Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல.

 

கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், மனநலக் கோளாறுகள், வெலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல் என பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வர்த்தக நடைமுறைகளைச் சாத்தியப்படுத்திய உலகமயமாக்கலின் ஆணிவேரை பிடுங்கிப் போட்டுள்ளது பெருந்தொற்றின் வீரியம். வளர்ந்த நாடு, வளரும் நாடு, வளராத நாடு என்ற பேதமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. இந்தச் சவால்களை வாய்ப்பாக மாற்றி, தீர்வு கண்டு அவற்றை வென்றிட உடனடி நடவடிக்கைகள் தேவை.

ஒருமைப்பாடு

உலக நாடுகளை இயற்கை, நிலப்பரப்பு அடிப்படையில் பிரித்திருந்தாலும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் இன்று மதம், அரசியல், பாலினம், இனம், மொழி மற்றும் பல வேறுபாடுகளால் பிளவுண்டு கிடக்கின்றனர். இதனைச் சாக்காகப் பயன்படுத்தி, விரிசல்களில் நெருப்பைக் கொளுத்திப் போட்டு குளிர் காயும் குயுக்தியாளர்களால், மனித குலம் ‘ஒருமைப்பாடு’ எனும் சித்தாந்தை மறந்து வருகிறது. மதப் பாதுகாப்பு, இனப் பாதுகாப்பு, மொழி பாதுகாப்பு எனும் விஷக் கிருமிகளின் பாதிப்புகளுக்குள்ளாகி மக்கள் சுயநலம் எனும் வட்டத்துக்குள் சுருங்கிவிடுகின்றனர்.

ஒரு பொதுவான குறிக்கோளைப் பெறுவதற்கு நாம் அனைவரும் ஒரே மொழி பேசுபவராகவோ, ஒரே இனம், மதத்தைச் சார்ந்தவராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நாம் யார், எங்கிருந்து வருகிறோம் என்பதைப் பற்றி தனிமனிதனாகப் பெருமைப்படலாம்; ஆனால் நாம் மிகப் பெரிய சமூகத்தின் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக் கூடாது. “நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியம்” – கனேடிய அமெரிக்க பேச்சாளர் பிரையன் டிரேசி, தனிமனித முன்னேற்றம் குறித்து சொன்ன இவ்வரிகள், சமூகத்தில், நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும். மக்கள் அனைவரும் கைகோர்த்து, பெரிய நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது, இன்றைய நிலையில்  உலகின் மிக அவசரத் தேவை.

செயல்பாடு

இவற்றை கடந்துசெல்ல வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. ஒவ்வொரு மனிதரும், சமூகமும், நிறுவனமும், அரசாங்கங்கமும், நாடும் இந்த அச்சுறுத்தல்களை அலட்சியம் செய்யாமல், திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சில பெரிய மற்றும் சில சிறிய செயல்களின் மூலம், நாம் அனைவரும் சிறந்த உலகிற்கு பங்களிக்க முடியும்.நம்மை எதிர்நோக்கியுள்ள சிக்கல்களையும், மனித ஆற்றலின் உயரங்களையும் புரிந்து கொள்ளத் தயாராகயிருக்கும் தன்னலமற்ற நடைமுறை இலட்சியவாதிகள் நமக்குத் தேவை. சில சிறிய செயல்களின் மூலம், நாம் அனைவரும் உலக நன்மைக்காகப்  பங்களிக்க முடியும். நம் குடும்பம், நண்பர்கள் தவிர்த்து, கடைசியாக, சமூகத்துக்காகச் செய்த நல்லச் செயலை நினைவுகூர்ந்து பாருங்கள். எளிதில் ஏதேனும் ஒரு செயல் உங்கள் நினைவுக்கு வந்தால் நல்லது – தொடருங்கள். இல்லையெனில் இன்றே தொடங்குங்கள். விருப்பு, வெறுப்பின்றி மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி நேர்மறையான, மகிழ்ச்சியை உருவாக்கும். ஒரு மரத்துக்கான விதையை நடுவது கூட சமூக நலனுக்காக நீங்கள் செய்யும் சிறிய தொடக்கமாகயிருக்கலாம்.

 

சகிப்புத்தன்மை

மனிதகுலம் நாடு, இனம், மதம் என எண்ணற்ற வேறுபாடுகள் நிரம்பியது. இவற்றைக் கடந்து ஒன்றுபடுதல் இன்றியமையாதது.  உலகம் மிகவும் சுருங்கி, அனைத்து நாடுகளின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதாரம் எனும் வட்டத்தைக் கடந்த பிணைப்பு தேவைப்படுகிறது. இதனை செயல்படுத்த பிரிவினையற்ற, வெறுப்பற்ற உறவுகள் வளரவேண்டும். தனது கொள்கை, நம்பிக்கை, விசுவாசங்களைக் கடந்த அன்பு பெருக வேண்டும். மற்றவரது பலங்களையும், பலவீனங்களையும் மதிக்கும் இந்த மனநிலையே சகிப்புத்தன்மை. இன்றைய நிலவரப்படி இந்தச் சகிப்புத்தன்மை அருகிவருவதை உணர முடிகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அவர்களின் வார்த்தைகளே ஆயுதங்களாகி போர்கள் நடந்துகொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில், செயல்களின் அடிப்படையில் மற்றவரின் உரிமைகளை உதாசீனப்படுத்துவது தான் தீவிரவாதத்தின் தொடக்கம். பெற்றோர்கள்தான் சகிப்புத்தனக் குணப்பண்பை, பிள்ளைகளுக்கு போதிக்கும் சிறந்த ஆசிரியர்கள். அந்த அடிப்படையில் வருங்கால தலைமுறைகள் சகிப்புத்தன்மை என்றொரு பண்பு இருப்பதையே அறியாமல் போய்விடும் அபாயம் உண்டாகிவருகிறது. இதனைக் களைய வேண்டியது, சமூக, நாட்டு, உலக அமைதிக்கு இன்றியமையாதது.

கருணை

ஒருவர் துன்பப்படுவதைக் காணும்போது – அந்தத் துன்பத்திற்கான காரணம் நமக்குப் புரியாவிட்டாலும், அந்த நபர் மீது நாம் காட்டும் அக்கறையும், ஆதரவும் அவருக்குத் தன் காயத்தை, துன்பத்தை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் துணிவையும் தரும். நம்மிடம் மற்றவரது துன்பத்தைத் தீர்க்கும் பலம் இல்லாவிடினும் அழுவதற்கு ஒரு தோளும், கேட்பதற்கு ஒரு காதும், ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லும் உதடுகளும் இருந்தால் போதும்.

பிரச்சனைகள் பெருகி அழுத்தும் இன்றைய சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் மன உளைச்சலுக்கும், மனச் சோர்வுக்கும் உள்ளாகி வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நம்மிடம் இல்லாமலிருக்கலாம். ஆனால் “உங்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” எனும் வார்த்தைகள் மிகச் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.  தொழில்முறை உளவியலாளர்கள் அளிக்கும் அறிவுரைகளை விட வலிமையானது உளப்பூர்வமான கருணை.

கருணையும், இரக்கமும் நம்மிடையே இல்லாதிருந்தால் நாம் இன்றைய சமூகநிலையை அடைந்திருக்க முடியாது. ஆனால், அதை நாம் தொலைத்து வருகிறோம். படிப்படியாக இரக்க குணத்தை இழந்து, சமூக வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி தனிமனிதனாக, இலக்கில்லாத, முடிவில்லாத போட்டியில் ஓடத் துவங்கிவிட்டோம். மனிதநேயம் அருகி வருகிறது. மற்றவரின் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், உங்களின் மகிழ்ச்சிக்கும் கருணை மனப்பான்மை கட்டாயத் தேவையாகிறது.

நம்பிக்கை

மனிதர்களிடையே நம்பகத்தன்மைக் குறைந்துவிட்டது.  மற்றவர்கள் மீதான நம்பிக்கையாகட்டும், தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையாகட்டும் இரண்டுமே இன்று வலுவிழந்துவருகின்றன. நம்பிக்கை மனித உறவுகளின் மூலவிதையாகும். அதில்லாமல் வாழ்க்கைப் பாலைவனமாகிவிடும். நாளை உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கைதான் உங்களை இயக்குகிறது. அதே நம்பிக்கையில் வாழும் அடுத்தவரின் நம்பிக்கையும் நம் பொறுப்பிலுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அனைவருமே சிறப்பான வாழ்க்கை வாழ எத்தனிக்கிறார்கள் – நம்பிக்கையின்றி. பிரச்சனைகளைத் தீர்க்க நம்பிக்கைத் தேவை. வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயல்களால் நம்பிக்கையளிக்க வேண்டிய தருணத்தில் உலகம் நிற்கிறது.

அமைதி

இன்றைய சூழலில், தன் நாட்டு வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும் செலவழிப்பதை விட போருக்காகச் செலவழிப்பது தான் அதிகம். உலக வறுமையை ஒழிக்க அனைத்து நாடுகளும் போருக்காகச் செலவிடும் இந்தத் தொகை மட்டுமே போதும்.  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் போர்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், கடந்த 75 ஆண்டுகளில் பல போர்களும் மோதல்களும் நடந்துள்ளன.

நாடுகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் போர் ஒரு பேரழிவு விளைவைக் கொண்டிருக்கிறது. எந்தவொரு பெரிய நோயையும் விட மோதல் சூழ்நிலைகள் அதிக இறப்பு மற்றும் இயலாமையை ஏற்படுத்துகின்றன. போர்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே. போர் சமூகங்களையும் குடும்பங்களையும் அழிக்கிறது மற்றும் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது. போரின் விளைவுகளில் உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், இயலாமை, பொருளாதார/சமூக சரிவு மற்றும் மனநோய் ஆகிய சிலவற்றை மட்டும் குறிப்பிடலாம். உலகில் எங்கும் பயமின்றி, பீதியின்றி தூங்க முடிந்தால் மட்டுமே, இந்த கிரகம் அனைவருக்கும் அமைதியான உறைவிடம் என்று சொல்லமுடியும்.

எவராலும் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாது – ஆனால் நிகழ்காலத்தை உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு செல்லவேண்டுமென்பதை நிர்ணயிக்க இன்று எங்கிருக்கிறோம் என்ற புரிதல் வேண்டும். மாற்றங்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.

  • ரவிக்குமார்

 

 

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad