\n"; } ?>
Top Ad
banner ad

சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

 

‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், பங்கேற்பு, மற்றும் அதிகாரப் பகிர்வு  போன்ற ஜனநாயக கோட்பாடுகளை உயர்த்துவதற்கு கருத்தரங்கங்கள், கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு. 

அதே போல், ‘ஜனநாயகத்திற்கான உலக மன்றம்’ (World Forum for Democracy) எனும் அமைப்பு ஆண்டுதோறும் நவம்பர் முதல் வாரத்தில், ஃபிரான்ஸில், பேரவை நிகழ்வை நடத்துகிறது. இது அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களுக்கு உலகளவில் ஜனநாயகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி விவாதிக்கவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் ஒரு தனித்துவமான தளமாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருப்பொருளைக் கொண்டு நடைபெறும் இப்பேரவை நிகழ்வு இவ்வாண்டு அறிவித்திருக்கும் தலைப்பு ‘ஆபத்தில் ஜனநாயகம்; அதை எவ்வாறு மீட்டெடுப்பது?’ (Democracy at risk: how can we revive it?). உண்மையில் உலகளவில் இன்று ஜனநாயகம் எப்படி உள்ளது?

மக்களாட்சியின் வரையறையை  ஆபிரஹாம் லிங்கனின், ‘மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி’ (of the people, by the people, for the people) எனும் சொற்றொடரில் அடக்கி விடுகிறோம். பொதுமக்களிடம் அதைக் கடந்த, மக்களாட்சிக்கான புரிதல் உள்ளதா என்பது சந்தேகமே.  சமத்துவத்தை மேம்படுத்தி, தனிநபர் உரிமைகளைப் பாதுகாத்து, வெளிப்படைத்தன்மையோடு அவர்களது பொறுப்புகளையும், பங்கேற்றலையும் உறுதிப்படுத்தும் முக்கியக் கொள்கைகள் ஒருங்கிணைந்த விழுமியங்களை, ஜனநாயகம் எனலாம். 

இன்று 140 கோடி மக்கட்தொகையை கொண்ட இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், 34 கோடி மக்கட்தொகையை கொண்ட அமெரிக்கா இரண்டாவது பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளன. இன்றைய தேதியில் இந்த நாடுகளில் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம். 

உலகளவில் ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் அளவிடும் மூன்று பெரிய அமைப்புகள் இங்கிலாந்திலுள்ள Economist Intelligence Unit (EIU), ஸ்வீடனில் உள்ள Varieties of Democracy (V-Dem), அமெரிக்காவில் உள்ள Freedom House (FH) ஆகியவை. இந்நிறுவனங்கள் பல்வேறு ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில் கருத்துகளைச் சேகரித்து, ஆய்வுகள் நடத்தி வரிசைப்படுத்துகின்றன. 

சமீபத்தில், இந்நிறுவனங்கள், ஜனநாயக் பண்புகளைப் கடைப்பிடித்து பாதுகாக்கும் நாடுகளைப் பட்டியலிட்டுள்ளன. 

  • EIU வின் பட்டியலில் நார்வே 9.8 புள்ளிகள், நியுசிலாந்து 9.6 புள்ளிகள், ஸ்வீடன் 94 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • V-Dem இன் பட்டியலில் டென்மார்க் .88 புள்ளிகள், ஸிவட்சர்லாந்து, எஸ்டோனியா ஆகியவை தலா .85 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. நார்வே, ஸ்வீடன் நாடுகள் தலா .84 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.
  • FH ஆய்வின்படி பின்லாந்து 100 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெறுகிறது. நியுசிலாந்து, நார்வே, ஸ்வீடன் நாடுகள் தலா 99 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கனடா, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகள் 97 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. 

இம்மூன்று நிறுவனங்களும் அளவிட்ட முக்கிய ஜனநாயகப் பண்புகள் குடிமை உரிமைகள், பத்திரிக்கை சுதந்திரம், வலுவான மற்றும் நேர்மையான தேர்தல் செயல் முறை, சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாப்பு, சுதந்திரமான நீதித்துறை, பெண்கள் உரிமைகள், அரசியலமைப்பு மாண்பினைப் பாதுகாப்பது, அரசின் செயல்பாடு, அரசியல் கலாச்சாரம் போன்றவை. 

இப்பட்டியல்களில் முதல் 25 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் முழு ஜனநாயக நாடுகளாகக் கருதப்படுகின்றன. இதில் அமெரிக்கா மற்றும் இந்தியா பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை என்ன?

  • அமெரிக்கா 7.85 சராசரிப் புள்ளிகளுடன் 28 ஆம் இடத்தைப் பெறுகிறது.
  • இந்தியா, 7.29 புள்ளிகளுடன் 41ஆம் இடத்தைப் பெற்றுள்ளது,
  • மூன்றாம் பெரிய ஜனநாயகமான இந்தோனேசியா 6.44 புள்ளிகளுடன் 59 இடத்திலுள்ளது.

மக்கட்தொகை அடிப்படையில் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாக கருதப்படும் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகியவை ‘குறைபாடுள்ள ஜனநாயகமாக’ பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் சவால்கள்

அரசியல் பிளவு 

அமெரிக்காவில் கட்சி அடிப்படையில் மட்டுமல்லாது, ஜனநாயக உரிமைகளை யார் அனுபவிப்பது என்ற அடிப்படையிலும் பிளவு உள்ளது. இப்பிளவைப் பயன்படுத்தி அரசியல் பிரதிநிதிகள் ஆட்சி புரிவதை விட, விரோதத்தை வளர்ப்பதிலும், எதிரிகளை இழிவுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். 

தேர்தல் முறை & வாக்குரிமை

தேர்தல் நடைமுறை, நிர்வாக அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகள், குடிமை உரிமைகளில் ஏற்பட்ட சரிவுகளைக் குறிக்கிறது. மேலும் தேர்தல் வெற்றிக்காக வாக்குரிமை, தொகுதி மாற்றியமைப்பு (Gerrymandering), தேர்தல் வன்முறைகள் (ஜனவரி 6), வாக்குரிமை கட்டுப்பாடுகள் ஆகிய பிரிவுகளில் குறைந்த மதிப்பெண்ணே கிடைத்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் பொய்த் தகவல்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு, வாக்காளர்களைக் குழப்பி தவறான முடிவுகளுக்குத் தூண்டுவது, போன்றவை ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை.  தவறான செய்திகளும், சதி கோட்பாடுகளும் தனிநபரின் தேர்தல் நம்பிக்கையை பாதித்து முடிவுகளை மாற்றுகிறது. 

பணம் & பெருநிறுவனங்களின் ஆதரவு

அமெரிக்க அரசியலில் பெருநிறுவனங்களின் ஆதரவும், அவர்களது பணபலமும் தேர்தல்களைத் தீர்மானிக்க கூடியவகையில் உள்ளன. இருபெரும் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பெருநிறுவனங்கள் தங்களது வியாபாரத் திட்டங்களுக்கு உதவக்கூடியவர் யார் என்று தீர்மானித்து அவர்களது தேர்தல் செலவுகளுக்கு பணத்தை வாரியிரைக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அப்பெருநிறுவனங்களின் வற்புறுத்தலுக்கு அரசியல் தலைவர்கள் இணங்கிப் போகிறார்கள். 

நீதித் துறை மற்றும் அரசுத் துறைகள் மீதான நம்பிக்கையிழப்பு

நீதித்துறை மற்றும் அரசுத் துறைகள் அரசியல் சார்பாகச் செயல்படுவதாகவும் அல்லது அத்துறைகளின் செயல்பாடுகளை அரசியல் தலைவர்கள் முடக்குகிறார்கள் என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தின் சவால்கள்

ஜனநாயகச் சரிவு

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா குறிப்பிடத்தக்கச் சரிவைச் சந்தித்துள்ளதாக இந்நிறுவனங்களின் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு வரை 7.92 சராசரிப் புள்ளிகளுடன் இருந்த இந்தியா, படிப்படியாகத் தேய்ந்து 2019 இல் 6.9 என்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து FH இந்தியாவை ‘பகுதியளவு சுதந்திர’ நாடாக தரமிறக்கியது. EIU ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ என்றும், V-DEM ஒரு படி மேலே போய் ‘தேர்தல் சர்வாதிகார’ நாடாகவும் வகைப்படுத்தின.  

எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல்

எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்கி, வருமான வரித் துறை மற்றும் புலனாய்வு முகமைகளை ஆயுதமாக்கி அவர்களைக் கைது செய்வது அல்லது மிரட்டி தன் பக்கம் இழுப்பது என பல ஜனநாயக மீறல்களை அடுக்குகின்றன மூன்று நிறுவனங்களும். முறையற்ற வழக்கின் அடிப்படையில் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைப்பது, அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவது என அவர்களை செயல்படவிடாமல் தடுத்துவருகிறது ஆளும் கட்சி என்பது சுட்டிக் காட்டப்படுகிறது . 

தேர்தல் நடவடிக்கைகளில் ஒழுங்கிண்மை

இந்தியாவில் EVM எனும் மின்னணு வாக்குமுறை பயன்பாட்டில் உள்ளது. இதில் பல குளறுபடிகள், தில்லுமுல்லுகள் நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியபோதும் தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல் கட்சியின் ‘தேர்தல் அணி’யாகவே செயல்பட்டது. முஸ்லிம் மதத்தவர், குறிப்பிட்ட இனத்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாதது, வாக்களிக்கும் தகுதியற்ற சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாக்களித்தது, தேர்தல் அதிகாரிகள் முடிவுகளைத் திருத்தி, வெற்றியாளர்களை மாற்றியது போன்ற முறைகேடுகளை ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளன இந்நிறுவனங்கள்.   V-DEM அமைப்பு இந்திய ஜனநாயகத்தை ‘தேர்தல் சர்வாதிகாரம்’ என்ற நிலைக்குத் தள்ளியதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஊடகச் சுதந்திரம் மற்றும் குடிமை உரிமைகள்

ஊடகங்கள் மீதான அழுத்தம், இணைய முடக்கங்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறைகள், வழக்குகள் அதிகரித்துள்ளன. ஊடகங்களைக் கைப்பற்றுவது, அரசு இயந்திரங்களை ஏவி சோதனைக்கு உட்படுத்துவது போன்றவையும் நடைபெறுகிறது. 

மதவாதம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள்

இந்து தேசியவாதம் என்ற பெயரில் மற்ற மதத்தினரை ஒடுக்குவதும், அச்சுறுத்துவதும் ஆய்வுகளில் குறிப்பிடபட்டுள்ளன. புல்டோசர் நீதி, வஃக்பு வாரியத் திருத்தங்கள போன்றவை, சிறுபான்மையினரை குறிவைப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி நிறுவனங்களைக் கைப்பற்றுவது

நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமான வரி, அமலாக்க இயக்குநரகம் போன்ற சுயாட்சி கொண்ட நிர்வாகத் துறைகளை அரசு கட்டுப்படுத்துவது குறித்து கவலைகள் உள்ளன. உதாரணமாக, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும் சில மாநில ஆளுநர்கள் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

மேற்சொன்ன விவரங்கள் 2024 ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில் வெளிப்பட்டவை. இன்றைய தேதியில் இவ்விரு நாடுகளின் நிலை மேலும் சரிவடந்துள்ளதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. 

இன்றைய நிலை

அமெரிக்கா 

அமெரிக்காவைப் பொறுத்த மட்டில், டெக்ஸாஸ் மாநிலத்தில் நடைபெறும் தொகுதி மாற்றியமைப்புக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு காணப்படுகிறது. வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வகையான சீரமைப்புகள் செய்யப்படும். டெக்ஸாஸில் கடைசியாக 2021ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு நடைபெற்றது. 2026ஆம் ஆண்டு வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அதிபர் டிரம்ப் இந்த சீரமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. குடியரசுக் கட்சியினருக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள மாநிலத்தில் கூடுதலாக ஐந்து தொகுதிகளை சேர்ப்பதன் மூலம் கீழவையில் அவர்களுக்கு அதிக உறுப்பினர்கள் கிடைக்கக்கூடும். இதன் எதிரொலியாக, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை அதிகம் கொண்டுள்ள கலிஃபோர்னியா மாநிலம், தொகுதி சீரமைப்பை வற்புறுத்துகிறது.

அதிபர் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அதிரடியாக பல சட்டங்களை தனது செயலாக்க ஆணைகள் (Executive Orders) மூலம் அமல்படுத்துவதும் கவலையளிக்கிறது. பொதுவாக அதிபர்கள் செயாக்க ஆணைகளை நிறைவேற்றுதுண்டு. ஆனால் தற்போதைய அதிபர் வழக்கமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதித்து நிறைவேற்றும் மசோதாக்களைக் கூட, தனது செயலாக்க ஆணை வழியே சட்டமாக்குவது ஜனநாயகத்தின் பாதைகளை அடைக்கிறது. 

கல்வித்துறை, ஊடகத் துறை போன்றவையும் அதிகமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதற்கு கொலம்பியா பல்கலை, CBS / CNN / ABC / PBS / Wall Street Journal / Associate Press உள்ளிட்ட பல நிறுவனங்களைக் குறிப்பிட்டு சொல்லமுடியும். ஜனவரி 6 2021 கலவரத்தில் ஈடுபட்டவர்களை மன்னித்து விடுவிப்பது, தனக்கு சாதகமாக செயல்படாத நீதியரசர்களைக் கடுமையாக விமர்சிப்பது, அழுத்தம் கொடுப்பது என நீதித் துறையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயல்கிறார் அதிபர் டிரம்ப். 

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், தனக்குச் சாதகமாகக் கட்டுப்பாடுகளை விதித்தல் என அவரது சமீபத்திய முடிவுகள், சர்வாதிகாரப் பாணியில் அமைந்துள்ளதை மறுக்க இயலாது.  இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால், அமெரிக்கா பெரும்பாலும் ‘கலப்பின அமைப்பு’ (Hybrid Regime)  என்ற நிலைக்குச் செல்லக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியா 

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் பல சம்பவங்கள், ஜனநாயகக் கோட்பாட்டிலிருந்து வெகுவாக விலகி வருவதைக் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் பெருமையான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் குறிக்கோள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் ‘இந்தியா இந்துக்களுக்கே’ எனும் கருத்து அடிமட்டம் வரை வலுப்பெறுவதைக் காண முடிகிறது. மாற்று மதத்தினவர் நசுக்கப்படுவதை அரசு கண்டுகொள்வதேயில்லை என்பதும், அரசே அவற்றை ஊக்குவிப்பதும் குடிமை உரிமைகளைப் பறிப்பதும் அதிகரித்துள்ளது. 

நீதித்துறை, அமலாக்கத்துறை, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போன்ற சுயாதீன அமைப்புகளில் அரசின் அதிகாரம் தலையிட்டு, படர்ந்துள்ளது. அரசின் அழுத்தங்களுக்கு அடிபணியாத அதிகாரிகள் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள் அல்லது சிறையிலடைக்கப்படுகிறார்கள். 

தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதிலேயே ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு உரிமையோடு  பாரபட்சம் காட்டியது. இதற்காக அவசர அவசரமாகச் சட்டமியற்றப்பட்டு தனக்கு சாதகமானவரையே தேர்தல் ஆணையராகத் தேர்ந்தெடுத்தார்கள் ஆளும் கட்சியினர். சென்ற மாதம் தேர்தல் ஆணையத்தின் பல தில்லுமுல்லுகள் வெளிவரத் துவங்கியுள்ளது. இதைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது. வரவிருக்கும் ஒரு மாநில தேர்தலில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்களில் பலர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் சொல்லியதற்கு, அவ்வாக்காளர்களை நேரில் அழைத்து உயிரோடு இருப்பதாக நிருபித்தபின்னரும் தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் கொடுக்க மறுக்கிறது. 

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2024 ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் வாக்கு பதிவு முடியும் நேரத்தைக் கடந்து  கூடுதலாக 6.8% வரை வாக்குகள் பதிவானதாகச் சொல்லியது தேர்தல் ஆணையம். தேர்தல் நேரம் முடிந்தபின்னர் இத்தனை வாக்காளர்கள் காத்திருப்பதற்கு சாத்தியமேயில்லை என்கிறது கடந்தகால இந்திய தேர்தல் புள்ளி விவரங்கள். இதில், கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1 நடைபெற்று, ஜூன் 4 இல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, ஜூன் 7ஆம் தேதி தான், எத்தனை வாக்குகள் பதிவாயின என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். ‘டிஜிட்டல் இந்தியா’வில், அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டது என்று சொல்லும் தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு முடிந்து ஆறு நாட்கள் கழித்து, அதுவும் முடிவுகள் வெளியான பின்னர், வாக்குப் பதிவு புள்ளி விவரங்களை வெளியிட்ட அவலங்களும் நடைபெற்றன. தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் அதனை மின் வடிவில் தராமல் (ஆய்வுகள் எளிதில் நடத்த முடியாத வகையில்) அச்சடித்த காகிதங்களாகக் கொடுத்துள்ளனர். 

சமீபத்தில் எதிர்க்கட்சியினர் சிரமேற்கொண்டு, ஒரு சிறிய தொகுதிக்கான காகித ஆவணங்களை அலசி ஆராய்ந்து, போலியாக ஆயிரக்கணக்கான வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதையும், பதிவாகியுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். சில வாக்காளர்கள் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளதையும், ஒரே அறை கொண்ட முகவரியில் 60க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இன்று இந்தப் பிரச்சனை பூதாகாரமாக வளர்ந்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலே நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்ற கருத்து வலுத்து வருகிறது. இதனை நிருபிக்கும் வகையில் 2022ஆம் EVM மூலம், ஹரியானாவில் நடைபெற்ற பஞ்ச்வாயத்து தேர்தலில் திருட்டுத்தனம் நடந்துள்ளது அண்மையில் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டது.  இவை எவற்றுக்கும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. மாறாக அவர்கள் மீதே வழக்கு பாயும் என்று அச்சுறுத்துகிறார்கள் தேர்தல் ஆணையர்களும், ஆளும் கட்சியினரும்.

இதே போல் சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது என்ற கவலை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரை, இந்தியர் இல்லை என்று பட்டம் சூட்டுகிறது ஆளும் கட்சி. கேள்வி கேட்டால் கூட ‘நீ தேச பக்தி இல்லாதவன்’, ‘அந்நிய நாட்டு கைக்கூலி’ என்ற பரிகசிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளனர் அக்கட்சியினர். இக்கட்சியின் பாமர பற்றாளர்களும், ஜனநாயக பண்புகள் காற்றில் பறப்பதை மறந்து ஆளும் கட்சி சார்பாக சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினரைப் பந்தாடி வருகிறார்கள். ஆளும் கட்சி பதில் சொல்ல முடியாத, இக்கட்டான, கையறு நிலைகளில் சிக்கிக்கொள்ளும் பொழுதெல்லாம் புதியதொரு பிரச்சனையைக் கிளப்பி பொதுமக்களைத் திசைத் திருப்பிவிடுவதில் கைதேர்ந்ததாக உள்ளது. இன்று, தேர்தல் களவாடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி குரலெழுப்பிவரும் நேரத்தில், பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய மாநில அமைச்சர்கள் எதோவொரு வழக்குத் தொடர்பாக 30 நாட்கள் சிறையில் இருக்க நேர்ந்தால் அவர்கள் பதவி பறிக்கப்படும் என்கிற புதிய மசோதாவை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சி. ஏற்கனவே சொல்லியபடி அமலாக்கத்துறை, வருமான வரித் துறை மூலம் இது போன்ற பொய்யான வழக்குகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினரைச் சிறையில் அடைத்து அவர்களது பதவியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறது ஆளும் கட்சி.  

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. பெகாசஸ், ரஃபேல், துவாரகா எக்ஸ்பிரஸ்வே, வியாபம், ‘எலக்டோரல் பாண்ட்ஸ்’ எனப்படும் தேர்தல் பத்திரங்கள், ‘பி.எம். கேர்ஸ்’ என பல விஷயங்களில் எதிர்க்கட்சியினரை முடக்கி, தனக்கு விசுவாசமான ஊடகத் துணையோடு அவர்கள் எழுப்பும் கேள்விகள் மக்களைச் சென்றடையாமல் இருட்டடிப்பு செய்வதில் ஆளும் கட்சி கைதேர்ந்துள்ளது. இந்தப் பிரச்சனைகள் லேசாகத் தலைதூக்கும் போது மத ரீதியாக பிளவுகளை உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தி கவனத்தைத் திசை திருப்புவதில் ஆளும் கட்சி பெறும் வெற்றி, ஜனநாயகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் தோல்வியாக முடிகிறது.

ஆக மொத்தத்தில், அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளில் ஜனநாயகம் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியவில்லை. இருநாடுகளும் பன்முகத்தன்மை, சமூக மாற்றங்கள் மற்றும் முற்போக்குக்  கலாச்சாரங்களை ஏற்க மறுக்கின்றன; தேசப்பற்று என்பதைக் கடந்து மக்களைத் தேசியவாதிகளாக மாற்ற மூளைச்சலவை நடக்கிறது. அரசியல் மட்டுமின்றி இனம், மதம் எனப் பல கூறுகளில் நாடு பிளவுண்டு கிடக்கிறது. அரசியலமைப்பு மற்றும் நிர்வாக மீறல்கள், பத்திரிக்கை / ஊடகக் கட்டுப்பாடுகள், தன்னாட்சித் துறைகளைக் கட்டுப்படுத்துதல்,  வெளிப்படைத்தன்மை இல்லாமை, ஊடகக் கட்டுப்பாடுகள், கைதுகள், வழக்குகள் மூலம் ஜனநாயக விழுமியங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. 

அது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினரை விரோதிகள் போல் நடத்துவதில் இரு நாடுகளும் போட்டி போடுகின்றன. நாடு இன்று சந்திக்கும் சவால்களுக்கு முந்தைய அரசுகளே, அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சி அரசுகளே என்று பழி சுமத்தி தங்களது கையாலாகாத்தனத்தை இரு தலைவர்களும் மூடி மறைக்கின்றனர். எதிர்க்கட்சியினரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து (அல்லது உணர மறுத்து) அவர்களைப் பகடி செய்து சிறுமைப் படுத்துவதன் மூலம் தாங்கள் பலசாலிகள் என்று காட்டிக் கொள்ள முயல்கின்றனர். முழுமையாக ஜனநாயகத்தை உணர்ந்தவர்கள், எதிர்க்கட்சியை ‘நிழல் அரசாங்கம்’ என்பதை ஒத்துக் கொள்வார்கள். இன்றைய ஆளும் கட்சி நிரந்தரமாக ஆட்சிக் கட்டில் அமரப்போவதில்லை. இன்று இவர்கள் தாந்தோன்றித் தனமாகச் செயலாற்றுவது, நாளை இவர்களுக்கே எதிராக நிற்கக்கூடும்.  ஆனால் இவர்கள் ஏற்படுத்தும் ஜனநாயகச் சேதங்களைச் சீர்படுத்த பல தசாப்தங்கள் தேவைப்படலாம். மக்களாட்சியின் முக்கியத்துவம் ஒவ்வொருவரையும் சென்றடையவேண்டும் என்பதே ‘மக்களாட்சி தினத்தின்’ நோக்கம். அந்த நாளுக்காகக் காத்திராமல், ஜனநாயகப் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிப்போம். 

-ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad