கீழடி அகழாய்வு
தென் தமிழ்நாட்டில், வைகை ஆற்றின் அமைதியான வளைவில், கீழடி அமைந்துள்ளது. 2013 வரை, கோயில் நகரமான மதுரைக்கு அருகாமையில் இருப்பதைத் தவிர்த்து, மிக அரிதாகவே பேசப்பட்ட கிராமம் . ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்த சிற்றூர் இந்தியாவின் மிகத் தீவிரமான தொல்பொருள் மற்றும் அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.
2014ஆம் ஆண்டில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பெற்ற பொருட்கள் பலவும் சான்றாகக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர். முத்து மணி அணிகலன்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், தாயக் கட்டை, சதுரங்க காய்கள், நூல் நூற்கும் கருவிகள் (தக்ளி), மட்கல பாண்டங்களின் சில்லுகள் என, நாகரிடமடைந்த சமூகம் வாழ்ந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைக்கப்பெற்றன. செங்கல்லால் கட்டப்பட்டு, ஓடு வேய்ந்த வீடுகளை ஒட்டி, உறை கிணறுகள் இருந்ததற்கான தடயங்களும் அகழாய்வில் அறியப்பட்டது. அவற்றில் சிலவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்பட்டது அங்கு சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு பண்டைய, நகரமயமாக்கப்பட்ட தமிழ் நாகரிகத்திற்கான குறிப்பிடத்தக்க சான்றுகளை வழங்குகிறது.
தென்னிந்திய நாகரிகத்தின் தொன்மை மற்றும் நுட்பம் பற்றிய முந்தைய அனுமானங்களை சவால் செய்யும் கட்டமைப்புகள், கலைப்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் கிடைத்த கீழடி, இன்று இந்திய நாகரிகத்தின் தொன்மைக்குப் புதியதொரு பரிமாணத்தை வழங்கக்கூடிய முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. வேறொரு வகையில் இது அரசியல் விவாதங்களையும், தர்க்கங்களையும் கிளப்பியுள்ளது.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaelogical Survey of India) கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டபோது, அன்றைய மாநில அரசே அகழாய்வுக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை நடத்திவந்தது. அதுவரை அங்கு, தள ஆய்வுக்குத் தலைமை வகித்து வந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவை மத்திய அரசு வேறொரு மாநிலத்துக்கு மாற்றியதை தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் மீண்டும் அவரே தமிழ்நாட்டுக்கு வந்து அப்பணியைத் தொடர்ந்ததும் இங்கு நினைவுகூறத்தக்கது.
ஏறத்தாழ 5200க்கும் மேற்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்து திரு. அமர்நாத் 2023 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்பொருள் துறைக்கு விரிவான 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். ‘கார்பன் டேட்டிங்’ எனும் கரிமக் காலக் கணிப்புமுறை அடிப்படையில், கிமு 585 ஆம் ஆண்டு, 2,600 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் நன்கு நிறுவப்பட்ட நகர்ப்புற நாகரிகம் இருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால் மே மாதத்தில், கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கீழடியின் தொடர்ச்சிக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்குமாறு தொல்பொருள் துறை ராமகிருஷ்ணாவிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 17 அன்று, திரு. அமர்நாத் புது தில்லியில் உள்ள ASI தலைமையகத்திலிருந்து கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் திட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்தக் கோரிக்கையை தமிழ் அடையாளத்திற்கு நேரடி சவாலாகக் கருதிய தமிழ்நாடு மாநில அரசு, மத்திய அரசு, சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் நடைபெறும் ஆய்வுகளுக்கான ஆதாரங்களைக் கோரி பதிலடி கொடுத்தது.
திரு. அமர்நாத்தின் ஆய்வுகளை ஆதரித்து அணிவகுத்து நிற்கும் திராவிடக் கட்சிகள், புனே, பெங்களூரு, புளோரிடா மற்றும் இத்தாலி முழுவதும் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட விரிவான அறிவியல் சோதனைகளின் அடிப்படையில் அவரது அறிக்கை அமைந்துள்ளது என்று வாதிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர் இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சின்னங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமும், ‘கிராஃபிட்டி’ அடையாளங்களில் 90 சதவீதமும் சிந்து சமவெளி நாகரிகக் குடியிருப்புகளில் காணப்பட்டவற்றை ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம், கிமு 2600 முதல் கிமு 1900 வரை செழித்தோங்கியதாகக் கருதப்படுகிறது, மேலும் இது முதன்மையாக இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ளது.
“ஹரப்பா மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன,” என்று வரலாற்றாசிரியரும் கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவருமான திரு. கே.என். கணேஷ் ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார். “இடம்பெயர்வு எப்படி நடந்தது, அவர்கள் எங்கு குடியேறினார்கள் என்பது எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை” என்றும் அவர் சொல்லியிருந்தார்.
இந்தச் சூழலில், கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் அவை தமிழ்க் கலாச்சாரத்திற்கும் ஹரப்பா மரபுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய முயற்சிக்கின்றன என்று திரு. கணேஷ் குறிப்பிட்டார்.
இருப்பினும், அவசரமாக ஒரு முடிவை எட்டுவதற்கு எதிராகவும் அவர் எச்சரிக்கிறார். “இவை எப்படியோ ஹரப்பாவுடன் தொடர்புடையவை, இருப்பினும் கால இடைவெளியில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.”
ஹரப்பா நாகரிகத்தின் உச்சம் கிமு 1800 ஆம் ஆண்டு வாக்கில் இருந்ததாகவும், கீழடி கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் அவர் கூறினார் – இது தமிழ்நாட்டில் சங்கக் காலத்தை ஒட்டி அமைந்ததாகவும், பொதுவாக கிமு 300 முதல் கிபி 300 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாகவும் தெரிகிறது.
ஹரப்பா நாகரிகத்தை வேத காலத்துடன் இணைக்க இந்திய அரசு நீண்ட காலமாக முயன்று வருவதாக கணேஷ் மேலும் கூறினார். “எனவே, ஹரப்பா மக்களின் இடம்பெயர்வு என்பது வேத காலத்தின் இடம்பெயர்வு என்று பொருள். இது பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மறுக்கப்படுகிறது. இதற்குக் கூடுதல் ஆய்வு தேவை.”
இருப்பினும், மற்றொரு அறிஞர் குழு, தமிழ்க் கலாச்சாரம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே உருவாகி இருக்கலாம் என்று கூறி ஆய்வினைத் தொடர வலியுறுத்துகிறது.
“அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால் பல்வேறு இடங்களில் பல அறிகுறிகள் உள்ளன,” என்று முன்னாள் ASI தொல்பொருள் ஆய்வாளர் டி. சத்தியமூர்த்தி கூறினார்.
“தமிழ்நாட்டின் தொன்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அதை ஏன் சிந்து சமவெளியுடன் ஒப்பிட வேண்டும்? அது இன்னும் முந்தையதாக இருக்கலாம், அதை ஆதரிக்க நிறைய சான்றுகள் உள்ளன. இதற்கு ஆழமான ஆய்வு தேவை.”
கீழடி ஆய்வுகள், அரசியல் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இது முதல் முறை அல்ல. இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணா இதேபோல் மாற்றப்பட்டார். மூன்றாம் கட்டத்தில் ‘குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்’ எதுவும் இல்லை என்று அவருக்கு பின்னர் வந்த தலைமை ஆய்வாளர் கூறினார். இந்த வழக்கு இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையை அடைந்தது, இது தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறையை அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இப்போது அதன் 11வது கட்டத்தில், 2014 முதல் இந்த அகழ்வாராய்ச்சி 20,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளது. சிந்து சமவெளி எழுத்துக்களை புரிந்துகொள்வதில் வெற்றிபெறும் நிபுணர்கள் அல்லது அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு 1 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்துள்ளது .
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள், கல்வெட்டுகள் மற்றும் மட்பாண்டங்கள் மேம்பட்ட தமிழ் நகர்ப்புற கலாச்சாரத்திற்கான கட்டாய சான்றுகளை வழங்குகின்றன என்பதில் பரந்த ஒருமித்த கருத்து இருந்தாலும் , துல்லியமான காலவரிசை – மற்றும் அதன் பெரிய கலாச்சார தாக்கங்கள் குறித்த ஆய்வுகள், ஏன் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது என்பது புரியவில்லை.
- யோகி
Tags: archeology, excavation, keeladi, tamil culture, tamil history