குப் போறதுக்கு முன்னாடி அழ வைக்கணும்?.என்ன தப்பு பண்ணினான்னு திட்டினா?”

“சரியா நமஸ்காரம் பண்ணலைன்னு “.

“அதுக்கு ஏன் திட்டனும்? சொல்லி தரணும் இல்லையா ?”

“நிறைய தடவ சொல்லி தந்தாச்சு . இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப distracted . அதனால பொறுமை போயிருக்கும். குரு பக்தி வேணும். அதுனால திட்டினா கொஞ்சம் வாங்கிக்கட்டும்”.

“குரு பக்தி வேணும் தான். ஆசானுக்கும் பொறுமை வேணும். யாரும் பரிபூரணம் இல்லை.  குருன்னா பக்குவம் வேண்டாமா  ?

இவா எல்லாம் வானத்திலேந்து குதிச்சு வந்துட்டாளா என்ன?

ஆசான் தானே கடவுள் இல்லையே”

“சரி விடு ம்மா மரியாதை குடுக்க தெரிஞ்சுக்கட்டும் ” எனச் சொல்லி முடித்தாள் ரேவதி.

அனன்யா அமைதியாக இருந்தாள். பாட்டியின் கரிசனம் இதமாக இருந்தது. அம்மாவின் கண்டிப்பும் புரிந்தது. 

மீனாட்சி எப்பொழுதும் ஒரு பொறுமை கலந்த அன்பு காட்டுபவர். நிறை குடம் போல. என்ன ஆனாலும் நிதானம் குறையாது.

அனன்யாவிற்கு, பாட்டி வரும் பொழுது எல்லாம் ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கு எதற்கும் கோபம் வராது. எத்தனை முறை கேட்டாலும் திருப்பி திருப்பி சொல்லித் தருவா. நிறைய கதை சொல்வா. தப்பு பண்ணிடுவோமேன்னு பயமே இல்லாம இருக்கலாம். அப்படியே தப்பு பண்ணினாலும், ஒரு சின்னச் சிரிப்பு தான். 

“அடுத்த முறை சரி பண்ணிக்கோ . யாரும் பரிபூரணம் இல்லை பகவான் மட்டும் தான் பரிபூரணம். மனுஷா தானே!  கடவுள் இல்லையே!

“பாட்டி யு ஆர் தி பெஸ்ட் “, அனன்யா பாட்டியைக் கட்டிக்கொண்டாள் .

*********

வீடு வந்ததும் உள்ளே சுந்தர் ஏதோ கோபத்தில் இருந்தது போல தெரிந்தது. 

மீனாட்சி அம்மாள் மாப்பிள்ளை சுந்தர் முகம் பார்த்து விட்டு மனது புரிந்தது போல சமையல் உள்ளே சென்றாள்.

காபி போடத் தொடங்கினாள். 

ரேவதி, “என்ன சுந்தர். எதாவது பிரச்சனையா?”.

“ஆமாம் ஆபீஸ்ல மேனேஜர் தொல்லை தாங்க முடியல. எல்லாம் ஈகோ”. என்று அவன் வருத்ததத்தைப் பகிர்ந்து கொண்டான் 

ஏதோ கொஞ்சம் தின்பண்டம், காபி என ஒரு 15 நிமிடத்தில் மீனாட்சி கொண்டு வர, ரேவதி “நீ ஏன்மா அதுக்குள்ள சிரமப்பட்டு கொண்டு வந்துட்டே. நான் வரேன்”.

“இருக்கட்டும். ஏதோ மனசு சரியில்லை. கொஞ்சம் நேரம் பேசிண்டு இருந்தா சரியா போய்டும். நீங்க பேசினது கேட்டுது மாப்பிள்ளை. ஈகோ புடித்தவர்களோட வேலை செய்வது ரொம்ப கஷ்டம்.  சில பேருக்கு ஏதோ தானே வானத்திலேந்து குதிச்சது போல ஒரு நினைப்பு”.

பாட்டி யின் வார்தைகள், அப்பாவின் மனதிற்கு தேவையாக இருந்தது என்று அனன்யாவுக்கு புரிந்தது. 

“பாட்டி யு ஆர் வெரி empathetic “,.

“எம்பதெடிக் க்கு நா ?” 

” empathetic னா empathetic தான். அதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியலையே?”

“ஏதாவது திட்டறியா ” என குறும்பாகச் சிரித்தாள். 

“இல்லை. பாட்டி நீ ரொம்ப பெஸ்ட். உனக்கு யாரையும் கோச்சுக்கத் தெரியல. எப்பவும் ஒரு நிதானம். நீ சொல்வியே அது மாதிரி பரிபூரணம்.”

“யாரும் பரிபூரணம் இல்லை . எல்லார்டையும் குறை இருக்கு. 

மனுஷா தானே. கடவுள் இல்லையே.  “சொல்லி விட்டு உள்ளே போனாள்.

*********************

பாட்டி தாத்தா வுடன் கோடை விடுமுறை நன்றாகச் சென்று கொண்டு இருந்தது அனன்யாவுக்கு. மயிலாப்பூர் தெரு வீதிகளில் மாலை நேரங்களில் நடப்பது, கச்சேரிகளுக்குச் செல்வது என நிறைய நேரம் இருவருடன் பேசினாள் அனன்யா.

தாத்தாவிற்கு வயசானதால் நிறைய விஷயம் புரியவைக்க கஷ்டமா இருந்தது. பாட்டி ஆனால் ரொம்ப updated . தாத்தாவிடம் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாலும் சலிக்காமல் செய்தாள் பாட்டி.

“பாட்டி உனக்கு கோபமே வராதா?”

“வருமே. அப்புறம் எதுக்கு வந்ததுன்னு மறந்துடும். “

கச்சேரி யில் முன் வரிசையில் தாத்தாவுடன் அமர்ந்தாள் அனன்யா. தாத்தா இளம் வயதில் மிருதங்கம் பயின்றவர். மிருதங்க வித்துவான். அதனால் ரொம்ப பிடிக்கும் என மூவரும் வந்து இருந்தனர்.

“இன்னிக்கு கச்சேரி யாரு?” தாத்தா கேட்க , அனன்யா தாத்தாவின் காதுகளில் அந்த பெரிய வித்துவான் பேரைச் சொன்னாள். 

கச்சேரி தொடங்கியது. மிக அருமையான கச்சேரி. கூட வாசித்தவர்கள் எல்லாம் புதியவர்கள். மிக அருமையாக இருந்தது. 

நிகழ்ச்சி முடிந்ததும், புகைப்படம் எடுக்க இறங்கிய பொழுது வித்துவான் அனைவர் முன்னிலையிலும் கூட வாசித்தவரைக் கடுமையாக ஏசினார்.

எல்லாருக்கும் முகம் சுருங்கிப்போனது. 

பாட்டி தாத்தா இருவரும் வேகமாக வெளியில் நடந்தனர் 

வீட்டிற்கு நடக்கும் பொழுது பாட்டி சொன்ன ஒரு விஷயம் அதே “எதுக்கு இந்த ஈகோ மண்ணாங்கட்டி. தப்பு நடக்கறது சகஜம் தான்.

இவா எல்லாம் வானத்திலேந்து குதிச்சு வந்துட்டாளா என்ன?

மனுஷா தானே. கடவுள் இல்லையே.

அனன்யா, ” பாட்டி எல்லாரும் எப்ப பாரு தப்பு பண்ணிண்டே இருந்தா ஓகே வா ?”.

“இல்லை. நம்ம தப்பால இன்னொரு உயிருக்கு உபத்திரவம் வந்தா அத பொறுத்துக்கக் கூடாது. 

ஆனால் மத்த தப்பெல்லாம் நடக்கிறது சகஜம் தான் ஒரு பொறுமை இருக்கணும். இப்போ எல்லாம் மனுஷாளுக்கு நம்ம தான் இந்த கலையைத் தூக்கி புடிச்சிட்டோம்ன்னு தலைக்கு மேல கனம் ஏறறது. அது தான் இந்தக் கோபம். கனம் குறைஞ்சா சரியா இருக்கும் ” மனுஷா தானே. கடவுள் இல்லையே. மனிஷான்னா தவறுகள் சகஜம் தான்

“அப்போ யாரு தான் கடவுள்?. அன்பே சிவம்னு சினிமா டயலாக் சொல்லாதே”. 

“அது சரி தான். வா நான் ஒரு இடம் கூட்டிண்டு போறேன்.”

அந்த மயிலாப்பூர் தெருக்களின் மாலை நேரத்தில் மூவரும் நடந்து ஒரு இட்லி கடைக்கு வந்தனர். அந்த கடைக்கு முன் நிறைய பிள்ளைகள், மக்கள் இருந்தனர். ஒரு வயதான அம்மையார் இட்லிகளை தட்டுகளில் அடுக்கிக் கொடுத்து இருந்தார். 

“நீ இந்த இடத்துக்கு வந்து இருக்கியா? “

“பார்த்திருக்கேன். நிறைய கூட்டமா இருக்கும் இந்த கடைல”.

“என் கூட்டமா இருக்கும் தெரியுமா?”

“இட்லி சாப்ட் ஆ இருக்கும் போல இருக்கு. அதனால நிறைய பேருக்கு புடிக்கும் போல்..”.

பாட்டி என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் முகம் பார்க்க . 

“கொஞ்சம் நேரம் பாரு” என பாட்டியின் சொல்லுக்கு இணங்கினாள் அனன்யா.

அந்த கடையின் முன் நின்ற நிறைய குழந்தைகளுக்கு இட்லி கடை அம்மையார் இட்லி தட்டுகளை நீட்டினாள் . வாடிய சிறுவரின் முகங்கள் பளிச்சென்ற சிரிப்போடு விடை பெற்றன. களைத்த வேலை பார்த்தவர்கள் சிலர் நிறைய பணம் கொடுத்தது தெரிந்தது.

சிலர் ஒன்றுமே கொடுக்கவில்லை.

சிலர் வெட்கத்துடன் நகர்ந்தனர் . 

சிலர் அன்புடன் விடை பெற்றனர்.

சிலர் மெதுவாக நழுவினர்.

அந்த இட்லி கடை அம்மையார் ஒரே  இன் முகத்துடன்  தொடர்ந்தார். இடையில் வந்த ஒரு தெரு நாய்க்கும் அதே இன்முகத்துடனேயே இட்லி ஒன்று கொடுத்தார். 

கொஞ்சம் கூட்டம் குறைந்த மாதிரி இருந்த பொழுது அனன்யா அந்த அம்மையாரிடம் சென்றாள் .

“என்ன பாப்பா வேணும். இட்லி சாப்படறியா ?”

இவள் பதில் சொல்வதற்கு முன்னாடியே ஒரு தட்டில் ரெண்டு இட்லி குடுத்தாள் அவள்.

“ஏன் பாட்டி நிறைய பேரு காசு குடுக்காம போறாங்களே . உங்கள ஏமாத்தற மாதிரி இல்லையா.”

“குடுத்தா வாங்கிக்கறேன். இந்த ஜீவனம் கொடுத்த கடவுளுக்கு தெரியும் என்ன பார்த்துக்க. என்னால முடிஞ்ச வரை நான் மத்தவங்களைப் பார்த்துக்கறேன் “. 

“அப்போ பணம் குடுக்காதவங்க ஏமாத்தலயா?”

“அவங்க பசியாரினா சரி. இன்னிக்கு இல்லைனா நாளைக்கு குடுப்பாங்க.”

“குடுக்காம ஏமாத்தினா?” 

“பரவாயில்லை. அவங்க பண்ற தப்பு என்ன ஒன்னும் பாதிக்காது. மனுஷங்க தானே. பசிக்கு எங்க போவாங்க. “

புரிந்தா மாதிரி இருந்தது அனன்யாவுக்கு. 

மீனாட்சி பாட்டி திரும்பும் பொழுது சொன்னாள்

” சில பேர் மனுஷா தான், ஆனால் கடவுள்”

  • லட்சுமி சுப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad