மினசோட்டாவில் இசை நிகழ்ச்சி
“குரு லேக எட்டுவன்டீ குனிகி தெளியக போது” என்ற தியாகராஜர் கீர்த்தனைக்கு இயம்ப, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 5 அன்று மாலை ஒரு அருமையான இசை அனுபவம் குரு சமர்ப்பணமாக அமைந்தது.
நாதரஸா இசை பள்ளியின் கலை இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜசேகரின் கற்பித்தலில் அப்பள்ளியின் செயலாளர் திருமதி. பத்மா வுடலி, பொருளாளர் திருமதி. ஸ்ரீவித்யா சுந்தரம் மற்றும் பலரின் ஒருங்கிணைப்பில் மிக அருமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தது.
நிகழ்ச்சியின் முதலில் திருமதி அபர்ணா பட்டா அவர்களின் வீணைக் குழு விநாயகர் பாடல்களை வீணையில் அருமையாக மீட்டினார்கள். அவர்களை அடுத்து திருமதி. லட்சுமி சுப்பிரமணியன் அவர்களின் ராக சுரபி இசைப் பள்ளி தங்களுடைய மயக்கும் குரல் வளத்தில் பாடி மகிழ்வித்தனர்.
மூன்றாவதாக மேடையேறிய நாதரஸாவின் இளைய குழு செல்வி. ஸ்ருதி ராஜசேகரின் கற்பித்திதலில் அழகான “ஜெயதி ஜெயதி பாரத மாதா” பாடலை அரங்கேற்றினர்.
நிகழ்ச்சியின் மைய கச்சேரி, செல்வி அக்ஷரா சமஸ்க்ரிதி யின் இனிய குரலில் அமைந்தது. சிரித்த முகத்துடன் அவளது கணீரென்ற குரலுக்கு இணையாக செல்வி. சின்மயி அவர்களின் வயலினும், சிரஞ்சீவி. சுதர்ஷனன் அவர்களின் மிருதங்கமும் ஒளிர்ந்தது. இம்மூவரும் இவ்வாண்டு, அமெரிக்கா முழுவதும் 25 இடங்களில் கச்சேரி செய்து வருகிறார்கள். வசீகரமான குரலிலும், மெய்சிலிர்க்கும் மீட்டலிலும், அமர்க்களமான தாளத்திலும் இம்மூவரின் கூட்டிசை, கேட்பவரை களிப்படையச் செய்தது.
“செவிக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்ற வாக்கிற்கு இணங்க, இசையோடு கூடி, தின்பண்டமும் ஒருங்கிணைத்த நாதரஸா குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும்.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட எண்ணற்ற இசை ஆர்வலர்களின் பங்கு மிக முக்கியம். நல்ல இசை கலைஞர்களை ஊக்குவிக்க வெயிலோ, மழையோ, பனியோ எதுவாகயிருந்தாலும் மினசோட்டாவில் கூட்டம் உண்டு என்பது நிச்சயம்.