\n"; } ?>
Top Ad
banner ad

குழந்தை பெறாத தாய்

“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார்.

ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.

திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர்.

ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் மேல் கடுமையான வார்த்தைகளை வீசி வீசியே தீர்த்துக் கொள்கிறாள்…ரேவதியின் மாமியார். ராகேஷும்  இப்போதெல்லாம் இவளை கண்டு கொள்ளாமல்…தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருக்கிறார்.

“இதோ கொண்டு வரேன் அத்த…” என்ற படி தண்ணீர் சொம்போடு ஓடினாள் ரேவதி.

“தண்ணி தாகம் எடுத்து…அடங்குன பெறகு கொண்டு வா…

நாளைக்கு நான் செத்த பெறகு தான் எடுத்துட்டு வருவ……இந்த வீட்ல ஒரு வேலைய யாவது உருப்படியா செய்யுறியா?? தண்டம் தண்டம்…ஒன்ன வைச்சு சோறு போடுறதே தண்டச் செலவு தான்…எம் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணலாம் ன்னு நெனச்சா….நீ இருக்குறச்ச…எப்புடி…ங்கறான்…செத்தாவது தொலையேன்.” என்று சொற்கள் என்னும் அம்புகளால் ரேவதியை குத்தி குத்தி கிழித்துக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் கேட்டும் அமைதி காக்கும் கணவனைப் பார்த்து கண்ணீர் மட்டுமே விடமுடிந்தது அவளால்…அம்மா அப்பாவிடம் போய் விடலாம்  என்றால்…அவர்கள் உயிரோடு இல்லை…ஒரே ஒரு அண்ணன்…அவனுக்கும் திருமணமாகி பத்து வருடம் கழித்து…பலப்பல சிகிச்சைகளுக்குப் பிறகு …அண்ணி இப்போது தான் உண்டாகி இருக்கிறாள்.

அவர்களுக்கு எப்படி தொல்லை கொடுப்பது…என்று எண்ணி எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.

ஒரு நாள் எப்போதும் போல வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்த ரேவதிக்கு.. அண்ணனிடமிருந்து போன் வந்தது..” ஹலோ அண்ணா…எப்டி இருக்கீங்க??? அண்ணி எப்டி இருக்காங்க??? உடம்பு சாதாரணமா இருக்கா ணா??? நல்ல சத்துள்ள சாப்பாடா சாப்புட சொல்லுங்க …ஒடம்ப பாத்துக்கச் சொல்லுங்க….சே…நான்  பாட்டுக்கு பேசிட்டே போறேனே…டாக்டர் கிட்ட செக்கப் போனீங்களா??? எப்போ டியூ டேட் குடுத்துருக்காங்க???” என்று கேள்வி மேல கேள்வி கேட்டாள் மகிழ்ச்சியோடு.

“ஆமாம் மா ரேவதி…டாக்டர்கிட்ட போனோம்…அதப் பத்தி தான் சொல்ல போன் பண்ணினேன். உங்க அண்ணியோட கர்ப்பப்பை ரொம்ப வீக் கா இருக்காம்….பெட் ரெஸ்ட் வேணுமாம்…இப்போ ஆறு மாசம் தான் ஆகுது….டெலிவரி வரைக்கும் பெட்ல தான் இருக்கனும் அப்டீன்னு டாக்டர் சொல்லீருக்காரு…என்னால ஒருத்தனா…ஆபீஸ் வேலை…வீட்டு வேல…இரண்டையும் கவனிக்க முடியல…அதோட உங்க அண்ணிய சுத்தமா கவனிக்க முடியாம போயிடுது….

நீ வர முடியுமா மா….அண்ணிய பாத்துக்க வருவியா மா??? உங்க வீட்ல…உனக்கு…எதுவும் பிரச்சனை இல்லேனா…இந்த உதவிய செய்வியா மா??” என்றார் நடுங்கும் குரலோடு.

“என்ன ணா இப்டி கேட்டுட்ட???இங்க என்ன எனக்கு கொழந்தையா குட்டியா….என் கணவரைப் பார்த்துக்க அவரோட அம்மா இருக்காங்க….நான் இங்க இருக்குறதே தண்டம் தான்…உனக்காச்சும் உதவியா இருக்க முடிஞ்சா சந்தோசம் தான்…கண்டிப்பா வரேன் ணா” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.

நான் இங்கிருந்து போனால் இவர்களுக்கு…சந்தோசம் தானே…வருத்தப் பட வா போகிறார்கள் … என்று மனதுள் நினைத்து சிரித்துக்  கொண்டாள்.

கணவரிடமும் மாமியாரிடமும் அண்ணன் சொன்னதைப்  பற்றி கூறினாள்….கணவன் “சரி” என்றான் ஒற்றை வார்த்தையில்…

மாமியாரோ…”பாருடா….இவளுக்கே கொழந்த இல்லையாம் …இவ போயி புள்ளதாச்சிக்கு உதவி செய்யப் போறாளாம்…உருப்புட்ட மாதிரி தான்…ஆனா…இதுலையும் ஒரு நல்லது இருக்குது…..என் பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கட்டிவைக்கலாம்…. போம்மா…போய்த் தொலை “என்று வார்த்தை வாளை வீசினாள்.

அடுத்த நாளே அண்ணன் வீட்டிற்கு பஸ் ஏறி விட்டாள் ரேவதி.

வீட்டினுள் நுழைந்தாள். அண்ணன் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்தான். “அண்ணா….இப்டி குடு…நான் பாத்துக்குறேன்…நீ நிம்மதியா ஆபீஸ் போய்ட்டு வா…” என்ற படி துடைப்பத்தை வாங்கிக் கொண்டாள்….

அண்ணி மிகவும் சோர்வாக இருந்தாள்…அவளை மிகவும் அக்கறையோடு கவனித்துக் கொண்டாள். நேரா நேரத்திற்கு சத்துள்ள ஆகாரத்தைக் கொடுத்தாள்…துணிகளைத் துவைத்தாள்..வீட்டு வேலைகளை பம்பரமாகச் செய்தாள்.

“அண்ணீ…உங்க வயித்த தொட்டு பாக்கவா….குழந்தை உதைக்குறச்ச சொல்றீங்களா…”என்றாள் ஆசையாக ஒரு நாள்.

“ஒரு தடவ என்ன…ஒவ்வொரு முறை உதைக்கும் போதும் தொட்டு பாரு ரேவதி…கொழந்த இல்லாத கஷ்டத்த பத்து வருஷமா அனுபவித்தவள் நான்…உன்னோட வலியும் வேதனையும், ஏக்கமும்  நல்லா புரியும் எனக்கு….இதோ…இதோ இப்போ தொடு….” என்று ரேவதியின் கையை அவளின் மேடான வயிற்றின் மேல் இழுத்து வைத்தாள்.

கையை உதைத்தது குழந்தை…ரேவதியின் முகமும் அகமும் ஒரு சேர மலர்ந்தன. உதை வாங்கிய தன் கைக்கு ஓராயிரம் முத்தம் கொடுத்தாள்.

அண்ணீ அண்ணீ என்று…பாசமாகப் பார்த்துக் கொண்டாள். அண்ணனும் அண்ணியும் அவளிடம் பாசமாக இருந்தனர்.

“என்னையே கவனிச்சுக்கிட்டு இருக்கியே…போய் நேரத்துக்கு சாப்புடு…”என்று அன்பான வார்த்தைகளால்  ரேவதியை  கவனித்துக் கொண்டாள் அண்ணி.

கணவனிடமிருந்து இவள் எப்படி இருக்கிறாள்..என்று எந்த விதமான விசாரிப்பும் இல்லை…இவளே போன் பண்ணினாலும்…ம்…சரி…நல்லாருக்கோம்…என்று ஒற்றை வார்த்தை பதிலே கிடைத்தது .

கணவன் வீட்டை விட…கனிவான பாசம் கிடைக்கும் இங்கு நிம்மதியாய் இருந்தாள் ரேவதி.

டெலிவரி  நேரம் வந்து விட்டது….அழகான பெண் குழந்தை பிறந்தது . ஆனால் அண்ணிக்கு ஜன்னி வந்தது. அவளை காப்பாற்றுவதே பெறும் பாடாய் போனது.

வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் …அண்ணி படுத்த படுக்கையாகவே தான் இருந்தாள்.

குழந்தைக்கு இனியா என்று பெயர் சூட்டினர்….மூன்று மாதங்கள் இனிமையாகவே ஓடின…. ஒருநாள் அண்ணன் … “அம்மா ரேவதி..உன் கணவன் வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்… என்னால தான் மா உன் வாழ்க்கையே போச்சு…என்னோட சுயநலத்துக்காக ஒன்ன இங்கயே வைச்சு…உன் வாழ்க்கையவே இல்லாத ஆக்கீட்டேன் மா….” என்று அழுதான்.

முதலில் அதிர்ந்தாள்…பிறகு சுதாரித்துக் கொண்டு…” அண்ணா…இது நடக்கும் ன்னு எனக்குத் தெரியும்…டாக்டர் எனக்கு குழந்தை பாக்கியம் இல்ல ன்னு சொன்னதுல இருந்து…இது என் மாமியாரின் ஆசை…நான் அங்க நரகத்துல தான்..தண்டமா இருந்தேன்… இங்க வந்த பெறகு தான்….ஏதோ யாருக்காவது உதவியா இருக்க ஃபீலிங் ல நிம்மதியா இருக்கேன்…

இதோ இந்த கொழந்தைய வளத்து கிட்டு உன் வீட்ல ஒரு வேலை செய்றவளாட்ட மாவது…இருந்துடுறேன்ணா….கடைசி காலம் வரைக்கும்…ப்ளீஸ் ணா…” என்று அழுதாள் ரேவதி.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அண்ணி….குழந்தையை தூக்கிக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து வந்து….” இந்தா ரேவதி…இந்த கொழந்தைய புடி….இது இனிமே உன்னோட கொழந்த…இந்த வீடு தான் ஒன்னோட வீடு…..வேலக்காரி அது இது ன்னெல்லாம் பேசாத….

என் ஒடம்பு இருக்குற நிலைமையில…நான் இன்னும் எத்தன வருசம்  இருப்பேனோ தெரியாது…இந்த கொழந்தையையும் என் கணவரையும்…பத்திரமா பாத்துக்கோ…” என்ற படி குழந்தையை ரேவதியிடம் கொடுத்து விட்டு சரிந்தாள்.

மருந்துகளும்…மாத்திரைகளும்…அவளை காப்பாற்றவே இல்லை…மறைந்தாள் இவ்வுலகை விட்டு.

அன்றிலிருந்து குழந்தைக்கு அன்னையாகவே மாறினாள் ரேவதி.

இனியா…இனியா…என்று தன் உயிரையே அவள் மீது வைத்து வளர்த்தாள்.

இனியா பள்ளி செல்ல ஆரம்பித்தாள்….படு சுட்டியாக இருந்தாள்.

அத்தைம்மா..அத்தைம்மா…என்றே அழைத்தாள் ரேவதியை.

பள்ளி விட்டு இனியா வர தாமதமாகி விட்டால்…துடிதுடித்துப் போவாள்…இனியாவுக்கு காய்ச்சல் வந்து விட்டால்…நான்கு நாளைக்கு சாப்பிடக் கூட மறந்து கவனித்துக் கொள்வாள்.

ரேவதியின் அண்ணன் கூட திட்டுவார் …” ரேவதீ…ரொம்ப பாசம் வைக்காத…வளர்ந்து வேற வீட்டுக்கு போய்டுவா…அப்புறம் நீ தான் ஏங்கிப் போய் கிடப்ப..” என்று.

“பரவால்ல…ஏங்கி ஏங்கி செத்துட்டுப் போறேன்…இந்த தங்கம் இங்க இருக்குற வரைக்கும்…இல்ல இல்ல என் உசிரு என் ஒடம்புல இருக்குற வரைக்கும்…பாசம் வைச்சுகிட்டே தான் இருப்பேன்….” என்று பதிலளிப்பாள்.

இனியா கல்லூரியில் சேர்ந்து விட்டாள்…ரேவதிக்கு ஐம்பத்தியாறு வயது இருக்கும்…ரேவதியின் கணவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது.

“அத்தையம்மா…போகப் போறீங்களா…” என்றாள் இனியா.

“இல்லடா கண்ணூ…எப்போ அவர் வேறொருத்திய கல்யாணம் பண்ணிக் கிட்டாரோ…அன்னிக்கே என்னைப் பொறுத்த வரையில் செத்துட்டாரு…இப்போ செத்து இருக்குறது அந்த பொம்பளையோட புருஷன் தான் “என்று கூறி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அன்றாட வேலைகளில் மூழ்கினாள்.

கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்தாள் இனியா….அப்போது …அறுபத்தைந்து வயதில் இருந்த  இனியாவின் தந்தை இறந்தார்.

வீடு கவலைக் கடலில் மிதந்தது. ரேவதிக்கும் அறுபது வயது ஆகிவிட்டதால்…ஆடிப் போனாள்.

இனியா தான் தேற்றினாள்.

“இனியா…எனக்கும் வயசாய்டுச்சு…நீ எங்க அண்ணனுக்கு லேட்டா பொறந்த….அதுனால…உனக்கு இருபத்து ஐந்து வயசுலயே அப்பாவ இழந்து நிக்குற…நீயாவது காலாகாலத்துல கல்யாணம் பண்ணி கொழந்த குட்டி சீக்கிரமா பெத்து வளத்துடு…

நானும் போய்ட்டேன்னா….நீ அநாதையா நிப்ப….சீக்கிரமா உனக்கு கல்யாணத்த பண்ணனும்.

மாப்பிள்ளய பாக்குலாமா??? இல்ல நீயே பாத்து வைச்சுருக்கியா??? “என்றாள் ரேவதி” ஒரு நாள்.

“அத்தையம்மா…எனக்கு மாப்பிள்ள நீங்களே  பாருங்க…ஆனா ஒரே ஒரு கன்டிஷன்..உங்களையும் சேர்த்து தான் அவன் ஏத்துக்கனும் “என்றாள் இனியா..

 

“இதெல்லாம் யாராச்சும் ஒத்துப்பாங்களா…நான் இந்த வீட்ல தானே இருக்கேன்…வாரா வாரம் வந்து பார்த்துக்கோ… சரியா…உங்க அப்பாவோட நண்பரோட பிள்ளை…இளங்கதிர்…..இதோ நாலு தெரு தள்ளி தான் வீடு…அவன் என் கிட்டயும் அப்பா கிட்டையும் கேட்டான்…உனக்கும் நல்லா தெரிஞ்சவன் தான்….நல்ல பையன்.முடிச்சுடலாம்னு உங்க அப்பா கூட எங்கிட்ட சொன்னாரு…அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா..சரின்னு சொல்லட்டுமா…” என்றாள்  மடமடவென்று ரேவதி.

“அத்தையம்மா….உங்களுக்கு சரின்னு பட்டுதுன்னா…எனக்கும் ஓகே தான்…” என்று கூறி விட்டாள் இனியா.

ஆனால்…இளங்கதிரை அன்றே சந்தித்து …தன் கன்டிஷனை சொன்னாள்…”இதை நானே சொல்லனும் ன்னு நெனச்சேன் நீயே சொல்லிட்ட “என்றான் இளங்கதிர்.

இனியா நிம்மதியானாள்.

திருமண நாள் வந்தது… ஊரும் உறவும் கூடி இருந்தது.

சடங்கு சம்பிரதாயங்களில்…பெற்றோருக்கு பாத பூஜை பண்ணனும்…பொண்ணு சைடுல …யாரு வர்றீங்க…என்று புரோகிதர் அழைக்க…

“நான் என் அத்தையம்மாவுக்கு தான் பாத பூஜை செய்வேன்”  என்றாள் இனியா.

உறவுகள் முனுமுனுத்தன…

“முதலில் அவள் உன்னைப் பெற்றவளே இல்லை…அடுத்து…அவளுக்கு குழந்தைகள் இல்லை…மலடி…அது மட்டுமா…கணவனும்  இறந்து விட்டான்…எந்த தகுதியும் இல்லாதவளை…மணமேடையில் ஏற்றுவதா…கூடாது “என்றனர்.

“நிறுத்துங்கள் …இவள் தான் என் தாய், ஈ எறும்பு கடிக்காமல்…கண்ணுக்குள் வைத்து வளர்த்தவள்…ஒரு குழந்தைக்கு எப்போது எது வேண்டும் என்று அம்மாவுக்கே தெரியும் என்பார்கள்….எனக்கு என்ன வேண்டுமென்று இவளைத் தவிர யாருக்கும் தெரியாது…அப்படின்னா…இவள் தான எனக்கு அம்மா…அப்புறம் எப்டி இவள் குழந்தை இல்லாதவளாவாள்???

எனக்காகவே…என்னை வளர்த்து ஆளாக்குவதற்காகவே தன் வாழ்க்கையை  வாழும் இந்த தெய்வத்தை…தரக்குறைவாகப் பேசுபவர்கள் இங்கே இருக்கவே வேண்டாம்…

அத்தையம்மா….இல்லை..இல்லை….அம்மா…வாங்க இங்க….” என்று அழைத்தாள் இனியா…மணமேடையில் இருந்து.

அம்மா….என்ற இனியாவின் குரலைக் கேட்டதும்….

அறுபது வயது

ரேவதியின் வயிற்றில் குழந்தை அசைந்தது…

மார்பகங்கள் பாலைச் சொரிந்தன…

தாய்மையின் அனைத்து சுகங்களும் அவளுக்குக் கிட்டின. அனுபவித்தாள் ஆனந்தமாக.

இனியாவை அணைத்து  ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.

மணமேடைத் தூணில் சாய்ந்த படி திருமணம் முடியும் வரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு  நின்றிருந்தாள்…அட்சதை தூவி வாழ்த்தினாள்.

அன்றிரவு…அன்னையாகி விட்ட  மகிழ்ச்சியில்….ஆனந்தக் கண்ணீரோடு உறங்கச் சென்றவள்..ஆழ்ந்த உறக்கத்திற்கே சென்று விட்டாள்.

தாய்மை பொதுவானது.

-முல்லை சதா

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad