\n"; } ?>
Top Ad
banner ad

அவலங்கள்

ள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் கீழே நூற்றுக்கணக்கான உயிர்களும், வீடுகளெனப்படும் லயன் அறைகளும், தேயிலைத் தோட்டங்களும், காய்கறிப்பாத்திகளும் புதையுண்டு போன பின்பு சின்னசாமிக்கும், வள்ளி புருஷன் குமாருக்கும் அந்த எஸ்டேட்டில் வேலையற்றுப் போய்விட்டது. எஸ்டேட்டின் எல்லையிலிருந்ததால் அவர்களது லயன் அறையோடு மேலும் சில லயன் அறைகள் மண் மூடாது தப்பி விட்டன. எனினும், எதிர்ப்புறக் காட்டிலிருந்து அவ்வப்போது காட்டு யானைகள் வந்து லயன் அறைகளைத் தாக்கி அவர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தன.

அந்த மண்சரிவின் போதே மண்ணால் மூடப்பட்டு செத்துப் போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என வறுமையினதும், பட்டினியினதும் கோரத் தாண்டவங்கள் உக்கிரமடையும் ஓரோர் பொழுதும் அந்த வீட்டின் பெரிய உயிர்கள் நான்கும் தமக்குள்ளேயே எண்ணிச் சோர்ந்து கொண்டிருந்தன. அது எவ்வளவு பெரிய விடுதலையாக இருந்திருக்கும்? பசி கிடையாது. பட்டினி கிடையாது. துணி தேவையில்லை. குடிக்க நல்ல தண்ணீர் தேவையில்லை. இராக் காலக் காரிருளில், சிதைந்த மண்சுவரை யானைகள் வந்து முகர்ந்து செல்லும் கணங்களில், அறைக்குள்ளிருந்து பதறிப் பயந்து நடுங்கிச் சிதையும் உயிரச்சம் வாட்டாது. மண் மூடி உயிர் கொண்டு செல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களென அவர்கள் தமக்குள் கதைத்துக் கொண்டார்கள்.

குமார் அப்போது வள்ளியைத் திருமணம் முடித்திருக்கவில்லை. அவனது வீடு மண்ணால் மூடப்பட்ட போது, அவன் டவுனுக்குப் போயிருந்தான். விஷயம் கேள்விப்பட்டு ஊருக்கு வந்து பார்த்தபோது அவனது வீடிருந்த தடயம் கூட அங்கிருக்கவில்லை. பசிய தேயிலைத் தோட்டங்கள் இல்லை. உயிர் மாத்திரம் எஞ்சியிருந்த முகங்களிடையே அவனுக்குத் தெரிந்த உறவுகள் அப்பா, அம்மா, தங்கை, தம்பிகள் என யாருமே இருக்கவில்லை. அவனுடைய எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. வீடுகளும், தேயிலைச் செடிகளும் அடர்ந்திருந்த நிலத்தையும், உறவுகளையும் செம்மண் மூடிப் போர்த்தி விட்டிருப்பதைக் கண்டான். அழுது அரற்றியவாறு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். எங்கெங்கிருந்தோ, யார் யாரோவெல்லாம் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். விக்கி விக்கி அழுது கொண்டிருந்த குமாரைக் கண்டவர்கள் அவனுக்கு ஏதோவொரு விதத்தில் ஆறுதல் சொன்னார்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் மேலும் மேலும் அவனது மனதை ரணமாக்கிக் கனக்கச் செய்து கொண்டிருந்தன.

இறுதியில், ஓரிரு மாதங்களிலேயே வேடிக்கைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர்தான் யதார்த்தம் உறுத்தியது. இனி வாழ வழியேது? அது மாத்திரம்தான் எப்போதும் சிந்தனையிலோடிக் கொண்டிருந்தது. இருக்க வீடில்லை. எத்தனை காலம்தான் இந்தக் குளிரிலும், மழையிலும் பசியோடு தொழிற்சாலைத் திண்ணையில் ஒண்டிக் கிடப்பது? யாரிடமும் கையேந்தாமல் உழைத்துச் சாப்பிட வேண்டும். அது மாத்திரம்தான் மன பாரத்தை ஓரளவுக்கேனும் குறைக்கும்.

ள வெயில் படர்ந்திருந்த ஒரு காலை வேளையில் அவர்களது ஊரிலிருந்து இருபது மைல் தொலைவிலிருந்த நகரத்துக்கு வேலை தேடிப் போனான். கூலி வேலைதான் கிடைத்தது. அவனது அன்றாடப்பாட்டுக்கு அது போதுமானதாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் சின்னசாமி பழக்கமானார். மரம் தரிக்கவோ, விறகு வெட்டவோ, மணல், சீமெந்து சுமக்கவோ என்ன வேலையானாலும் இருவரும் சேர்ந்தே போய் வந்தார்கள். அவன் நகரத்திலேயே கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டான். சில மாதங்களில் அதற்கும் பிரச்சினை வந்தது.

ஓரிரவு, நகரத்தில் நடைபெற்றிருந்த கடையுடைப்புக்கும், திருட்டுக்கும் சந்தேக நபராக அவனையும் போலிஸ் பிடித்துக் கொண்டு போய் விசாரித்தது. உடம்பின் ஓரோர் கணுக்களும் சிதிலமடைந்து வலியெடுத்துக் கொண்டிருந்தபோது நிறைவுற்ற அவனுடனான விசாரணையில், அவன் நிரபராதியெனச் சொல்லி போலிஸ் நிலையத்திலிருந்து துரத்தி விட்டார்கள். நொண்டி நொண்டிப் போய் பக்கத்திலிருந்த அரசாங்க வைத்தியசாலையில், மலையில் கால் தடுக்கி விழுந்ததாகச் சொல்லி மருந்து கேட்டான். அப்படித்தான் போலிஸ் அவனிடம் மருத்துவமனையில் கூறச் சொல்லியிருந்தது. அவ்வாறாக மலையில் கால் தடுக்கி விழுந்து காயமுற்ற சித்திரவதைக்குட்பட்டவர்கள் பல நூறுபேரைக் கண்டிருக்கக் கூடிய அந்த மருத்துவமனை, அவனையும் உள்வாங்கி சிகிச்சையளித்து சீராக்கியது.

விஷயம் கேள்விப்பட்டு சின்னசாமிதான் தினமும் அவனுக்கு ரொட்டியும், வாழைப்பழமும் கொண்டு வந்து கொடுத்தார். வைத்தியசாலையிலிருந்து விடைபெறும் நாளில் செல்ல இடமற்றுத் தவித்தவனை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டுக்குக் கூட்டி வந்தார். சிறு வயதிலிருந்து சேமித்து வந்த உண்டியலை, ஆட்டோவுக்குக் காசு கொடுப்பதற்காக உடைக்க வேண்டியிருந்தது வள்ளிக்கு. அவள் விருப்பத்துடனேயே அதைச் செய்தாள். ஏற்கெனவே மூவர் குடியிருந்த அந்தச் சிறிய லயன் அறையில் குமார் பூரண குணமடையும் வரையில் தங்கிக் கொள்ள இடம் கிடைத்தது.

வள்ளியும், அவளது அம்மா மாரியம்மாளும் தினமும் காலையில் கொழுந்து பறிக்கப் போக முன்பு அவனுக்கும் சேர்த்து ரொட்டி தயாரித்து வைத்து விட்டுப் போனார்கள். சின்னசாமி கூலி வேலைகளுக்குப் போய் வந்தார். நகரத்திலிருப்பது போல இருளை விரட்டும் மின்சாரம் அவர்களது ஊரில் இருக்கவில்லை. மலையிலிருந்து வரும் பீலித் தண்ணீரைத்தான் குடிப்பதற்குக் கூட பயன்படுத்த வேண்டியிருந்தது. அவன் எழுந்து நடக்க இயலுமான பின்பு அவ்வப்போது வெற்றுக் குடங்களை மலைக்கு எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்.

அவன் பூரணமாகக் குணமாக ஒரு மாதமளவில் எடுத்தது. இடைப்பட்ட காலத்தில், ஊரில் எஞ்சியிருந்த சில மனிதர்கள் அந்த வீட்டில் அவனது தங்கலைக் குறித்து ஒரு மாதிரியாகக் கதைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப் பேச்சுக்கள் சின்னசாமியையும், மாரியம்மாளையும் பெரிதும் வதைத்தன. குமாரின் விருப்பத்தைக் கேட்டறிந்த பின்னர், நால்வருமாக நகரத்துக்குப் போய் அங்கிருந்த கோயிலில் குமாரும், வள்ளியும் மாலை மாற்றி, தாலி கட்டி, அரசாங்கப் பதிவலுவலகத்துக்குப் போய் திருமணத்தையும் பதிவு பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

இன்று அவர்களுக்கென்று ஒரு குழந்தை இருக்கிறது. அதுதான் காலையிலிருந்து இடைவிடாது அழுது கொண்டிருந்தது. அதன் பசி தீர்க்குமளவிற்கு வள்ளியிடம் பால் சுரக்கவில்லை. சக்தி நிறைந்த போஷாக்கு உணவுகள் கிடைத்தால்தானே பால் சுரக்கும்? மாரியம்மாள் குழந்தையைத் தனது மார்போடு அணைத்தவாறு தாலாட்டிப் பாடிக் கொண்டிருந்தாள். குமார் காலையிலேயே கூலி வேலைக்கெனப் புறப்பட்டுப் போயிருந்தான். அவன் வரும்போது குழந்தைக்கு பால்மா வாங்கி வருவதாகச் சொல்லியிருக்கிறான். அதற்கும் காசு வேண்டும்.

விஷப்பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியம்மாளின் இடது கால் பாதத்தின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியிருந்தார்கள். அதனால் அவள் வீட்டுக்குள் முடங்க வேண்டி வந்தது. மாரியம்மாளைப் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலும், வள்ளியின் பிரசவ காலத்திலும் பட்ட கடன்கள் ஏற்கெனவே ஏராளமிருக்கின்றன. அவற்றைத் தீர்க்கவே குமாரும், சின்னசாமியும் பகல், இரவு பார்க்காமல் கூலி வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

பேறுகாலம் நெருங்கும் வரைக்கும் வள்ளி கொழுந்து பறிக்கப் போய் வந்தாள். வயிற்றுச் சுமையழுத்த, வழுக்கிக் கீழே தள்ளும் சேற்றுச் சரிவுகளில் முதுகில் கனக்கும் பெரிய மூங்கில் கூடையோடு அவள் ஒவ்வொரு செடிக்குமாக அலைவது பார்க்க பரிதாபமாக இருக்கும். குளிரில் விறைத்திருந்த விரல்களால் தேயிலைக் கொழுந்துகளை வேகவேகமாகப் பறித்தெடுப்பதுவும் முன்பு போல முடியவில்லை. அவளும், மாரியம்மாளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒவ்வொரு நாளும் அவளுக்குக் கொழுந்து பறிக்கக் கொடுக்கப்படும் மலைக்கே, மாரியம்மாளையும் கொழுந்து பறிக்க அனுப்பி வைத்தான் கங்காணி. அது அவளுக்கு ஆறுதலையும், மன தைரியத்தையும் தந்திருந்தது.

களைப்பும், தாகமும் தோன்றும்போதெல்லாம் போத்தலில் எடுத்து வந்திருந்த தேயிலைச் சாயத்தை, கருப்பட்டித் துண்டைக் கடித்தவாறு அவ்வப்போது குடித்துக் கொண்டார்கள். உலகம் முழுவதற்கும் களைப்பையும், அலுப்பையும் போக்கி இதமான வெப்பத்தைப் பகிரும் பானம் தேநீராக இருக்கிறது. அவள் விளம்பரங்களில் கண்டிருக்கிறாள். செந்நிறத் தேநீர் நிரம்பிய கண்ணாடிக் கோப்பையின் பின்னால், பசுமையில் செழித்து வளர்ந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களில், புதுத் துணியுடுத்தி கூடைகளை முதுகில் தாங்கியவாறு தேயிலைக் கொழுந்துகளை வருடும் மென்மையான கரங்களைக் கொண்ட அழகான இளம்பெண்கள் முகம் முழுவதும் விரியும் புன்னகையோடும், பெரும் உற்சாகத்தோடும் தளிர்களைப் பறித்தெடுத்து கூடைகளில் இடுவார்கள். விளம்பரப் பெண்களினூடாக மக்களைத் தேநீரின் பால் ஈர்க்கச் செய்ய உலகுக்குக் காட்டப்படும் தேநீரின் கதை, யதார்த்த வாழ்வின் எவ்விதத் துயரங்களினதும் சாயங்கள் பூசப்படாது எவ்வளவு ரசனை மிக்கதாகவும், சுவையானதாகவுமிருக்கிறது?!

அந்த விளம்பரங்களில் தேயிலைச் செடிகளே ஜீவிதமாகிப் போன ஜீவன்களின் கரடு பூத்த உள்ளங்கைகளோ, கவ்வாத்து வெட்டும்போது துண்டிக்கப்பட்ட விரல்களோ காட்டப்படுவதில்லை. கிலோக்கணக்கில் கனக்கும் கூடைகளை முதுகில் சுமந்தவாறு, சேற்றில் சருக்கும் மலைகளில் தினந்தோறும் பல தடவைகள் ஏறியிறங்கும் மனிதர்களின் களைப்போ, சோர்வோ காட்டப்படுவதில்லை. பெண்களுக்கு கர்ப்பமோ, மாதாந்தரத் தொந்தரவோ எதுவாக இருந்தாலும் வேலைக்கு வந்தேயாக வேண்டும். அவர்கள் ஒரு நாள் முழுவதுவும் தேயிலைச் செடிகளிடையே பாடுபட்டால் கிடைக்கப் போகும் சொற்பக் கூலியோ, மனப்பாரமோ எதிலும் காட்டப்படுவதில்லை. மழைக்காலங்களில், பறிப்பதற்கு பெருமளவு தளிர்கள் இருக்காது. அவ்வாறே பறித்துக் கொண்டு போனாலும், பறித்த தளிர்களில் ஈரமிருக்கிறதெனச் சொல்லி எடையைக் குறைத்துக் கூலி கொடுப்பார்கள். நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசியோடு அந்தச் சொற்பக் கூலியை வைத்துத் தாக்குப்பிடிக்கவே முடியாது. இவையெவற்றையும் விளம்பரங்கள் காட்டாது. அந்த விளம்பரங்களை ரசிக்கும் உலகமாந்தர் சொல்வது ஒன்று மாத்திரம்தான், ‘ஆமாம். உடலை உய்விக்கும் உன்னத பானம் தேநீர்தான்’!

தேநீர் குடிக்க பாறையில் அமரும் ஒவ்வொரு தடவையும் வள்ளி தனக்குத் தோன்றும் இவ்வாறான விடயங்களை மாரியம்மாளிடம் பகிர்ந்து கொள்வாள். மாரியம்மாளுக்கு புரிந்தும், புரியாமலும் இருக்கும். அவளுக்குத் தெரிந்த யதார்த்தமெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்தத் தேயிலைத் தோட்டங்களுக்கென்றே பாடுபட்டு வளர்ந்து, மடிந்து தேயிலைச் செடிகளுக்கென்றே உரமாகிப் போவதுதான். அவளது மூதாதையரும், சின்னசாமியின் மூதாதையரும் அப்படித்தான் தேயிலைச் செடிகளாக உருவாகித் தளிர்த்திருக்கிறார்கள்.

‘வள்ளி இந்தக் கஷ்டத்தையெல்லாம் சத்தமாப் பேசிடாதே… கங்காணி காதுல விழுந்துடுச்சுன்னா வேலைய விட்டுத் தூக்கிடுவான்… அப்புறம் இப்ப கிடைக்கிறதும் கிடைக்காமப் போயிடும். கஷ்டமோ நஷ்டமோ இப்படியே சீவிச்சுச் செத்துப்போனாப் போதும்’ என்று மாரியம்மாள் கூறிய நாளில்தான் அவளைப் பாம்பு தீண்டியது.

ழுத களைப்பில் குழந்தை, வள்ளியின் வற்றிய மார்பில் புதைந்தவாறு உறங்கத் தொடங்கியிருந்தது. சின்னசாமி வெளியே யாருடனோ கதைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மாரியம்மாள் நொண்டியவாறே வாசலுக்கு வந்து பார்த்தாள். ஏதோ ஒரு தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திலிருந்து வந்திருந்த குழு, கேமரா சாதனங்களோடு வெளியே நின்றிருந்தது. நேர்த்தியான ஆடையணிந்து ஒப்பனை செய்திருந்த இளம்பெண் ஒலிவாங்கியை சின்னசாமியிடம் நீட்டி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நான்கு வருடங்களுக்கு முன்பாக இந்த மலையிலிருந்த மூன்று ஊர்கள்தான் மண்சரிவால் மூடப்பட்டுப் புதையுண்டன. அதில் முந்நூறு பேருக்கு மேலே இறந்து போனார்கள். உயிர் பிழைத்தவர்கள் இந்த எல்லைக்குக் கீழே கூடாரம் அமைத்துக் குடியிருக்கிறார்கள். புதையுண்ட அந்த மூன்று ஊர்களின் மேலே மண்ணைச் சீரமைத்து தேயிலைச் செடிகள் நட்டு வளர்த்து நமது நாட்டின் வளத்தை அதிகரிக்க அரசாங்கம் வெளிநாட்டிடம் கடன்கோரியிருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்தென்ன?”

“எனக்கென்னங்க தெரியும்? ஏதோ எல்லாருக்கும் நல்லது நடந்தாச் சரிதான். மண் சரிஞ்சதுனால மேலேயிருந்த மனுஷங்க, ஆடுமாடு, ஸ்கூலு, கோயிலு எல்லாம் மூடப்பட்டுச்சு. காய்ச்சல், தலைவலின்னா மருந்தெடுக்க ஒரு இடமில்ல. இப்போ எல்லாத்துக்கும் டவுனுக்குத்தான் போக வேண்டியிருக்கு. டவுனுக்குப் போக, வர பஸ் வசதியில்ல. மைல் கணக்கு நடந்து போக வேண்டியிருக்கு. அதனாலயே இங்கிருக்குற நிறையப் பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதில்ல. கரன்ட் இல்ல. குடிக்க நல்ல தண்ணி இல்ல. ராத்திரியானா காட்டு யானை வந்து தாக்கிடுமோன்னு பயமாயிருக்கு. எங்க லயனைப் பாருங்க. சுவரெல்லாம் வெடிப்பு. யானை வந்து ஒரு அடி அடிச்சாலே சுவர் கீழே விழுந்துடும். பத்தடி லயன் காமராவுல ரெண்டு குடும்பம், மூணு குடும்பம்னு தங்கிட்டிருக்கோம். எதனால, எப்ப சாவு வந்துடும்னு தெரியாம வாழ்ந்துட்டிருக்கோம்.”

“அரசாங்கமும், அரசியல்வாதிகளும் இந்த மக்களுக்கு நிறைய சேவை செய்றதா தினமும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே. அவர்கள் யாரும் வரவில்லையா அம்மா?”

“அவங்களும் உங்களப் போலத்தான். வாறாங்க. பார்க்குறாங்க. போட்டோ புடிக்கிறாங்க. எனக்கு வாக்களியுங்கன்னு சொல்லி கும்பிட்டுட்டுப் போயிடுறாங்க. அவ்வளவுதான். இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில நாங்க எப்படி வாழுறோம்னு அவங்க பார்க்கல… யோசிக்கவுமில்ல… எங்க கடவுளும் மண்ணுக்குக் கீழ போனதுக்கப்புறம் இப்ப எங்களுக்குன்னு யாருமேயில்ல” என்றாள் மாரியம்மாள்.

– எம்.ரிஷான் ஷெரீப்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad