\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

செம்புலம்

முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை!

1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!!

அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் நடந்தால் பொற்கோயில். கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களுக்கு மேலான பழமையான கோயில், அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சீக்கியர்களுக்கான குருத்வாரா. சீக்கியர்கள் பெரும்பான்மையினரான அந்த ஊரில், இந்துக்களும் அவர்களும் கூடப் பிறக்காத சொந்தங்களாய் வாழ்ந்து கொண்டிருந்த காலம். 

அந்த நகரில் குடி பெயர்ந்திருந்தனர் கணேசனின் குடும்பம். அக்ரஹாரம் எனக் குறிப்பிடப்பட்ட அந்தத் தெருவில், தனது வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு, தடை செய்யப்பட்ட தமிழ்ப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான் இருபத்து மூன்று வயது நிரம்பியிருந்த இளைஞன் கணேசன். எட்டே பக்கங்களைக் கொண்ட, சிறிய புத்தகமது. அந்தப் புத்தகத்திலிருந்ததெல்லாம் தேச பக்திப் பாடல்கள் மட்டுமே. தமிழ் அறிந்த எவர் படிப்பினும், அவரின் மயிர்க்கால்கள் எழுந்து நின்று, ரத்தம் கொதித்து, வெள்ளையனை வெறும் கையாலேயே அடித்து, சீதளச் சீமைக்கே துரத்த வைக்குமளவுக்கு உணர்ச்சி கொப்பளிக்க வைக்கும் உன்னத எழுத்துக்கள். எழுதியவரின் பெயர் “நித்திய தீரர்” என்றிருந்தது. அந்தப் புத்தகத்தைத் தெரிந்தவர்கள் மூலமாக மிகவும் சிரமப்பட்டு வாங்கி, அவனுக்குக் கொடுத்தவள் அவனின் ஆத்மார்த்தமான சிநேகிதி, காதலி, உயிர் லக்‌ஷ்மி!

தமிழின் மீது அளப்பறிய பற்றும், புலமையும் கொண்டிருந்த கணேசனே நம் நாயகன். அவனுக்கு அந்நியர்களைத் துரத்த வேண்டுமென்றோ, சுதந்திரம் வேண்டுமென்றோ பெரிதான நினைப்புகள் இருந்ததில்லை. சாதாரண இளைஞனாக வாழ்க்கையை ருசித்துக் கொண்டு, இந்தியாவின் அமைதிப் பூங்காக்களான தென் தமிழகத்தில்,அந்நியர்களின் கொடூரத்தின் பாதிப்பு அதிகமில்லாத வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவன். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளையும், வெண்பாக்களையும் எழுதிக் குவிக்க வல்ல அவனுக்கு, பொதுவாகக் கவிதையெழுதும் கரு அவனின் லக்‌ஷ்மி மட்டுமே. 

வெடுக் வெடுக்கென்று பேசும் லக்‌ஷ்மி, மிகச் சூட்டிகை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவள் படிப்பில் எப்பொழுதும் முதலாவதாக வருவாள். இசையிலும் முதலாமவளே. தமிழில் நல்ல ஆர்வம் இருப்பினும், எழுதும் வழக்கமோ புலமையோ இருந்ததில்லை. ஆனால், நிறையப் படிப்பாள். பொதுவாகப் பக்திப் பாடல்கள் படிக்கும் அவளின் நோக்கம், அந்தப் பக்திக்குப் பின்னிருக்கும் ஞானத்தை உணர்வதே. அவளுக்கு மிகவும் பிடித்த இலக்கியம்,ஆண்டாளின் திருப்பாவை. நாற்பது பாசுரங்களையும் மனப்பாடமாகச் சொல்ல முடிந்த அவளுக்கு, அவற்றின் விளக்கங்கள் முழுதாகப் புரிந்ததில்லை. 

அவளை அழகுச் சிலையென்று வர்ணித்தால், மறுப்பவர்கள் இருக்க மாட்டார். நீண்ட கரிய கூந்தல் இடைவரை விழுந்து தவழும்; அவள் நடந்து செல்கையில், பின்னி விடப்பட்ட அந்தக் கூந்தல் அவளின் பின்னழகின்மீது இடது புறமும் வலது புறமும் மாறி மாறி குதித்துத் தஞ்சமடைவதைப் பார்க்க ஒவ்வொரு இளைஞரும் தவமாய்த் தவமிருப்பர் என்றால் அது மிகையாகாது. நீளமாய் விரிந்திருந்த நெற்றிப் பரப்பில் திருத்தமாய் இடப்பட்ட செம்மண் கோடு அவளது குலத்தைக் குறிப்பிடுவதோடு அவளின் நேர்மையான குணத்தையும் கட்டியம் கூறும். கூரிய நாசி, அதன்கீழ் குறிப்பாய்ப் படர்ந்த இளங்கரு ரோமங்கள், குவிந்த கோவைக்கனி ஒத்த இதழ்கள், குளிர்ந்த புன்னகையைக் காட்டும் முத்துப் பற்கள், கன்னக் குழி, தாடையிலும் விழும் சிறு குழி, கழுத்தில் இழையோடும் வெண் சங்கொத்த வடிவம், அவள் பேசும்பொழுது மேலும் கீழும் சென்று வரும் ஒரு கோலிக்குண்டு … படைத்தவனுக்கு இந்தப் படைப்பிற்காக நோபல் பரிசு தர எந்தவொரு இளைஞனும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டான் என்று அடித்துச் சொல்லிவிடலாம்.

 

“கரு விழி காட்டி – நீ

கடலினில் குதியென்றால்

இரு விழி மூடி – நான்

இமைப் பொழுதில் குதித்திடுவேன்!”

 

கணேசனின் காதலுக்குக் கட்டியம் கூறும் ஒரு சிறிய கவிதை. இதைப் படிக்கையில் அவளின் கண்ணும் சிரிக்கும் என்று உணர்ந்து அவளை விழுங்குவதைப் போல் பார்ப்பான் கணேசன். சொல்லப் போனால், அவன் கவிதை எழுதுவதே அவள் படித்தபின் காட்டும் முகபாவங்களைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான்.

கணேசனின் தந்தை கோவிந்தராஜ ஐயங்கார் பிரிட்டிஷ் இண்டியன் ஆர்மியின் மெட்ராஸ் ரெஜிமெண்டின்,ஆர்ட்டிலரி டிவிஷனுக்கு லெஃப்ட்டினண்ட் கர்னலாக இருந்தார். இந்தியர்கள் சுபேதார் பதவிக்கு மேல் உயர்பதவிகளை அடைய முடியாது என்றிருந்த நிலை மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்பதவி அடைந்த இந்தியர்களில் முதன்மையானவர் அவர். மெட்ராஸ் க்ரிஸ்ட்டியன் காலேஜில் பயின்ற அவர், துப்பாக்கிகளின் மீதிருந்த தணியாத ஆர்வத்தால் பல விஷயங்களைக் கற்று, இங்கிலாந்து சென்று, அன்றைய தினங்களுக்குப் புதிதான செல்ஃப் ப்ரொபெல்ட் ஹாவிட்ஸர் கேனனை (self-propelled Howitzer Cannon) இயக்கும் விதங்களைத் தெளிவாகக் கற்றிருந்தார். இந்தியாவிலேயே அந்த ரக பீரங்கிகளை இயக்கத் தெரிந்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்ததால், அவரைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததில் வியப்பெதுவும் இல்லை. எல்லைப் பாதுகாப்பிற்காக, அவரை கர்னலாகப் பதவி உயர்த்தி, பஞ்சாப் பிரதேசத்தின் அந்நாளைய கவர்னராக இருந்த மைக்கேல் டையர் (Michael O’Dwyer) அமிர்தசரஸுக்குக் குடி பெயர்த்து இருந்தான். மெட்ராஸ் ரெஜிமெண்டின் தலைமை மருத்துவராக இருந்த லக்‌ஷ்மியின் தந்தை, கோவிந்தராஜ ஐயங்காரின் நண்பர், அவர்களின் குடும்பமும் கோவிந்தராஜரின் வேண்டுகோளுக்கு இணங்க, அம்ரிட்ஸ்டருக்குக் குடிபெயர்ந்திருந்தனர். 

“நித்திய தீரர்” என்பவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்காவிடினும், அந்த எழுத்துக்கள் அவனைத் தீவிரமாகப் பாதிக்கத் தொடங்கிருந்தன. அந்த எட்டுப் பக்கப் புத்தகத்திலிருந்த அனைத்துக் கவிதைகளும் அவனைக் கவர்ந்தன. குறிப்பாக இந்தச் சில எளிமையான எடுத்துக் காட்டுகள் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்தது அவனுக்கு. 

 

“விண்ணில் இரவிதனை

விட்டுவிட்டு எவரும்போய்

மின்மினி கொள்வாரோ?

கண்ணினும் இனிய

சுதந்திரம் போயினபின்

கைகட்டிப் பிழைப்பாரோ?”

 

வைர வரிகள் எனத் தோன்றின. சுதந்திரம் என்பதென்ன? நம்மால் நாம் நினைத்ததெல்லாம் செய்ய முடிகிறதே, எதற்குச் சுதந்திரமில்லையென நினைக்க வேண்டும். அப்பா மெட்ராஸிலும் சரி, அம்ரிட்ஸ்டரிலும் சரி, இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் வணங்கப்படுகிறாரே? மரியாதை பல கிடைக்கின்றனவே? எங்கில்லை சுதந்திரம்? கேள்விகள் அவனைத் துளைத்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து படிக்கிறான்.

 

“எண்ணற்ற நல்லோர்

இதயம் புழுங்கியிரு

கண்ணற்ற சேய்போற்

கலங்குவதும் காண்கிலையோ?

 

மாதரையும் மக்களையும்

வன்கண்மையால் பிரிந்து

காதல் இளைஞர்

கருத்தழிதல் காணாயோ?”

 

தொடர்ந்து படிக்க, ஏதோ தவறிழைப்பது போல் தோன்றியது. வெளி நாட்டிலிருந்து வந்து ஆள்பவர்கள் முன்னேற்றத்தைக் கொண்டு வந்து விட்டனர் என்று நம்பியிருந்தது தவறோ என முதன்முறையாகத் தோன்ற ஆரம்பித்தது. அந்த எண்ணம் அவனிடம் இழையோடிய அந்த விநாடியில் எதிர்த்த வீட்டில் குடி புகுந்திருந்த லக்‌ஷ்மி இவனருகில் வந்து நின்றாள். “என்ன, ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரோட கவிதைல மயங்கிட்டாரோ?” என்று கிண்டலாய்க் கேட்டாள். “லக்‌ஷ்மி, யாரிவர்? இந்த நித்திய தீரர்? இவ்ளோ பவர்ஃபுல்லா எழுதியிருக்காரே? ரொம்பப் பெரிய ரிபெல்லா இருப்பார் போலத் தோண்றதே?” என்றான். இந்தியச் சுதந்திர வீரர்களை “ரிபெல்” என்று குறிப்பிடுவது பரவலாய் ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலம் தெரிந்த இந்தியர்களாலும், கையாளப்பட்ட நடைமுறையாக இருந்த காலமது.

“சொல்லுங்கோ, அவர் எழுதுறதுல ஏதாவது தப்பிருக்கா?” என்ற லக்‌ஷ்மியைச் சற்று வியப்புடன் நோக்கினான் கணேசன். “என்ன சொல்ற நீ, இப்ப அவா என்ன பண்ணிட்டான்னு அவாளைத் தொரத்தணும்?” பெரிதாக உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளாததால் வந்து விழுந்த கேள்வி. “என்ன சொல்றேள் நீங்க; வ.உ.சிதம்பரத்துக்கு நடந்ததக் கேட்டேளா? நீலகண்ட பிரம்மச்சாரி? சுப்ரமண்ய சிவா? இந்த ஊர்ல கூட சத்யபால்னு ஒருத்தர ரொம்ப பேசிக்கிறாளே? இன்னும் வடநாட்ல எத்தன தலைவர்கள், ஆயிரக்கணக்கான சாதாரண மனுஷா? எல்லாரையும் பிரிட்டிஷ் எவ்வளவு பாடு படுத்தியிருக்கா தெரியுமா? பழைய கால ராஜாக்கள் டைம் மாதிரியில்ல, டெமாக்ரஸினு ஒண்ணு எங்க இருக்குன்னு நன்னா பாருங்கோ” என்று இந்திய சுதந்திர வரலாறு குறித்துப் பாடம் எடுக்கத் தொடங்கியிருந்தாள் லக்‌ஷ்மி. சொல்லிக் கொண்டே இருக்கையில், புத்தகத்திலிருந்த இன்னுமொரு கவிதை கவனத்தை ஈர்த்தது:

 

“சேனை நடத்து வாயோ? – தொழும்புகள்

செய்திட விரும்பு வாயோ?

ஈனமான தொழிலே – உங்களுக்கு

இசைவ தாகும் போடா!

 

நாடு காப்பதற்கே – உனக்கு

ஞானம் சிறிதும் உண்டோ?

வீடு காக்கப் போடா! – அடிமை

வேலை செய்யப் போடா!”

 

என்று உணர்ச்சியைத் தூண்டும் வகையான நித்திய தீரரின் பாடல் அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது. “யாரிந்த மனிதர்? எதுக்காக சின்னவாளையெல்லாம் இப்டி வன்முறைக்குத் தூண்டுறார்?” என்று எரிச்சலாகக் குறிப்பிட்டு முடிக்கும் தருவாயில், தூரத்தில் பலர் நடந்து வந்து கொண்டிருக்கும் ஒலி கேட்கத் தொடங்கியது. மனிதர்களுடன் சேர்ந்து சில மோட்டார் வாகனங்களும் மெதுவாக வந்து கொண்டிருப்பதை உணரத் தொடங்கினான் கணேசன். வீட்டிலிருந்த பெண்டுலம் வைத்த சுவர்க் கடிகாரம் மாலை ஐந்து மணி என்று ஐந்து முறை அடித்து ஓய்ந்தது. நேரம் ஆக ஆக அந்தச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. அவை பிரித்தானிய காலாட்படையின் மார்ச் பாஸ்ட் கமேண்ட் சத்தங்கள் என்று, லெஃப்ட்டினண்ட் கர்னல் வீட்டில் பிறந்த அவனுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. 

பேச்சை நிறுத்திவிட்டு, இருவரும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். ஒரு வெள்ளைக்கார கேப்டன் முழு இராணுவ உடுப்பில் நடந்து வர, அவனுக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஐம்பது வீரர்கள் அணி வகுப்பாய், கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஒரு ஜீப்பில் பஞ்சாப்பின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் நின்று கொண்டு, சாலையின் இருமருங்கையையும் பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அப்பாவின் அறிமுகங்களை வைத்து அவனையும் அடையாளம் கண்டு கொண்டான் கணேசன். அவனுக்குப் பின்னர் ஓரிரு ஜீப்கள் வந்தன, அவற்றிலெல்லாம் ஆயுதம் தாங்கிய வீரர்கள். கடைசியாக, அவன் சற்றும் எதிர்பாராத வகையில், அவனின் அப்பா லெஃப்ட்டினண்ட் கர்னலிலிருந்து, கர்னலாகப் போன வாரம் பதவி உயர்வு அடைந்த கோவிந்தராஜ ஐயங்கார், தனது புதுக் கருக்கு மாறாத ஹாவிட்சர் கேனன் வைக்கப் பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தார். அவரும் வீட்டைக் கடக்கும் பொழுது கணேசனையும், லக்‌ஷ்மியையும் உணர்வுகள் ஏதும் காட்டாமல் பார்த்துக் கொண்டே முன்னேறிச் சென்று விட்டார். கணேசனுக்கு என்ன நடக்கிறதென்று விளங்கவில்லை. ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்று லக்‌ஷ்மிக்குத் தோன்றிற்று.

அந்தப் படை முன்னேறிச் சென்று ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தும், அவர்கள் இருவரும் அதே திண்ணையில் பேசுவதறியாது நின்று கொண்டிருந்தனர். “கோல்டன் டெம்ப்பிள்ல ஏதாவது பந்தோபஸ்த்தா இருக்கும்” என்று பொதுப்படையாகச் சொன்ன கணேசனிடம், “என்ன சொல்றேள், வெறும் பந்தோபஸ்த்துக்கு என்னத்துக்கு ஹாவிட்ஸர் செல்ஃப்-ப்ரொப்பல்ட் கேனன்?” என்று லாஜிக்கான கேள்வி கேட்டாள். “தெரியல” என்றவனிடம், “ஆனா, பயமாயிருக்கு… மாமா வேற போறத நெனச்சா இன்னும் பயமா இருக்கு” என்றாள்.

 

“வெள்ளை நிறத்தைக் கண்டால் – பதறி

வெருவலை ஒழித்தாயோ?

உள்ளது சொல்வேன் கேள் – சுதந்திரம்

உனக்கிலை மறந்திடடா!”

 

லக்‌ஷ்மியின் பயம், அப்பாவின் பார்வை, அணிவகுப்பின் தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக நித்திய தீரரின் அந்த வரிகள் கணேசனின் உள் மனதில் ஆவேசத்தை உண்டு செய்தது. உடனடியாக, கொடியில் காயப் போட்டிருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையை மேலணிந்து கொண்டு, ரோட்டில் நடக்கத் தொடங்கினான். பிரித்தானிய ராணுவம் சென்ற திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைந்தான். ராட்சத வண்டிகளின் டயர்த் தடங்களை அவன் செல்லும் வழியிலெல்லாம் காண முடிந்தது. 

அவன் சென்ற தெருக்களிலெல்லாம் மக்கள் கூட்டம். பலர் பொற்கோவில் வழிபாடு முடிந்து வந்து கொண்டிருந்தனர். பலர் வழிபாட்டிற்காகச் சென்று கொண்டிருந்தனர். பொற்கோவில் சீக்கியர்கள் மட்டுமன்று, பெரும்பாலான ஹிந்துக்களும், இஸ்லாமியரும் வழிபடும் இடமும் தான். பொற்கோவிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் கிரந்த சாஹிப்பின்மீது முழு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர் அங்கு வாழும் அனைத்து மதம் சார்ந்த மக்களும். இவற்றைத் தவிர, அன்று பஞ்சாபில் விவசாய அறுவடை முடிந்து, சூரியனுக்கும் மற்ற கடவுளர்க்கும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான பைசாகித் திருநாளின் கொண்டாட்டங்களுக்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள். தெருவெங்கும் நிறைந்திருக்கும் மக்களின் கூட்டம். கணேசன் ஒரு பத்து நிமிடம் நடந்தால் அந்தப் பெரிய திடலை அடைந்து விடுவான். அங்குதான் வெளியூரிலிருந்து பண்டிகைக்காக வந்திருப்பவர்கள் வண்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, சாப்பாட்டுக் கடை விரிப்பார்கள். படுத்துறங்கி, களைப்பு நீக்கிக் கொள்வார்கள். 

பலமுறை காலை உடற்பயிற்சிக்காக அந்தத் திடலுக்குச் சென்றிருக்கிறான். இருபதாயிரம் மக்கள் ஒன்று கூடலாமெனும் அளவுக்குப் பரந்து விரிந்த திடல். அந்தத் திடலைச் சுற்றி பத்துப் பதினைந்து அடி உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று அவன் பலமுறை யோசித்ததுண்டு. அந்தத் திடலில் இருந்த ஆறு நுழை வாயில்களில் ஐந்து எப்பொழுதுமே பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். ஆறாவது நுழை வாயில் எல்லாவற்றிலும் பெரியது. அதுவே அவன் வீட்டிலிருந்து வரும் தெருவில் இருந்ததால், மற்ற நுழை வாயில்கள் பூட்டப்பட்டிருப்பது குறித்து அவனுக்குப் பெரிய கவலை இருந்ததில்லை. பெரியதாகக் கருதப்படும், திறந்திருக்கும் அந்த நுழை வாயிலும் ஒரு ஆறடி அகலம் மட்டுமே கொண்டது. மோட்டார் வாகனங்கள் செல்ல இயலாதது. ஆனால், பெரும்பாலான மக்கள் கை வண்டியிலும், மாட்டு வண்டியிலும் வருவதால் அந்த நுழைவு வாயிலைப் பயன்படுத்துவது எளிதாகவே இருந்தது. அவ்வளவு பெரிய திடலுக்கு நடுவில் ஒரு ஆழமான கிணறு இருப்பதையும் பார்த்திருக்கிறான். எதற்காகக் கிணறு என்று பலமுறை யோசித்ததுண்டு. அந்தக் கிணற்றைச் சுற்றி, மிகச் சிறிய குட்டிச் சுவர் ஒன்றே எழுப்பப்பட்டிருந்தது. குழந்தைகள் நடமாடும் பகுதியில் இது பாதுகாப்பற்று இருக்கிறதே எனப் பலமுறை நினைத்ததுண்டு. பொது நலம் கருதுவோர் சிலர், மரங்களை வெட்டி அந்தக் கிளைகளை கிணற்றைச் சுற்றிப் போட்டு வைத்திருப்பர். 

அந்தத் திடலைப்பற்றி நினைத்தவுடன் கணேசனுக்குச் சட்டென்று பொரி தட்டியது. இன்று காலை பஞ்சாபி மொழியில் அச்சிடப்பட்டு தெருவெங்கும் விநியோகிக்கப்பட்ட துண்டு போஸ்ட்டர். ஹிந்தியே தெரிந்திராத அவனுக்கு பஞ்சாபி சற்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அப்பாவின் நண்பர் ஒருவரிடம் படித்துக் காட்டச் சொல்லி, புரிந்து கொண்டிருந்தான். அதில் எழுதப்பட்ட விவரம், “ரௌலட்” சட்டத்தின் அமுலாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வராமல் மேலும் தொடர்வதாக வந்த பிரிட்டிஷ் தீர்ப்பு குறித்தும், சுதந்திரப் போராட்ட வீரர்களான சத்யபால் மற்றும் சாய்ஃபுதின் கிச்லூ ஆகிய இரு தலைவர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரியும் பொதுக்கூட்டம் நடக்கப் போவதான அறிவிப்பே அந்தச் சுவரொட்டி. மாலை ஐந்து மணிக்கு அந்தத் தெருக்கோடியில் இருக்கும் பெரிய திடலில் கூட இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்ததையும், சற்று முன்னர் அணி வகுத்துச் சென்ற பிரித்தானியப் படைகளையும் அவன் மனது சட்டென முடிச்சுப் போட்டது. நித்திய தீரர் எழுதுவது சரிதானோ? பிரிட்டிஷ் படைகள் அந்தத் திடலை நோக்கித்தான் செல்கின்றனவோ? அப்படியானால்? அதில், அப்பாவும் இருக்கிறாரே? என்ன நடக்குமோ? பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்ள, அவன் அந்தத் திடலை நோக்கி வேக வேகமாய் ஓடத் தொடங்கினான்.

வ்வளவு வேகமாகச் சென்றும், அந்தத் திடலின் வாசலை அவன் அடையும் பொழுது மணி ஐந்து நாற்பது. எந்தவிதச் சத்தமும் அங்கிருக்கவில்லை. கிட்டத்தட்ட மயான அமைதி. பெரும்பாலான மக்கள் அந்தத் தெருவை விட்டுச் சிதறியிருந்தனர். திடலின் திறந்திருக்கும் ஒரே நுழைவு வாசலுக்கு முன்னர் சாதாரண மனிதர் எவருமே இல்லை. தூரத்திலிருந்து அவன் கண்ணில் முதலில் பட்டது, சில சீருடையணிந்த ராணுவ வீரர்கள் பரவலாக நின்று கொண்டிருந்தனர். அதற்கும் முன்னர் அப்பா அமர்ந்து, அந்தக் கேனனைச் சுமந்து சென்ற வண்டி நின்று கொண்டிருந்தது. அப்பா அதற்குக் கீழே நின்று, வண்டியைப் பிடித்துக் கொண்டு, தரையை நோக்கித் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார். என்ன செய்கிறார் என்று புரியவில்லை; சற்று அருகில் நெருங்க நெருங்க, அவர் வாந்தி எடுப்பது கண்ணில் பட்டது. என்னவென்று புரியாமல் அவரை நோக்கி ஓடினான். 

அவனைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் அவனைத் திரும்பிப் போகும்படிச் சைகை செய்து கொண்டே அவனை நோக்கி அவர் ஓடி வர, அதற்கு முன்னதாகவே வேகமாகவும், வெற்றிப் பெருமிதமாகவும் நடந்து வந்த ரெஜினால்ட் டயர் அவனைக் கடந்து நடந்தான். அவன் பின் வந்த சிப்பாய்க்குச் சைகை காட்ட, டயர் அவனைக் கடந்த மறு நிமிடம் பின் வந்த சிப்பாய் கணேசனின் நெற்றிப் பொட்டில் தனது ரைஃபிளின் பின் பகுதியால் ஓங்கி அடித்தான். கணேசன் அங்கேயே வேரற்ற மரம்போல் சறிய, அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்தான் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட முயன்ற ஒரு சீக்கிய இளைஞன். மூர்ச்சையாகிக் கீழே விழப் போன அவனை உடனடியாகப் பக்கத்திலிருந்த சிறு சந்திற்கு இழுத்துச் சென்றான் அந்த இளைஞன். பல போர்களில் மனிதர்களைச் சற்றும் தயக்கமின்றிச் சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் கோவிந்தராஜன் மகன் சுருண்டு விழுவதைக் காணச் சகிக்காமல் அவனை நோக்கி ஓடி வருகையில், அடித்த குர்க்கா ரெஜிமெண்டைச் சேர்ந்த சோல்ஜர் ஹிந்தியில் சொன்னது அவரின் காதுகளில் தமிழாக்கமாய் விழுகிறது. “உன் மகன் அதிர்ஷ்டசாலி, எங்களது துப்பாக்கிக் குண்டுகள் அனைத்தையும் திடலுக்குக்குள்ளேயே காலி செய்து விட்டோம்”. சொல்லிக் கொண்டே சென்ற அவனின் நக்கல் சிரிப்பு மட்டும் ஹிந்தி தெரியாத கணேசனின் காதுகளில், மயக்கமடைவதற்கு முன்னர் ஹீனமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

2023 அக்டோபர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக் கிழமை. குடும்பத்துடன் விடுமுறைப் பயணம் மேற்கொண்ட கணேஷ், ஜாலியன் வாலா பாக் மைதானத்தின் வாசலிலுள்ள நினைவுச் சின்னத்தின் அருகில் நின்று கொண்டிருக்கிறான். கையில் அவனது தாத்தா கணேசனின் பழங்கால டைரி. கொடுத்தவர் தாத்தாவின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்திருந்த உத்தம் சிங்கின் பேரன் அமர்தீப் சிங். அவர்கள் வீடு மற்றும் உடைமைகள் அனைத்தும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது சூறையாடப்பட்டதையும், கையோடு பிழைத்த ஓரிரு பொருட்களில் இந்த டைரியும் ஒன்று என்பதையும் அறிந்து கொள்கிறான். அந்த டைரி எப்பேர்ப்பட்ட பொக்கிஷம் என்பதை நினைக்கையில் அவன் கண்களில் நீர் தாரை தாரையாக ஓடுகிறது. அந்த டைரியிலிருந்து அவனறிந்த இன்னும் சில முக்கியமான நிகழ்வுகள்; 

ராணுவ வீரனின் துப்பாக்கியின் பின்பகுதியால் அடிக்கப்பட்டு நினைவிழந்த கணேசனைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பின்னர் மருத்துவனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்த அவனது பக்கத்து வீட்டு உத்தம் சிங்தான் இருபது வருடங்களுக்குப் பிறகு, பல காவல்களையும் மீறி, ஜாலியன் வாலாபாக் கொடுமைகளுக்குக் காரணமான கவர்னர் மைக்கேல் ஓ’டையரை லண்டனில் கொலை செய்த இந்தியச் சுதந்திர வீரர். இந்தக் காப்பாற்றலுக்குப் பிறகு, கணேசன் உத்தம் சிங்குடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவருடன் சேர்ந்து லண்டனுக்குச் சென்று மைக்கேல் ஓ’டையரையும், ரெஜினால்ட் டயரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த இளைஞர் கூட்டத்தில் கணேஷின் தாத்தா கணேசனும் சேர்ந்து விட்டான். ஏழு வருடங்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று, இங்கிலாந்தில் பல இடங்களிலும் தலை மறைவாக வாழ்ந்து, ரெஜினால்ட் டயரைத் தொடர்ந்து வந்து, சரியான நேரத்தில் மாய்ப்பது என்பதே அவன் திட்டம்.

பிரிஸ்ட்டலின் புறநகர்ப் பகுதி வைல்ட்ஷையரில், ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்திருந்த ரெஜினால்ட் டயரை கணேசன் தொடர்ந்து செல்லாத நாளே கிடையாது. அவன் பக்கவாதத்தாலும், மூளையின் இரத்தப் போக்கு நோயாலும் அவதிப்படுவதைத் தொடர்ந்து வேவு பார்த்து வந்த கணேசன் அவனைத் தீர்த்துக் கட்டுவதற்குக் குறித்த நாள் 1927 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி. அதற்கு முந்தைய நாள் இரவு வழக்கம் போல அவனது வீட்டு நடவடிக்கைகளை இன்னும் துரிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த கணேசன், சாளரத்தின் வழியாகப் பார்த்த காட்சி அந்த டைரியில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. ஒரு பக்க உடலைச் சற்றும் அசைக்க முடியாத டயர், மூளையிலிருந்த ரத்தக் கசிவால் பெருமளவு நினைவு பாதிக்கப் பட்டிருந்தாலும், ஜாலியன் வாலாபாக்கில் 8 வருடங்களுக்கு முன்னர் தான் செய்த அராஜகத்தை மட்டும் மறக்கவில்லை. “நான் செய்த படுகொலைகள் சரியா, தவறா? மனிதர்களிடம் கேட்டுச் சரியான விடை கிடைக்கவில்லை; எமனிடமே கேட்கிறேன்” என்று இடைவிடாமல் புலம்பிக் கொண்டிருப்பது சாளரத்திற்கு வெளியே நடவடிக்கைகளை வேவு பார்த்துக் கொண்டிருந்த கணேசனின் காதுகளிலும் விழுகிறது. அந்தப் புலம்பல் சிறிது சிறிதாய் ஹீனமாகிப் பின் அடங்குவதை உணர்ந்த கணேசன், ரெஜினால்ட் டயர் மரணமடைகிறான் என்று புரிந்து கொள்கிறான். துப்பாக்கிக் குண்டுக்குப் பயந்து இங்குமங்கும் ஓடி, கடைசியில் உயிர்விட்ட அந்த ஆயிரத்து முன்னூறு உயிர்களும் அந்த வைல்ட்ஷயர் வீட்டினுள்ளே அவன் கிடத்தப்பட்ட படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு அவன் ஆவி பிரிவதைப் பார்த்து ரசிப்பது போலத் தோன்றியது கணேசனுக்கு. அவனுக்கு இருந்த வருத்தமெல்லாம் இவன் உயிர் இன்னும் ஒரு நாள் இருந்திருந்தால் தன் கையால் மாய்ந்திருக்குமென்பதே. 

அந்த ஏழு வருடங்களில் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட கணேசனுக்கு, தமிழ் ரிபல்ஸ்களின் மூலம் நித்திய தீரரின் எழுத்துக்களை வாங்கிப் படிப்பதென்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக, அவர்தான் மகாகவி சுப்ரமண்ய பாரதி என்றும் விளங்கிக் கொண்டான். அவர் இறந்து விட்டார் என்ற செய்தி லண்டனில் சுதந்திரப் போராட்ட இளைஞர்களின் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு இரவு அவனை அடைந்தது. அந்தச் செய்தியால் மிகுதியாய்ப் பாதிக்கப்பட்ட அவன் எழுதிய கவிதை அந்த டைரியில் இருந்தது.

 

நீடு துயில் நீக்கப்

பாடி வந்த நிலா

நீண்ட துயில்

கொண்டதே இன்று!

 

நாடு பெறும் சுதந்திரம்

பாடிச் சொன்ன பெரியவர்

கூடு விட்டுச் சென்றதால்

வாடி நிற்பர் வீரரவர்!

 

அவர் சொன்ன வீரமும்

அகம் விட்டு அகலாது!

அரக்கர் இவர் கொன்று

அளிப்போம் அவர் ஆகுதியாய்!

 

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதிக்குப் பின்னர், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்து அவன் எழுதிய கவிதை. இது தொடர்ந்து அவன் எழுதியதெல்லாம் தேசபக்திப் பாடல்களே.

பின் குறிப்பு: ஜாலியன் வாலாபாக் திடலுக்குள் நின்றிருந்த முப்பது நிமிடங்கள் வாழ்க்கையில் இதற்கு முன்னர் கிடைத்திராத பல உணர்வுகளைத் தூண்டிய தருணங்கள். அப்பாவி மனித உயிர்களின் மரண ஓலங்கள் எங்கும் ஒலிப்பது போன்ற பிரமை. அரக்க மனத்தின் கோரத்தையும் அருகில் பார்ப்பது போன்ற உணர்வு. இந்தக் கற்பனைக் கதை சபிக்கப்பட்ட அந்த நாளில் இறந்த ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட அத்தனை உயிர்களுக்கும் சமர்ப்பணம். 

 

  • வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad