\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எக்குவாஃபேக்ஸ்

Filed in கட்டுரை by on September 24, 2017 0 Comments

ஒருபுறம் ஹார்வி, எர்மா, மரியா என சூறாவளிக் காற்று, பேய்மழை,  வெள்ளம் என இயற்கை அன்னை, பல மில்லியன் அமெரிக்கக் குடிகளைப் பாதித்தாள்.

அதே சமயத்தில் நடந்த எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணினி ஊடுருவலில், பல கோடி மக்களின் தனிப்பட்ட, வர்த்தகத் தகவல் சூறையாடப்பட்டுள்ளது. தனிநபர்களின் கடன் வாங்கும் ஆற்றலைக் கணிக்கும் நிறுவனத்தின் தகவல் சூறையாடல் வருமாண்டுகளில் பல வகையிலும் சீரழிவுகளைக் கொண்டு வரலாம்

இந்தச் தகவல் கொள்ளை,  இதுவரை அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட சூறாவளிகள், நில நடுக்கங்களை விட மிக அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.  ஏறத்தாழ 143 மில்லியன் மக்களின் தகவல்களை அபகரித்துள்ளனர் தகவல் கொள்ளையர். இவர்களின் ஓட்டுநர் உரிமத் தகவல், கடனட்டை விவரங்கள், வீட்டுக் கடன் பற்றிய தகவல்கள், பத்திரங்கள், சமூகப் பாதுகாப்பு எண் (SSN) போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி போல உயிர்ச் சேதத்தைத் தராவிடினும், அன்றாட வர்த்தக, காப்புறுதி, கொடுக்கல் வாங்கல் வாழ்க்கையில் மக்களுக்கு கொடுமையான தலையிடியை உண்டாக்கியுள்ளது

இதற்கு முன்னர் யாகு (yahoo)  மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் தகவல்  சூறையாடலே மிகப் பெரிய தாக்கம் எனக் கருதப்பட்டது. இதற்கு முன் நடந்த கணினித தகவல் திருடலில் கொள்ளையர்கள் பெரும் பொருள் ஈட்ட வில்லை எனலாம்.

ஆயினும் இன்று எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தின் தகவல் கொள்ளை, நாம் நம்மிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், சொத்துகளையும் வாரிப் பறிகொடுத்ததற்குச் சமமானது .

இன்றைய மின்தரவு தகவல் நுற்றாண்டில், வர்த்தகச் சந்தையில் பொது மக்கள்  வர்த்தகம் சார்ந்த அந்தரங்கத் தகவலே அதி பெறுமானம் உள்ளது.

இந்த எக்குவாஃபேக்ஸ் எனும் தனியார் தாபனம் மக்கள் விரும்பினார்களோ இல்லையோ அவர்களது வர்த்தக அந்தரங்கத் தகவல்களைச் சேகரித்து வருமானம் ஈட்டி வந்தது. இந்தத் தாபனத்தின் உயிர் நாடி வாடிக்கையாளர், பொதுமக்கள் பற்றிய தரவுத் தகவல்கள் தான்.

இப்படிப்பட்ட அதி முக்கியத் தகவல்களைத் தான் எக்குவாஃபேக்ஸ் நிறுவனம் தொலைத்துள்ளது.

  1. தனிப்பட்ட மக்களின் தகவல்களை வியாபாரமாகக் கொண்டு இருப்பினும் . அதனைத் திறம்பட பாதுகாக்கத் தவறிவிட்டது
  2. மேலும் இந்தத் தகவல் சூறையாடல் நடந்து இரண்டு மாதங்கள் சென்றும் அதை  எக்குவாஃபேக்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இது, பொதுமக்கள் இந்நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, நாணயத்தை சுக்கு நூறாக உடைத்துவிட்டது.

தற்பொழுது எக்குவாஃபேக்ஸ் நிறுவனம், தனது மின் வலய தளத்தில் உங்கள் கடைசிப் பெயரையும், சமூக காப்புறுதி இலக்கத்தையும் social security number தந்தாள் நீங்கள் மேலே சொன்ன தகவல் கொள்ளையில் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று சொல்வார்களம். ஆனால் மின் வலயம் மூலமே தகவல் சூறையாடப்பட்ட நிறுவத்தை எத்தனை பேர் தான் நம்பி தமது தகவலைக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குரியது. மேலும் எக்குவா ஃபேக்ஸ் 1 800 – தொலைபேசி இலக்கம் உச்சக்கட்டமான அழைப்புக்களை ஏற்க வேண்டியுள்ளதாம்.  இந்தக் கேள்வி பதில் கணைகளைத் தாங்க முடியாது திண்டாடுகிறார்களாம் இந்த வர்த்தக தாபனம்.

இதுவரை சாதாரண மக்கள் தகவலை அத்துமீறி சேகரித்து, அதை வாடகைக்கும், மொத்த , சில்லறை விலைக்கும் விற்றதே யதார்த்தமான நீதி நெறிமுறைகளுக்கு சற்று அப்பாற்பட்ட விடயம். அதுவும் பலமுறை பல பிழைகள் உள்ள பொதுமக்கள் தகவல்களைப் பரிமாறி மக்களுக்கு தேவையில்லாத தலையிடிகளை அவரவர் வீடு, வாகனம், தொழில் வாய்ப்புப் பெறும் தறுவாயில் அள்ளி வைத்ததில் இந்நிறுவனத்துக்கும் பங்குள்ளது. மக்கள் தமது கடன் பற்றிய அறிக்கைகளில் உள்ள பிழையான தரவு தகவல்களைத், தமக்கு நேரடித் தொடர்பில்லாத தனியார் வர்த்தகதாபனமாகிய எக்குவாஃபேக்ஸை அணுகித் திருத்திக் கொள்வதே மிகவும் தர்மசங்கடமான விடயம். இப்பேர்பட்ட நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தக சட்டங்களிற்குப் பின்னால் பல வருடங்கள் ஒளிந்து இருந்து தமது வருவாயைப் பெருக்கியவாறுள்ளன.

இன்று எக்குவாஃபேக்ஸ், தமது பிழையால் தவற விட்ட தரவுத் தகவல்களுக்கு ஈடாக, ஒரு வருடம் உங்கள் கடன் வாங்குதல் பற்றிய கண்காணிப்பு அறிக்கையை இலவசமாகத் தருகிறோம் என்கிறது. இது விரக்தியும், ஆத்திரமும் உள்ள பொதுமக்கள் கண்ணில் மண்ணைத் தூவுவது போன்ற விடயமேயாகும்.

இதை விட இழிவு வேலை என்னவென்றால் கடந்த சில வார விசாரணைகள்  இரண்டு மாதங்களில் பொதுமக்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளிச் சொல்லாமல் , அதே சமயம்  இந்தக் நிறுவனத்தின்  உயர் அதிகாரிகள் பங்குச் சந்தையில் எக்குவாஃபேக்ஸ் பற்றிய செய்தி வெளிவருமுன்னர் அவசர அவசரமாக விற்றுள்ளனர். இது பல வகையிலும் பாரதூரமான செயல்களே,

இது நிச்சயமாக அமெரிக்க மண்ணில் பண ஆசை கொண்டு தொழிற்படும்  சமூக விரோதிகளிற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டாகும். BP நிறுவனம், நில எண்ணெயைக் கொட்டி, ஆழ்கடலில் மாசுபடுத்தி, பல தென்கிழக்குக் கரையேரா மக்கள் வாழ்வை அலைகழித்துவிட்டு,  இன்று தப்பி விட்டது,

யாகு (Yahoo), டார்கெட் (Target), வெல்ஸ் ஃபார்கோ(Wells Fargo) என நிறுவனங்களில் நடைபெற்ற தரவுத் தகவல் இழப்பால் பொதுமக்கள் வாழ்வுக்கு பாரதூர சேதங்கள்,

இது போன்ற சமூகத் துரோகங்கள் தொடர்ந்து நடந்திடாது இருக்க, பொதுமக்கள்  விழிப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் தரவுத் தகவலை அடிப்படையாக  வைத்து காசு பணம் சம்பாதிக்கும்  தாபனங்களும் அவற்றின் செயல்களுக்கும் இந்நிறுவனங்களை கடுமையான  அரச சட்ட கட்டுப்பாட்டுகளுக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இன்றைய எக்குவாஃபேக்ஸ் ஏமாற்றல்  போன்ற பாரிய செயற்கைச் சிதைவுகளை  தனியார் தாபனங்கள் தொடர்ந்து இழைத்தவாறே இருக்கும். இது அமெரிக்க மக்களிற்கு சாதகமான செயல் அல்ல, இதை நிவர்த்தி செய்ய அமெரிக்க சட்டசபையாளர்களைப் புதிய வர்த்தக தாபன மக்கள் தகவல் பாதுகாப்புக் கண்காணிப்புச் சட்டங்கள்  உருவாக்குமாறு மக்கள் நிர்பந்திக்க வேண்டும்.

ஊர்க்குருவி

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad