Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ரசனை வசப்படுமா?

முன்பு எப்போதேனும் படம் பார்ப்போம். நமது அபிமான நடிகர் நடித்த படம் என்றால், எப்படி இருந்தாலும் பார்த்து விடுவோம். இல்லையென்றால், படம் நன்றாக இருக்கிறதென்று யாராவது சொன்னால் பார்த்துவிடுவோம். இல்லை, பொழுது போக்க வேண்டும் என்றிருந்து, படம் நல்லாயில்லை என்று சொன்னாலும், திரையரங்கு சென்று படம் பார்ப்போர் உண்டு. இருக்கும் திரையரங்குகளில் நான்கு படங்கள் ஓடும். அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு திரும்புவோம். செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல், தொலைகாட்சியில் படம் பார்ப்பது என்றால், எது ஓடுகிறதோ, அதில் ஒன்றைப் பார்ப்போம். சாய்ஸ் குறைவாக இருக்கும்போது, குழப்பங்கள் ஏதுமில்லாமல் இருந்தது.

இன்று இணையத்தில் பார்ப்பதற்குப் படங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஓடிடி சேவைகளில் சந்தா கட்டியிருப்போம். இல்லாவிட்டாலும், பல வகைகளில் படங்களைப் பார்க்க வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், பிற மொழி படங்கள் காணும் வாய்ப்பும் வந்து சேர்ந்துள்ளது. படங்கள் மட்டுமில்லாமல், வெப் சீரிஸ் வேறு வகைதொகையில்லாமல் எக்கச்சக்கமாகக் காணக் கிடைக்கின்றன.. சில மணி நேரங்கள் இருக்கிறது, ஏதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால், எந்தப் படம் பார்ப்பது என்று தேடுவதிலேயே ஒரு மணி நேரம் சென்றுவிடுகிறது.

முன்பு, நண்பர்கள் மத்தியில் ஏதேனும் படத்தைப் பற்றிப் பேசி, கேள்விப்பட்டு, அதைத் தேடி பார்த்திருப்போம். இன்றைய இணையவெளியில் படங்கள் பற்றிய விமர்சனங்கள் எழுத்துவடிவிலும், வீடியோ வடிவிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் ரொம்பப் பாலிஷாக எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரி விமர்சனம் எழுதப்பட்டிருக்கும். விகடன் மாதிரியான வார இதழ்களில், ரொம்பவும் கண்டிப்பான தொனியில் விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கும். நூறுக்கு அறுபது மதிப்பெண்கள் வாங்குவதே பெரிய குதிரை கொம்பாக இருக்கும்.

படம் வெளிவந்து ஒரு வாரம் கழித்து வெளிவரும் வார இதழில் விமர்சனம் பார்த்து, அதன் பிறகு படம் பார்ப்பது என்பது சாத்தியமில்லாமல் இப்போது போய்விட்டது. ஏனென்றால், இப்போது ஒரு படம் ஒரு வாரம் ஓடிவிட்டால் அதுதான் மிகப்பெரிய ஹிட். பிற திரைப்படங்கள் ஒரு வாரத்தில் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். இங்குத் தான், ட்விட்டர், ஃபேஸ்புக், யூ-ட்யூப் விமர்சகர்கள் உதவிக்கு வந்தார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே விமர்சனங்களைப் பதிவேற்றினார்கள்.

இவர்களெல்லாம் உள்ளூர் ஆட்டகாரர்கள். இந்த விஷயத்தில் ஒரு உலக லெவல் ஆட்டக்காரர் இருக்கிறார். ஐஎம்டிபி (IMDb) ரேட்டிங்கை தான் குறிப்பிடுகிறோம். விகடன் கொடுத்த மதிப்பெண்களைப் பத்திரிக்கை விளம்பரங்களில் குறிப்பிட்டுப் படம் பார்க்க அழைத்த பட நிறுவனங்கள், இப்போது ஐஎம்டிபி மதிப்பெண்களைக் குறிப்பிட தொடங்கிவிட்டனர். ஐஎம்டிபியின் வரலாறு 1990இல் ஆரம்பித்தது.. மென்பொருள் பொறியாளரும், திரைப்பட ஆர்வலருமாக இங்கிலாந்தில் இருந்த கோல் நீதம் (Col Needham), கணினிகளின் இணைப்பில் யூஸ்நெட் எனப்படும் விவாதக்குழுமங்களில் சேர்ந்து, தனக்குப் பிடித்த திரைக்கலைஞர்கள் குறித்துப் பட்டியல் போட தொடங்கினார். குழுமத்தில் இருந்த பிற உறுப்பினர்களும் சேர்ந்து கொள்ள, பட்டியல் நீண்டது. திரைப்படங்கள் குறித்த பல தகவல்கள் அதில் வந்து சேர்ந்தன.

1993 ஆம் ஆண்டு வேல்ஸ் நகரில் இருக்கும் கார்டிஃ பல்கலைகழகத்தில் (Cardiff University) நிறுவப்பட்டிருந்த சர்வர், டேட்டாபேஸ் மூலம் இணையத்தளமாக உருவெடுத்தது. பயனர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் பங்களிப்பை அளிக்கும்வண்ணம் அப்போது அந்தத் தளம் அமைக்கப்பட்டிருந்தது. பயனர்கள் பெருக, சர்வர்களை அதிகரித்தனர். ஹெச்பியில் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டு, பொழுதுபோக்காக இந்த வேலையைச் செய்து வந்த கோல் நீதம், 1996இல் தனது முழு நேரத்தையும் இதில் போட முடிவெடுத்தார். தனியார் நிறுவனமாக ஐஎம்டிபியைப் பதிவு செய்து, அதன் முதலாளியாக உட்கார்ந்தார். படங்களின் விளம்பரத்தை, தனது இணையத்தளத்தில் வெளியிட்டு வருமானம் கொண்டு வந்தார்.

அடுத்த இரண்டே வருடங்களில், அமேசானின் ஜெப் பெஜோஸின் பார்வையில் பட்டு, அமேசானின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டார். இன்றுவரை, அதன் நிறுவனத் தலைவராகக் கோல் நீதம் நீடிக்கிறார். அச்சமயம் அமேசான் ப்ரைம் வீடியோ சேவை தொடங்கியிருக்கவில்லை. ஐஎம்டிபியின் விளம்பர வருமானத்திற்காக மட்டும் அமேசான் அதை வாங்கியிருக்கவில்லை. பிற்காலத்தில், அதன் பல சேவைகளை, தனது வீடியோ சேவையுடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டிருந்தனர். 2006இல் அமேசான் வீடியோ சேவை தொடங்கியபின், ஐஎம்டிபியின் ரேட்டிங் சேவையை அதனுடன் இணைத்தனர்.

ஐஎம்டிபியின் ரேட்டிங், முழுக்க முழுக்கப் பயனர்கள் அளிக்கும் ரேட்டிங் மூலம் கணக்கிடப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதன் முழு அல்காரிதத்தை ரகசியம் காக்கிறார்கள். எங்கே இது தெரிந்தால், தங்கள் அபிமான நடிகரின் படத்தை, அதற்கேற்றாற்போல் குத்து குத்து என்று குத்தி மேல் கொண்டு போய் விடுவார்களோ என்பதால் அந்த ரகசியம் என்கிறார்கள். ஆனால், அது மட்டும் தான் காரணமா என்று தெரியவில்லை. தனது வீடியோ சேவையில் இருக்கும் படங்களை முன்னணிக்குக் கொண்டு வர அமேசான் இது மூலம் முயலுமா என்றால் அதன் சாத்தியம் இல்லாமல் இல்லை.

மதிப்பெண் விஷயத்தில் அவ்வளவு கண்டிப்பு காட்டும் விகடன் நிறுவனம், இரண்டு படங்களைத் தயாரித்தது. அச்சமயம் அப்படங்களுக்கு அது அளித்த மதிப்பெண்கள் குறித்து விமர்சனம் எழுந்தது. உதாரணத்திற்கு, அதன் தயாரிப்பில் வெளிவந்த வால்மீகி என்ற படத்திற்கு அளித்த மதிப்பெண்கள், அச்சமயம் வந்து வெற்றி பெற்ற நாடோடிகள் படத்திற்கு அளித்த மதிப்பெண்களை விட அதிகம் என்று கூறப்பட்டது. நிறையப் பாலோவர்கள் வைத்துக்கொண்டு, கட் அண்ட் ரைட்டாக விமர்சனம் கூறும் யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு, திரைப்பட நிறுவனங்கள் தங்கள் திரைப்படங்களில் வாய்ப்பு அளிக்கிறார்கள். வாய்ப்பைப் பெறும் விமர்சகர்கள், அப்படங்களுக்கு அடக்கி வாசிக்கிறார்கள். அல்லது, ஊதவே வேண்டாம் என்று போய்விடுகிறார்கள். அது போல, அமேசானும் தனது தயாரிப்பில் வெளிவரும் படங்களுக்கு அதிக ரேட்டிங் கொடுக்குமா என்றால், அப்படிக் கண்டிப்பாக இருக்காது என்று கூற இயலாது. அமேசான் தனது போட்டி நிறுவனங்களை எப்படிக் கையாளுவார்கள் என்று நாம் பல கதைகளைப் பார்த்திருக்கிறோம்.

சென்ற ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளிவந்த திரைப்படங்களான ஜெய் பீம் (9.3), சார்பட்டா பரம்பரை (8.7), சர்தார் உதம் (8.7), ஷெர்ஷா (8.7), திருஷ்யம் 2 (8.6) போன்றவை நல்ல ரேட்டிங்கை ஐஎம்டிபியில் பெற்றுள்ளன. 2021 ஆண்டுக்கான இந்தியத் திரைப்படங்களின் ரேட்டிங் பட்டியலில் அதிகமாக இருப்பது, அமேசான் ப்ரைமில் இருக்கும் திரைப்படங்கள் தான். இது பித்தலாட்டம் என்று சொல்ல வரவில்லை. இத்திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களே, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவையே. ரசிகர்களின் உண்மையான ஓட்டில் கிடைத்த ரேட்டிங்காக இவை இருக்கலாம். நல்ல திரைப்படங்களைச் சரியாகக் கணித்து அமேசான் நிறுவனத்தினர் வாங்கிறார்கள் என்று இருக்கலாம். இருப்பினும், ஒரு திரைப்படத்திற்கான ரேட்டிங்கை ஐஎம்டிபியில் காண போகும் போது, இந்தப் பின்னணியை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

1990-2000 ஆண்டுகளில் நடைபெற்ற உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியப் பெண்கள் முதல் பரிசு பெற்று வந்தனர். அச்சமயம், அழகை மெருகேற்றும் பொருட்களை விற்று வந்த உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள், இந்தியாவில் கடை விரிப்பதற்கான திட்டமாக, அந்தப் போட்டிகளைச் சந்தேகித்தனர். இப்போது, இந்த ஐஎம்டிபி ரேட்டிங்கில் நம்மூர் படங்கள் முன்னணி பெறுவதைக் காணும் போது, அது போன்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ரசனை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருவருக்குப் பிடித்த படம், மற்றொருவருக்குப் பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடித்த படம் என்று ஒன்று இருப்பதில்லை. அதனால், எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல், நமக்குப் படம் பிடித்திருக்கிறதா என்று பார்க்கலாம். இல்லை, வேண்டாத படத்தைப் பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்தால், இது போன்ற ரேட்டிங் சேவையைப் பயன்படுத்தலாம். அதே சமயம், அதை வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால், வேறொரு முறையில் மதிப்பீடு வழங்கும் இன்னொரு சேவையையும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ராட்டன் டொமட்டோஸ் (Rotten Tomatoes) மாதிரியான இன்னொரு சேவையில் எவ்வாறு மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இவர்கள் ரசிகர்களின் ஓட்டை வைத்து மதிப்பீடு வழங்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சகர்களின் கருத்துகளை வைத்து மதிப்பீடு கொடுக்கிறார்கள். அத்தகைய விமர்சகர்களின் ரசனையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஆக, வணிகப் பின்னணி கொண்ட விமர்சகர்கள் மற்றும் மதிப்பீட்டுச் சேவைகள் பெருகி போன உலகில், நமது ரசனை களங்கி போய்விடாமல் இருப்பது நமது கவனத்துடன் கூடிய தேடலில் தான் இருக்கிறது.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad