\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க……….

கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க……

கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க………

தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என மரியாதையாகவும், செல்லமாகவும் அழைக்கப்பட்ட திரு. சா. கணேசன். இந்தக் கட்டுரை எழுதப்படும் இன்று, ஜூன் 6ஆம் திகதி, அவரின் 112 ஆவது பிறந்த நாள்.

தனது சொத்துக்களையும் சுகங்களையும் முழுவதுமாகச் சுதந்திரப் போராட்டத்தில் இழந்து, சுதந்திர இந்தியாவில் தனது முழுநேர வாழ்வினையும் தமிழுக்காகவே அற்பணித்து, பலவிதமான மொழியாராய்ச்சிக்கும், வரலாற்று ஆராய்ச்சிக்கும் அடிகோலி, வழிகோலி தமிழ் வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாளை அற்பணித்த ஒரு பெரிய மனிதரைப்பற்றி இந்தத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையின் விளைவே இந்தக் கட்டுரை.

ண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் (IST) என்பதை இண்டியன் ஸ்ட்ரெட்ச்சபிள் டைம் என்று மாற்றி, நமக்கும் நேரந்தவறாமைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று இன்று எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. மேலை நாட்டவரும் நமது வம்சத்தின் வழக்கமே இப்படித்தான் என்று முடிவுக்கே வந்துவிட்டனர். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னர் வரை இந்த நிலை இல்லை என்பதுதான் உண்மை. கடந்த அறுபது வருடங்களில் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழகத்தில்,குலைந்துபோன நல்ல விஷயங்களுக்கு அளவே இல்லை. அதில் ஒன்று இந்த நேரந்தவறாமையும் கூட. அரசியல் தலைவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அவர்கள் அறிவிக்கும் நேரத்திற்கும்,தலைவர்கள் வந்து சேரும் நேரத்திற்கும் தொடர்பே இருக்காது, உண்மையைச் சொல்லப் போனால் இந்தக் கலாச்சாரம் பரவியது திராவிடத் தலைவர்கள் புகழ் பெறத் தொடங்கிய காலங்களில்தான். அதே காலத்தில்,கம்பன் கழகத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வந்த திரு. சா. கணேசன் நேரந் தவறாமைக்காகவே அறியப்பட்டவர். ஆறு மணிக்குக் கூட்டமென்றால், ஐந்து ஐம்பத்தைந்துக்குத் திரையின் பின்னால் நிற்பார், மேடையிலிருக்கும் கடிகாரம் ஆறு மணி அடிக்கும்பொழுது சிம்மம் போல உள்ளே நுழைந்து, யார் இருந்தாலும், இல்லாவிடினும் விழாவைத் தொடங்கி விடுவார். அன்றைய பல தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டிருந்த வேளைகளில், அவர்கள் தாமதமாக வர, இவரோ எவருக்கும் காத்திராமல் கடிகார முள் பார்த்து, விழாவைத் தொடங்கியவர். இவரின் இந்த வழிமுறை முதலமைச்சர்களுக்கும் பொருந்தும். இவரின் குணத்தை அறிந்ததால் கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களும் இவரின் விழாவுக்கு மட்டும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிடுவர். இல்லையெனில், மேடைக்கு வந்து சேரும்போது அவமானப்பட வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். இதனைப் பள்ளி செல்லும் பிள்ளையாக, நேரிலே பார்த்தவன் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியடைபவர்களில் நானும் ஒருவன். இது மனதிலிருந்து சற்றும் அகன்றிடாத ஒரு அருமையான நிகழ்வு, பாடம்.

இன்று தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்த பட்டி மண்டப வடிவம் அனைவரும் அறிந்ததே. இந்த வடிவம் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காலம். இந்த வடிவம் அந்த நூலில் மிகவும் விரிவாக விவரிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, வழக்கொழிந்து, பெரும்பாலானோர் அறியாத நிலையிலிருந்த இந்த வடிவத்திற்குப் புத்துயிர் கொடுத்து, வெகுஜனம் புரிந்து கொள்ளும் வகையில் மீண்டும் அறிமுகப்படுத்திய பெருமை திரு. சா. கணேசன் அவர்களையே சாரும். இதனை மீண்டும் அறிமுகப்படுத்துகையில், கருத்துச் செறிவுடன்,உயர்ந்த பல விஷயங்களை உள்ளடக்கி,இலக்கிய நயத்துடன் பேசவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் கணேசன். எவரேனும் இந்த இலக்கணங்களுக்குச் சற்றுக் குறைவான தரத்துடன் பேசுவாராயின், அதற்குப் பிறகு அவர் அந்த மேடையைக் காண்பதென்பது இயலாது. இன்றுபோல் ஏதேதோ பேசிவிட்டு, நகைச்சுவையாளர், சிந்தனைச்சிற்பி என்றெல்லாம் பட்டம் பெற முடியாது அவரிடம். தரம் என்ற ஒன்று எல்லா இடங்களிலும், விதங்களிலும் ஜொலித்த காலமது. அதுபோல அவை ஜொலிக்கக் காரணமான பலரில் சா. கணேசன் முதன்மையானவர்.

பட்டி மண்டபம் குலைந்து பட்டி மன்றமான இந்தக் காலத்தை மறந்து,தரம் நிறைந்த அந்தக் காலத்தைப் பார்க்கலாம். சா. கணேசன் உருவாக்கிய,அல்லது உரமேற்றிய பட்டிமண்டபப் பேச்சாளர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். டி.கே.சி என அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியார், தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், நீதியரசர் மு.மு. இஸ்மாயில், நீதியரசர் மஹராஸன், பேராசிரியர் ஏ.சி. பால் நாடார், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன், எழுத்தாளர் ஶ்ரீனிவாசராகவன், கம்பராசன், கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், எஸ். மீனாக்‌ஷி சுந்தர முதலியார், தொ.பா.மீ., கருமுத்து தியாகராஜன் செட்டியார், எம்.எஸ்.பி. ஷண்முகம் என்று பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். அவர்களில் பலரை இன்றைய வெகுஜன ஊடகங்கள் பேசாமல் போனது தமிழகத்தின் துரதிருஷ்டமே. இழப்பு அந்த மாமேதைகளுக்கல்ல, இன்றைய தலைமுறைக்கே.

1939 ஆம் ஆண்டு,கம்பன் பிறந்த நாட்டரசங்கோட்டைக்கு அருகிலுள்ள பெரிய நகரமான காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தார் திருவாளர் சா. கணேசன். தோற்றுவிக்கையில் அவருக்கிருந்த நோக்கங்கள் பல. பள்ளிப்படிப்பு அதிகமில்லாவிட்டாலும்,தமிழிலும்,சமஸ்கிருதத்திலும்,ஆங்கிலத்திலும் மிகப் பெரிய அளவில் பாண்டித்யம் பெற்ற அவர், உலக இலக்கியங்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் நன்கு அறிந்தவர். உலகில் பிற நாடுகள் அவர்களை எந்த அளவுக்குப் புகழ்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் உணர்ந்தவர். ஷேக்ஸ்பியரைக் கொண்டாடும் ஆங்கிலயர்களைப் பார்த்த அவர், அதற்குப் பலமடங்கு அதிகமான புலமையையும், இறை நோக்கையும், தத்துவங்களையும் உடையவரான கம்பரைப் போற்ற எண்ணம் கொண்டார்.

அவரின் தமிழ்த் தொண்டையும், குறிப்பாகக் கம்பன் கழகத்தையும் பார்ப்பதற்கு முன்னர் அவரின் வாழ்வு குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம். 1908 ஆம் அண்டு, ஜூன் மாதம் ஆறாம் தேதி, செல்வச் சீமான் சாமிநாதன் மற்றும் நாச்சம்மை தம்பதிகளுக்கு, செட்டிநாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றான காரைக்குடியில், மகனாகப் பிறந்தார். ஊரில் செல்வாக்குப் பெரிதாக உள்ள தனவந்தரின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பொதுவாகவே பணிவையும் தெய்வ பக்தியையும் ஊட்டி வளர்க்கும் குடும்பமாகையால், சிறு வயது முதலே உயர்ந்த குணங்களைக் கற்று வளர்ந்தார். திண்ணைப் பள்ளிக்கூடங்களிலேயே கல்வி கற்ற அவர், இன்றைய நிலையில் எடுத்துச் சொல்லத் தகுந்த அளவு பெரிய படிப்பேதும் படித்திடவில்லை. ஆனால்,அவரின் புத்திக் கூர்மையும், மொழிப் புலமையும் இளமையிலேயே புலனாகியது என்றால் மிகையில்லை. வணிக குலம் வேரூன்றியிருந்த பர்மாவிற்குச் சென்று வணிகக் கலையையும் கற்ற அவர், தனது பத்தொன்பதாம் வயதில், 1927 ஆம் ஆண்டு, காரைக்குடிக்கு வருகைபுரிந்த மகாத்மா காந்தியடிகளுக்குத் தொண்டு செய்யும் இளைஞர் படையின் தலைவரானார். அன்று தொடங்கி,காங்கிரஸ் கட்சியில் (அன்றைய, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய தேசியக் காங்கிரஸ்) தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1936லிருந்து சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்ட கணேசன், 1938 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான் என்ற ஊரில் விடுதலைப் போராட்டக் கூட்டத்தில் கலந்து கொள்கையில் போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி, சட்டையைப் பிடித்திழுக்க, அவரின் சட்டை கிழிந்தது. பொது இடத்தில் சட்டை கிழிய, கோபத்துடன் போலீஸாரை நோக்கி, இந்தியா சுதந்திரம் அடையும்வரை சட்டை அணியப் போவதில்லை என்று சபதமெடுத்தார். அதேபோல் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக சட்டை அணியாமலேயே பழகிவிட, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் அதே வழக்கத்தைத் தொடர்ந்து, கடைசிவரை தனது நான்கு முழக் கதர் வேட்டியும், மேல் துண்டுமாய் வாழ்ந்து முடித்தவர் சா. கணேசன்.

காந்தியடிகள் தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, காரைக்குடி தொடங்கி டெல்லி வரை நடைப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். கிட்டத்தட்ட 600 மைல்களைப் பாதயாத்திரையாகவே கடந்தவர் அவர். 1942 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அந்தப் போராட்டத்தில், காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை நகரில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சலவைத் தொழிலாளி இறந்து பட, ஆத்திரம் கொண்ட போராளிகள் அந்தச் சலவைத் தொழிலாளியின் துணி மூட்டைகளுக்குப் பெட்ரோல் இட்டு, தீ வைத்துக் கொளுத்தி நீதிமன்றம் மீது எறிந்தனர். கோர்ட் தீப்பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தச் சரகங்களின் தலைவராக இருந்த சா. கணேசன்மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி வெள்ளை அரசு அவரைத் தேடத் தொடங்கியது. அவரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது. அவரது வீட்டையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்ததுடன், அவற்றை அடித்தும் நொறுக்கினர் போலீஸார். அவர்களிடமிருந்து தப்பி, மாறு வேடத்தில் ஊர் ஊராகச் சுற்றிப் பிரசாரம் செய்து, சுதந்திர வேள்வியை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார் கணேசன். ஒரு நிலையில், போலீஸார் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அவர் எங்கே என்று விசாரித்து, பலவிதத்திலும் அடித்து நொறுக்கிச் சித்திரவதை செய்ய, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். அரசியலில் தனது ஆசானாகவும்,சொந்த வாழ்வில் பெருமளவு மரியாதை வைத்திருந்தவருமான திரு. இராஜகோபாலாச்சாரியாரை நாடி அவரது அறிவுரை கேட்க, அவரின் அறிவுரைப்படி சென்னையில் சென்று போலீஸாரிடம் சரணடைந்தார். அவரை தேவகோட்டைக் கோர்ட் எரியூட்டப்பட்ட சம்பவத்தில் முதற் குற்றவாளியெனத் தீர்ப்பளித்து, 18 மாதம் சிறையிலடைத்தது கொடுமைகளுக்குப் பெயர்போன ஆங்கில அரசு. இன்றைய உத்திரப் பிரதேசத்திலுள்ள அலிபூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவர், அங்கிருந்த கைதிகளுக்கு இராமாயணம் உட்பட பல இந்து மத ஆன்மீக நூல்களைச் சொற்பொழிவு முறையில் விளக்கி, சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியிருந்தார்.

தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வரிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும்,சுதந்திர இந்தியாவில், தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை வாங்கிக் கொள்ள மறுத்தவர் கணேசன். இதற்கான ஓய்வூதியத்தை வாங்கினால், கூலிக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆகிவிடும் என்பதே அதற்கு அவர் கொடுத்த விளக்கம். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தாலும், இராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுதந்திராக் கட்சியைத் தொடங்குகையில், அதில் ஸ்தாபன உறுப்பினராகச் சேர்ந்து, காரைக்குடிப் பகுதியில் கட்சியைத் தொடங்கி, நிர்வகித்தார். இக்கட்சியின் சார்பில் 1962 ஆம் ஆண்டுத் தேர்தலில், காரைக்குடித் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 வரை அந்தப் பதவியிலிருந்து தொண்டாற்றிய அவர், 1968லிருந்து 74வரை தமிழக சட்ட மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். இவையெல்லாம் அவரின் அரசியல் பணிகள், அவரின் தமிழ்த் தொண்டை இப்போது பார்க்கலாம்.

கம்பன் பிறந்த தேதி எப்போது என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், வரலாற்றாராய்ச்சியாளரான கணேசன் தானே ஆய்ந்து கண்டுபிடித்த கம்ப இராமயணம் அரங்கேற்றப்பட்ட நாட்களுக்கான குறிப்பு, ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அந்த நாளையே கம்பன் கழகத்தைத் தொடங்குவதற்கான நாளாகத் தேர்ந்தெடுத்தார். (கி.பி. 886 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 23 அன்று சடையப்ப வள்ளலின் தலைமையில் கம்ப இராமாயணம் வெளியிடப்பட்டது என்பது ஆய்வின் முடிவு). அதே ஆண்டு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கம்பன் திருநாள் கொண்டாடத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் இந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. (கொரானா பாதிப்பினால் இந்த வருட விழா, யூ ட்யூப் வீடியோக்களாக வெளிவந்துள்ளது). கழகம் மற்றும் விழாக்கான முக்கிய காரணம், கம்பராமாயணத்தையும், அதன் சாராம்சமாகிய ஹிந்து மதக் கருத்துக்களையும்,கம்பனின் கவிச்சுவையையும் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமென்பதே. தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களையெல்லாம் தன் சொந்தத் தேர்வில் முத்துக்களைப் போல் தேடி எடுத்து மேடைகளுக்கு அறிமுகப்படுத்தினார். கம்பன் விழாவில் பட்டி மண்டபம்,கவியரங்கம்,கருத்தரங்கம் எனப் பலவிதமான சுவையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.  அனைத்தும் மிகவும் உயர்தரமான விதத்தில் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் சா. கணேசனின் கடுமையான உழைப்பும், விதிமுறைகளுமே என்றால் அது மிகையாகாது. வெகுஜனங்களைக் கவர வேண்டுமெனில், திரைப்படம் சம்பந்தப்பட்ட செய்திகளோ, தரம் தாழ்ந்த நகைச்சுவைகளோ இருக்க வேண்டுமென்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாகிவிட்ட இன்றைய தமிழ் மேடைகளை மட்டுமே பார்த்தவர்களுக்கு, கம்பன் கழக மேடைகள், அதிலும் குறிப்பாக சா. கணேசன் தலைமை ஏற்று நடத்திய மேடைகள், மிகவும் வியப்பைத் தரும் என்பதே உண்மை.

1968 ஆம் ஆண்டு, அவரது அறுபதாவது பிறந்த நாளையொட்டி, மணிவிழாப் பரிசாகத் தொண்டர்களால் வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்ப் பணத்தைக் கொண்டு,காரைக்குடியில் கம்பனுக்கு ஒரு பெரிய மணி மண்டபம் கட்டத் தொடங்கினார். இந்தக் கட்டடம் முற்றுப் பெற்று, பயன்படத் தொடங்கப்பட்ட ஆண்டு 1972. அன்றிலிருந்து இன்றுவரை கம்பன் விழா இதே வளாகத்திலேயே வருடாவருடம் நடத்தப்படுகிறது. முதலில் காரைக்குடியில் மட்டுமே செயல்பட்டு வந்த கம்பன் கழகம், வேறுசில நகரங்களுக்கும் கிளையாகப் பரவி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் சில வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. பெரும்பாலான கழகங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன.

உலகில் வேறெங்கிலும், வேறெந்த மொழியிலும் இல்லாத வகையாக, தமிழ் மொழிக்கு, தமிழ்த்தாய் கோயில் என்று நிறுவினார். இந்தக் கோயில் காரைக்குடிக் கம்பன் மணிமண்டப வளாகத்தினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய், அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோரின் சிலைகள் சன்னதிகளாக வைக்கப்பட்டு ஒரு தமிழ்க் கோயிலாகச் சிறப்புற்று விளங்குகிறது.

தமிழுக்காகவே தன்னை அற்பணித்துக் கொண்ட சா. கணேசன்,மிகச் சிறந்த எழுத்தாளர், சிற்பக்கலை வல்லுனர், கல்வெட்டாளர் மற்றும் வரலாற்றாராய்ச்சியாளர். கல் சொல்லும் கதை, பிள்ளையார்பட்டித் தல வரலாறு, இராஜராஜன், தமிழ்த் திருமணம் ஆகியவை இவரின் மிகவும் பிரபலமான நூல்கள். (வைதீகத் திருமணத்தைக் கேலி செய்து,பகுத்தறிவு என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத பலவற்றையும் பேசி தமிழர் திருமணம் என்று எதையெதையோ சொல்பவர்கள் ‘தமிழ்த் திருமணம்’ புத்தகத்தைப் படிப்பார்களாக!).

தன்னைத் தானே புகழ்ந்து கொண்டும், பணங்காசு செலவழித்துப் பட்டங்கள் வாங்கிக் கொண்டும், கொலைக் குற்றவாளிகள் கூட பெயருக்குப் பின்னால் ‘ஆர்’விகுதி சேர்த்துக் கொண்டும் பெருமைப்படுவதைத்தான் இந்தக் காலத்தில் பார்க்கிறோம். கம்பனுக்கு அளப்பரிய தொண்டு செய்த அவரைக் கம்பனின் வலக்கரம், தளபதி என்றெல்லாம் பட்டமளித்துப் பெருமைப் படுத்த நினைத்த தொண்டர்களிடம் அவரே இணங்கி வாங்கிக் கொண்ட பட்டம் ‘கம்பன் அடிப்பொடி’, அதாவது, கம்பனின் கால் தூசு என்பதே.

பலவிதங்களிலும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய சா. கணேசன் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி நிலவுலக வாழ்வை நீத்தார். அன்னாரை, அவரின் பிறந்த தினமான இன்று நினைத்து, மரியாதை செலுத்துவது தமிழ்ப்பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sadagopan says:

    Excellent write up……Saa Ga was unique and was rare one of his times.
    God bless
    Sadagopan

Leave a Reply to Sadagopan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad