வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்
“வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” பற்றிய வாசிப்பனுபவம் பற்றி உங்களுடன் சற்றுப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். தலைப்பு கொஞ்சம் வில்லங்கமாகவும் விகாரமாகவும் தெரியலாம். கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தின் தலைப்பே இது. கவிஞர் வேணு தயாநிதி தற்போழுது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார். இவரின் இந்தக் கவிதை நூல் 2023 டிசம்பரில் ‘யாவரும் பதிப்பகம்’ மூலம் வெளியானது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் இப்போது அமெரிக்காவில் வசிப்பதனால் இக் கவிதைத் தொகுப்பை புலம்பெயர் இலக்கியத்துக்குள் அடங்குகின்றது என்று நான் சொல்வேன். 2009 ஆண்டில் எனது முதுநிலை ஆய்வியல் அறிஞர் படிப்புக்காக நான் புலம்பெயர் கவிதைகளை ஆய்வு செய்து பட்டம் பெற்றிருந்தேன். அந்த வேளையில் ஈழத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த 58 ஈழத்துப் புலம்பெயர் கவிஞர்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தேன்.
ஆனால், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதுபோல அவ்வப்போது பொருளாதாரத் தேவைகளுக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பொருளீட்டியும் கவிதைகளைப் படைத்தும் தமிழ் வளர்த்த புலம்பெயர்ந்த தமிழக கவிஞர்களின் படைப்புக்களை நான் அப்போது புலம்பெயர் கவிதைகளில் சேர்க்கத் தவறிவிட்டேன் என்பதை இப்போது உணருகிறேன்.
“புலம்பெயர்தல்” என்பதற்கு இருப்பிடம் விட்டு இன்னொரு இடத்துக்கு நகர்தல் என்று தமிழ் ‘லெக்ஸிகன்’ அகராதி குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்” என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது.
அந்தவகையில், தமிழருக்குச் சற்றும் பழக்கப்படாத பனி படர்ந்த நிலம் நோக்கி வேலை வாய்ப்பு, மற்றும் பொருளாதாரத் தேவைக்காக ஐவகை நிலம் தாண்டி ஆறாம் திணையான பனியும் பனிசார்ந்த நிலத்துக்கு வந்த மக்கள் அந்த நிலத்துக்குரிய சூழலில் நின்று இலக்கியங்களைப் படைக்க முற்பட்டனர். அந்தவகையில், பாரதியின் “தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற வாசகத்துக்கிணங்க கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் தனது கவிதைகளைப் படைத்துள்ளார் எனலாம்.
“வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் 136 பக்கங்களில் சிறியதும் பெரியதுமாக 64 கவிதைகள் உள்ளன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகின்ற போது கவிதைகளின் வடிவம், உள்ளடக்கம், மற்றும் உத்திகளும் மொழிநடையும் என்ற மூன்று பிரதான பிரிவின் கீழ் திறனாய்வுக்கு உட்படுத்த முடியும்.
கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாம் கவிதைகள் ஆகிவிடுவதில்லை. கவிதைகளுக்கு உடல், உள்ளம், உயிர், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. இவை அனைத்தும் ஒருங்குபெற அமையும் போதுதான் அது தரமான கவிதை என்ற பெயரைப் பெறுகின்றது. அந்தவகையில், கவிஞர் வேணு தயாநிதி அவர்களின் கவிதைகள் அனைத்தும் சீர், தளை, அடி என்ற கட்டுக்களை உடைத்து பொங்கிப் பிரவாகிக்கும் புதுக் கவிதைகளாக உருப்பெற்றிருக்கின்றன.
புதுக் கவிதை வடிவத்துக்குள் நின்றுகொண்டு பல கதைகளுக்குரிய நிறைந்த கருக்களை சிறந்த கவிதைகளில் சொல்லிய விதம் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இவ்வாறான கதைக் கவிதைகள் இந்தப் புத்தகத்தில் நிறைய இருந்தாலும் குறிப்பாக, அந்த ராஜ கோபுரம் பற்றிய ஒரு கவிதை (பக்கம் 56-59), குடிகாரனின் நண்பன் பற்றிய இன்னொரு கவிதை (பக்கம் 51-53), மேசன்களின் உலகம் பற்றிய வேறொரு கவிதை (பக்கம் 74-78) என மூன்று கவிதைகளை இங்கு கோடிட்டுக் காட்டலாம்.
“அழுகையின் விதிமுறைகள்” என்ற தலைப்பிலான ஒரு கவிதை மனதுக்குள் நின்று குடைந்து கொண்டே இருக்கிறது.
“…அழுவது தெரியாமல் இருக்க
குளியலறையில் நுழைந்து
தாழிட்டுக் கொள்ளலாம்
அழுதபின் / கண்களைத்
துடைக்க வேண்டியதில்லை
மேலும்
குளித்துக்கொண்டே அழுதால்
யாருக்கும் தெரியாது…”
இப்படியாகத் தொடரும் இந்தக் கவிதை நிறைய நியாயப்பாடுகளை நகைச்சுவை உணர்வுடன் சொல்லிச் செல்கிறது.
புலம்பெயர்வு வாழ்க்கை, உறவுகள் பற்றிய நினைப்பு, ஊர் பற்றிய நினைப்பு, வாழ்வின் தத்துவம், காதல் போன்றன இவரின் கவிதைகளின் பாடு பொருட்களாக உள்ளன. மேலும், கடவுள், கடவுள் மறுப்பு கவிதைகளும் அதிகம் உள்ளன. பைரவர், சிவன், புத்தர், சடாரி போன்ற கடவுளர்கள் திரும்பத் திரும்பக் கவிதைகளில் வந்து போகின்றனர். குறிப்பாக, நாய் வேடமிட்ட கடவுள் (பக்கம் 97-98) பற்றிய கவிதையின் முடிவு வரிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
சொந்த மண்ணின் சுகமதனை எந்த மண்ணும் தந்திடாது என்ற உண்மையை உணர வைக்கும் பல கவிதைகள் அன்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. அதற்கிடையில் அமெரிக்காவின் பனி படர்ந்த வாழ்க்கையையும் இயற்கை அழகையும் அவர் சொல்லத் தவறவில்லை. மேப்பிள் மரங்கள், பீச் மரங்கள், பனி படர்ந்த நிலம், ஆகியன பல கவிதைகளை அலங்கரிக்கின்றன.
இவரின் பல கவிதைகளில் தமிழ்க் கலாச்சாரம், உணவுகள் முறைகள், பழக்க வழக்கங்கள், விருந்தோம்பல் என்று இன்னோரன்ன விடயங்கள் பாடு பொருட்களாக உள்ளன. அந்தவகையில் “தக்காளிக் காதல்” கவிதை மிகவும் சிறப்புக்குரியது. தேநீர் பற்றிய இன்னொரு கவிதை இவ்வாறு தொடர்கிறது.
“…நம் முத்தத்துக்காக
காத்துக்கொண்டிருக்கும்
தேநீர்…”
மேற்சொன்ன கவிதை அடிகளில் கற்பனை வளம் ஊறிப் பாய்வதைக் காணலாம்.
கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் கையாளும் குறியீடுகள், உருவகங்கள், உவமைகள் பொருத்தமான இடத்தில் சிறப்பாக வந்து அமர்ந்து கவிதைக்கு அழகு சேர்ப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, இவரின் கவிதைகளில் படிமங்கள் இல்லை. கூற வந்த கருத்துக்களை நேரடியாக வாசகர்களுக்குப் புரியக் கூடிய மொழியில் சொல்லி பல இடங்களில் வாசகர்களிடமிருந்து கைதட்டல் வாங்கி விடுகிறார்.
“வழி தவறிய / சர்ப்பம் ஒன்று / செய்வதறியாது / திகைத்து…” என்று தொடரும் கவிதையில் வரிகளை முறித்து முறித்து எழுதியிருப்பது பக்கங்களை நிரப்பவோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கவிதையின் முடிவில் அதற்குள்ளும் ஒரு குறியீடு தொக்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. “கவிதையைக் கொலை செய்வது எப்படி” என்ற இன்னொரு கவிதையில் “…அருவியின் வீழ்ச்சி போல் / பக்கங்கள் சிதறித் தெறிப்பதை…” என்று நல்லதொரு உவமையைத் தேவையான இடத்தில் கையாண்டுள்ளார். “பூனைக்குட்டி” என்ற தலைப்பிலான ஒரு கவிதை வரிக்கு வரி குறியீட்டில் அமைந்துள்ளது.
இவ்வாறு புதுக் கவிதைக்குரிய முறைமைசார் மொழிநடையை அதிகளவில் பயன்படுத்தி, கவிதை மொழியில் சொல்லக்கூடிய உணர்ச்சிகளை அடையாளமாகக் கொண்டு, பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைச் சேர்த்து பூமாலை போல பல பாமாலைகளை இரசிக்கும் படியாகத் தன் கவிதைகளில் கொண்டு வந்து சிறப்பான முறையில் சிறப்பான வடிவமைப்புடன் கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் பிரசவித்த “வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” என்ற கவிதைப் புத்தகத்தை ஒருமுறையாவது வாங்கிப் படித்துப் பார்க்க வேண்டும் என்று நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
தியா – காண்டீபன்