அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்
அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் தொழில்துறையை வலுப்படுத்துதல் என ஏராளமான வாக்குறுதிகளை முதல் நாளிலேயே நிறைவேற்றப் போவதாகவும் வாக்குறுதி தந்திருந்தார்.
தேர்தல் கால வாக்குறுதிகள் ஒரு வகையில் ‘ஜும்லா’க்கள் என்று உலகளவில் அரசியல் தலைவர்களே ஒப்புக் கொண்டாலும், பொது மக்களுக்கு வேட்பாளர்கள் மீது இனம்புரியாத, துளியளவு நம்பிக்கையாவது ஒட்டிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் வேட்பாளராக டானல்ட் டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியதா, நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா, உண்மையிலே அமெரிக்கா மீண்டும் சிறப்புற்று விட்டதா?
குடியேற்ற சீர்திருத்தங்கள்.
அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளே, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது (Save America) எனும் அடிப்படையில், முறையற்ற வழியில் அமெரிக்காவில் ஊடுவிய அந்நிய நாட்டவர் அனைவரும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் (Department of Homeland Security) தங்கள் விவரங்களைப் பதிவு செய்திட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்தார் திரு. டிரம்ப். இது, அமெரிக்காவிலிருக்கும் அந்நிய நாட்டினவரைப் பற்றிய தகவலுக்கானது மட்டுமே. இது எந்த வகையிலும் அவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க வழி வகுத்திடாது.
மேலும் எல்லையோரங்களில் பாதுகாப்பு படையினரை (Border Security Force) நிறுவுவதில் முனைப்பு காட்டப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் பாதுகாப்புப் படையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்மையில் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களின் மூலம், எல்லையோரங்களில் பாதுகாப்புச் சுவர்கள், தடைகளைக் கட்டமைக்க $46 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் முறையற்ற வழியில் குடிபெயர்ந்த அந்நியர்களை அகற்றவும், அவர்களுக்கு ஆதரவாக எழும்பும் போராட்டங்களை ஒடுக்கவும் ‘தேசிய அவசரநிலை’ (National emergency) அமல்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு (Immigration and Customs Enforcement – ICE) அன்றாடம், குறைந்தபட்சம் 10,000 நபர்களை நாடு கடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையிலும் புதிதாக, ஆயிரக்கணக்கானோர் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பிடிபடுவோரில், தீவிரவாதிகள் அல்லது குற்றப் பின்னணி உள்ளவர்களை ‘கொண்டானாமோ பே’ (Guantanamo Bay) அல்லது ஃபிளாரிடா மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘அலிகேடர் அல்கட்ராஸ்’ (Allegator Alcatraz) போன்ற கொடூரமான சிறைகளில் அடைப்பதும் அதிகரித்து வருகிறது.
இப்படி பலவிதங்களில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுப்பதில் அதிபர் முனைப்பு காட்டியதன் பலனாக, எல்லையோரங்களில் அந்நியர் ஊடுருவல் வெகுவாகக் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் (Customs and Border Protection) துறையின் அறிக்கைப்படி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் எல்லையோரங்களில் அமெரிக்காவுக்குள் முறையற்று நுழைய முற்படுவோர் எண்ணிக்கை 94% குறைந்துள்ளது. நாட்டுக்குள் ஏற்கனவே ஊடுருவி பரவியிருந்த ஆவணமற்ற குடியேறிகள் 300,000 அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்தாண்டு ஜனவரி 26 தொடங்கி மே மாதம் 25 ஆம் தேதி வரையில் சுமார் 253,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 65% பேர் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை. சுமார் 7% பேர் மீது வன்முறை குற்ற வழக்கோ, தண்டனையோ நிலுவையில் உள்ளது. எஞ்சியிருப்போர் மீது சிறு தவறுகளுக்கான பொது வழக்குகள் உள்ளன.
இப்பிரிவில், அதிபர் டிரம்ப் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். இந்த நடவடிக்கைகளால், ‘ப்ளூ காலர்’ (Blue collar) எனப்படும் உடல் உழைப்பு நிறைந்த, குறைந்த ஊதிய வேலைகளுக்கு அமெரிக்கர்களிடையே வாய்ப்பு அதிகரித்துள்ளது. நாளடைவில் இவ்வேலைகளுக்கான ஊதியம் உயர்வதற்கு இந்த மாற்றம் உதவக் கூடும். இருந்தாலும், கட்டுமானம், விவசாயம் போன்ற குறைந்த ஊதிய, கடுமையான உழைப்பு தேவைப்படும் துறைகள் சுணக்கம் கண்டுள்ளதையும் ஒதுக்கிவிட முடியாது.
இன்னொரு புறம், அமெரிக்காவில் ‘ஃபெண்டைனல்’ (Fentanyl) போதைப் பொருளுக்கு காரணமானவர்களே முறையற்ற வழியில் அமெரிக்காவில் நுழையும் குடியேறிகள் தான் என்று திரு. டிரம்ப் சொல்லிவந்ததை நிருபிக்க போதுமான விவரங்கள் இல்லை. அமெரிக்காவில் ‘ஃபெண்டைனல்’ பயன்பாடு குறைந்துள்ளது உண்மைதான் என்றாலும், 2024 ஆண்டுடன் ஒப்பிடும் போது புள்ளிவிவரங்களில் பெரிதான மாற்றமில்லை.
‘அமெரிக்க குடியேற்ற கவுன்சிலின்’ (American Immigration Council) கூற்றுப்படி, பெருமளவிலான நாடுகடத்தல்கள் தொடருமானால், பத்தாண்டுகளில் அமெரிக்கா சுமார் $400 முதல் $600 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. கட்டுமானம், பண்ணை மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால் உணவு, சுற்றுலா, வீட்டு வசதி போன்ற அத்தியாவசிய தேவைகள் பெரிதும் பாதிப்படையும் என்றும் மதிப்பிடுகிறது.
இவை எல்லாவற்றையும் விட, முறையற்ற குடியேறிகளுக்கு வழங்கப்பட்டு வந்த தற்காலிகப் பாதுகாப்பு (Temporary Protected Status (TPS)) விலக்கப்பட்டுள்ளதும், பிறப்பு வழியில் அமெரிக்கக் குடியுரிமை (birthright citizenship) நிறுத்தப்படுவதும் உள்நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்படுத்தி நிறைய போராட்டங்களைத் தூண்டியுள்ளது. கலிஃபோர்னியா, அரிசோனா போன்ற மாநிலங்களில் இப்போராட்டங்கள் அமைதியின்மையை உருவாக்கி இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மனிதாபிமானமற்று குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிப்பது, குற்றமற்ற அப்பாவி மக்களை சிறையில் அடைத்து வைப்பது ஆகிய நடவடிக்கைகள் உலகளவில் அமெரிக்கா மீதான நற்பெயரை சிதைத்துள்ளது எனலாம்.
மொத்தத்தில் சி.என்.என். பத்திரிக்கை நடத்திய மதிப்பாய்வில் குடியேற்ற சட்டத்திருத்தங்களைப் பொறுத்த மட்டில், திரு. டிரம்ப் வரம்பு மீறுகிறார் என்று 55% மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதாரம்
தரவுகள் படி 2024 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 2.8% ஆகவும், வேலையின்மை 4% ஆகவும், பணவீக்கம் 3% ஆகவும் இருந்தது. அதிபர் டிரம்பின் புதிய குடியேற்றக் கொள்கைகள், இறக்குமதி வரிகள் (Tariff) அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலையற்ற தளத்தில் தள்ளியுள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025 முதல் காலாண்டில் சுருங்கியிருக்கிறது. இதற்கு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த இறக்குமதி வரி ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இறக்குமதி வரி அமலுக்கு வரும் முன்பு சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இருப்பில் வைத்துக் கொள்ள பெருநிறுவனங்களும், தனிப் பயனார்களும் முனைந்ததால் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (Department of Government Efficiency (DOGE)) எடுத்த அதிரடி நடவடிக்கைகளினால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர்.
மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டது. நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) 2.7% அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குடும்பம் மாதாமாதம் வாங்கும் குறிப்பிட்ட சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதனால், அதே குடும்பம் முன்பு செலவு செய்த அதே தொகைக்கு குறைவான பொருட்களையே பெற முடிகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலை நீடிக்குமானால், பணவீக்கம் (inflation) அதிகரித்து, பொருளாதார மந்த நிலையை (recession) உருவாக்கக் கூடும்.
தனி நபர் வருமானம் மற்றும் சராசரி குடும்ப வருமானம் அதிகரித்து காணப்பட்டாலும், விகிதாச்சார அடிப்படையில் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மந்தமான வளர்ச்சியே காணப்படுகிறது. பணவீக்கம் தனிநபர் வாங்கும் திறனை வெகுவாகப் பாதித்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இறக்குமதி வரி, நிதிக் கொள்கை மற்றும் அரசாங்க விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதால் இயல்பான செலவுகள் குறைக்கப்படுகின்றன.
இந்த நிச்சயமற்ற தன்மை பங்கு சந்தையிலும் எதிரொலிப்பதை அவதானிக்கலாம். தேர்தல் முடிவுகள் வெளியானபோது அதிகரித்த பங்குச் சந்தை மதிப்பீடு, அடுத்த சில மாதங்களில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஃபிப்ரவரி மாதத் துவக்கத்தில் டிரம்ப் அறிவித்த அதிரடியான இறக்குமதி வரிகள், உலக நாடுகளின் அதிருப்தியைச் சம்பாதித்தது. சீனா போன்ற நாடுகள் தங்கள் பக்கத்திலும் இறக்குமதி வரியை அதிகரித்தது உலக வர்த்தகத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. பெரும்பாலான நாடுகள் தங்கள் வர்த்தகச் செயல்பாட்டைச் சீரமைக்க முற்பட்டதில், வழங்குச் சங்கிலி (supply chain) அறுபட்டு பொருளாதாரத் தேக்கங்களை உண்டாக்கியது. நிலைமை கட்டுக்கு மீறி போவதை உணர்ந்த டிரம்ப், இறக்குமதி வரி மாற்றங்களை சற்றே தாமதப்படுத்தியதில் பங்குச் சந்தை சற்றே சுதாரித்தது. இருப்பினும் அதிபர் டிரம்ப் தடாலடியாக செய்யும் மாற்றங்கள், வர்த்தக நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் சந்தேகத்தன்மையுடனே வைத்துள்ளது.
முந்தைய அதிபர் பைடன் காலத்தில், 2030க்குள் பெருமளவு வாகனங்கள் மின்சார ஊர்திகளாக (Electric vehicles) மாற்றப்படவேண்டும் என்ற கொள்கையை அதிபர் டிரம்ப் நிராகரித்து, மேலும் எண்ணெய் கிணறுகள் தோண்ட முற்படுவது அந்தத் துறையைக் குழம்பச் செய்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான சுங்கவரிகள், மற்றும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன பாகங்கள் மீதான வரிகள் வாகன உற்பத்தி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்குமான செலவைக் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆரம்ப வாரங்களில் இந்தச் செலவை தங்களது லாபத்தில் சரிகட்டிய நிறுவனங்கள், தற்போது வாகன விலையை ஏற்ற தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்க பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக சாலைப் போக்குவரத்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வாகனப் போக்குவரத்து, வருமாண்டுகளில் மேலும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
சில வாரங்களுக்கு முன் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ (One Big Beautiful Bill Act – (OBBBA)) ஏற்கனவே அதிபர் டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த வரித் தளர்வுகளை நீடித்துள்ளது. மேலும் பல புதிய வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2026 ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த வரி மாற்றங்கள், சாமான்ய குடும்பங்களுக்கு கிடைப்பதை விட ஆண்டுக்கு $250,000 மேல் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு அதிக பலன்களை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சராசரி மனிதர் வாழ்வில் பெரியளவு மாற்றங்கள் இருக்காது. மாறாக இந்த திட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்ட அல்லது விலக்கப்பட்ட ‘மெடிகெய்ட்’ (Medicaid) உள்ளிட்ட சில நலத்திட்டங்கள், இப்பிரிவு குடும்பங்களுக்குச் சுமையை ஏற்றக்கூடும்.
பொருளாதார அடிப்படையில் டிரம்ப் பரிந்துரைக்கும் மாற்றங்கள், பொதுமக்களிடையே பெரிதான வரவேற்பைப் பெறவில்லை. பொருளாதார வல்லுனர்களே டிரம்பின் சுங்க வரி, OBBBA சட்ட மாற்றங்களில் பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்தச் சட்டம் அடுத்த பத்தாண்டுகளில், ஏற்கனவே $36 டிரில்லியனாக இருக்கும் அமெரிக்கக் கடன் சுமையை, சுமார் $40 டிரில்லியனாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இப்பிரிவில் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 35%, எதிராக 58% மக்களும் வாக்களித்துள்ளனர். அவரது சுங்க வரி திட்டங்கள் 59% எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.
அயல்நாட்டு உறவுகள்
தேர்தலுக்கு முன்னர் பொதுக்கூட்டங்கள், விவாத மேடைகள் என்று எங்கு பேசினாலும் ரஷ்யா-உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று சூளுரைத்தார். அதே போல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தான் பதவியேற்பதற்கு முன், காஸா ஆக்கிரமப்பை நிறுத்தி அந்தப் பகுதியில் அமைதியை கொணர சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இன்று வரை ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை. மாறாக டிரம்பின் தலையீட்டால், பிரச்சனை மேலும் சிக்கலடைந்துள்ளது எனலாம். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் சில சமயங்களில் கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், ஜெலன்ஸ்கி போதுமான நன்றியைக் காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவாகச் சில காலங்கள் பேசி வந்த டிரம்ப், உக்ரைனுக்கு போர் தளவாடங்கள், நிதியுதவி அளிப்பதில் தயக்கம் காட்டி வந்தார். இதன் காரணமாக, உக்ரைன் சற்றே இறங்கி வந்த நேரத்தில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு முயன்று வந்தார் டிரம்ப். ரஷ்யா, போர் நிறுத்தத்தை முழுமையாக கடைபிடிக்காமல் வீம்பு பிடித்ததில், எரிச்சலடைந்த டிரம்ப், ரஷ்யா மீது புதுத் தடைகளை அறிவித்ததுடன், உக்ரைனுக்கு கூடுதலான தளவாடங்கள், நிதியுதவி அளித்து வருகிறார். இதனால், ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதி, இன்றும் வாக்குறுதியாகவே இருக்கிறது.
இஸ்ரேல்-காஸா விவகாரத்தில், தொடக்கத்தில் இஸ்ரேலுக்குச் சார்பாகப் பேசி வந்த டிரம்ப், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அந்நாடு சரியான பதிலடி கொடுத்ததாகவே கருதினார். தான் நெதன்யாகு நிலையில் இருந்தால் அதே போன்றதொரு பதில் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று பேசினார். உலக அரங்கில் இஸ்ரேல் காஸா மீது நடத்திய அட்டூழியங்கள் கடுமையான் எதிர்ப்புகள் கிளம்பியபோது, தனது போக்கை மாற்றிக் கொண்ட டிரம்ப், இருதரப்பும் போர் நிறுத்தம் மற்றும் பிணையாகப் பிடிக்கப்பட்ட அப்பாவி மக்களை விடுவித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தினார். இஸ்ரேல் இதற்கு சரியாக பிடி கொடுக்காதபோது, காஸா பகுதியிலிருக்கும் பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டான் நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட வேண்டுமென்றும் அவர்கள் திரும்ப காஸா பகுதிக்குத் திரும்ப எத்தனிக்கக் கூடாதென்ற தனது தீர்மானத்தை முன்வைத்தார். கூடவே, காஸா பகுதி அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட வேண்டுமென்றும், அப்பகுதியை ‘ரிசார்ட்’ எனப்படும் மகிழ்விடங்கள் கட்டி, நிறைய ஆடம்பர விடுதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றிவிட வேண்டுமெனும் தன் அவாவையும் வெளிப்படுத்தினார். இவை பல்வேறு நாடுகளின், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்த போதும், அதைப் பற்றி கவலைப்படாமல், காஸா பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்பட்ட செயற்கை நுண்ணறிவு காணொளிகளை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு பகடி செய்தார். அடுத்த சில வாரங்களில், தடாலடியாக 180 டிகிரி திரும்பி, காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்காக வருந்தி போர் நிறுத்தம் அவசியம் என்றார். முந்தைய அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மீது வைத்திருந்த சில தடைகளை டிரம்ப் நீக்கியது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனும் சில பிணக்குகள் உண்டானது.
காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய போது, ஈரானின் பதிலடியை நெதன்யாகுவும், டிரம்பும் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில் இஸ்ரேலுக்குத் தோள் கொடுத்து, ஈரான் அணு நிலையங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதற்கும் பின் வாங்காமல் ஈரான், கத்தாரில் அமெரிக்க இராணுவ விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் ஏறக்குறைய மூன்றாம் உலகப் போரின் விளிம்பிலிருந்த போது, டிரம்ப் சுதாரித்துக் கொண்டு இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்துக்கு அறிவுறுத்தினார். நெதன்யாகு இதனை மீறிய போது மிகக் கோபமடைந்த டிரம்ப், கடுமையான விமர்சனங்களை வைத்தார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தீர்மானங்கள், பேசுவது ஒன்று செய்வது வேறு எனும் விளையாட்டை ஆடி வந்தார் டிரம்ப். இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வலுக்கவிருந்த போரை, நிறுத்தியதாகப் பெருமை கொண்டார். அதற்கு, இரு நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை அறுத்துவிடுவேன் என்று தான் கூறியதைக் கேட்டு, இரு நாட்டுத் தலைவர்களும் அஞ்சி, போரை நிறுத்திவிட்டனர் என்று பீற்றிக் கொண்டது இரு நாட்டினரையும் முகஞ் சுளிக்கச் செய்தது. கொஞ்சமும் கூச்சப்படாமல் தனக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்படவேண்டுமென டிரம்ப் அறைகூவலிட்டதும் கேலிப்பொருளானது.
அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாட்டுத் தலைவர்களிடமும் அவருக்கு நற்பெயர் இல்லை. கனடாவை 51ஆவது மாநிலமாக மாற்றிவிடலாம், ‘கல்ஃப் ஆஃப் மெக்சிகோ’ இனி ‘கல்ஃப் ஆஃப் அமெரிக்கா’ என்று மாற்றியது, ‘பனாமா’ கால்வாய்க்குச் சொந்தம் கொண்டாடியது என்று அடாவடியான கருத்துகளை உதிர்த்து வந்தார். இதையெல்லாவற்றையும் விட, சீனா மீதான அவரது வர்த்தகத் தொடர்பான வெறுப்புகளையும் அவர் நிறுத்தவில்லை. ஆக மொத்தம் பன்னாட்டு உறவுகளில் அத்தியாவசியமான அரசதந்திரம், நல்லுறவு கொள்கை போன்றவை டிரம்பின் நடவடிக்கைகளில் காணப்படவில்லை. பன்னாட்டுத் தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, சில முடிவுகளை மாற்றிக் கொள்வதுண்டு என்றாலும், டிரம்பின் கருத்துகளில் வெளிப்படும் கடுமையான, கண்ணியமற்ற சொற்கள் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
மொத்தத்தில் வெளிநாட்டுக் கொள்கை அடிப்படையில் டிரம்புக்கு 41% மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது. அவரது கொள்கைகளுக்கு எதிராக 54% பதிவாகியுள்ளது.
உள்நாட்டு விவகாரங்கள்
2021 ஆம் ஆண்டு, ஜனவரி ஆறாம் தேதி, டிரம்ப் தேர்தலில் தோற்றுவிட்டதால், ‘கேபிடல் பில்டிங்’ எனப்படும் தேசியத் தலைமையகத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தி கைதானவர்களை ‘தேசப் பற்றாளர்கள்’ (patriots) என்ற பெயரில் மன்னித்ததும் விடுதலை செய்ததையும் டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரே ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களில் சிலர் மீது அரசு சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. அந்தத் அபராதத் தொகையை அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டுமென்றும் டிரம்ப் வாதாடினார். வன்முறை சம்பவத்தின் போது, போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கு $5 மில்லியன் தருவதற்கும் அவர் பரிந்துரைத்தது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. பதவியேற்ற முதல் நாளிலேயே, மிகக் கடுமையான குற்றங்களைச் செய்த வன்முறைக் கலகக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கியது வெட்கக்கேடானது, ஒழுக்கக்கேடானது மற்றும் ஆபத்தானது என்ற கருத்துகள் வலுத்தன.
சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், இன்றளவும், முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோரைத் தனிப்பட்ட முறையில், பண்பற்ற வகையில் விமர்சிப்பது டிரம்ப் வகிக்கும் பதவிக்குக் கண்ணியமில்லை. ஆனால் அவர் அந்தப் பதவிக்கான மரியாதை, மேன்மை, கெளரவம் எதையும் மதிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டு அதிபர், பிரதிநிதிகள் முன் உண்மையற்ற தகவல்களைப் பகிர்ந்து, அதை அவர்கள் மறுத்து, திருத்தியபோதும் வெட்கமில்லாமல் கடந்து செல்வது என அமெரிக்க அதிபர் பதவிக்கான குணங்களைப் பற்றி டிரம்ப் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.
பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய சம வாய்ப்புகளை உறுதி செய்யும் (Diversity, Equity and Inclusion (DEI)) எனும் கட்டமைப்பை டிரம்ப் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்த அமைப்பு வெள்ளையினத்தவருக்கு எதிராகச் சதி செய்கிறது என நம்பும் அவர் முதல் ஆட்சிக் காலத்திலே அதற்கெதிரான பரப்புரைகளைச் செய்தார். இம்முறை DEI அமைப்பு முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டுமென்ற முயற்சியில் இறங்கியுள்ளார். பல அரசு, பெருநிறுவனங்கள், இராணுவம், கல்லூரிகளில் இயங்கி வந்த இந்த அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனும் உத்தரவையும் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து இராணுவம், அரசுத் துறைகள், கூகுள், மைக்ரோசாஃப்ட், மெடா உள்ளிட்ட பெருநிறுவனங்களில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. ‘கொலம்பியா’ உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் சில இந்த அழுத்தங்களுக்கு இடமளித்து DEI மற்றும் முற்போக்கான மாணவ அமைப்புகளைக் கலைத்த போதும், ‘ஹார்வர்ட்’ போன்ற ஒரு சில பல்கலைக் கழகங்கள், பன்முகத்தன்மையே தங்களது பிரதான பலம் என்று, அந்த அமைப்புகளைக் கலைக்க மறுத்து வருகின்றனர். இதனால், டிரம்ப் அது போன்ற பல்கலைகளுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தற்கு நாடளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. டிரம்ப் நிர்வாகம், ‘ஹார்வர்ட்’ பல்கலைக்கழக ஆராய்ச்சிகளுக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்தியது மட்டுமல்லாமல், வரிச் சலுகைகளையும் நிறுத்திவிட்டது. உலகளவில் முதல் தர வரிசையிலிருக்கும் ‘ஹார்வர்ட்’ போன்ற ‘ஐவி’ (Ivy) பல்கலைக்கு இது பேரிடியாக இறங்கியபோதும், அவர்கள் கல்லூரிச் சட்டங்களில் அரசு தலையிட முடியாது என்று வாதிட்டு வருகின்றனர். டிரம்பின் இந்த அடக்குமுறையை எதிர்த்து வெடித்த போராட்டங்களை நிறுத்த, வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து நாடுகடத்த முற்பட்ட சம்பவங்களும் நடந்தன. இந்த போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தைத் தேசிய பாதுகாப்புப் படையை இறக்கவும் தனக்கு அதிகாரம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இறக்குமதி வரி கொள்கை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற பொதுவான கருத்து இருந்தாலும், குறிப்பிட்ட சில தொழிற்துறைகள் வளர்வதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக இரும்பு மற்றும் அலுமினியம், மீன் பிடித்தல், வீட்டு உபகரண உற்பத்தியாளர்கள் தங்கள் தொழில் வளர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இத்துறைகளில் வேலைவாய்ப்பு சற்றே அதிகரித்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
அரசு செயல்திறன் மேம்பாடுகளுக்கு, டிரம்ப் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கை நியமித்திருந்தார். டிரம்பின் தேர்தல் செலவுகளுக்கு பெருமளவு நிதியுதவி அளித்திருந்தவர் எலான் மஸ்க் என்பதை மறந்துவிடக் கூடாது. சில மாதங்களுக்குப் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், மஸ்க்கின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. இன்று, இந்த கருத்து வேறுபாடுகள் விரிசலாக வளர்ந்துவிட எலான் மஸ்க் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ சமூகத் தளத்தை டிரம்புக்கு எதிராகவும் முடுக்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ விவகாரத்தைச் சொல்லலாம்.
நியுயார்க் நகரில் ஒரு பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் (Jeffrey Epstein). பின்னர் மெதுவே நிதி மேலாண்மை நிறுவனத்தில் சேர்ந்த எப்ஸ்டைன், படிப்படியாக பல பெரிய முதலீட்டாளர்களுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார். அந்தச் சமயங்களில் டிரம்பின் அறிமுகம் கிடைக்க சீக்கிரமாகவே அவருடனும் நெருக்கமானார் எப்ஸ்டைன். 1990 – 2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் டிரம்ப், எப்ஸ்டைன் இருவரும் ஒன்றாக ஒரே விமானத்தில் செல்வது, விருந்துகளில் கலந்து கொள்வது எனுமளவுக்கு நட்பு வளர்ந்துள்ளது. 2008ஆம் காலகட்டத்தில், எப்ஸ்டைன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடரப்பட்ட வழக்கை விசாரித்ததில் அவர் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, கட்டாயப்படுத்தி பலருக்கு விருந்தாக்கியது போன்ற பல குற்றங்களின் அடிப்படையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 2019 இல், எப்ஸ்டைன் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது குற்றங்கள், மரணம் தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தனது தேர்தல் பரப்புரையின் போது ஜான் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் மரணங்கள் குறித்த வழக்கின் கோப்புகளை வெளியிடுவதோடு, ஜெஃப்ரி எப்ஸ்டைன் வழக்கு கோப்புகளையும் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார் டிரம்ப். இவ்வழக்குத் தொடர்பாக ‘எஃப்.பி.ஐ (FBI)’ யிடமிருந்து தகவல்களைச் சேகரித்து வந்த அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி (Pam Bondy), அக்கோப்புகளில் அதிபர் டிரம்பின் பெயரும் அடிபடுவதை அறிந்து, மே மாதத் துவக்கத்தில் அவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ விவகாரம் வெளிவருவது சுணக்கமடைந்தது. இதைக் குறித்து அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழத் தொடங்கியதைப் பயன்படுத்திக்கொண்ட மஸ்க், ‘எக்ஸ்’ வலைதளத்தில் தொடர்ந்து நையாண்டியாக டிரம்பை விமர்சித்து வருகிறார். இந்த விஷயத்தில், டிரம்ப் பின் வாங்குவதும், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, ஜோ பைடன் மீது பழி சுமத்தப் பார்ப்பதும் அவர் தொடர்பான ஏதோவொரு மர்மம் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’இல் இருப்பதாக பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள் கூட இவ்விஷயத்தில் அவர் வெளிப்படையாக இல்லை என்று சந்தேகிக்கின்றனர். இதிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப டிரம்ப் அதிரடியாக வேறொரு பிரச்சனையைக் கிளர்ந்தெழச் செய்வாரோ என்ற அச்சமும் பரவத் தொடங்கியுள்ளது. ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ விஷயத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென 71% வாக்களித்துள்ளார்கள்.
ஊடகத் துறையையும் டிரம்ப் விட்டு வைக்கவில்லை. மதச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் குறித்து இயற்றப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தையே அவர் சமீப காலங்களில் மீறுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட ஊடகத்தினரை ‘பொய் செய்திகள்’ (fake news) என்று முத்திரை குத்துவது, எதிர் விமர்சனங்கள் வைக்கும் ஊடகங்களை மிரட்டுவது, மான நஷ்ட வழக்குத் தொடுப்பது, அல்லது அவற்றை விலை பேசி வாங்கி விடுவது போன்ற முறையற்ற வழிமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். அரசாங்கம் வெளியிடக் கூடிய செய்திகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, யாரும் எதிர் கேள்விகள், விமர்சனங்கள் வைக்கக் கூடாது என்பது நாட்டை யதேச்சதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறது எனும் கருத்து பரவி வருகிறது.
சமூக நலன், சுகாதாரம், கல்வி போன்ற உள்நாட்டு விவகாரங்களில் டிரம்ப் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிதாகச் சோபிக்கவில்லை எனலாம். குறிப்பாக கல்லூரிக் கடன் மாற்றங்கள், மாணவர் முற்போக்கு அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இளவயதினரை எரிச்சலடைய செய்துள்ளது.
அதிபர் டிரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் நடந்து கொள்வதும் புதிதல்ல; இயல்பாகப் பேசுவதாய் நினைத்துக் கொண்டு நக்கல் செய்வதும், கட்டுபாடின்றி வார்த்தையை விடுவதும், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதும் அவரது சுபாவமாகவே உள்ளது. முந்தைய அதிபர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறித்து பொதுவெளியில் அவதூறு பேசுவது அவரது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. அரசியல் சாசனத்தை அவர் அலட்சியம் செய்வது போல பல முடிவுகளைத் தனது நிர்வாக அதிகாரத்தைப் (Executive power) பயன்படுத்தி சட்டமாக்குவது, அமெரிக்க ஜனநாயகக் கோட்பாட்டைப் பலமிழக்கச் செய்துவிடும். ‘அமெரிக்கா முதன்மை பெறவேண்டும்’ அல்லது தேசபக்தி என்ற பெயரில் அமெரிக்க பன்முகத்தன்மையை இழக்கச் செய்வது முறையல்ல. தனது தெளிவற்ற பேச்சுகளினாலும், முடிவுகளினாலும் அமெரிக்காவுக்கென உலக அரங்கில் இருக்கும் பாரம்பரியத்தை, கெளரவத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார் டிரம்ப். அமெரிக்க அதிபர் பதவிக்கான மேன்மையை அவர் அலங்கரிக்காவிடினும், மேலும் அவமதிக்காமல் இருந்தால் போதும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
- ரவிக்குமார்.
Tags: Economy, Immigration, politics, Trump