அவள் குழந்தை
விமானம் கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிறாள். உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே பார்த்தேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் கூட அவளால் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார முடியவில்லை. முகத்தைப் பார்த்தால் இந்தியர் மாதிரிதான் தெரிந்தது. தன் உடையை திருகிக் கொண்டும், முடியை இழுத்துக் கொண்டும், பிறகு சற்றுநேரம் கண்களை மூடியும்….என்று பதட்டத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டேதான் இருந்தாள். காபி, டீ எதுவும் கொடுக்கப் பட்ட போது அவைகளை மறுத்தாள். உடல் நிலை சரியில்லையோ என்று நினைத்தேன். முதலில் என்ன விஷயம் என்று கேட்கலாமா என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று முடிவு செய்து கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் கண்களை ஓட்டினேன். கண்கள் புத்தகத்தில் லயித்தனவே அல்லாமல் மனதில் எதுவும் விழ வில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு மெல்ல கண்களை மூடினேன்.
பக்கத்து இருக்கையில் அவளுடைய அவஸ்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அதே போல் தொடர்ந்து ஒரு பதட்டத்திலேயே இருந்தாள். என்னால் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. மெல்ல அவளைத் திரும்பி நேராக பார்த்தேன். வயது இருபத்தி ஐந்து அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக இருக்க வேண்டும். கவலையை தெளிவாகக் காட்டும் முகம். என் கண்களை நேரில் பார்ப்பதைத் தவிர்த்த மாதிரிதான் எனக்குத் தெரிந்தது. “எதாவது உதவி தேவையா? என்று அவளிடம் ஆங்கிலத்தில் கேட்டேன். என் கையிலிருந்த புத்தகத்தை பார்த்தவள் “இல்லை” என்று தமிழில் பதில் கொடுத்தாள். “இல்லை உன்னைப் பார்த்தால் ஏதோ பதட்டத்தில் இருப்பதைப் போல எனக்குப் படுகிறது” நானும் தமிழுக்கு மாறினேன். மெல்லக் கண்களை மூடிக் கொண்டாள். எதையோ சொல்வதற்கு தயாராகிறாள் என்று எனக்கு பட்டது. அமைதியாகக் காத்திருந்தேன். அரை நிமிட அமைதிக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் இலேசாக கண்ணீர் துளிகள் தெரிந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. அவளது உதடுகள் துடித்தன. அழுகையை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.
“நாளைக் காலையில் என் தந்தையை தூக்கில் போடுகிறார்கள்.”
திடுக்கிட்டுப் போனேன். இதயம் துடிப்பது ஒரு வினாடி நின்றுவிட்டதோ என்று பட்டது. இது என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டாள்!? என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. அடப் பாவமே! என்று என்னையுமறியாமல் சற்று சப்தமாகவே கூறி விட்டேன். அவள் எங்கோ பார்த்தபடி தன் கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம்தான். என் உணர்ச்சிகள் சரசரவென்று மாறின. என் அனுதாபம், பச்சாதாபம் வடிந்து போக மெல்ல அவள் மேல் கோபம் வந்தது. கண்களில் எரிச்சலோடு அவளை உற்று நோக்கினேன். ஓங்கி அறையலாமா என்று கூட வந்தது.
“இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?!” என்று மெல்லிய குரலில் கேட்டேன். பின் பக்க இருக்கைகளில் இருப்பவர்களில் ஓரிருவர் மெல்ல எங்களை கவனிக்க ஆரம்பிப்பது தெரிந்தது. என்னுடைய எரிச்சலையும் கோபத்தையும் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமாக இருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் மீண்டும் கேட்டேன். “இந்நேரம் நீ அவரோடு இருந்திருக்க வேண்டாமா? அவரைப் பார்த்து பேசியிருக்க வேண்டாமா? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் இங்கே ஒரு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?” கோபத்தில் என் வார்த்தைகள் பாம்பு மூச்சு விடுவது போல வந்தன. என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதே மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன இந்த காலப் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? உறவுகளுக்கு இவ்வளவுதான் மரியாதையா? என்றெண்ணி எண்ணி புழுங்கினேன். பெற்றவர்கள் மேல் கூடவா மதிப்பு இல்லை? என்னை அமைதிப் படுத்திக் கொள்ள நான் மிகவும் சிரமப் பட வேண்டியிருந்தது. அவளோ அமைதியாக கண்களை மூடி மூடித் திறந்துக் கொண்டிருந்தாள். தன் கவலையை என்னிடத்தில் ஏற்றி விட்டதில் அவளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும் போல இருக்கிறது.
ஒரு விதத்தில் பார்த்தால் பாவமாகக் கூட இருந்தது. சிறு வயது, உலகம் தெரியாமல் இருக்கலாம். ஒரு வேளை லீவு எடுத்துக் கொண்டு இந்தியா வர முடியாமல் இருந்திருக்கலாம். நியாயமான காரணத்தினால் கூட அவள் இந்தியா செல்லாமல் இருந்திருக்கலாமோ? கேள்விகளும் பதில்களும் என்னை சுற்றி சுற்றி வந்தன. நானும் இருக்கையில் சாய்ந்து மனதை அலைபாய விட்டேன். அவளை மறக்க வேண்டும். நான் யார் இதில்? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? யார் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? பின்னால் வீடியோ பார்ப்பவர்களின் இருக்கைகளிலிருந்து மெல்லிய சப்தங்கள் வந்து கொண்டிருந்தன. விமானத்தின் இரைச்சல் அதிகமானதாகத் தெரிந்தது. பணிப்பெண்கள் அங்கும் இங்குமாக நடந்து பயணிகளின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் குசுகுசுப்பான பேச்சு சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களை மூடி அப்படியே இருந்தேன். பயணிகள், சேவைக்கு அழைக்கும் மணியை அழுத்தும் போது எழும் மென்மையான “டிங்” என்ற சப்தம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.
அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை. அவள் பழையபடியே மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள் மாறும் பொழுதும் அவள் முழங்கை என் மேல் இடித்துக் கொண்டே இருந்தது. என் கோபத்தை மெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தேன். ஒரு அரை மணி போயிருக்கலாம். அவளைப் பார்த்தேன். அழுதிருந்தாள் போல இருந்தது. மெல்ல அவள் கையை பற்றி ஆதரவாக அழுத்தினேன். சற்று அவளை ஆசுவாசப் படுத்தலாம் என்கிற நோக்கில், “அப்பிடி என்ன குற்றம் செய்தார் உன் அப்பா?” என்று அவளிடம் அடிக் குரலில் கேட்டேன். என் பின் இருக்கைக்காரர் அநேகமாக எங்களையே கவனித்துக் கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உதடுகள் துடிக்க மெல்லிய குரலில் எனக்கு பதில் சொன்னாள்.
“என் கணவரைக் கொன்று விட்டார். ஆணவக் கொலை”
வியப்பின் விளிம்புக்கே சென்று விட்டேன் நான். இதென்ன என்று அதிர்ந்தேன். என்ன இவள் இவ்வளவு விஷயங்களைத் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கிறாள்? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன செய்வாள் இவள்? கணவனைக் கொன்றவர் என்கிற விதத்தில் தந்தையை வெறுப்பாளா? பெற்றெடுத்த தந்தை என்கிற விதத்தில் அவருக்காக, அவருடைய மரணத்திற்காக வருத்தப் படுவாளா? மறுபடியும் அவளை உற்றுப் பார்த்தேன். வேறேங்கோ வெறித்துப் பார்த்த படி தன்னை மிகுந்த சிரமத்துடன் கட்டுப் படுத்திக் கொண்டு உட்காரந்திருந்தாள். அழுதழுது வற்றிப் போயிருப்பாள் என்பது புரிந்தது. இந்த சிறுவயதில் இப்படி ஒரு சோதனையா என்றும் நினைத்தேன். என்ன தலைவிதி இவளுக்கு? ஏன் இவளை ஆண்டவன் இப்பிடி சோதிக்கிறான்? நான் ஊமையாகி விட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. அவளால் வேறு என்ன செய்ய முடியும்? கணவனின் கொலைகாரன் இருந்தால் என்ன இறந்தால் என்ன என்கிற நினைப்பில் முதலில் வர வேண்டாம் என்று இருந்திருப்பாள். பிறகு என்ன காரணத்தினாலோ, யாருடைய அறிவுருத்தலாலோ வர வேண்டும் என்று கிளம்பியிருக்கலாம். எனவே தாமதாமாகி இருக்கலாம். ஆண்டவா இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது என்று தோன்றியது.
“நம்ப ஊரில் சூரிய உதயத்திற்கு முன் தண்டனையை நிறைவேற்றி விடுவார்கள்.” என்றேன் அவளிடம். அப்படி சொல்வது கூட அநாகரீகமோ என்று எனக்குத் தோன்றியது. மெல்ல ஒரு கணம் என்னிடம் பார்வையைத் திருப்பியவள், “உம்…தெரியும்” என்று முனகினாள்.
“இந்த விமானம் சென்னையை விடிகாலையில்தான் சென்றடையும்” என்றேன்.
சற்று திரும்பி அமர்ந்தவள், “தெரியும்” என்றாள்.
“அப்புறம். எல்லாம் தெரிந்து கொண்டு எதற்கு போகிறாய்? நீ வரப்போவது யாருக்காவது தெரியுமா அங்கே?” என்று கொஞ்சம் எரிச்சலோடு வினவினேன்.
“நீங்கள் சொல்வது சரி. முதலில் போவது இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு அவருடைய நியாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கின. திரும்பத் திரும்ப என்னுடைய சிறுவயதும், அதில் அவர் என்னை வளர்த்த விதமும் தோன்றிக் கொண்டே இருந்தன. கணவன் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. அப்பாவையாவது அவருடைய கடைசி நிமிடத்தில் உயிரோடு பார்த்து விட முடியுமோ என்கிற பேராசையில் லண்டனில் இருந்து கடைசி நேரத்தில் கிளம்பி விட்டேன்.” அவளை மறுபடி உற்றுப் பார்த்தேன். “இதுதான் தமிழர் பண்பாடோ?” என்று எனக்குத் தோன்றியது.
“இந்த விமானம் அதிகாலை ஐந்து மணிக்குதான் சென்னையை சென்றடையும். எல்லாவற்றையும் முடித்து கொண்டு நீ சிறைச்சாலையை சென்றடைய கண்டிப்பாக இரண்டு மணி நேரம் ஆகி விடும். அப்பொழுது எல்லாமே முடிந்து போயிருக்கலாம்.” என்ற என் அபிப்ராயத்திற்கு அவள் பதில் எதுவும் கூறவில்லை. கண்கள் மூடியிருந்தன. தன்னையே மறந்து நிலமையை அசைப் போடுகிறாள் என்று நினைத்தேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் பிரச்சினை என் மண்டையில் ஏறி விட்டது. எதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த விமானம் இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக சென்னையை அடைய முடியுமா? எனக்குத் தெரியவில்லை. எழுந்தேன். பணிப்பெண்ணை அழைத்து கேப்டனோடு பேச வேண்டும் என்றேன். அவள் ஓரக் கண்ணால் என் சக பயணியைப் பார்த்துக்கொண்டே கேப்டனோடு உள்பேசியில் பேச ஆரம்பித்தாள்.
கேப்டன் வெளியே வந்தார். ஆறடியை தொடும் உயரம். மழு மழு என்று சிரைக்கப் பட்ட தாடை. சிரிக்கும் கண்கள். என் கையை குலுக்கி விட்டு முன் சீட்டில் அமர்ந்தார். “என் உதவி எதற்காகத் தேவைப் படுகிறது?” என்று நாசூக்காகக் கேட்டார். நான் தணிந்த குரலில் அவரிடம் நிலைமையை விளக்கினேன். அமைதியாக முழுவதும் கேட்டார். “என்னால் எதுவும் செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். வேண்டுமானால் சென்னைக்கு பேசி இந்தப் பெண்ணை முதலில் வெளியே அனுப்ப முயற்சி செய்யலாம். அதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு முயற்சிதான்” என்று பதிலளித்தார். “இவள் தன் தந்தையைக் கடைசி கடைசியாகப் பார்ப்பதும், பார்க்க முடியாமல் போவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்று அவர் கைககளைப் பிடித்துச் சொன்னேன். அவர் வெறுமனே சிரித்தார். அந்த சிரிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். கலக்கத்திலும் வருத்தத்திலும் அமிழ்ந்து அவள் தூங்கி விட்டதைப் போல இருந்தது. “என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகி விட்டது” என்கிற ஒரு சின்ன திருப்தியோடு நானும் சற்று கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். அதற்குள் செய்தி மெல்ல விமானம் முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. பலர் குசுகுசுவென்று செய்தியை அசைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சரியாக அடுத்த நாள் காலை ஐந்து மணி பத்து நிமிஷத்துக்குதான் விமானம் சென்னையில் இறங்கியது. சொன்னபடியே எல்லோரும் அவளை முன்பாக அனுப்பி வைத்தோம். பலரும் அவளுக்காகப் பிரார்த்தனையும் செய்தோம். பலரின் கண்கள் கலங்கி இருந்தன. சென்னையில் அன்று நல்ல மழை. விமான நிலையத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்து விட்டு அவள் ஒரு வாடகைக் காரில் ஏறும் பொழுது மணி சரியாக ஐந்து நாற்பத்தி ஐந்து. என்னுடைய அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்து, எல்லாம் முடிந்த பின் சாவகாசமாக என்னிடம் பேசச் சொன்னேன். அதற்கு பிறகு நான் என் வழியே செல்ல ஆரம்பித்தேன். அவளை மறந்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் மனம் துடித்துக் கொண்டேதான் இருந்தது. என்ன ஆயிற்றோ தெரியலையே? அவள் அந்த இடத்திற்கு போய் சேரும் போது கண்டிப்பாக மணி ஏழு ஆகியிருக்குமே. அவளால் அவள் அப்பாவை உயிரோடு பார்க்க முடிந்ததா? சட்டப்படி அவள் அனுமதிக்கப் படுவாளா? அதுவும் தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் யாரையாவது உள்ளே வர அனுமதிப்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் என்னை சுற்றிக் கொண்டே இருந்தன. சட்டத்திற்கு உணர்ச்சிகள் புரியாதே!
இந்த வேதனை எனக்கு இரண்டு நாட்கள் நீடித்தது. இரண்டு நாள் கழித்து அவள் பேசினாள். மெல்லிய குரலில் என்ன நடந்தது என்பதை விவரித்தாள்.
***********
அந்தப் பெண் சிறைச்சாலையை அடையும் பொழுது எல்லாமே முடிந்திருந்தது. சிறையிலிருந்து சிறைக்கைதியைக் கிளப்பி அழைத்துக் கொண்டு போகும் போது யாரையும் அனுமதிக்கும் வழக்கமே கிடையாது. அவள் வந்த பொழுது அவளின் தந்தையை மேடைக்கு அருகே கொண்டு சென்று விட்டனர். எனவே அவளால் தன் தந்தையை உயிரோடு காணவோ அவரோடு பேசவோ முடியவில்லை. இது அவளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வரத் தவறி விட்டோமே என்று கதறி அழுதாள். அப்பாவைக் கடைசி நிமிடத்தில் காணப் போகிறோம் என்கிற மிகுதியான துடிப்பில் பசி, தூக்கம், களைப்பு எல்லாம் மறந்து இருந்தாள். அது இல்லை என்றானவுடன் மிதமிஞ்சிய சோர்வு அவளைச் சூழ்ந்து கொண்டது.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவள் அதிகாரியின் அறைக்கு அழைத்து செல்லப் பட்டாள். அறைக்குள் வந்தவள் பட்டும் படாமலும் தன் இருக்கையில் அமர்ந்தாள். ஒரு இறுக்கமான அமைதி அங்கே நிலவியது. அந்த அமைதி அவளை சட்டென்றுக் குலைத்துப் போட்டது. திடீரென்று உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இருபத்தி நாலு மணி நேரமாகப் பதுக்கி வைத்திருந்த சோகம் பீறிட்டுக் கிளம்பியது. குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதிகாரி அமைதியாக அவளை அழ விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீ வருவாய் என்று அவர் உணர்ந்திருந்தார்” என்று மெல்லிய குரலில் அவளுக்கு அதிகாரி சொன்னார். சட்டென்று அவள் நிமிர்ந்தாள்.
“ஆனால் எப்படி வருவாய்? எப்போது வருவாய் என்று அவருக்குத் தெரியாது.” வெடித்துக் கிளம்பும் தன் கேவல்களை அடக்கிக் கொள்ள அவள் முயற்சித்தாள். அதிகாரி கண் ஜாடை காட்டவே வெளியில் காத்துக் கொண்டிருந்த ஒரு காவலர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சிறிய பார்சல்.
“என் மகள் கண்டிப்பாக என்னைத் தேடி வருவாள். அப்போது நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது. இருந்தாலும் அவளுக்கு நான் எதாவது தர வேண்டும். தந்தே ஆக வேண்டும். அதில் நான் இருக்க வேண்டும். அது அவளுக்கு என்னை அவள் வாழ்வின் கடைசி நாள் வரை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் என்னை உயிரோடு இருப்பதாக உணர வேண்டும். என் வேண்டுகோள் அரசுக்கு இதுதான். என் கடைசி ஆசையும் இதுதான். என் முகத்தை கடைசியாக மூடிய அந்தக் கறுப்புத் துணியை அவளிடம் கொடுத்து விடுங்கள். அதில் கண்டிப்பாக நான் இருப்பேன். என் கடைசி மூச்சு அதில் உறைந்து இருக்கும்தானே. என் பார்வை அந்த இருளை மட்டுமே கடைசியில் பார்த்திருக்கும். அந்தத் துணியில் என் பார்வை உறைந்திருக்கலாம். என் மூச்சுக் காற்று கூட வெப்பத்தோடு அவளுக்காக அங்கே காத்துக் கொண்டு இருக்கலாம். அதை அவளுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் அவள் என்னைக் காணுவாள்” என்று உன் தந்தை சொன்னார்.
அதைக் கேட்டதும் அவள் இன்னும் உடைந்து போனாள். “ஐயோ அப்பா! என்று அவள் கதற, அவளின் நடுங்கும் கைகளில் அந்த பார்சலைக் காவலர் வைத்தார். என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியாமல் கதறி அழுதபடி அந்த துணிப் பார்சலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாளாம் அந்தப் பெண். அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தனவாம்.
“என் அப்பாவையே ஒரு குழந்தை மாதிரி என் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன் என்று அவள் என்னிடம் போனில் நடுங்கும் குரலில் சொன்னாள். அதற்கு பிறகு அவள் பிணவறைக்கு அழைத்துச் செல்லப் பட்டாளாம்.
எழுதியது : அனந்தன்.ரவி