\n"; } ?>
Top Ad
banner ad

செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

கடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை.

“ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன்.

அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் தோன்றியது. செல்லத்தாயி உள்ளூரில் எட்டாம் வகுப்பை முடித்ததுமே அவளின் படிப்பை நிறுத்தி விடத்தான் அவளுடைய அம்மா துடித்தாள். செல்வராணிக்கும் செல்லத்தாயிக்கும் ஒரே ஊர் தான். காடாமங்களம். செல்லத்தாயியின் சிறுவயதிலிருந்தே அவளை அறிவாள் செல்வராணி. செல்லத்தாயி மிகவும் நன்றாகப் படிக்கிற பெண்.

செல்வராணி குள்ளன்சத்திரத்தில்  உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். செல்லத்தாயி எட்டாம் வகுப்புப் படிக்கும் வரைக்கும் செல்வராணியைத் தேடிப் போயித்தான் வீட்டுப்பாடங்களை எல்லாம் செய்வாள். மிகவும் சூட்டிகையான பெண். ஒருமுறை சொல்லிக் கொடுத்தால் போதும்; கற்பூரம் போல கப்பென்று பிடித்துக் கொள்வாள்.

அப்படிப்பட்ட பென்ணை அவளின் வீட்டில் எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு அனுப்ப பிடிவாதமாக மறுத்தார்கள். செல்வராணி போய் செல்லத்தாயின் அம்மாவிடம் பேசியபோதும் அவள் செல்லத்தாயியை பள்ளிக்கு அனுப்ப அவ்வளவு சுலபத்தில் சம்மதிக்கவில்லை.

“இப்பவோ பெறகோன்னு உருண்டு திரண்டுக்கிட்டு வர்றாள். இதுக்கப்புறமும் அவள எதுக்குப் படிக்க வைக்கனும் செல்வி…..” என்று முதலில் மறுக்கவே செய்தாள் செல்லத்தாயின் அம்மா.

செல்வராணி தான், “இன்னும் ஒரு நாலைஞ்சு வருஷம் படிக்க வச்சீங்கன்னா, அவளும் என்னையப் போல டீச்சரா ஆயிடுவா சின்னாத்தா. உங்களை எதுக்கும் எதிர்பார்க்க மாட்டாள். அவளே சம்பாரிச்சு கல்யாணத்துக்குத் தேவையான நகைநட்டுன்னு எல்லாம் சேர்த்துவச்சு வாங்கிக்குவாள்….” என்று சொல்லவும் செல்லத்தாயின் அம்மாவும் அரைமனதாகச் சம்மதித்து அவளுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

செல்வராணியின் அம்மாவும் அப்பாவும் பிழைப்பு தேடி காடாமங்களம் கிராமத்திற்கு போய், அங்கிருந்த பெருந்தனக்காரரிடம் பண்ணையாளாக  வேலைக்குச்  சேர்ந்து, அவர்களின் தோட்டத்திலேயே  போட்டுக்  கொடுத்த குடிசையில் குடியேறி வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்.

செல்வராணி பிறந்து வளர்ந்து மதிய உணவிற்காக பள்ளிக்குப் போகத் தொடங்கினாள். ஆச்சர்யமாக அவளுக்கு படிப்பு வந்தது. அதனால் அவளை வெளியூர்க்கெல்லாம் அனுப்பி படிக்க வைத்தார்கள். செல்வராணி ப்ளஸ் டூ முடித்த்தும் டீச்சர் ட்டிரைனிங்கில் சேர்ந்து படித்து முடித்தாள். அவளுக்கு குள்ளன்சத்திரத்தில்  உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. அங்குதான் அவள் மாணிக்கத்தைச் சந்தித்தாள். அவரும் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்துக்  கொண்டிருந்தார்.

மாணிக்கம் தான் செல்வராணியை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பெரும்பங்கு ஆற்றினார். அவருடைய வழிகாட்டுதலிலும் நச்சரிப்பிலும் தான் செல்வராணி வேலை பார்த்தபடியே,  தொலைதூரக் கல்வியில் பி.எஸ்.ஸி, எம்.எஸ்.ஸீ,  பி.ஏட். என்று படித்து வேலையின் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு முன்னேறிப் போனாள். மாணிக்கத்தின் கரிசனமும் கனிவும் கண்டிப்பும் அவளைப் பெரிதும் ஈர்க்கவே காதலாகிக் கசிந்துருகி அவனையே  கல்யாணமும் செய்து கொண்டாள்.

கொஞ்சநாட்களாக அவள் ஊர்ப்பக்கமே போகாது இருந்து விட்டாள். அதனால் தான் அவளுக்கும் செல்லத்தாயிக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே போய் விட்டது.

வருகிற வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததும் காடாமங்களத்திற்குப் போய் அம்மாவுடன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்றும் அப்போது செல்லத்தாயியையும் ஒருவழி எட்டிப்போய் பார்த்துவிட்டு வரலாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் செல்வராணி.

அதன்படி செல்வராணி அவளுடைய கிராமத்திற்குப் போனபோது தான் தெரிந்தது செல்லத்தாயிக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும் அதனால் தான் அவள் பள்ளிக்கு வரவில்லை என்பதும்.

செல்வராணி ஊருக்குப் போன தினத்தின் இரவிலேயே செல்லத்தாயிக்கு பேயோட்டிக் கொண்டிருந்தார்கள். அவள் வீட்டிற்கு முன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க, கோடாங்கி அவளுக்கு முன்னால் உட்கார்ந்து உடுக்கை அடித்துக் கொண்டிருந்தார். ஊர்ஜனம் மொத்தமும் அவர்களைச் சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உடுக்கை ஒலியின் ரிதத்திற்கு அவள் அமைதியாக உட்கார்ந்திருக்கவும் கோடாங்கி சாட்டையால் செல்லத்தாயியை அடிக்கத் தொடங்கினார். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அடி தாங்கமாட்டாமல் ஒருகட்டத்தில் தலைமுடியைச் சுழற்றி சுழற்றி ஆடத் தொடங்கினாள் செல்லத்தாயி.

கோடாங்கி ஏதேதோ கேட்க அவளும் வாய்க்கு வந்தபடி ஏதேதோ கதை சொல்லிக் கொண்டிருந்தாள். “குழந்தை மேல வந்து இறங்கியிருக்கிறது யாருன்னு உண்மையச் சொல்லீடு……” என்று கோடாங்கி சாட்டையைச் சுழற்றவும், “நான் செப்புத் தானும்; நான் செப்புத் தானும்….” என்றாள் செல்லத்தாயி.

“குழந்தை மேல தெலுங்குப் பேயி இறங்கி இருக்கு…….” என்று குழந்தையின் அம்மாவிடம் கோடாங்கி சொல்லிவிட்டு, “சொல்லு; நீ யாரு, உன் கதை என்னன்னு சொல்லு…..” என்று சாட்டையை மறுபடியும் சுழற்றினார். செல்லத்தாயி கோடாங்கியின் சாட்டையைப் பயத்துடன் பார்த்தபடி தெலுங்கும் தமிழும் கலந்து பேசினாள். அவள் பேசியதின் சாராம்சம்:

செல்லத்தாயியைப் பிடித்திருக்கும் பேயின் பெயர் நாகலட்சுமி என்றும் அவளை அவளின் புருஷனும் அவனுடைய குடும்பமும் சேர்ந்து கொலை செய்து ஒரு காட்டுக்குள் கொண்டு போய்ப் புதைத்து விட்டு காவல்நிலையத்தில் அவளைக் காணவில்லை என்று புகார் பண்ணிவிட்டார்கள். அவள் அங்கேயே உலாத்திக் கொண்டிருந்ததாகவும் அந்த வழியில் பள்ளிக்குப் போன செல்லத்தாயியைப் பிடித்துக் கொண்டதாகவும் சொன்னாள்.

இது குள்ளன்சத்திரத்திற்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் உண்மையாக நடந்தது என்று அந்தப் பக்கங்களில் அரசல் புரசலாகப் பேசப்படுகிற கதை தான்.  உண்மைகளும் புனைவுகளும் சரிவிகிதத்தில் கலந்துள்ள கதை. இந்தக் கதை அந்தப்பகுதியில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

அதை உள்ளூர்ச் சிறுமிகளின் மூலம் அறிந்து கொண்ட செல்லத்தாயி இங்கு இட்டுக்கட்டிச் சொல்கிறாள் என்று செல்வராணிக்குத் தோன்றியது. ஆனால் எப்படி அட்சர சுத்தமாய்த் தெலுங்கு பேசுகிறாள் என்று தான் செல்வராணிக்குப் புரியவில்லை.

ராத்திரியெல்லாம் கோடாங்கி உடுக்கை அடித்து செல்லத்தாயியை ஆட்டுவித்துக் கொண்டிருந்தார். நடுநிசிக்கு அப்புறம் அவருக்கு வேண்டிய பொருட்களை – நாட்டுக்கோழி, முட்டை, அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், உடுப்புகள் இன்னபிற – செல்லத்தாயின் வாயிலிருந்து இவற்றை யெல்லாம் அமாவாசை தினத்தில் படையலாகப் படைக்கச் சம்மதித்தால், குழந்தையின் உடலிலிருந்து வெளியேறிப் போய்விடுவதாக சொல்ல வைத்தார்.

செல்லத்தாயியின் அம்மா அவற்றையெல்லாம் ஒன்று விடாமல் படைப்பதாக உத்திரவாதம் தரவும், குழந்தையின் தலையில் திருநீரைக் கொட்டி அவளின் தலையிலிருந்து ஒற்றை முடியைப் பிடுங்கிக் கொண்டு, பேய் இறங்கி விட்டதாகச் சொல்லி குழந்தையை உள்ளே அழைத்துப் போகச்சொல்லி விட்டார்.

படையலுக்கான பொருட்களைத் தயாராக வாங்கி வைக்கும்படியும் வருகிற அமாவாசை இரவில் எல்லாவற்றையும் படைத்து குழந்தையைப் பேயின் பிடியிலிருந்து முழுசாய் விடுவித்து விடலாம் என்றும் சொல்லி கிளம்பிப் போனார் கோடாங்கி.

செல்லத்தாயி வெயிலில் வாடிய தளிராக  மிகவும் சோர்ந்து போய்த் தெரிந்தாள். வீட்டிற்குள் போனதும் அப்படியே படுத்துத் தூங்கி விட்டாள். செல்வராணியும் அவளின் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அடுத்தநாள் காலை செல்வராணி செல்லத்தாயின் வீட்டிற்கு வந்தபோது அப்போதும் அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். அவளின் அம்மாவிடம் பேசிய போது, அவள் அழுது கொண்டே முதலில் செல்வராணியை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டத்தான் செய்தாள்.

“உன்னால தான் இவ்வளவும். நீதான் புள்ளையப் படிக்க வைக்கச் சொல்லி என் மனச மாத்தி பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்ட. இப்பப்பாரு. புள்ள என்ன கதிக்கு ஆளாகிட்டு வந்து நிக்கிறாள்ன்னு. காட்டு வழியில புள்ள போனா அங்க காத்துக் கருப்பு இருக்காதா என்ன?”

“இவள் மட்டுமா அந்த வழியில போறாள் சின்னாத்தா; எத்தனை புள்ளைங்க போகுது. நானும் என்னோட பதிமூனு வயசுலருந்து  ராத்திரி நேரத்துல யெல்லாம் அந்த வழியில போயி வந்துக்கிட்டுத் தான இருக்கிறேன். என்னை யெல்லாம் இதுவரைக்கும் எந்தப் பேயும் புடிக்கலையே சின்னாத்தா…”.

“நீயெல்லாம் ரொம்ப தைரியமான பொம்பளம்மா. அதனால உன் பக்கதுல யெல்லாம் எந்தப் பேயும் பிசாதும் அண்டாது. ஆனால் என் பொண்ணு  நானெல்லாம் பயந்தாங்கொல்லிகள்……” என்று சொல்லி இலேசாய்ப் புன்னகைத்தாள் செல்லத்தாயியின் அம்மா.

“அதேதான் சின்னாத்தா. அரண்டவங்களுக்கு இருண்டதெல்லாம் பேயிதான்; அதனால இது பேயி பிசாசோட வேலையெல்லாம் இல்ல சின்னாத்தா. செல்லத்தாயிக்கு வேற எதோ பிரச்னை; அத என்னன்னு கண்டு பிடிக்கனும்னா டாக்டர்கிட்டக் கூட்டிப் போகனும்….” என்றாள் செல்வராணியும் சிரித்துக் கொண்டு.

அன்றைக்கு சாயங்காலம் மறுபடியும் செல்வராணி செல்லத்தாயியின் வீட்டிற்குப் போனபோது அவள் கொஞ்சம் சுதாரிப்பாக  இருந்தது போல் தெரிந்தது. செல்வராணியைப் பார்த்ததும் அழவே செய்தாள். அவளை ஆறுதலாய்த் தோளில் சாய்த்துக் கொண்டு “உனக்கு ஒன்னும் இல்லடா செல்லம். அக்கா வந்துட்டன்ல. கண்டிப்பா சரிப்படுத்தி வர்ற திங்கட்கிழமையே ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போயிடுறேன்…..” என்றாள்.

“பள்ளியோடத்துக்கு வேண்டாம்க்கா. நான் வீட்டுலயே இருந்துக்கிறேன்க்கா. அம்மாட்டச் சொல்லுக்கா. என்ன மருந்து மாத்திரைன்னாலும் சாப்புடுறேன். பூஜாரி, கோடாங்கிகிட்ட எல்லாம் கூட்டிட்டுப் போக வேணாமின்னு சொல்லுக்கா. எல்லோரும் ரொம்ப அடிக்குறாங்கக்கா…..” என்று அழுதாள்.

“அவங்க உன்னை அடிக்கலடி அசட்டுப் பெண்ணே! உன்மேல இறங்கியிருக்கிற பேய் பிசாசுகளைத் தான் அடிக்குறாங்க; அப்பத்தான் அதுக உன்னை விட்டுட்டுப் போகும்…..” என்றாள் செல்லத்தாயியின் அம்மா.

“ஆனா எனக்குத்தான வலிக்குது…..” என்று மறுபடியும் அழுதாள் செல்லத்தாயி.

“இனிமே உன்னை எங்கயும் கூட்டிக்கிட்டுப் போக மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு மட்டும் நாம மேட்டுப்பட்டியில இருக்குற டாக்டரப் பார்த்துட்டு வந்துடலாம். அவரு உன்னை அடிக்கல்லாம் மாட்டார்…..” என்று சொல்லி அவளைச் சமாதானப் படுத்தினாள் செல்வராணி.

மேட்டுப்பட்டி காடாமங்களத்திலிருந்து நடந்து போகிற தூரம் தான். ஆனாலும் செல்லத்தாயியை இந்த நிலையில் நடக்க வைக்க வேண்டாமென்று வண்டி கட்டிக் கொண்டு போனார்கள். போகிற வழியில் செல்லத்தாயிக்கு என்ன நடந்தது என்று அவளின் அம்மா செல்வராணியிடம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொன்னாள்.

அன்றைக்கு செல்லத்தாயி பள்ளியிலிருந்து கொஞ்சம் தாமதமாகத் தான் வந்திருக்கிறாள். அவள் வீட்டிற்கு வரும்போது இருட்டத் தொடங்கி விட்டிருந்தது. ஏண்டி இவ்வளவு லேட்டுன்னு அவளின் அம்மாவின் கேள்விக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் வீட்டிற்குள் போய்ப் படுத்துக் கொண்டாள்.

‘புள்ள மூஞ்சி ஏன் பேயறைஞ்சது மாதிரி இருக்குன்னு….’ செல்லத்தாயின் அம்மாவிற்கு சந்தேகம் வந்து, அவளின் கழுத்தில் கை வைத்துப் பார்த்திருக்கிறாள். உடம்பு இலேசாய் வெதுவெதுப்பாய் இருந்திருக்கிறது. பிள்ளைக்கு சுரம் வரும் போலிருக்கிறதே…. என்று கை மருந்தாக கசாயம் வைத்துக் கொடுத்திருக்கிறாள்.

ஆனால் இராத்திரி தூங்கும் போது செல்லத்தாயிக்கு சுரம் அதிகமாகி தூக்கித் தூக்கிப் போட்டிருக்கிறது. இரண்டு அரிசிச் சாக்குகளை அவள்மீது போட்டு மூடியும் செல்லத்தாயியால் குளிரைத் தாங்க முடியவில்லை. “அய்யோ, வேண்டாம்; வேண்டாம். என்னை விட்டுடுங்க….” என்றும் பினாத்தியிருக்கிறாள்.

அப்பொழுது தான் பிள்ளை எதையோ பார்த்துப் பயந்திருக்கிறாள் என்று செல்லத்தாயியின் அம்மாவிற்குத் தோன்றி ராத்திரியோடு ராத்திரியாக, அவளை காளி கோயிலுக்கு அழைத்துப் போயிருக்கிறாள். தூங்கிக் கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவரும் அவசரமாய் வேப்பிலைகளை கொத்தாய்ப் பறித்துக் கொண்டு வந்து அதை வைத்து மடார் மடார் என்று செல்லத்தாயின் தலையில் அடித்துவிட்டு திருநீறு பூசி விட்டிருக்கிறார். வீட்டிற்கு வந்து படுக்க வைக்கவும் செல்லத்தாயி கொஞ்சம் தூங்கி இருக்கிறாள்.

அடுத்தநாள் காலையிலும் சுரம் குறையாமல் இருக்கவும் கிராமத்தில் இருந்த நர்சம்மாவிடம் செல்லத்தாயியை அழைத்துப் போய்க் காண்பித்திருக்கிறாள். நர்சம்மாள் அப்போது அவளிடமிருந்த சுரத்திற்கான மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறாள்.

மாத்திரை சாப்பிட்டதில் சுரம் முற்றிலுமாய்க் குறைந்து விட்டது. ஆனால் தூக்கத்தில் பினாத்துவது மட்டும் நிற்கவே இல்லை. தூக்கத்திலேயே திடும் திடுமென எழுந்து புரியாத மொழியில் எல்லாம் பினாத்தி இருக்கிறாள். அவர்களின் கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லீம் வாத்தியார் இருக்கிறார். அவரின் மனைவியும் மந்திரிப்பு வேலைகள் எல்லாம் செய்வாள். அவளையும் வீட்டிற்கு வரச் சொல்லி செல்லத்தாயியை பார்க்கச் சொல்லி யிருக்கிறார்கள்.

வாத்தியார் மனைவி வீட்டிற்குள் நுழைந்ததுமே அவளின் கால்களில் நடுக்க மெடுக்கத் தொடங்கி விட்டது என்றும் நிச்சயம் இது ஆவியோட வேலைதான் என்றும் சொல்லி, தர்ஹாவிற்குக் கொண்டுபோய் ஓதிவிட்டு வரும்படி சொல்லியிருக்கிறாள்.

வாத்தியாரின் மனைவியும் உடன் வர செல்லத்தாயியை பக்கத்து டவுனில் இருக்கும் தர்ஹாவிற்கும் அழைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களும் மந்திரித்து ஓதிய தண்ணீரையெல்லாம் குடிக்கக் கொடுத்து, செல்லத்தாயியின் கையில் வண்ணவண்ணமாய்க் கயிறுக்ளைக் கட்டி, ‘இனி பேய் பிசாது எதுவும் அண்டாது. தைரியமாய்ப் போயிட்டு வாங்க….’ என்று உறுதிமொழி அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு இரவுகளில் சத்தம் போடாமல் தூங்கி இருக்கிறாள் செல்லத்தாயி.

சரி பிள்ளை சரியாகி விட்டாள் என்று அவளை மறுபடியும் பள்ளிக்குப் போகச் சொல்லவும் அவளின் முகமெல்லாம் இருண்டு உடம்பு மடக்கவே முடியாத அளவிற்கு விறைத்து கைகளைத் தூக்கிக் கொண்டு திங்கு திங்கென ஆடத் தொடங்கி இருக்கிறாள் செல்லத்தாயி. பூசாரிதான் இது கோடாங்கியோட உடுக்கடிக்குத் தான் அடங்கும் என்று சொல்லவும் கோடாங்கியையும் அழைத்து வந்து பேயோட்டி இருக்கிறார்கள்.

மேட்டுப்பட்டி டாக்டர் பரிசோதிப்பதற்காக செல்லத்தாயியைத் தொட்டதுமே அவளின் உடம்பு விறைக்கத் தொடங்கி எழும்பி நின்று கொண்டு, கைகளை முறுக்கிக் கொண்டு ஆய் ஊய் என்று சத்தம் கொடுக்கத் தொடங்கினாள். அப்புறம் தெலுங்கில் ஏதேதோ பேசத் தொடங்கினாள்.

மருத்துவர் நர்ஸை அழைத்து எல்லோருமாகச் சேர்ந்து செல்லத்தாயியை அழுத்திப் பிடித்துக் கொள்ளச் சொல்லி ஒரு ஊசி போடவும் அவள் அமைதியாகி விட்டாள். பக்கத்து அறையில் செல்லத்தாயியை தூங்கச் செய்துவிட்டு அவளின் அம்மாவையும் செல்வராணியையும் அழைத்துப் பேசினார்.

“பயப்படாதீங்க. இலேசா மயக்க மருந்து தான் குடுத்துருக்கேன். கொஞ்ச நேரத்திலேயே தெளிஞ்சிடுவாள். ஆனால் பிள்ளைக்கு ஒரு நோவும் இல்ல; பேய் பிசாசும் இல்ல. நல்லா நடிக்கிறாள்…” என்றார்.

செல்லத்தாயியின் அம்மாவிற்குக் கோபம் வந்து விட்டது. “எதுக்கு டாக்டர் அவ நடிக்கனும். அதுவும் எங்க பக்கத்துல யாருக்குமே தெரியாத தெலுங்குல பேசுறா. அவளைப் போயி நடிக்கிறாள்ன்னு அபாண்டமாப் பேசுறீங்களே….!”   என்று டாக்டரிடம் சண்டைக்குப் போய் விட்டாள்.

“உங்களுக்கெல்லாம் தெலுங்கு தெரியாததுனால அவ பேசுறத தெலுங்குன்னு நெனச்சுக்கிறீங்கம்மா. அவ பேசுறது தெலுங்கே இல்ல. நாலைஞ்சு வார்த்தை அவளுக்குத் தெலுங்கு தெரிஞ்சிருக்கு. அதை வச்சிக்கிட்டு வாய்க்கு வந்தபடி ஏதேதோ ஒலிகளோட பேசுறா…..” என்றார் மருத்துவர் சிரித்துக் கொண்டே.

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க டாக்டர்…..” என்றாள் செல்வராணியும் இலேசான கோபத்துடன். “எனக்கு நல்லா தெலுங்கு தெரியும்மா. என்னோட தாய் மொழி தெலுங்கு தான். அவ பேசுற நாலைஞ்சு தெலுங்கு வார்த்தைகளையும் அவளோட தோழிகள்கிட்டருந்து கத்துருக்கலாம்….” என்று மருத்துவர் சொல்லவும் செல்வராணிக்கும் அது சரியெனப் பட்டது. ஏனென்றால் மேட்டுப்பட்டியிலிருந்து செல்லத்தாயியுடன் பள்ளிக்குப் போகிற மரிக்கொழுந்து போன்றவர்கள் தெலுங்குப் பிள்ளைகள் தான்.

“சரி, அவ ஏன் நடிக்கனும் டாக்டர்….?” என்றாள் செல்வராணி.

“அநேகமா இந்தமாதிரி வயசுல இருக்கிற பிள்ளைங்க எதையாவது நீங்க வற்புறுத்திச் செய்யச் சொல்வீங்கன்னு அதைச் செய்யாம இருக்கிறதுக்காகக் கூட இப்படி பேய் பிடிச்சது போல நடிப்பாங்க…..”

“ஸ்கூலுக்குப் போகச் சொல்றப்ப தான் இப்படி நடிக்கிறாள்னு தோணுது டாக்டர்….” என்றாள் செல்வராணி. “இது நேச்சுரல். எந்தப் பிள்ளைதான் ஸ்கூலுக்கு விரும்பிப் போகும்…..”

“அப்படி இல்ல டாக்டர். இவ ரொம்ப நல்லாப் படிப்பாள். எட்டாம் வகுப்போட இவ படிப்ப நிறுத்துறதுக்கு இவளோட வீட்டுல முடிவு பண்ணுனப்ப, ஸ்கூலுக்குப் போவேன்னு அடம் பிடிச்சு, அதுக்கப்புறம் நானும் எங்க சின்னாத்தா கிட்டப் பேசித்தான் அவள ஸ்கூலுக்கு அனுப்பினாங்க. அவ ஸ்கூல்லயும் வாத்தியார்கள் எல்லோரும் ஒரு கிராமத்து புள்ளைக்கு இத்தனை அறிவான்னு பாராட்டுறாங்களே…! அப்படி இருக்கும் போது அவ ஏன் திடீர்னு ஸ்கூலுக்குப் போறத வெறுக்கனும்?”

“நீங்க தான் குழந்தைகிட்ட அன்பாப் பேசிப்பார்த்து காரணத்தைக் கண்டுபிடிக்கனும். இல்லைன்னா இவளோட தோழிகள்கிட்ட பேசிப் பாருங்க. ஏதாவது விஷயம் கிடைக்கலாம். ஆனா அவளா ஆர்வம் காண்பிக்கிறது வரைக்கும் அவள் விரும்பாத எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீங்க. அப்படி வற்புறுத்துனீங்கன்னா அதனோட விளைவுகள் மோசமா ஆனாலும் ஆயிடும்…..” என்று சொன்னார்.

செல்லத்தாயிக்கு மயக்கம்  தெளிந்ததும், அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் கிளம்பும் போது, “எதுக்கும் செல்லத்தாயிய லேடி டாக்டர் யார்கிட்டயாவது கூட்டிக்கிட்டுப் போயி அவ உடம்பக் கம்ப்ளீட்டா செக்கப் பண்ணச் சொல்லுங்க..?” என்றார் டாக்டர்.

செல்வராணி திங்கட்கிழமை பள்ளிக்குப் போய் அவளுடனேயே அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்துவிடம் கேட்டாள். “செல்லத்தாயி கடைசியா பள்ளிக்கூடத்துக்கு வந்தாள்ல அன்னைக்கு வித்தியாசமா ஏதாச்சும் நடந்துச்சாம்மா? நீங்க வீட்டுக்குத் திரும்பிப் போறப்ப, எதைப் பார்த்தாவது அவள் பயந்தாளா…?”

“அவ அன்னைக்கு எங்ககூட வரல டீச்சர். பள்ளீக்கூடம் முடிஞ்சதும் அவளத் தேடுனோம். தட்டுப்படவே இல்ல. ஒருவேளை எங்களுக்கு முன்னாலயோ வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாளோன்னு நாங்களும் கிளம்பிப் போயிட்டோம். என்னாச்சு டீச்சர் அவளுக்கு……” என்றாள் மரிக்கொளுந்து.

“ஒன்னுமில்லம்மா; சீக்கிரம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருவாள்….” என்று சொன்ன செல்வராணி இதுபற்றி ஆசிரியைகள் அறையிலும் பேசினாள். மரியபுஷ்பம் ஒரு தகவலைச் சொன்னாள். “அன்னைக்கு நான் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தேன். செல்லத்தாயி, ஸ்போர்ட்ஸ் ரூமுலருந்து வெளிய போறதப் பார்த்தேனே….” என்றாள்.

உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கம் அவளுடைய புருஷன் தான் என்பதால் செல்வராணி, விளையாட்டுச் சாமான்கள் அடுக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவரிடம் போய்ப் பேசினாள் செல்வராணி. ஆனால் அவர் மரியபுஷ்பம் சொன்ன தகவலை முற்றிலுமாக மறுத்தார்.

அன்றைய தினத்தில் அவர் மத்தியானத்திற்கு மேலேயே விளையாட்டுச் சாமான்கள் இருக்கும் அறையை மூடி விட்டதாகவும், தானும் பள்ளி முடிந்ததுமே சினிமா  பார்ப்பதற்காக விருதுநகருக்குக் கிளம்பி போய்விட்டதாகவும் சாதித்தார்.

அன்றைய தினத்தில்  செல்வராணி கிராமத்திலிருந்த அம்மாவிற்கு  உடல் நல்மில்லை என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருந்ததால் அவளும் விடுப்பில் இருந்தாள்.

மறுபடீயும்  வாட்ச்மேனிடம் போய்க் கேட்டபோது, “உங்க வீட்டு  ஸார் எதுக்குப் பொய் சொல்றாருன்னு தெரியல டீச்ச்சர்.  ஆனால் அன்னைக்கு நான் போயிச் சொன்னதுக்கு அப்புறம் தான்  விளையாட்டுச் சாமான்கள் ரூமைப் பூட்டி சாவிய என்கிட்ட ஒப்படைச்சிட்டுக் கிளம்பிப் போனார். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஏன்னா அன்னைக்கு ராத்திரி தான் என் பொண்ணு அவ புருஷன் கிட்டக் கோவிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துச்சு…..” என்றார் உறுதியாக.

மாணிக்கம் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அவர் எதையோ மறைக்கப் பார்க்கிறார் என்று செல்வராணிக்கு உறுதியாகத் தெரிந்தது. அன்றைக்கு மத்தியானத்திற்கு மேல் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு மறுபடியும் காடாமங்களம் போனாள் செல்வராணி.

செல்லத்தாயியை அவளின் அம்மா வேண்டாமென்று சொன்னதையும் பொருட்படுத்தாமல், பட்டணத்திற்கு அழைத்துக் கொண்டு போய் பெண் மருத்துவரிடம் பரிசோதணைக்கு உட்படுத்தினாள். மருத்துவர் செல்லத்தாயி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்தினார்.  செல்லத்தாயிடம் பெண் மருத்துவரே சிநேகமாய்ப் பேசியபோது அவளும் ஒத்துக் கொண்டாள்.

“அன்னைக்கு பி.டி.ஸார் தான், நான் வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்குறப்ப என்கிட்ட வந்து ’உனக்கு வீட்டுல போய் விளையாடுறதுக்கு விளையாட்டுச் சாமான்கள் வேனுமான்னு கேட்டார். நானும் இருந்தாக் குடுங்க ஸார்னு சொன்னேன். விளையாட்டுச் சாமான்கள் இருக்குற ரூமுல நிறையா போனது வந்ததுன்னு அடஞ்சு கெடக்குன்னும், நீ அங்க வந்து உனக்குத் தேவையானத எடுத்துக்கோன்னும் சொல்லி அழைச்சிட்டுப் போனார். நான் அங்கபோயித் தேடிக்கிட்டு இருக்குறப்ப, கதவைப் பூட்டிக்கிட்டு என்னை…..” என்றவள் அழத் தொடங்கினாள்.

அவளே தொடர்ந்து “இதுபத்தி யார்கிட்டயும் மூச்சே விடக்கூடாதுன்னும், அப்படிச் சொன்னா என்னைக் கொன்னு போட்டுருவேன்னும் மெரட்டுனார்க்கா…..” என்றாள்.

இதெல்லாம் நடந்து இருபது வருஷங்களுக்கும் மேலாகி விட்டது. செல்வராணி செய்தியை தலைமை ஆசிரியரிடம் எடுத்துச் சென்றதும் பள்ளி நிர்வாகம் மாணிக்கத்தை அழைத்து  விசாரித்தது. ஆனால் அவர் அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை  என்று ஒரேயடியாக சாதித்து விட்டார். ஆனாலும் பள்ளி நிர்வாகம் மாணிக்கத்தை வேலையிலிருந்து விடுவித்து காவல்துறையிடம்  ஒப்படைத்து விட்டது.

மாணிக்கம் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சர்வசாதாரணமாக வெளியே வந்து விட்டார். தொன்னூறு குழந்தைகளைத் தீக்குத் தின்னக் கொடுத்த கும்பகோணம் பள்ளியே பற்றி எரிந்த வழக்கிலேயே யாரையுமே தண்டிக்காத நம்முடைய நீதித் துறைக்கு ஒரு குழந்தையின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் பலாத்காரமெல்லாம் அவ்வளவு பெரிய விஷயமா என்ன?

செல்வராணி மாணிக்கத்துடன் சேர்ந்து வாழ விரும்பாமால் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்ததோடு வேலையையும் வேறு பள்ளிக்கு மாற்றிக் கொண்டு போய்விட்டாள்.

மாணிக்கம் தன்னை மறுபடியும் பள்ளியில் ஆசிரியராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இன்னும் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதில் ஆறுதலான ஒரு விஷயம். செல்வராணி செல்லத்தாயியைக் காப்பாற்றி விட்டாள். அவள் இப்போது பட்டணத்தில் பிரபலமான மகப்பேறு மருத்துவராக எந்நேரமும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறாள்.

தினசரி காலையிலும் இரவிலும் காடாமங்களத்திற்குப் போனால் அங்கிருக்கும் கிளினிக்கில்  இலவசமாய் மருத்துவம் செய்யும் செல்லத்தாயியைச் சாவகாசமாய்ச் சந்திக்கலாம்.

-சில்வியா மேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad